Friday, September 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

லாட்டரிச் சீட்டு வியாபாரம் தெரிந்தவர்கள் கூட பங்குச் சந்தை எனும் மாயமான் எப்படி ஓடுகிறது என அறியமாட்டார்கள். யாரிடமிருந்து யாருக்கு இலாபம் தருகிறது பங்குச் சந்தை? அவசியம் படிக்க வேண்டிய தொடர்

-

பந்தய மூலதனம் – 1

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

*****

ங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கதையை ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் தகவலாகவோ படித்திருப்பீர்கள்.

“ஒரு ஊருக்கு அருகில் இருந்த காட்டில் நிறைய குரங்குகள் வசித்தன. அந்த ஊருக்கு தன் உதவியாளன் சுப்பிரமணியுடன் வந்து சேர்ந்த வெளியூர்காரன் ஏகாம்பரம் ஒரு தகவலை கசிய விட்டான். ஏகாம்பரம் தன் ஊரில் செய்யும் தொழிலுக்கு குரங்குகள் நிறைய தேவைப்படுகின்றன எனவும் ஒரு குரங்குக்கு ரூ 100 விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் செய்தி பரவியது.

ஊர் மக்கள் பலர் குரங்கு பிடிக்கும் வேலையில் இறங்கி, ஒரு நாளைக்கு ஏழெட்டு குரங்குகளை கூட பிடித்து வந்து தலா ரூ 100 வீதம் சம்பாதித்தார்கள். தன்னிடம் வந்து சேரும் குரங்குகளை அடைத்து வைத்து பாதுகாத்தார் ஏகாம்பரம். “ஊருக்குப் போகும் போது மொத்தமாக எடுத்துச் செல்வார் என்றும் அவர்கள் ஊரில் இத்தகைய குரங்குகளுக்கு நல்ல டிமாண்ட்” என்றும் சுப்பிரமணி சிலரிடம் கிசுகிசுத்தான்.

ஒரு சில நாட்களில் காட்டில் எஞ்சியிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, ஏகாம்பரத்திடம் விற்பனைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்தது. “ஒரு குரங்குக்கு ரூ 200 தருகிறேன்” என்று விலையை உயர்த்தினார் ஏகாம்பரம். இன்னும் அதிக முயற்சி எடுத்து இரவு பகல் பாராமல் குரங்கு வேட்டை நடத்தினார்கள், மக்கள். விலையை படிப்படியாக ஏற்றி ஏகாம்பரம் ஒரு குரங்குக்கு ரூ 500 தரும் நிலை வந்த போது காட்டில் குரங்குகளை பிடிப்பதே அரிதாகி போனது.

இதற்கிடையில் சுப்பிரமணி, ஒரு சிலரிடம் ரகசியமாக டீல் போட ஆரம்பித்தான். ரூ 500-க்கு விற்க குரங்குகளை தேடி தவிக்கும் அவர்களுக்கு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்குகளை (ஏகாம்பரத்திற்கு தெரியாமல்) ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். அவனது விலை ஒரு குரங்குக்கு ரூ 400. ரூ 400-க்கு வாங்கி ஏகாம்பரத்திடம் ரூ 500-க்கு விற்கலாமா என்ற ஆசையில் அவர்கள் அதை வாங்கி விற்க ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒரு சிறு எண்ணிக்கையிலான குரங்குகளை வாங்கிய பிறகு, ஏகாம்பரம், தன்னிடம் கைவசம் இருந்த பணம் தீர்ந்து விட்டதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் குரங்குகளை வாங்குவதற்கு பணம் திரட்டிக் கொண்டு 10 நாட்களுக்குப் பிறகு வரப் போவதாகவும், அப்போது குரங்குகளை தலா ரூ 1000 விலைக்கு வாங்கப் போவதாகவும் என்று சொல்லி விட்டு பண்ணையை சுப்பிரமணி பொறுப்பில் விட்டு விட்டு போய் விட்டார்.

இதுதான் வாய்ப்பு என்று சுப்பிரமணி கைவசம் இருந்த எல்லா குரங்குகளையும் ரூ 700, ரூ 800 வீதத்துக்கு விற்று விட்டான். ஒரு குரங்குக்கு ரூ 300, ரூ 200 லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊர்க்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல், நகை நட்டுகளைக் கூட விற்று ஆளுக்கு 10-12 குரங்குகளை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்கள்.

பங்குச் சந்தை – குரங்கு கதை

7-8 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சுப்பிரமணி இரவோடு இரவாக ஊரை விட்டு போய் விட்டான். அடுத்த நாள் குரங்கு வாங்க பேரம் பேச வந்தவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. குரங்கு பண்ணை பூட்டிக் கிடந்தது. சரி, வந்த வரை லாபம், கையில் இருக்கும் குரங்குகளை ரூ 1000 விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏகாம்பரம் வருவதை எதிர்நோக்கி காத்திருந்தார்கள், ஊர் மக்கள்.

10 நாள் கழிந்த பிறகு ஏகாம்பரம் வரவில்லை, 15 நாட்களுக்குப் பிறகும் வரவில்லை, 20 நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. குரங்கு பண்ணையின் பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் குரங்குகளின் கழிவுகள் மட்டும்தான் மிஞ்சியிருந்தன. சும்மா கிடந்த குரங்குகளை எல்லாம் பிடித்து ஏகாம்பத்திடம் ரூ 100 முதல் ரூ 500 வரை விலைக்கு விற்ற ஊர்க்காரர்கள், பின்னர் அவற்றையே சுப்பிரமணியிடம் ரூ 700 முதல் ரூ 900 வரை விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறாக ஏகாம்பரமும், சுப்பிரமணியும் ஊர் மக்களின் சேமிப்புப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்து கொண்டு மாயமாகி விட்டார்கள்.”

இது கதை. பங்குச் சந்தை ஊக வணிகம் இப்படித்தான் செயல்படுகிறது, அப்பாவிகளின் சேமிப்பை சூறையாடி விடுகிறது என்பது கதையின் நீதியாக சொல்லப்பட்டது.

விலை ஏறும் என்று நம்பி பங்குகளை வாங்கி அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்தோ, அல்லது மதிப்பே இல்லாமல் போயோ தமது சேமிப்புகளை எல்லாம் இழந்தவர்களின் நிலையை இந்தக் கதை சொல்கிறது. ஆனால், பங்குச் சந்தை இது மட்டும் இல்லை, இந்த அளவில் மட்டும் இல்லை.

பங்குச் சந்தை முதலீடு என்பதை சேவல் சண்டையின் போது சுற்றி நின்று கொண்டு குறிப்பிட்ட சேவல் மீது பந்தயம் கட்டுவதோடு ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். பந்தயம் கட்டுபவர் சேவலை வளர்க்கவும் இல்லை, அதை சண்டைக்கு பதிவு செய்து இறக்கி விடவும் இல்லை. சுற்றி நின்று கொண்டு கைவசம் இருக்கும் பணத்தை எந்த சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுகிறார். ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவதையும் இதனோடு ஒப்பிடலாம். எந்தக் குதிரை வேகமானது, எந்த ஜாக்கி திறமையாக ஓட்டுவார், குதிரைகளின் கடந்த கால ரிக்கார்ட் என்ன, இந்த மைதானத்தில் குறிப்பிட்ட குதிரை எப்படி ஓடியிருக்கிறது என்று பல விபரங்களை சேகரித்து, பரிசீலித்து, நிபுணர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு ஒரு அல்லது பல குதிரைகளின் மீது பந்தயம் கட்டி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள். பணம் கட்டிய குதிரை ஜெயித்தால் பணம் பல மடங்காகும். தோற்றுப் போனால், கட்டிய பணம் போச்சு.

ஆனால், “பங்குச் சந்தையை இப்படி கொச்சையாக பார்க்க வேண்டாம். பங்குச் சந்தையை இவ்வளவு எளிமையாக புரிந்து கொள்ள முடியாது, அது இன்னும் சிக்கலானது, இன்னும் ஆழமானது, நிஜ பொருளாதாரத்தோடு தொடர்புடையது.

உற்பத்தி, வியாபாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியோடு தொடர்புடையது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திறமையும், அறிவும் வேண்டும். உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளில் பலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இன்று பங்குச் சந்தைகள் உலகளாவியவையாக மாறி விட்டன.”

என்று நீங்கள் கருதினாலோ, எங்காவது படித்திருந்தாலோ, யாராவது சொல்லியிருந்தாலோ, அது நூற்றுக்கு நூறு உண்மை. சேவல் சண்டை போலவோ, குதிரை பந்தயம் போலவோ சும்மா பொழுது போக்கு இல்லை பங்குச் சந்தை. அது உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

எப்படி என்று இன்னும் விபரமாக பார்க்கலாம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

  1. குரங்குகள் கதையுடன் தொடங்கிய பங்கு சந்தையின் கதை சிறப்பு 👌. நிச்சயமாக இது பயங்கரவாத முதலாளித்துவத்தின் கொடூரமான தாண்டவம் தான் என்பதை விளங்குவீர்கள்…. தொடரட்டும் முதலாளித்துவ சேர்க்கை…

  2. எல்லாம் வால் வீதி யூதர்களின் மாய்மாலங்கள். மூலதன குயுக்தியை வெளிப்படுத்திய மார்க்ஸ் முதல் சயோனிச அரசுக்கு பிரதமாராக மறுத்த ஐன்ஸ்டீன் வரை இவர் கூட்டதவரே இவர்களை அம்பலபடுதியும் இன்னமும் தீராத சாபமாக மனித குலத்துக்கெதிராக சதி செய்கிறார்கள். பங்குச்சந்தை என்பது யூதனின் செஸ் போர்ட். வெகு இலகுவாக புகுந்து விளையாடுவான், பாவம் இந்திய மிடில் கிளாஸ். விஷயம் புரியாமல் தலையை கொடுக்கும்.

  3. பங்கு சந்தை பற்றிய வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வினவு அளித்த கட்டுரைக்கு நன்றி அடுத்த பதிவு க்கு காத்திருக்கிறேன்

  4. குரங்கு கதை என்பதில் பங்கு சந்தை பற்றி பாதி உண்மை மட்டும் தான் உள்ளது .

    கிராமத்தில் ஒருத்தர் ,இன்டர்நெட்டுன்னா என்னங்க என்று கேட்கிறார் , அதற்க்கு இன்னொருவர் அது ஆபாச படம் பார்க்க உதவும் ஒரு தொழில் நுட்பம் என்று பதில் கூறுகிறார் . கேட்பவர் கண்டிப்பாக இன்டர்நெட் தீமையானது என்ற முடிவுக்கு வருவார் .

    நான் முடிந்த வரை நாணயத்தின் மறுபக்கத்தை காட்ட விழைகிறேன் .

    மனித குலம் தனது இருப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பல அமைப்புகளை சோதனை செய்கிறது அதில் வெற்றி பெற்ற அமைப்பு நீண்டகாலம் நிலைத்து நிற்கிறது .

    கீழ்கண்ட கேள்விகளை அசைபோடுங்கள் , பின்வரும் தொடர்களில் பதில் இல்லையென்றால் நான் எழுத முயற்சிக்கிறேன் .

    முதலாளி தொழிலாளி என்று இருந்த சமூகத்திற்கு பங்கு சந்தை என்னும் தேவை எதற்கு வந்தது ?
    இதை யாரேனும் திட்டம் இட்டு செய்த அமைப்பா ?
    சமுகமே பரீட்சித்து தேர்ந்தெடுத்த அமைப்பா ? சமூகம் என்பது எப்பொழுதும் சரியான நூறு சதவீத திட்டமிடுதலுடன் எல்லாவற்றையும் செய்கிறதா ?
    இன்றைய சமூகத்தில் இதன் பயன் என்ன ?
    காரல் மார்க்ஸ் ஏன் கடைசி காலத்தில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார் ?

    பங்கு சந்தை மூலதனம் திரட்ட உதவுகிறது , அதன் மூலம் பல தொழில் நிறுவனங்கள் தொழிலை விரிவு படுத்தி , வேலை வாய்ப்பை அதிகரித்து , மக்களுக்கு சேவை செய்கின்றன .
    மக்களும் தங்களுடைய உபரி பணத்தை , நல்ல தொழிலில் முதலீடு செய்து ஈவு தொகை பெற்று வளம் பெறலாம் . தொழிலாளியும் தனது நிறுவனத்தில் பங்கு பெற்று அதன் உரிமையாளராகலாம் .

    கொசுறு செய்தி :
    இன்றைய ப்ரோவுணியன் மோஷன் என்கின்ற அறிவியலின் அடிப்படை கணக்குகள் பங்கு சந்தையில் ஜான் லே காலத்தில் ஆரம்பித்தவை தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க