ஆக்ஸ்பாம் அறிக்கை: இந்தியா – ஏற்றத்தாழ்வின் இருப்பிடம்
இந்தியாவின் 58 விழுக்காடு சொத்துக்களை இங்குள்ள பெரும்பணக்காரர்களில் ஒரு விழுக்காட்டினர் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இஃது உலக சராசரியான 50 விழுக்காட்டையும் விட அதிகம். இந்தியாவின் முதல் 57 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 70 விழுக்காடு ஏழை இந்திய மக்களின் சொத்து மதிப்பும் ஒன்றுதான். அதாவது 14,47,200 கோடி ரூபாய் சொத்துக்களை 57 பேர்கள் வைத்திருக்கின்றனர். பெருகிவரும் இந்திய சமூக ஏற்றத்தாழ்வின் இழிநிலையை இந்த ஆய்வறிக்கை பறைசாற்றுகிறது.
டாவோசில்(Davos) நடைபெற்ற உலகப் பெரும்பணக்காரர்கள் கலந்து கொண்ட உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் “99 விழுகாட்டு மக்களுக்கான பொருளாதாரம் (An economy for the 99 per cent)” என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம்(Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது. இப்படி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இந்த ஏற்றத் தாழ்வு கவலைகள் பொதுவாக கார்ப்பரேட் நன்கொடையுடன், கார்ப்பரேட் நிறுவனங்களை மனிதாபிமான முகத்துடன் காட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் அதற்காகவாவது இவர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
130 கோடி இந்திய மக்களின் மொத்தச் சொத்துமதிப்பு 2,077 இலட்சம் கோடி ருபாய் என்கிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை. முகேஷ் அம்பானி, திலிப் ஷங்வி மற்றும் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 பெரும்பணக்காரர்களிடம் மட்டும் 16,61,600 கோடி ருபாய் சொத்து இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு இந்தச் சொத்துக்களை மட்டுமல்ல அவற்றின் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையைக் கூட எண்ணுவதற்கு கடினமாக இருக்கும்.
உலகின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 1,71,319 இலட்சம் கோடி ரூபாயாகும். அவற்றில் 4,355 இலட்சம் கோடி ருபாய் பெரும்பணக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது. பில்கேட்சிடம் 5,02,500 கோடியும் ஸ்பெயினின் அமென்சியோ ஒர்தேகாவிடம் (Amancio Ortega) 4,48,900 கோடியும் வாரன் பஃபெட்டிடம் 4,07,360 கோடியும் இருக்கிறது. உலகின் 8 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் உலகின் கடைக்கோடி 50 விழுக்காடு ஏழை மக்களின் சொத்துமதிப்பும் ஒரே அளவிலானதாக இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் சொத்துமதிப்பின் அதிவேக வளர்ச்சி தொடருமாயின் இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக (670 இலட்சம் கோடி) அவர் இருப்பார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் வெறும் 500 தனிநபர்களிடம் மட்டும் 1,407 இலட்சம் கோடி ருபாய் குவிந்துவிடும். 130 கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகின் பாதிக்கும் மேற்பட்ட வறிய மக்களின் சொத்து மதிப்பானது முன்பு கருதியதை விடக் குறைவானதாகவே இருக்கிறது. சீனா, இந்தோனேசியா, இந்தியா, லாவோஸ், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் பணக்கார 10 விழுக்காட்டினரின் வருமானம் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்து இருக்கிறது. அதேநேரத்தில் வறிய 10 விழுக்காடு மக்கள் தங்களது வருமானத்தில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.
பாலினப் பாகுபாட்டின் காரணமாக ஆண்களின் வருமானத்தில் 70-90 விழுக்காடு மட்டுமே ஆசியப் பெண்களுக்குக் கிடைக்கிறது. ஊதியம் வழங்குவதில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பாலின வேறுபாடு இருப்பதாகவும் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டில் உலக அளவில் இந்தியா ஒரு மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறிகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட உலக ஊதிய அறிக்கை 2016-17-யின் அடிப்படையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெண்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மிகக்குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். வெறும் 15 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர். அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் குறைவான எண்ணிக்கையில் இருப்பது மட்டுமல்ல கடைக்கோடி இந்தியப் பொருளாதாரத்தில் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நிலை தொடருமாயின் இன்னும் 170 ஆண்டுகள் கழித்துதான் ஆண்களுக்குச் சமமான ஊதியத்தைப் பெண்கள் பெற வாய்ப்பிருக்கிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த பட்டியல்களை பாலியல் சார்ந்து பிரிப்பதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எனினும் ஏழைகள் என்று வரும் போது இந்த பாலின பேதம் வர்க்க ரீதியாகவே பாதிப்பு ஏற்படுத்துகிறதே அன்றி பாலின ரீதியாக மட்டும் அல்ல. சான்றாக ஏழைகள் அனைவரும் குழந்தைகளையும் உள்ளிட்டு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த குடும்பத்த தலைவரின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை என்ற உண்மையை அடிப்படையாக வைத்து எழுகிறது.
கிராமப்புறங்களில் வாழும் 40 கோடி இந்தியப் பெண்களில் 40 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் விவசாயம் அல்லது தொடர்பான வேலைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு நிலத்தின் மீதான உரிமைகள் இல்லாததால் விவசாயிகளாகக் கருதப்படுவதில்லை. இதன் காரணமாக அரசின் திட்டங்கள் மற்றும் கடன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக வெறுமனே விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதோடு நின்றுவிடுகின்றனர். இதனால்தான் விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண் விவசாயிகளை ஏதோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வதாக அரசு பதிவு செய்கிறது. ஆகவே இந்த பாலின பேதம் ஆளும் அரசுகளுக்கு தமது குறைகளை மறைக்கவும் பயன்படுகிறது.
இந்திய கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும் கூட ஏற்றத்தாழ்விற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அவர்களது நிறுவனங்களின் கடைநிலை ஊழியர் ஒருவரை விட 400 மடங்கிற்கும் அதிகமாக கூட ஊதியம் பெறுகிறார்கள்.
அமெரிக்காவில் பெரும்பணக்காரர்கள் அடிக்கடி நட்டத்தைச் சந்திப்பது மட்டுமல்லாமல் அவர்களது சொத்தும் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை. அமெரிக்காவில் பில்கேட்ஸ் போன்ற சிலர் மேலும் மேலும் அதிக பணக்காரர்களாக ஆகும் போது இந்த போட்டியில் குறைந்த அளவு பணக்காரர்கள் தோற்பது இயல்பானதே. இதற்கு முரணாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் தலைமுறைகள் கடந்தும் பெரும்பணக்காரர்களாக பலர் நீடித்து இருக்கின்றனர். காரணம் இந்நாடுகளில் சிறு, நடுத்தர முதலாளிகளின் அழிவு என்பது அதிவேகமானதாக இருக்கிறது. ஒன்றை அழிக்காமல் மற்றொன்று வளர்வதில்லை.
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பணக்காரர்கள் பலர் தங்களது வாரிசுகளுக்குச் சொத்துக்களை மடைமாற்ற இருக்கின்றனர். எனவே சொத்துக்களைக் கடத்தும் இந்த வாரிசுரிமைக்கு எதிராக வரி வசூலிக்ககூடிய ஓர் அமைப்பு முறையை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது இந்த ஏற்றத் தாழ்வின் கோபத்திலிருந்து பணக்காரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்களின் பினாமி முயற்சிகளுக்கும் வரி வசூலிக்க வேண்டும் என இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
உலகின் பெரும்பாலான பெரிய ஆடை நிறுவனங்களுக்கு இந்தியப் பருத்தி-நூற்பு ஆலைகளுடன் நெருங்கியத் தொடர்புள்ளது. இந்திய நூற்பாலைகள் தொடர்ந்து சிறுவர்களை வைத்துக் கட்டாயவேலை வாங்குவது குறித்தான சான்றாதாரங்கள் இருக்கின்றன என்று அந்த அறிக்கைக் கூறுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி இந்தியாவில் 58 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தக் குழந்தை உழைப்பு குறித்த கவலையும் கூட ஒரு என்ஜிவோ கவலைதான். ஏனெனில் வயது வந்தோர் ஏழைகளாக இருக்கும் போது அவர்கள் வீட்டு குழந்தைகள் வேலை செய்ய வேண்டியிருப்பது என்பது ஒரு நிர்ப்பந்தமே அன்றி ஏதோ அந்த குழந்தைகளின் உழைப்பை பெற்றோர்கள் பறித்துவிட்டனர் என்பதல்ல.
பங்குதாரர்களுக்கு இலாபத்தை அதிகரித்துக் கொடுப்பது தான் உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெருநிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே தாரக மந்திரமாக இருக்கிறது. இங்கிலாந்தில் 1970 ஆம் ஆண்டுப் பங்குதாரர்களுக்குக் கிடைத்த இலாபம் 10 விழுக்காட்டில் இருந்து தற்போது 70 விழுக்காடாக எகிறியிருக்கிறது.
இந்திய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பங்குதாரர்களுக்குக் கொடுக்கும் ஈவுத்தொகையை 2014-15 ஆண்டில் இந்தியாவின் 100 பெரிய தனியார் நிறுவனங்கள் 34 விழுக்காடாக அதிகரித்துவிட்டன. அவற்றில் 12 க்கும் அதிகமான நிறுவனங்கள் தமது இலாபத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஈவுத்தொகையைக் கொடுக்கின்றன. இதன்படி இந்த அறிக்கையை வைத்து பங்கு சந்தைகளில் பிரச்சாரத்தை நடத்தி பல நிறுவனங்களின் பங்குகளை அதிகம் விற்பதற்கும், விலை அதிகரித்து நடுத்தர மக்கள் தலையில் கட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
நிலக்கரியை எரிப்பதன் மூலமாக ஏற்படும் காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் ஏறத்தாழ ஒரு இலட்சம் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. “இந்தியாவும் தென் கிழக்காசிய நாடுகளும் நிலக்கரிச் சுரங்கங்களை கணிசமான அளவிற்கு வைத்திருந்தாலும் மின் இணைப்புக்கான வாய்ப்புகள் ஒரு பகுதி மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தியாவில் 75 விழுக்காடு மின்சாரம் நிலக்கரி மூலமாகவேப் பெறப்படுகிறது. நிலக்கரி செறிவாக இருக்கும் பகுதிகள் கூட குறைவான அளவே மின்சார வசதியைப் பெற்றிருக்கின்றன” என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது. நிலக்கரியை எரித்து மண்ணையும், நீரையும் மாசுபடுத்து நாம் தயாரித்து அனுப்பும் கார்களும், சட்டைகளும் மேலை நாடுகளுக்கு தேவை. பாதிப்போ நம் தலைமையில்.
ஒரு விழுக்காட்டினருக்காக மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமானப் பொருளாதாரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நேரமிது என்று இந்த ஆய்வறிக்கையில் ஆக்ஸ்பாம் வலியுறுத்துகிறது. ஒரு சிலரின் கைகளில் தீவிரமாகக் குவியும் சொத்துக்களைத் தடுப்பதன் மூலம் வறுமையை ஒழிக்குமாறு இந்திய அரசிடம் இந்நிறுவனம் கேட்டுள்ளது. வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்தவும் சொத்துவரியை அதிகரிக்கவும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருவாயில் இந்த வரிகளின் பங்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பணக்காரர்கள் அதிக பட்சம்30% வரி கட்டினால் போதும் என்ற நிலைமை தொடரும் போது இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகரிக்கும். பணக்கார்களுக்கான வரியை 75% போட்டால் மட்டுமே ஓரளவு அந்த ஏற்றத்தாழ்வின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதைச் செய்யுமாறு இந்த அறிக்கை கோரவில்லை, கோராது.
“வரித் தள்ளுபடியை இந்திய அரசாங்கம் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்கக் கூடாது. தனது தொழிலாளர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்கம் உதவி செய்ய வேண்டுமே ஒழிய பங்குதாரர்களுக்கு மட்டும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு அல்ல.” என்று ஆக்ஸ்பாம் கூறியுள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்க கூடாது என்றுதான் இந்த அறிக்கை சொல்கிறதே அன்றி கூட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வகையில் முதலாளிகள் ஏதாவது தாமே பார்த்து ஏழைகளுக்கு செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கை மறைமுகமாக கோருகிறது போலும்.
வியாபாரத்திற்கும் அரசியலுக்கும் உள்ள நெருங்கிய உறவை இந்நிறுவனம் கடுமையாகச் சாடி இருக்கிறது. பெருநிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள் தான் அரசின் துறை சார்ந்த பொறுப்புகளை வகிக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்வதானால் பெருநிறுவனங்களின் பங்குதாரரர்கள் தான் கட்சிகளையும் அரசுகளையும் வழி நடத்துகிறார்கள். இதனால் முதலாளிகள் யாரும் இனி நேரடி அரசியலில் இறங்க கூடாது என்று சட்டம் போட முடியுமா? மல்லையா போன்றவர்கள் காங்கிரசு, பாஜக ஆதரவால் எம்.பி ஆவதைத்தான் தடுக்க முடியுமா?
வரி ஏய்ப்பின் காரணமாக வளரும் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 6,70,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்திப்பதாக வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு கருத்தரங்கு (The UN Conference on Trade and Development) கணக்கிட்டுள்ளது.
“வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக இந்தியா இருப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும். பொது சுகாதாரத்திற்கும் கல்விக்கும் தேவையான நிதியை அரசுக் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். சுகாதரத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(GDP) ஒரு விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாகவும் கல்விக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 லிருந்து 6 விழுக்காடாகவும் அரசு அதிகரிக்க வேண்டும்.” என்று அந்நிறுவனம் மேலும் கூறியிருக்கிறது. கல்வி, சுகாதாரத் துறையில் தனியார் மயம் கோலேச்சும் காலத்தில் அரசு இவ்வளவு ஒதுக்கத் தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, தனியார்மயத்தை தடை செய்யாமல் இந்த ஒதுக்கீட்டை எப்படி உயர்த்த முடியும்? இதைப் பற்றி அறிக்கை பேசவில்லை, பேசாது.
ஆக்ஸ்பாம் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குபவர்களிடமே அதனை ஒழிப்பதற்கு முறையிடுவது நகைப்பிற்குரியது. ஒரு விழுக்காடு பணக்காரர்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு முறையை 99 விழுகாட்டினருக்கு சேவை செய்வதற்கானதாக மாற்றுவது என்பது இந்த முதலாளித்துவ அமைப்பை வீழ்த்துவதன் வாயிலாகவே நடந்தேறும்.
ஆம். வரலாற்றில் உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு வடிகாலாக இருந்த மக்கள் நலம்புரி அரசுகளுக்கான (welfare states) காலம் முடிந்துவிட்டது. தனியார்மய தாராளமய திட்டங்களை செயல்படுத்திய பிறகு பெயரளவிற்கு இருந்த கவர்ச்சித் திட்டங்களும் காற்றில் பறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. மீண்டும் அரசுகளிடம் மன்றாடுவதன் மூலம் வரலாற்றை பின்னோக்கி இழுக்க முடியாது.
ஒருவேளை ஆக்ஸ்பாம் கூறுவது போல பில்கேட்ஸ் டிரில்லியனர் கூட ஆகலாம். எனில் அந்த வரலாற்றுப் பிழைக்கு 99 விழுக்காட்டு மக்களுக்காக போராடும் புரட்சிகர சக்திகளும் சமூக இயக்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
– சுந்தரம்
மேலும் படிக்க…