கேள்வி :
1.கம்யூனிஸ்டுகள் குறித்து உங்கள் பார்வை?
2.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியமைக்க என்ன உத்தியை கடைபிடிக்க வேண்டும்..?
சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,
தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தேர்தல் அரசியலை மறுத்து செயல்படும் மார்க்சிய லெனினிய கம்யூனிசக் கட்சிகளும் இந்தியாவில் இருக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் ஓரளவு செல்வாக்கோடும் இருக்கின்றனர். தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகளில் சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளும் முதன்மையானவை. தற்போது கேரளாவைத் தாண்டி அவர்கள் ஆட்சி புரியும் மாநிலம் ஏதுமில்லை. கடந்த காலத்தில் ஆட்சி செய்த திரிபுராவையும், மேற்கு வங்கத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு அவர்கள் மற்ற வாக்கரசியல் கட்சிகளை நம்பியும், கூட்டணி வைத்தும் செயல்படுவது ஒரு காரணம். கம்யூனிஸ்டுகளுக்கென்று தனித்திட்டம், கொள்கை, செயல்பாடு என்ற முறையில் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களது தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் போன்றவை அந்தந்த பிரிவின் பொருளாதாரப் போராட்டங்களை மட்டும் நடத்துகின்றன. அரசியல் ரீதியாக இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரும் அரசியல் போராட்டங்களை மைய ரீதியாக நடத்துவதில்லை. அப்படி ஒரு பார்வையுமில்லை. மக்களும் கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், ஆனால் ஆட்சி அமைக்க அவர்கள் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும் திமுக, அதிமுக-வை நம்பி மாறி மாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெறுவதே பெரும் சிரமம் என்ற நிலையில்தான் இங்குள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன. அடிப்படையில் இந்தியாவில் எப்படி புரட்சி செய்யப் போகிறோம், அதற்கு எப்படி மக்களைத் திரட்டப் போகிறோம் என்ற பார்வையின்றி வெறும் வாக்கரசியல் வளையத்தில் மட்டும் வலம் வருவதனால் அவர்கள் தேய்ந்து போய்விட்டார்கள். ஆகவே அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. அக்கட்சிகளுக்குள்ளே அணிகளிடம் இது குறித்த அரசியல் விவாதம், போராட்டம் நடந்து ஏதும் மாற்றம் வந்தாலொழிய வேறு ஒளிமயமான எதிர்காலம் இல்லை.

நன்றி!

o0o0o

கேள்வி:
குறிப்பிட்ட கோட்பாடுகளை பேசும் போது இஸம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தன் வாழ்வை தனக்கேற்றபடி வாழ நினைத்து போராடும் பெண்களை பெண்ணியவாதி(feminist) என்று கூறுவதன் நோக்கம் என்ன?
ச. தி. அன்பரசி

அன்புள்ள அன்பரசி,

இஸத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் பெண்ணியம் அல்லது ஃபெமினிசத்திற்கும் பொருந்தும். பெண்ணியமும் தனக்கென்று சில அடிப்படைக் கோட்பாடுகளை வைத்திருக்கிறது. அதே நேரம் அவை உலகில் ஒரே மாதிரியான புரிதலில் ஏற்றுக் கொண்டிருக்கப்படவில்லை. பெண்ணியத்திற்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகளையும் முன்வைக்கிறார்கள்.

முதன்மையான ஆணாதிக்க சமூக அமைப்பே பெண்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்று பெண்ணியம் கருதுகிறது. அது ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போராக இருந்தாலும், வெனிசுலாவில் நடக்கும் வறுமைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் நிலவும் பாலியல் ரீதியான பாகுபாடுகளாக இருந்தாலும் இப்படி பார்க்கிறார்கள்.

எனினும் இந்த உலகம் ஆண்கள் X பெண்கள் என்ற முரண்பாட்டினால் மட்டும் இயங்கவில்லை. முதன்மையாக சொத்துடமை X சொத்தின்மை என்ற முரண்பாட்டினால் இயங்குவதாக கம்யூனிஸ்டுகள் கருதுகிறோம். ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் என்பது ஒரு ஏழை மூன்றாம் உலக நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், வளைகுடாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கை நிலை நிறுத்தவுமே அன்றி வேறு அல்ல. ஆக்கிரமிப்பு போரின் பாதிப்பு ஈராக்கின் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சேர்ந்தே அழிவுகளைக் கொண்டு வருகிறது.

அதே நேரம் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் முதலாளித்துவ சமூக அமைப்பாக இருந்தாலும் சரி இரண்டிலும் கணிசமான அளவுக்கு ஆணாதிக்கம் கோலேச்சுகிறது. அதை இல்லை என்று மறுக்க முடியாது.

குடிசைப் பகுதியில் இருக்கும் பெண்ணுக்கும், மாளிகையில் வசிக்கும் பெண்ணுக்கும் பெண்ணுரிமையின் பிரச்சினைகள் ஒரே போன்று இருப்பதில்லை. அதே போன்று பொதுப்பிரிவில் வரும் ஆதிக்க சாதிப் பெண்களுக்கும், பட்டியலினப் பிரிவில் வரும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒரே போல சமூக அந்தஸ்து, பிரச்சினைகள் இருப்பதில்லை. இப்படி பெண்களுக்குள்ளேயே வர்க்கம், சாதி அடிப்படையில் பிரச்சினைகள் வேறுபடுகின்றன. சில பெண்ணியவாதிகள் இதை அங்கீகரித்தாலும் அடிப்படையில் பாலின பாகுபாட்டையே முதன்மையாக முன்வைக்கிறார்கள்.

படிக்க :
♦ ‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

நீங்கள் குறிப்பிடுவது போல தனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டும் பெண்ணியவாதிகளின் பணியல்ல. அவர்கள் சமூக ரீதியாகவும் பணியாற்றுகிறார்கள். பணியாற்ற வேண்டும். தாங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளிற்காக சிலர் களத்திலும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் அப்படி குறிப்பிட்டுச் சொல்லும் பெண்ணிய அமைப்புகள் இல்லையென்றாலும் மேற்குலகில் இருந்திருக்கின்றன. தற்போது பொதுவில் பெண்ணியவாதக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வோர் தனிநபர்களாக இருந்தாலும் தங்களை பெண்ணியவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

பெண்ணியவாதம் ஒரு பெண்ணின் தனி உரிமைக்கான வாழ்வியல் என்பது தனிநபர் உரிமை பற்றி மட்டும் பேசும் கருத்தாக சுருங்கி விடுகிறது. மாறாக அது சமூகத்தில் பெண்களின் உரிமைகளுக்கான இசமாக இருக்கும் போது சமூக மாற்றத்தில் அதற்கும் ஒரு பங்கிருக்கிறது. அத்தகைய சமூக நோக்கிலான பெண்ணிய அமைப்புகளை கம்யூனிசம் நேச சக்தியாகவே பார்க்கிறது, கொள்கையில் வேறுபாடு இருந்தாலும்!

நன்றி!

o0o0o

கேள்வி:
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் இழுத்தடிக்கப் படுகிறது?
அசோக்

அன்புள்ள அசோக்,

பாஜக எஜமானர்களின் விசுவாசமான அடிமையாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நீங்கள் குறிப்பிடும் பெயர் மாற்றம் ஏன் இழுபடுகிறது, எங்களுக்கும் புரியவில்லை.

o0o0o

கேள்வி:
இன்று தஞ்சை கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய் என்று போராடும் தமிழ்தேசிய தலைவர்கள் அன்று சிதம்பரம் கோவிலில் ஐயா ஆறுமுகசாமியோடு தமிழில் பாட சிற்றம்பலம் ஏறாதது ஏன்?

சி. நெப்போலியன்

அன்புள்ள நெப்போலியன்,

இப்படி எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. சிதம்பரம் கோவில் தமிழ் பாடும் போராட்டம், திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா என்று பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் மக்களின் பண்பாட்டுப் போராட்டத்தை ம.க.இ.க. மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தீவிரமாக நடத்தின. அன்றைக்கு தமிழ் தேசியர்கள் அவற்றில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தார்மீக ரீதியான ஆதரவைத் தந்தார்கள். இன்றைக்கு அவர்கள் தஞ்சை குடமுழுக்கு போராட்டத்தை முன்னின்று நடத்துவதை நாம் வரவேற்க வேண்டும். தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை அவர்களும் புரிந்து கொண்டிருப்பது நல்ல விசயம்தானே?

o0o0o

2 மறுமொழிகள்

  1. அன்பின் வினவு தஞ்சை கோவில் தமிழில் குடமுழுக்கு செய்..எனும் போராட்டத்தை நிச்சயம் நான் எதிர்மறையாக பார்க்கவில்லை..மகிழ்வோடு வரவேற்கிறேன்..தற்போதைய காலச்சூழலில் வரவேற்கத்தக்க போராட்டமாகவே பார்க்கிறேன்..மலரத்துடிக்கும் மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைந்த போராட்ட அரசியல் அவசியத்தையும் உணர்கிறேன்…அன்றைய சிதம்பரம் கோயில் போராட்டத்திலும் ஐயா ஆறுமுகசாமியோடு அவர்கள் நின்றிருந்தால் தமிழில் பாடும் உரிமை எனும் அரசியல் வெற்றி இன்னும் பலப்பட்டிருக்குமே என்ற என்னுள் எழுந்த ஆதங்கமே மேற்படி கேள்வியின் வெளிப்பாடு…ஆயினும் வினவின் இந்த துல்லியமான பதிலை முழுமையாக ஏற்கிறேன்…நன்றி..

  2. இதைவிட கொள்கைப் பிடிப்பான
    நேர்மையான பதில் வேறொன்றும் இருக்க முடியாது,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க