“டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன. ஆண்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’

மேற்படி முத்தை உதிர்த்தவர் மார்க்கெட் போன பழைய காமெடி நடிகர் கே. பாக்கியராஜ்.

***

டாஸ்மாக் சரக்கால் குடலுக்கு என்ன நேர்கிறதோ அதே தான் நமது சினிமாக்காரர்களால் மூளைக்கும் நேர்கின்றது. கவனிக்க… நமக்கு சினிமாவின் மீது எந்த வாய்க்கா வரப்புத் தகறாரும் இல்லை – சினிமாக்காரர்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள்.

சினிமாவில் நடித்து விட்டோம்; திரையில் நமது முகம் தெரிந்து விட்டது; கோணங்கி சேட்டைகளுக்கு மக்களும் கை தட்டி விட்டார்கள்; நடித்ததில் நாலைந்து படம் வசூலித்தும் விட்டது – இவ்வளவு போதும். நமது நடிகர்களுக்கு தலையில் கொம்பு முளைத்து கொம்பைச் சுற்றி ஒளிவட்டமும் தோன்றி விடுகின்றது. அதன் பின் பூமிக்கு மேல் வானத்திற்கு கீழ் உள்ள சகலத்தைப் பற்றியும் கருத்து சொல்லும் துணிவு வந்து விடுகின்றது.

படிக்க:
பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி

அதில் மார்க்கெட் போன பழைய பூட்டகேசுகளின் இம்சை ஒரு தனி ரகம்; அதிலும் குறிப்பாக மார்க்கெட்டும் போய் தொழிலில் உருப்படாத வாரிசும் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அப்பேர்பட்ட ஆசாமிகளிடம் மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் விளைவு மேலே உள்ளதைப் போல் தான் இருக்கும்.

பெண்கள் தவறு செய்தால் அது தவறு – ஆண்கள் தவறு செய்தால் அது தவறல்ல என்கிற இந்த உயரிய கோட்பாட்டை பாக்கியராஜ் பேசும் போது யாரும் குறுக்கிடவில்லை. சொல்லப் போனால் பாக்கியராஜ் பொதுபுத்தியில் என்ன உள்ளதோ அதைத் தான் பேசியிருக்கிறார். மேலும், “கள்ளக்காதலால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி” குறித்த செய்திகளை தினத்தந்தியில் படித்து உள்ளபடியே அச்சமடைந்துள்ளார். எனவே தான் அந்த கொலைகளில் இன்னொரு “ஆண்” தொடர்பு இருப்பதை பார்க்க மறந்து விட்டிருக்கிறார்.

மேலும், இதே கள்ளக்காதல் விவகாரங்களுக்காக ஆண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் செய்திகளும் பாக்கியராஜ் படிக்கும் அதே தினத்தந்தியில் வரத்தான் செய்கின்றன. பிரச்சினை என்னவென்றால் அந்த செய்திகளையெல்லாம் அவரது கண்கள் பார்த்திருக்கும்; ஆனால், மூளை பார்க்க மறுக்கின்றது.

பாலியல் தொடர்பாக நடக்கும் குற்றங்களில் பெண்கள் ஈடுபட்டிருப்பதை பார்த்து கலவரமடையும் பாக்கியராஜ், அதே குற்றங்களில் ஈடுபடும் ஆண்களைப் பார்த்து ஏன் அச்சப்படவில்லை? அல்லது, ஆண்கள் பாலியல் ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது ஏன் அவருக்கு உறுத்தலாக இல்லை?

இந்த சிந்தனைகள் எல்லாம் பெண்களை சக உயிர்களாக பார்க்காமல், வெறுமனே ஆண்டு அனுபவிக்கும் உடைமையாக, பொருளாக, சொத்தாக பார்க்க பயிற்றுவித்துள்ள பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இருந்தே எழுகின்றன. அதிலும், சினிமாக்காரன் என்பதால் இந்த திமிர் கொஞ்சம் தூக்கலாகத் தான் இருக்கும். இந்தியாவின் சினிமாத்துறை என்பது பாலியல் ரீதியிலான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கோலோச்சும் இடம். “பெண்களின் ஒழுங்கீனம்” தோற்றுவிக்கும் அச்சத்தை விட அவர்களும் தன்னைப் போன்றே (பல சந்தர்பங்களில் தன்னை விட மேம்பட்ட ரீதியிலும்) சிந்திக்கத் தெரிந்த ஒரு சக உயிரினம் என்பதே பாக்கியராஜைப் போல் சினிமாத்துறையில் குப்பை கொட்டிய பழம் பெருச்சாளிகளுக்கு உள்ளூர கலவரத்தை உண்டாக்க கூடியது.

பார்ப்பனியம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சித்தாந்தம் என்பது நமக்குத் தெரியும் – அது சாதி வாரியாக மட்டும் மனிதர்களை பிளவு படுத்தவில்லை, பாலியல் ரீதியாகவும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்றது. அதுவே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக உறைந்து கெட்டிதட்டிப் போயுள்ளது. பாக்கியராஜ் போன்ற தமிழ் சினிமா ‘படைப்பாளிகள்’ பார்ப்பனிய பொதுபுத்தி என்கிற நாட்டு சரக்கை ராவாக அடித்து விட்டு மேடையேறினால், இப்படி நாற்றமடிக்கும் வாந்தி தானே எடுத்தாக வேண்டும்?

***

தில்லி பெண் நிர்பயாவை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கபபட்டனர். குற்றவாளிகள் போலீசாரிடம் பிடிபட்ட போது இவ்வாறு சொன்னார்கள் : “ நாங்கள் முதலில் சீண்டினோம், அந்தப் பெண் முரண்டு பிடித்தாள். அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வன்புணர்வு செய்து கொன்று போட்டோம்”. பாலியல் தூண்டுதலை விட அந்த குற்றவாளிகளுக்கு தங்களுடைய “ஆண்” திமிரை ஒரு பெண் உரசி விட்டாள் என்பது பிரதானமாக இருந்திருக்கிறது.

அந்த குற்றவாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் அந்த குறிப்பிட்ட இரவு நிகழாமல் போயிருந்தால் ஒருவேளை அவர்கள் “படைப்பாளிகள்” ஆகியிருக்க கூடும்; யார் கண்டது, சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் ஆகியிருக்க கூடும்.

பெண்களை இழிவு படுத்துவது பார்ப்பனிய சித்தாந்தம் என்றால், அந்த மலத்தின் மேல் சீனி தூவி கடை விரிப்பதுதான் பாக்கியராஜ் போன்ற படைப்பாளிகளின் படைப்பியக்கத்தின் சாரம். தொடர்ந்து நாற்றமடிக்கும் இந்த அசிங்கத்தோடு புழங்கிக் கொண்டிருப்பதும், சினிமாக்காரன் என்றால் என்னத்தையும் பேசலாம் என்கிற ஒரு துர்பாக்கிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாலும் தான் இவ்வாறான மேடைப் பேச்சுகளை நாம் கேட்டுத் தொலைய வேண்டியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் தவறு நடக்க காரணம் என்று பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். பாக்கியராஜும் கோவை மாவட்டம்தான். நாளைப் பின்னே அங்கே போய் வரத் தானே வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் பாக்கியராஜின் இந்த தத்துவார்த்த கருத்தை குறித்து அவர் அடுத்த முறை கோவை செல்லும் போது நேரில் சந்தித்து ‘விளக்கம்’ கேட்க வேண்டும்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : நக்கீரன்

10 மறுமொழிகள்

 1. இவர்களைப் போன்ற கீழ்த்தரமான இச்சைகளைத் தூண்டி விட்டு சினிமா எடுத்த இயக்குநர்களால் தான் தமிழ் சினிமா சீர்கெட்டுப்போனது.
  சாதி என்ற பெருமை பீத்தி பாரதிராஜா, நாகரீக பார்ப்பனர் கமல், கவுண்டர் பெருமை பேசும் கதாபாத்திரங்கள் போன்றவர்களால் தமிழ்சினிமா சாதிமயமாக்கப்பட்டது.

  இவர்கள் இன்று சாத்தான் ஓதும் வேதம் போல் சமூகச் சீரழிவைப் பற்றி பேசுகிறார்கள்.

  சிரிப்பு தான் வருகிறது.

 2. கள்ளக்காதலால் யார் யாரைக் கொலை செய்தாலும், அது மிகவும் வருந்தத்தக்க செயலே ஆகும். அதை அரங்கேற்றியவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமமான முறையில் மோசமானவர்களே. ஆனால் அந்தப் பெண்ணை சாக்கடையிலும் மோசமாகப் பார்க்கும் நமது சமூகம் அந்த ஆணை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்கள் . நீங்கள் சொல்வது போல் பெண்களைக் காமத்தைத் தூண்டும் பொருளாகவே கேவலமாக சித்தரித்து பல படங்களை இயக்கி வெற்றிபெற்ற இந்த அறிவு ஜீவி இதை காட்டிலும் அதிகமாகவே பேசுவார். இதில் நகைமுரண் என்னவென்றால் மேற்கூறிய அதே காரணங்களால் பெண் ரசிகர்களை பெற்றவர்.

  “ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான். பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை …” இது முற்றிலும் முத்தான கருத்து. ஒரு ஆண் வைப்பாட்டியோ இரண்டு மனைவியையோ வைத்துக் கொண்டால், எந்த விபரீதங்களும் நடக்காததற்கு காரணம் அவன் இரண்டு பெண்களையும் இரு கண்களாக பார்த்துக்கொள்வதால்தான் என்று சினிமாத்தனமாகவே எண்ணிவிட்டார் போலும். அந்தப் பெண்களின் உள்ளக குமுறல்கள் வெளியில் கேட்பதில்லை, எந்த சினிமாவும் நுட்பமாக சித்தரித்ததில்லை. பல நேரங்களில் அந்த காமத் கிறுக்கனின் அதிகாரத்தாலும், பல சமயங்களில் அவன் மீதுள்ள பாசத்தாலும், இந்த ஆணாதிக்க சமூகம் கற்றுத்தந்த கோட்பாடுகளாலும் அவள் வேறு வழியின்றி பொறுத்துக்கொள்கிறாள். இப்பொழுதுதான் விவாகரத்து செய்யும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். கொலை செய்வதென்பது முன்பு அரிதாகவே நடந்தது. இப்பொழுது அதுவும் நடக்காத தொடங்கியுள்ளதால் இவரைப் போன்றவர்கள் திகிலடைந்துள்ளனர்.

  இவர் கூறியதை வைத்தே பேசுவோம். வைப்பாட்டி தேடும் கணவன்மார்களையும் பல திருமணங்கள் செய்த ஆண்களையும் இந்த ஆணாதிக்க சமூகம், அவர்கள் “ஆண்” என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக்கொள்கிறது. அது போக அது ஆணின் இயல்பாகவும், அவனுடைய ஆண்மையின் அளவீடாகவும் கற்பிதம் செய்து கொண்டுள்ளது நமது சமூகம். ஏனென்றால், அப்பொழுதுதானே எல்லா ஆண்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டும். அதைக் குற்றமாக அறிவித்தால் எப்படி சாத்தியமாகும். அப்படியென்றால், ஒரு பெண்ணின் பெண்மையை, அவள் எத்தனை ஆண்களுடன் தொடர்பு கொண்டுள்ளாள் என்பதை வைத்து அளவீடு செய்யலாமா? ஒரு பெண் தன் கணவனைத் தவிர மற்றொரு ஆணுடன் நிரந்தரத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு சிக்கலேதும் இல்லாமல் இருவரையும் நன்கு கவனித்துக் கொண்டால் பாக்யராஜ் ஏற்றுக்கொள்வாரா? எந்த ஆண்மகனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவன் மீது திணிக்கப்பட்டுள்ள “ஆண்” என்ற அதிகாரக் கற்பிதம் அவனை தாளாத அவமானம் கொள்ளச் செய்யும். அவனைக் கொலைகாரனாக மாற்றும்? ஒன்று இருவரும் சண்டையிட்டுச் சாவர், அல்லது இருவரும் சேர்ந்து, பெண்குலத்தின் பெருமையை சீரழிக்க வந்தவளை, கற்பிற்கு களங்கம் ஏற்படுத்தியவளை கொடூரமாகக் கொன்று தியாகி பட்டம் ஏற்பர். ஒருபுறம், இரு மனம் புரிந்தவனை “ரெண்டு பெண்டாட்டிக்காரன்…” என்று பெயரளவிற்கு சாடிவிட்டு மறுபுறம், “அவனால் முடிகிறது…” என்று பாராட்டும் இந்த நயவஞ்சக சமூகம், ரெண்டு புருசங்காரிகளை எப்படி அங்கீகரிக்கும், அவளைத் தேவடியாள் என்றே சாடும். “கணவனே கண்கண்ட தெய்வம்…” என்று என்று கற்பின் பெருமையை பெண்களிடம் மட்டும் போதிக்கும் நம் சமூகம், பெண்களை, ஆண்களாகிய கடவுள்கள் தாலி கட்டி உரிமையாக்கிக்கொள்ளும் தாசிகளாகவே கருதி வருகிறது. ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளையைப் பெற்று, இந்த கேடுகெட்ட சமூகத்தில் கற்பிதம் பெற்ற ஆண் பிள்ளைகளின் சேட்டைகளின் மத்தியில் வளர்க்கும் போதுதான், ஆணாதிக்கத்தை உணருகிறான். கற்பு என்பது ஆண்களுக்கும் பொருந்தும்.

  இவற்றை கள்ளக்காதல் கொலைகளில் ஈடுபட்ட பெண்களை ஆதரிப்பதற்காக சொல்லவில்லை. இத்தகைய அவலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும், ஆணாகவோ பெண்ணாகவோ, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், இத்தகைய அவலங்களில் ஈடுபவர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே கீழ்தரமானவர்கள் என்பதும், இத்தகைய அவலங்களுக்கு பெண்களே பெரிதும் காரணம் என்று தீர்ப்பு கூறுவதும், ஆண் குற்றவாளிகளை ஆதரிக்கும் தவறான வாதங்களாகும். இத்தகைய தவறான வாதங்களை சினிமா பிரபலங்கள் கூறும்பொழுது, “வைரல்” ஆகிவிடுகிறது.

  தமிழனின் தற்கால தமிழ் சினிமா மோகம் தமிழ்நாட்டின் சாபம்.

  இத்தகைய சூழ்நிலைகளில் “நாம்தான் மூத்தகுடி….”, “தமிழன்டா…” என்று ஒலிக்கும் குரல்களில் அதிகாரத் தோரணை இருப்பதையே உணர முடிகிறது. காடுகளில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் நாகரிகம் அண்டாத பூர்வகுடிகளின் பண்பாட்டில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

 3. கே(டுகெட்ட) பாக்கியராஜிக்கு கூட ஒரு கட்டுரை போட வேண்டி தொலையுது…

 4. வினவு பத்திரிகை ஆசிரியருக்கு ,
  முதலில் என்னுடைய வணக்கம் .
  உங்கள் பத்திரிகைக்கு நான் எழுதும் முதல் விமர்சனமும்
  இதுவே . கே. பாக்கியராஜ்ஜின் பேச்சிற்கு நீங்கள் கொடுத்த
  விமர்சனம் முழுக்கமுழுக்க சரியானதே .
  ஆனால் அவருடைய திரைப்படத்தையும் அவருடைய தனிப்படட
  சாதாரண குணாதியங்களை விமர்சிப்பதை தவிர்த்திருக்கலாம்
  என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

 5. பாக்யராஜ் , அப்படி தப்பாக ஒன்றும் பேசிவிடவில்லையே , உண்மையை தான் சொல்லி இருக்கிறார். பொள்ளாச்சி விவகாரத்தை பொறுத்த வரையில் பெண்கள் மீதுதான் முதல் தவறு இருக்கிறது. முகநூலில் முன்பின் தெரியாத,தனக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு ஆணிடம் நட்பை ஏற்படுத்தியது முதல் தவறு, அப்படிப்பட்டவனை நம்பி தன்னந்தனியாக அவன் கூப்பிடும் இடம் சென்று சந்தித்தது இரண்டாவது மிக பெரிய தவறு. இந்த இரண்டையும் இவர்கள் எந்த அடிப்படையில் செய்தார்கள் . ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவன் அப்படி தான் வலைவிரிப்பான், பெண்கள் மட்டுமல்ல, இந்த முகநூல் தொடர்பால் எவ்வளவோ ஆண்களும் மோசடிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறார்கள். பெண் என்றால் கற்பும்,பணமும், ஆண் என்றால் பணமும் சொத்தும். இது தான் மோசடி பேர்வழிகளின் குறிக்கோள்…

  //பெண்கள் தவறு செய்தால் அது தவறு – ஆண்கள் தவறு செய்தால் அது தவறல்ல என்கிற இந்த உயரிய கோட்பாட்டை பாக்கியராஜ் பேசும் போது யாரும் குறுக்கிடவில்லை. //

  அப்படி அவர் எங்குமே சொல்லவில்லை , கள்ள காதலை பொறுத்தவரை ஆண் பெண் இருவரும் சம்மந்தப்பட்டிருந்தாலும் , பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை , ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பி தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தினால்,பலாத்காரம் செய்தால் அது கள்ளகாதல் கிடையாது , அதற்க்கு பெயர் பாலியல் வன்புணர்வாகும். ஒரு பெண், தன் கணவனுக்கும் குடும்பத்திற்கு தெரியாமல் இந்த அசிங்கத்திற்கு தோதான காரணங்களை உருவாக்கி கொண்டு முழுமனதோடு ஈடுபடும் போது தான் அது கள்ளகாதலாகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், “ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது”. டெல்லி நிர்பயா சம்பவம் முதல் வகையினத்தை சார்ந்தது, அது பாலியல் வன்கொடுமை. அதனை பொள்ளாச்சி மற்றும் கள்ளக்காதல் கொலைகளோடு ஒப்பிட முடியாது.

  //பெண்களை இழிவு படுத்துவது பார்ப்பனிய சித்தாந்தம் என்றால்…//

  பார்பனீயமும் கிடையாது , புஸுவானமும் கிடையாது. இப்போதெல்லாம், பார்ப்பன பெண்களே, சுதந்திரமாக தங்களுக்கு பிடித்தவனை சூத்திர, பஞ்சம சாதியில் இருந்தும் கூட காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்படி போகும் பெண்ணை இதுவரை எந்த பார்ப்பன குடும்பமும் கவுரவ கொலை செய்தது கிடையாது என்கிற போது இந்த விவகாரத்தில் பார்ப்பனீயம் என்பதெல்லாம் வெறும் வெற்று பேச்சு ..

  பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் சாட்டபட்டவன் கூறும்போது, “நாங்கள் பெண்களிடம் இனிமையாக பேச்சு கொடுப்போம், முடிந்த வரை அவர்கள் அழகை புகழ்ந்து பேசுவோம் அதில் மயங்கி விடுவார்கள் என்று தான் கூறி இருக்கிறான். பேச்சில் மயங்கி போவது என்பது பார்பனியத்தில் வராது. பெண்கள் தான் தங்கள் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும். அது இல்லாதவரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

  ஆகவே சாக்கியன் என்று பெயரை வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, துயரத்தின் ஆணிவேரை கண்டுபிடிக்கவும் அதை நீக்கவும் வழி தெரிந்திருக்க வேண்டும்.. நன்றி

 6. சாக்கியன் பாக்கியராஜை போட்ட போட்டில் ரெபெக்கா மேரி போன்றோரிடம் இருக்கும் பாக்கியராஜுக்கள் துள்ளி குதித்து வெளியே வருகிறார்கள்.
  ஆம்பிளைங்கன்னா அப்படிதான் இருப்பாங்க.. பொம்பளைங்கதான் கவனமா இருக்கனும் கிளாஸ் எடுக்கிறார். முன்பின் தெரியாத ஒரு பெண்ணை தனியாக அழைப்பதற்கும் மற்றும் ஆசை வார்த்தைகள் பேசுவதற்கும் ஆண்களுக்கு சர்வசுதந்திரம் இருக்கும் இச்சமூகத்தில் பெண்களுக்கு அந்த அழைப்பை ஏற்பதற்கும் ஆண்களிடம் மயங்குவதற்கும் ஏன் உத்தரவாதம் இல்லை என்பதுதான் சாக்கியன்களின் கேள்வி…
  இதில் பெண்களை மயக்குவது பார்ப்பனியத்தில் அடங்காது என்ற பிரகடனம் வேறு…
  முடியல…

  • பல முறை இந்த ‘ரெபெக்கா மேரி’ என்கிற பெயரில் பின்னூட்டமிடுவது ஒரு ஆண்தானோ என்று சந்தேகம் வருவதுண்டு. இந்தப்பின்னூட்டத்தைப் படித்தபின் அந்த சந்தேகம் வலுக்கிறது!

 7. முகநூல் என்பது புதிதாக முன்பின் தெரியாதவர்களின் நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்வதற்கல்ல, நம் குடும்பத்தினர்கள், உறவினர்கள், உடன் படிக்கும், வேலை செய்யும் நபர்களின் தொடர்புக்கானது மட்டுமே.(Just for Connectivities Within Family n Well known Friends Circle)..

  சிறுவயதில் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து உண்மையாக நடக்க வேண்டும், அப்போது தான் எதிர்காலத்தில் தன் வாழ்க்கை துணைக்கு(ஆண்/பெண்) யாராக இருந்தாலும் உண்மையாக இருப்பார்கள் .. பெண்களை பொறுத்த அளவில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்களை பொன்னை போல் போற்றி பாதுகாத்து வரவேண்டும். அதே போன்று ஆண்கள் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைபிடி போன்ற குணங்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், பொள்ளாச்சி போன்று சம்பவங்களும் கள்ள காதல்களும் தவிர்க்க முடி

  • *இல்லையென்றால், பொள்ளாச்சி போன்று சம்பவங்களும் கள்ள காதல்களும் தவிர்க்க முடி*

   இல்லையென்றால் , பொள்ளாச்சி போன்ற சம்பவங்களும் கள்ளகாதல்களும் தவிர்க்க முடியாததாக மாறிவிடும்

 8. பெரியார் கருத்து – இயற்கையை இயல்பாய் கடக்கவேண்டியதை,
  இங்கு குழப்பி கொள்கிறோம்!!!

  பாலியல் புரிதல் இல்லாத விலங்குகளை கவனிக்கிறேன்!!!
  அறத்துடன் உள்ளன(உள்ளார்கள்)

  ஆனால் இந்த மாதிரி பலாத்காரம் செய்யும் மனித விலங்குகளை
  எதில் சேர்ப்பது…
  பாலியல் கல்வி மிக அவசரம், பெற்றோவது வீட்டில் இயற்கையின் இயல்புகளை புரிய வைக்க வேண்டும்!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க