கேள்வி : ஹைட்ரோகார்பன் குறித்த பாசிச மத்திய அரசின் சட்டத்திருத்தம்..”டெல்டா” இனி என்ன செய்ய வேண்டும்?

சி. நெப்போலியன்

ன்புள்ள மக்கள்,

டெல்டா மக்கள் மட்டுமல்ல, முழு தமிழகமும் மத்திய அரசை முடக்கும் வண்ணம் போராட்டம் செய்ய வேண்டும். அடிமை எடப்பாடி அரசின் காலத்திலேயே இந்தியாவில் அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்தப் போராட்டங்கள் ஓரிழையில் இணைக்கப்படாமல் தனித்தனியாக நடக்கிறது. அப்படி இணையும் போது பாசிச மோடி அரசை பணிய வைக்க முடியும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : வினவுக்கு… முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பெட்டக பதில்கள் தான் பல நாட்களாக வினவில் வருகிறது… புது கேள்விக்கான பதில்களை காணாமே ஏன்…?

செல்வராஜ்

ன்புள்ள செல்வராஜ்,

கேள்விகள் நிறைய வருகின்றன. அதில் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகளும் நிறைய வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டிய இருக்கிறது. மொத்தத்தில் பணிச்சுமையின் சிரமத்திற்கிடையில் அவ்வப்போது பதிலளிக்க முயல்கிறோம். இனி அடிக்கடி பதிலளிக்க முடியுமென்று கருதுகிறோம். பொறுத்தருளவும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொள்கை ரீதியாக பி.ஜே.பி -க்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்களா அல்லது காங்கிரஸா?

உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தோமானால் காங்கிரசும், பாஜக-வும் ஓரணியில் நிற்கின்றன. இந்துத்துவம் என்று வரும் போது காங்கிரசு பாஜகவிடமிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறது. அதே நேரம் மிதவாத இந்துத்துவத்தையும் பேசுகிறது. இதை சபரிமலை விவகாரத்திலும், மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்களின் போதும் நாம் பார்த்தோம்.

எனினும் ராகுல் காந்தி இந்துத்துவத்தையும், மோடி அரசையும் கடுமையாக கண்டித்து பேசுகிறார். அவரைப் போன்று மற்ற மூத்த தலைவர்கள் அப்படி பேசுவதில்லை. இதை அவரே கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவின் போது கூறியிருக்கிறார்.

தேர்தல் அரசியலில் இருக்கும் சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை பொருளதாராக் கொள்கை அளவில் பாஜக – காங்கிரசிடமிருந்து வேறுபடுவதாக கூறுகிறார்கள். நாட்டுக்கு நலன் பயக்கும் அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும் கூறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களோ இங்குள்ள தரகு முதலாளிகளோ தன்னலன் பொருட்டே முதலீடு செய்கிறார்களே அன்றி மக்கள் நலன் பாற்பட்டல்ல. மேற்கு வங்க சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராடிய போது சிபிஎம் அரசு அதை ஒடுக்க முயன்றது. பின்னர் டாடாவே அதை குஜராத்திற்கு மாற்றினார். அங்கே மாநில அரசு பல ஆயிரம் கோடி சலுகை கொடுத்தும் டாடா நிறுவனத்தால் நானோ காரை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை. இன்று நானோ கார் உற்பத்தியையே மூடி விட்டார்கள். ஒருக்கால் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை திறக்கப்பட்டிருந்தாலும் மேற்கு வங்க சிபிஎம் அரசு பல ஆயிரம் கோடி சலுகைகளை கொடுத்திருக்க வேண்டும். அதனால் டாடாவிற்குத்தான் இலாபமே அன்றி மக்களுக்கு அல்ல.

இந்துத்துவக் கொள்கைகள் என்ற அளவில் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் பாஜக-வை எதிர்க்கின்றன. அதே நேரம் பார்ப்பனியம் என்று வரையறுப்பதோ, பார்ப்பனியத்திற்கு எதிரான சித்தாந்தப் போரட்டம், பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துவதோ இல்லை. அவ்வாறு செய்தால் இந்துக்கள் மனம் புண்படும் என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

பார்ப்பனியத்தை சித்தாந்த அளவில் வேரறுக்காமல் பாஜக-வின் செல்வாக்கை வீழ்த்த முடியாது என்பதை அவர்கள் தேர்தல் அரசியல் காரணமாக கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனினும் இன்றைக்கு மோடி அரசுக்கு எதிராக இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் முடிந்த அளவில் தீவிரமாக போராடி வருவதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பாஜக-வின் கொள்கைக்கு நேரெதிரான கொள்கைகளை கம்யூனிசம்தான் கொண்டிருக்கிறது. அதுதான் மாற்று என்பதும் உண்மை. அதே நேரம் கள நிலவரப்படி பல மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் பலவீனமாகவே இருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் இல்லாத மாலெ அமைப்புகளும் ஒரு சில மாநிலங்களைத் தாண்டி தங்களது செல்வாக்கை விரிவு படுத்த முடியவில்லை. மேலும் மாலெ அமைப்புகளில் பல பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியல் – பண்பாட்டு போராட்டத்தை புரிந்து கொள்வது கூட இல்லை.

இருப்பினும் இன்றைய பாசிச மோடி அரசு ஆளும் சூழலில் அனைத்து முற்போக்கு கட்சிகளும், இயக்கத்தினரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இதை தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு கூட்டணியாக கட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். இல்லை என்றால் அசுர பலத்தோடு திகழும் பாஜக-வை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. நண்பர் சண்முகவேலின் கேள்விக்கு வினவின் பதில் அருமை..கட்சிகளின் நிலைப்பாட்டையும் அதனூடே இன்றைய காலச்சூழலில் ஒருங்கிணைப்பு என்பதன் அவசியம் ஏன் என்பதையும் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது..நன்றி..பணிச்சுமை யின் ஊடேவும் பதில் அளித்து புரிதலை விதைக்கும் வினவுக்கு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க