கேள்வி : நான் வினவு வாசகர், என் மகள் இந்த வருடம் m.sc முடிக்கப்போகிறார். நான் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். ஆனால் அவர் தற்போது வேண்டாம் என சொல்கிறார். உறவினர்கள், நண்பர்கள் “ஏன் திருமணம் முடிக்கவில்லை..” என கேட்கிறார்கள். நெருக்கடி ஏற்படுகிறது. இதை கையாள்வது எப்படி?

இரா.மகேஸ்வரி

ன்புள்ள மகேஸ்வரி,

உங்கள் மகள் ஏன் திருமணம் வேண்டாம் எனக் கூறுகிறார்? மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் அதை ஊக்குவிக்கலாம், நிறைவேற்றலாம். நவீனகாலத்தில் பெண்கள் படிப்பதும், வேலைக்கு போவதும் சுய பொருளாதாரத்தில் நிற்பதும் தேவைப்படும் ஒன்று. இப்படி படித்து வேலைக்கு போகும் பெண்கள் பலரும் 25 முதல் 30 வயது வரையில்தான் திருமணம் முடிக்கிறார்கள்.

படிக்கவும் விருப்பமில்லை, திருமணமும் செய்ய விருப்பமில்லை என்றால் தொழில்முறை மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிப்பதோடு களையும் வழிகளையும் ஆலோசனைகளாக முன்வைப்பார்கள்.

இதைத்தாண்டி உறவினர்கள், நண்பர்கள் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டாம். வயதுக்கு வந்த பெண்ணை உடன் திருமணம் செய்து முடிப்பதுதான் சமூகத்தின் பொதுப்புத்தி. அது பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றுவதைக் கோருகிறது. ஆகவே தவறானது. அதற்கு செவி சாய்க்க வேண்டாம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கல்வி வேலைவாய்ப்பில் சாதியை குறிப்பிடாதவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் சமூகத்தில் சாதி கட்டமைப்பை உடைக்க முடியுமா தோழர்…

ஜெகதீஸ்வரன்

ன்புள்ள ஜெகதீஸ்வரன்,

ஓரளவுக்குத்தான் முடியும். சாதியின் அடிப்படை, பொருளதாரக் கட்டமைப்பிலும், பண்பாட்டு ரீதியாக அகமண முறையிலும் நீடிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பில் சாதியற்றவர்கள் என்று இட ஒதுக்கீட்டிற்காக குறிப்பிட்டு விட்டு திருமணத்தை தன் சாதி பார்த்து முடித்துக் கொண்டால் என்ன செய்வது? அப்போது சான்றிதழ்களில் சாதி இருக்காது. சமூக வாழ்க்கையில் சாதி இருக்கும்.

இன்று கூட முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்தோர் சாதியற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி ஒரு பிரிவினை இல்லை என்பதால் அவர்கள் பொதுப்பிரிவில் வருகிறார்கள். இதனால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சாதிகளைச் சார்ந்தாரோக பிறப்பின் அடிப்படையில் இருந்தாலும் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. இதனாலேயே பலர் சாதியற்றவர்கள் என பறை சாற்ற விரும்பினாலும் இட ஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டு சாதி குறிப்பிட்டு சேர்க்கிறார்கள்.

இட ஒதுக்கீடே தேவை இல்லை என அதை தியாகம் செய்வோரே சாதியற்றவர் என பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்க்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது சாதியற்றவர்களுக்கு மட்டுமல்ல சாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் ‘மேல் சாதி – கீழ் சாதி’ என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் காதல் மணங்கள் அனைத்தும் சாதி மறுப்பைக் கணக்கில் கொள்ளாமல் தனிப்பட்ட முறையிலும், சம சாதி பொருளாதார அந்தஸ்து பார்த்தும் நடக்கின்றன. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட – மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினரோடு தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் திருமணம் அது தனிப்பட்ட காதல் மணமாகவே இருந்தாலும் பிரச்சினைக்குள்ளாகிறது. எனவே இத்தகைய பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரும் அரசியல் மாற்றமும், அக மண முறையை ஒழிக்கும் பண்பாட்டு போராட்டமும் தீவிரமாக நடக்கும் போதுதான் சாதி அமைப்பில் பாரிய உடைப்பை ஏற்படுத்த முடியும்.

ஆனாலும் இன்றைய இட ஒதுக்கீட்டு அமைப்பில் சாதியற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்குவது தொடர்பான உங்களது கோரிக்கை ஏற்கத்தக்கதே!

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா

♦ ♦ ♦

கேள்வி : முகம்மதுபின் துக்ளக் ஒரு இஸ்லாமிய மன்னன் எனும் பொழுது சோ எப்படி அந்தப் பெயரில் பத்திரிக்கை ஆரம்பித்தார்?

சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

நல்ல கேள்வி! பார்ப்பனியத்தை அதிதீவிரமாக பின்பற்றும் சோ ராமசாமி தனது பத்திரிகைக்கு ஆதி சங்கரர், பெரிய சங்கராச்சாரியார், சாணக்கியன் என்றுதான் சூட்டியிருக்க வேண்டும். பின் ஏன் அவர் துக்ளக்கை தேர்ந்தெடுத்தார்?

துக்ளக் ஆரம்பிக்கப்பட்ட 70-களில் திராவிட கட்சிகள் ஆட்சியிலும் சமூகத்திலும் பெரும் செல்வாக்கை செலுத்தி வந்தன. ஒரு பார்ப்பனராகவும், பாரத தேச பக்தராகவும் இருந்த சோவுக்கு இந்த நிலைமை கட்டோடு பிடிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையின் அன்று முதல் இன்று வரை இருக்கும் ஒரே மாறாத கொள்களை திராவிட எதிர்ப்பும் இந்துத்துவ ஆதரவும்தான். அதற்காக அவர் எந்த சமரசத்தையும் ஏற்றுக் கொண்டார். மிடாசின் இயக்குநராக கூட பொறுப்பேற்றார். மோடியை முதலில் முன்னிறுத்தியவரும் அவரே. சோவை தனது அரசியல் சாணக்கிய குரு என்று மோடியே போற்றியிருக்கிறார்.

இப்படி திராவிட இயக்க அரசியல்வாதிகளை கிண்டல் செய்வதற்கு அவருக்கு பார்ப்பன வரலாற்று மாந்தர்கள் பொருத்தமாக இருக்காது. அதனால்தான் துக்ளக்கை தெரிவு செய்திருக்க கூடும். இது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பொருளிலும் வரும். முகமது பின் துக்ளக், வரலாற்றில் அரசாட்சி அலங்கோலங்களுக்கு பெயர் பெற்றவராக இருப்பதால் அது தி.மு.க.விற்கு பொருத்தமாக இருக்கும் என்றும் யோசித்திருக்கக் கூடும். ‘அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதிகள் என்றாலே நச்சுப் பாம்புகள்’ என்ற நடுத்தர வர்க்கத்தின் அரசியலற்ற சந்தர்ப்பவாத பொதுப்புத்திதான் ‘சோ’வினுடையதும். இருப்பினும் அதில் பார்ப்பனியத்திற்கு பங்கம் வராத அரசியல் நிலவ அவர் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த “அரசியல் மோசம்” எனும் கருத்தாக்கத்தின் படியும் அவர் துக்ளக் பெயரை தெரிவு செய்திருக்க கூடும்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க