கேள்வி: //பெரியாரை நான் படித்தாலும் சாதிய வாழ்வியல் உள்ள இந்த சமூகத்தில் எப்படி அதை கடந்து வருவது?//

– வினோத்குமார்

ன்புள்ள வினோத் குமார்,

சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் சாதியத்தை துறப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன.

  • ஒன்று – சாதி – தீண்டாமை மறுப்பு மணம் செய்வது.
  • இரண்டு – குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதமற்றவர்களாக பதிவு செய்வது.
  • மூன்று – சாதி – தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதர அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது.

Thanthai Periyar memories

இம்மூன்றையும் செய்யும்போது சொந்தபந்தங்கள், குடும்பத்தினர் தடுப்பார்கள் அல்லது ஊக்கமிழக்கச் செய்வார்கள். அதில் உறுதியாக இருப்பது நம்முடைய தெரிவு. இத்தகைய போராட்டங்களைச் சொந்த வாழ்வில் உறுதியாகச் செய்யும் போது மட்டுமே நம் அகநிலை வலுப்படும்.

பெரியார், அவர் காலத்தில் ஏராளமான சாதி – தீண்டாமை மறுப்பு மணங்களையும், கைம்பெண்கள் மறுமணங்களையும் செய்து வைப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றார். அதே போன்று தனது குடும்பத்து பெண்களையும் தான் கலந்து கொள்ளும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடச் செய்தார். நாமும் அவ்வழியில் பயணிக்க வேண்டும்.

முதல்பார்வையில் இது ஏதோ நாம் தியாகம் செய்து இந்த சமூக மாற்றத்திற்கு பயன்படுகிறோம் என்று பிழையாக தோன்றும். உண்மையில் சாதிய வாழ்வை வாழ்வதுதான் மிகப்பெரிய சுமை! அதைத் துறப்பது உண்மையில் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருமென்பதும் உண்மை.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழ்நாட்டில் எதிர் காலத்தில் கல்வியில் எவ்வித மாற்றம் நிகழும் என எண்ணுகிறீர்கள்?//

– சுதாகர்

ன்புள்ள சுதாகர்,

அரசு பள்ளி – கல்லூரிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மேலும் நலிந்து போகும். இப்போதே அங்கு ஆதரவற்றவர்கள், வறிய ஏழைகள், வேறு வழியின்றி தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருந்தால் பெண் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு ஆண் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். தனியார் பள்ளியும், ஆங்கில வழிக் கல்வியும்தான் தரம் என்பது நூற்றுக்கு நூறு மக்களிடம் மாற்றமுடியாத மூட நம்பிக்கையாக நிலைபதிந்து விட்டது. அதற்கு அடிப்படையாக கல்வியில் தனியார்மயத்தை அரசு உறுதிப்படுத்தி விட்டது.

உயர்கல்வியை எடுத்துக் கொண்டால் பொறியியல் கல்லூரிகளின் காலி இடம் அதிகரிக்கும். அங்கு படிப்போரும் வேலையின்றி கிடைத்த வேலையைச் செய்வது என்ற போக்கு அதிகரிக்கும். வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரிக்கும். நீட் தேர்வினால் பெரும்பாலும் வசதி உள்ளவர்களே மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

இதைத்தாண்டி செல்பேசி, வாட்ஸ் அப் காலத்தில் கல்வியும் அறிவும் தனது ஒளியை இழந்து நம்மை தக்கை மனிதர்களாக மாற்றும். மண், மனிதர்கள், சூழல், தேவை சார்ந்த கல்வி போய் வேலை, தொழில்நுட்பம், கிராக்கி கொண்டதாக மாறிக் கொண்டே இருக்கும். உலகமயம் தனது தேவையை ஒட்டிய கல்வியை திணித்து அதில் பல்லாயிரம் பேரை காசிழக்கச் செய்வதோடு படிக்கச் செய்து அதிலிருந்து சில நூறு பேர்களை மட்டும் பணியில் அமர்த்தும்.

படிக்க :
♦ கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
♦ 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

ஐஐடி – ஐஐஎம் போன்ற அதி உயர் கல்விக்கான வசதிகளை மட்டும் அரசு செய்து தரும். அங்கே படிப்போர் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதி உயர் சிந்தனையாளர் குழாமில் சேருவார்கள். புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் பட்சத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்கு முன்னிலும் வீரியமாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதே நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் மேற்கண்ட எதிர்மறைச் சூழலை மாற்றுமா, புதிய சமூகத்தை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இயற்கையின் இயக்கத்தையும், மனித குல வரலாற்றையும், இயக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்வி காசுக்கேற்ற பண்டமாக மாற்றப்படுகிறது. இதை எதிர்த்த அரசியல் கல்வியே இன்றைய காலத்தில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வியாக இருக்கிறது.

♦ ♦ ♦

கேள்வி: //சமூக வலை தளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, சங்கிகள் மிரட்டும் போது அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது?

நன்றி.//

– துழாயன்

ன்புள்ள துழாயன்,

சங்கிகளின் மிரட்டலுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து தரவுகள், உண்மைகள், புள்ளிவிவரங்கள் சார்ந்து அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அவர்களே மறுக்க முடியாதபடி நமது பிரச்சாரம் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் பின்வாங்கி தற்காப்பு நிலைக்கு போய்விடுகிறார்கள்.

Nirmala-Sitharaman-Economy-Cartoon-Slider“ஓலா, உபர் டாக்சி சேவைகளை அதிகம் இளைஞர்கள் பயன்படுத்துவதால் கார்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் எதிர்வினையாற்றி வைரலாக்கினர். இத்தகைய சூழலில் சங்கிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள். இது தொடர்பாக தோழர் வில்லவன் அழகாக எதிர்வினையாற்றிருந்தார். பொருத்தம் கருதி அதை இங்கே இணைக்கிறோம்.

கார் விற்பனை குறைந்தது ஏன்?
எல்லாரும் ஓலால போறாங்க.

அப்ப ஓலா வருமானம் ஏன் குறையுது?
எல்லாரும் ஒர்க் ஃபிரம் ஹோம் எடுக்குறாங்க.

வேலைவாய்ப்பு ஏன் குறையுது?
மக்கள் சோம்பேறி ஆயிட்டங்க, அதான்.

ஆடை விற்பனை ஏன் குறையுது?
எல்லாரும் கைலி, நைட்டியோட வெளிய வந்துடறாங்க.

ஏன் மக்கள் புது ஜட்டிகூட வாங்கறது இல்ல?
பழைய ஐந்தாண்டு கால ஆட்சியில நாடு ரொம்ப சுபிட்சமாக இருந்தால அப்போ வாங்கின ராசியான ஜட்டிய யாரும் மாத்த விரும்பல.

விவசாய உற்பத்தி ஏன் குறைஞ்சுடுச்சி?
மக்கள் பேலியோவுக்கு மாறுவாங்களா இருக்கும்.

புதிய வீடுகள் ஏன் விற்பதில்லை?
அப்போ எல்லாத்துக்கும் வீடு ஏற்கனவே கிடைச்சிருக்குமா இருக்கும்.

ஏற்றுமதி சரிவு?
தனக்கு மிஞ்சிதான் தானம் என மக்கள் நினைத்துவிட்டார்கள்.

அதானி அம்பானி தவிர நாட்டுல யாருக்குமே வருமானம் கூடலையே?
அல்ஃபாபேட்டிக்கல் ஆடர்ல அவங்க முதல்ல வர்றாங்க. மத்தவங்களுக்கு பொறுமையா கிடைக்கும்.

நாட்டுல பசி பட்டினி ரொம்ப அதிகமாயிருக்கு…
சாரி பசி பட்டினி பத்தி பேச நான் டாக்டர் இல்ல. என்கிட்ட பொருளாதாரம் பத்தி மட்டும் கேளுங்க.

-நிருபர் தற்கொலை – பேட்டி நிறைவு.

♦ ♦ ♦

கேள்வி: //தமிழகத்தில் இளைஞர்கள் சாதரணமாக ரோட்டு ஓர தள்ளுவண்டி கடைகளில் பீஃப் வருவல் சாப்பிடுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் சாத்தியமில்லலை. ஒரு மனிதனின் மனநிலையை புறச்சூழல் அல்லது சூழ்நிலை தீர்மானிக்கிறதா?//

– வேழவேந்தன்

ன்புள்ள வேழவேந்தன்,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரூப்ஸா சக்ரவர்த்தி ஒரு பெண் பத்திரிகையாளர். பார்ப்பனராக பிறந்திருந்தாலும் மேற்கு வங்க பண்பாட்டுப்படி அவர் இறைச்சி உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடக் கூடியவர். குஜராத்தில் பணி நிமித்தமாக செல்பவருக்கு அங்கே சென்ற பிறகே இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு வீடே கிடையாது என்ற உண்மை தெரிய வருகிறது.

பிறகு தான் சைவம் என்றொரு பொய்யைச் சொல்லி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வீடு வாடகைக்கு பிடிக்கிறார். அசைவம் சாப்பட வேண்டுமென்றால் அகமதாபாத்தில் உள்ள முசுலீம்கள் பகுதிக்கு சென்று உணவகங்களில் சாப்பிடுகிறார். அவருடைய அனுபவத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பசுப்படுகை மாநிலங்களில் அசைவம் சாப்பிடுவதையே குற்றமென்பதாக வைத்திருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் கணிசமான ஆதிக்க சாதிகளின் பண்பாட்டில் சைவம் இருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அதில் தலித்துக்கள், முசுலீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அசைவ உணவைச் சாப்பிடக்கூடியவர்கள்தான். இதை வைத்து இந்தியாவில் சைவம்தான் முதன்மையானது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது அது உண்மையல்ல.

♦ Most Indians are non-vegetarian, Southern and Northeastern states top the list: Report

இந்தியா ஸ்பெண்ட் இணையதளத்தின் ஆய்வுப்படி 80% ஆண்களும், 42.8% பெண்களும் இந்திய அளவில் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியா, வடகிழக்கு இந்தியாவில் ஆகப் பெரும்பான்மையினர் அசைவத்தையும், வட இந்தியாவில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறார்கள். பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் மட்டும் ஆண்களும், பெண்களும் பத்து சதவீத அளவுக்குள் அசைவம் சாப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

பார்ப்பனியப் பண்பாட்டின் அசைவம் சாப்பிடுகிறவர்கள் கீழானவர்கள் என்ற கருத்து மத அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் உழைக்கும் மக்கள் தமது குலதெய்வங்களுக்கு இறைச்சி உணவுகளை படையல்களாக வைக்கும் போது ‘உயர்’ சாதி இந்துக்கள் வணங்கும் தெய்வங்களுக்கு சைவ உணவு வகைகளே பிரசாதங்களாக வைக்கப்படுகின்றன.

எனவே இந்தியாவில் பெரும்பகுதி மக்களின் சூழல் அசைவ உணவு சாப்பிடுவதை நிலை நாட்டியிருக்கிறது. சிறுபான்மை வட இந்திய பகுதி மாநிலங்களில்தான் அந்த சூழல் நேரெதிராக இருக்கிறது. அங்கும் கூட கோழி, ஆட்டிறைச்சி மட்டும்தான். மாட்டிறைச்சியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இதை விடக் கொடுமை, பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் குழந்தைகளுக்கான சத்துணவில் முட்டை கூடக் கிடையாது. தமிழக சத்துணவில் அன்றாடம் முட்டை உண்டு.

மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

எனவே நம் மக்களின் உணவுச் சூழலில் அசைவம் வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது. இந்துத்தவத்தை வேரறுக்கும் வரை நம் மக்களுக்கு அசைவ உணவும், நம் குழந்தைகளுக்கு முட்டையும் கிடைக்காது. தமிழகத்தில் உதிரிப்பணிக்காக வரும் வட இந்திய இளைஞர்களில் பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஊரில் அத்தகைய சூழல் இல்லை.

ஆக உணவு உண்பதை நம் மக்களின் அக விருப்பம் தீர்மானிக்கும் சூழல் இங்கில்லை. அதை பார்ப்பனியமே கட்டுப்படுத்துகிறது. தமிழகத்தில் கூட பீஃப் வறுவல்கள் பரவலாக கிடைத்தாலும் மேட்டுக்குடியினர், ஆதிக்க சாதியினர் வசிக்கும் நகர – கிராமப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இங்கேயும் அதை ஏதோ சாக்கனாக் கடை போல ‘தீண்டத்தகாததாக’ வைத்திருக்கிறார்கள். நமது அரசியல் போராட்டங்களில் வருடந்தோறும் மாட்டுக்கறி உணவு உண்ணும் விழாக்களை நடத்துவதும், இது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்வதும் அவசியம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

1 மறுமொழி

  1. /இரண்டு – குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதமற்றவர்களாக பதிவு செய்வது/

    I would not recommend this. Your kid won’t get reservation.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க