கேள்வி: //எனக்கு தெரிந்து 2009 தேர்தல் முதல் 2019 வரை அடையாள அரசியல் கட்சிகள் (பாமக, விசிக) திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?//

– தமிழ்ச் செல்வன்

ன்புள்ள தமிழ்ச் செல்வன்,

இந்த 2019 தேர்தலில் விசிக வெற்றியும், பாமக தோல்வியும் அடைந்திருக்கின்றன. பொதுவில் சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தும் கட்சிகள் அந்தந்த பிரிவு மக்களை முற்று முழுதாக திரட்ட முடிவதில்லை. பா.ம.க-வின் தோல்வி வன்னியர்களிடமே அக்கட்சி செல்வாக்கு பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. அதே போன்று விசிக-வின் வெற்றிக்கு ஓரளவு வன்னியர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அக்கட்சியை ஓரளவுக்கு பொதுவான கட்சியாக பார்க்கும் பார்வையை குறிக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி நாம் அடையாள அரசியலை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதரிடமும் பால், சாதி, மதம், தேசிய இனம் போன்ற அடையாளங்கள் இருக்கிறது. இவற்றை விட வர்க்க அடையாளமே (அவர் என்ன தொழில் செய்கிறார்) ஒரு மனிதரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இதனால் மற்ற அடையாளங்களுக்கு பங்களிப்பே இல்லை என்பதல்ல. ஆனால் அவை இரண்டாம் பட்சமானதுதான். ஏனெனில் ஒவ்வொரு அடையாளமும் கூட ஒரே படித்தானதாக இல்லை. அவையும் வர்க்க ரீதியில் வேறு வேறு பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. சாதி என்ற அடையாளத்தில் ஒரு பார்ப்பனருக்கும், வன்னியருக்கும், தலித்துக்கும் இருக்கும் பிரச்சினைகள் கூட வர்க்க ரீதியாக பிரிந்திருக்கின்றன. பார்ப்பனர்கள் சமூகத்தில் இருக்கும் மேல் தட்டு தகுதியில் வாழ்க்கை பிரச்சினைகளை ஒப்பீட்டளவில் சுலபமாக எதிர்கொள்கிறார்கள். வன்னியர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தாலும் சில நேரம் சாதிய உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். தலித்துகளுக்கோ பொருளாதாரமும் சரி, சாதி ஆதிக்கமும் சரி இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

நள்ளிரவில் மாநகராட்சி தண்ணீருக்காக காத்திருக்கும் குடிசைப் பகுதி பெண்களும் நள்ளிரவில் பஃப்புக்கு செல்லும் மேட்டுக்குடி பெண்களும், பெண்கள் என்ற அடையாளத்தில் ஒரே பிரச்சினைகளை கொண்டிருக்கவில்லை. ஆழ்கடலில் அன்னிய மீன்பிடிக் கப்பல்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியால் மீன் வளமின்றி அவதிப்படும் ஒரு மீனவர் தமிழர் என்ற முறையில் வாழ்க்கைப் பிரச்சினையை எதிர் கொள்வதில்லை.

இப்படி வர்க்கம் பல்வேறு அளவுகளில் மக்களிடம் பங்காற்றுகிறது. இது குறித்த அறிவு – அறியாமைக்கேற்ப அடையாள அரசியல் வலுவாகவோ, பலவீனமாகவோ தொழிற்படுகிறது. பொருளாதாரப் பிரச்சினைகளை திசை திருப்பும் உணர்ச்சிகரமான அரசியலாக அடையாள அரசியல் இருக்கிறது. அதே நேரம் அது எல்லா நேரத்திலும் பலிப்பதில்லை. மக்களின் அரசியல் பார்வை முதிர்ச்சி அடைய அடைய, அடையாள அரசியல் வலுவிழந்து போகும். இன்றைக்கும் தமிழகத்தில் ஓரிரு விதிவிலக்குகளைத் தாண்டி ஆதிக்க சாதி சங்கங்கள் அரசியல் வெற்றி அடைவதில்லை. தாழ்த்தப் பட்டோர் பிரிவில் அடையாள அரசியலை முன்வைக்கும் கிருஷ்ணசாமி கூட தென்காசியில் தோற்றுத்தான் போனார்.

அதே நேரம் தலித் அரசியல் கூட வர்க்க ஒற்றுமைக்கு எதிரான அடையாள அரசியலாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் சாதிகள் என்பது பொதுவில் வர்க்க ரீதியாகவே இருக்கிறதே அன்றி அவை என்ன சாதி என்பது அதற்கு உட்பட்டதே. அனைத்து வகையான அடையாள அரசியல்களையும் ஆளும் வர்க்கம் முன்னிலைப்படுத்துகிறது. வர்க்க ரீதியான ஒற்றுமை வந்து விட்டால் அது ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதில் வலுவடையும். அதை பிரிப்பதே ஆளும் வர்க்கங்களின் நோக்கம். இன்றைக்கும் பாஜக-வுடன் ராம் விலாஸ் பஸ்வான் போன்ற சில தலித் அரசியல் கட்சிகள் சேர்ந்திருக்கின்றன.

இந்துக்களின் பிரதிநிதி என்று கூறும் பாஜக-வும் தமிழகத்தில் தோற்றிருக்கிறது. அதே நேரம் கிட்டத்தட்ட 40% மக்கள் வட இந்தியாவில் அக்கட்சியினை ஆதரித்திருக்கிறார்கள். அடையாள அரசியல் பேசும் கட்சிகளுக்கு போதிய மாற்றுக் கட்சிகள் இல்லாதிருப்பதால் பாஜக போன்ற கட்சிகள் செல்வாக்கு பெறுகின்றன. பாஜக-வின் இந்துத்துவ அடையாள அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் வீழ்த்த முடியும் என்பதால் வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் வட இந்தியாவில் பாஜக-விடம் தோற்றுப் போகின்றன. அதனால்தான் காங்கிரசு கூட தானும் இந்துத்துவாவை பின்பற்றுவதாக அவ்வப்போது காட்டிக் கொள்கிறது.

படிக்க :
♦ கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

குஜராத்தில் உனா தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாக தலித் மக்கள் அகமதாபாத் வந்து போராடினர். அரசு அலுவலகங்களில் மாட்டுத் தோல்களையும், எலும்புக்கூடுகளையும் வீசி தமது கோபத்தை காட்டினர். கோமாதா என்று புனித வணக்கம் கோலேச்சும் பசுப்படுகையில் இத்தகைய எதிர் நடவடிக்கையை எது சாத்தியமாக்கியது? அதுவே அடையாள அரசியலுக்குரிய பதிலாகும். மேலும் மக்களை அடையாள அரசியலுக்கு அணி திரட்டுவது பொதுவில் சுலபமாகவும், வர்க்க ரீதியில் அணி திரட்டுவது பொதுவில் கடினமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் இந்துத்துவா தனது வேலையைக் காண்பித்து மக்களை மதவெறியிலும், சாதி வெறியிலும் ஆழ்த்துகிறது. பிற்போக்குத்தனங்களை எதிர்த்துப் போராடும் வர்க்க அரசியல் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் நீண்டகால நோக்கில் வெற்றி அடைந்தே தீரும்.

UNA-attack
உனா தலித் மக்கள் மீதான தாக்குதல்

உலக அளவில் நியோ நாசிசக் கட்சிகள் செல்வாக்கு அடைந்து வருகின்றன. இக்கட்சிகளை அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள், கார்ப்பரேட் நிறுனவங்கள் ஓரளவுக்கு ஆதரிக்கின்றன. உள்ளூர் தொழிலாளியின் வேலையின்மைக்கு எதிராக வேறு நாட்டிலிருந்து அகதியாக வந்த தொழிலாளி முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் முதலாளித்துவத்தின் கட்டமைப்பு நெருக்கடியை மேற்கத்திய நாடுகளில் கூட மக்கள் உணர்ந்து வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து வருகிறார்கள். பிரான்சில் நடந்துவரும் மஞ்சள் சட்டை போராட்டம் சமீபத்திய சான்று.

கம்யூனிசம் என்றாலே சாத்தான் என்று பழக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவிலே கூட பொருளாதார நெருக்கடி முற்றிய இக்காலத்தில் “முதலாளித்துவம் ஒழிக, நாங்கள் 99%” போன்ற அரசியல் முழக்கங்கள் ஒலிக்கின்றன. எனவே நமது அடையாளங்களை விட நம் வாழ்வை நகர்த்திச் செல்லும் பொருளுதார வாழ்க்கை மிகப்பெரியது. அந்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்துவதற்கேற்ப ஒரு நாடு முற்போக்காக பயணிக்கும். தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் கூட இது பொருந்தும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க