சமீபத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த அரசின் முயற்சிக்கு தன்னுடைய அமைச்சகத்தின் பங்களிப்பாக ஏற்றுமதியை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு வியர்த்துக் கொட்டியிருக்க வேண்டும். அவர்ககளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட அமைச்சர், தனது திட்டத்தையும் அங்கேயே விவரித்தார்.
“ஒரு ட்ரில்லியன் என்பதை யாருக்கும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. கணக்கு பார்க்காத ஐன்ஸ்டீன் தான் புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பதை மறக்க கூடாது” என்றார்.
அருண் ஜெட்லி இறந்த பின் மோடியின் அமைச்சரவையில் இருப்பவர்களிலேயே ஓரளவுக்கு அறிவாளி என பெயர் பெற்றவர் இந்த பியூஷ் கோயல் என்பதை வாசகர்கள் மறந்து விடக்கூடாது. இருப்பதிலேயே அறிவாளி இப்படி உளறிக் கொட்டியதை இணைய உலகம் கொண்டாடித் தீர்த்தது.
மோடியின் சகாப்தம் துவங்கியபின் முட்டாள்தனத்திற்கும் அறிவாளித்தனத்திற்கும் இடையே இருந்த சீனப் பெருஞ்சுவர் தகர்த்தெறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பாரதிய ஜனதா அமைச்சர்கள், மோடி அரசின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், சாமியார்கள் என தில்லி கொலு மண்டப செட் பிராப்பர்ட்டிகள் உதிர்த்த தத்துவங்கள் ஒவ்வொன்றும் வடிவேலுவின் வின்னர் காமெடியை தோற்கடித்து விடும் என்றால் அது மிகையல்ல. அவை அனைத்தையும் ஒருவர் தேடித் தேடி தொகுத்துள்ளார்.
Piyush Goyal confused Einstein for Newton while claiming that Math did not aid explanations for gravity, in an attempt to deride calculations in discussing the economy. For anyone who's been in India for the last 5 years or so, this shouldn't come as a surprise… #WarOnScience
— santhoshd (@santhoshd) September 12, 2019
அந்த தொகுப்பில் இருந்து சில வைரத் துளிகள் உங்களுக்காக இங்கே..
அனைத்தையும் சர்வ வல்லமை பொருந்திய “தலை” தான் ஆரம்பித்தது : புவிவெப்பமடைதலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் குறித்து பேசிய மோடி, “சீதோஷ்ண நிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நம் வீட்டுப் பெரிசுகள் குளிர்காலத்தில் நடுங்குகிறார்கள் இல்லையா… அது அவர்களின் வயதின் காரணமாக நடக்கிறது. வயதானதால் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதால்தான் குளிர் அதிகமாகத் தெரிகின்றது”
“தலையின்” மற்றொரு முத்து : “கர்ணன் அவனது தாயின் கருப்பையில் இருந்து பிறக்கவில்லை. அப்போதே மரபணு விஞ்ஞானமும், பிளாஸ்டிக் சர்ஜரியும் இருந்தது. அன்றே வினாயகனின் தலையில் யானையின் தலையில் பொருத்தியுள்ளனர். அதே போல் வானவியல் விஞ்ஞானத்திலும் நமது முன்னோர்களுக்கு பெரும் அறிவு இருந்தது”
தலையே ஆடிய பின் வால்கள் சும்மா இருக்குமா?
“பண்டைய இந்தியர்கள் விமானங்களை ஓட்டினர். அவர்கள் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அதே போல் வின்வெளி ஆயுதங்களை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உண்டு” – இப்படிச் சொன்னவர் சுதர்ஷன் ராவ். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வர் ரமேஷ் போக்ரியால் அசால்ட்டாக அணுகுண்டையே எறிந்து விட்டார். “பல லட்சம் வருடங்களுக்கு முன் (பல லட்சமாம் !?! ) கானாட் என்கிற முனிவர் அணுகுண்டு சோதனை செய்துள்ளார். நமது ஜோசியத்தின் முன் எல்லா அறிவியலும் மண்டியிட வேண்டும்”
சாதாரண பாஜக-வினரின் உடல் முழுக்க மூளையால் நிரம்பியிருக்கும் போது அவர்களின் அறிவியல்துறை அமைச்சர் எப்படி இருப்பார்? “அல்ஜீப்ராவும் பித்தகோரஸ் சூத்திரங்களும் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த வெளிநாட்டுக்காரர்கள் பெயரைத் தட்டிக் கொண்டு போயிட்டாங்க” என சூளுரைத்துள்ளார் மத்திய அறிவியல் துறை (முன்னாள்) அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்.
படிக்க:
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !
♦ ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
பார்ட் டைம் விஞ்ஞானிகளே இப்படி இருக்கும் பார்ட் டைம்களின் ஆட்சியின் கீழ் ஃபுல்டைம் விஞ்ஞானிகளாக இருந்தவர்கள் எப்படி பர்மாமென்ஸ் காட்ட வேண்டும்?
இதோ வருகிறார் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பி.பி சிங் – “பல இந்திய அறிவியலாளர்கள் பண்டைய இந்தியா அறிவியலில் முன்னேறிய நிலையில் இருந்தது எனக் கருதுகின்றனர். விமானத் தொழில்நுட்பம், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், மாற்று உயிரின உறுப்பு மாற்று மற்றும் மாற்று உயிரின குழந்தை பிறப்பு மனித குளோனிங்… இப்படி பல விஞ்ஞானங்கள் வளர்ந்திருந்தது” (அதாகப்பட்டது மனித இனமும் பிற விலங்கினங்களும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்வது; நரசிம்மரைப் போல என்று நாம் ‘புரிந்து’ கொள்ள வேண்டும்)
விமானங்கள் மோடியின் சீடர்களுடைய கற்பனையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதன் இரகசியம் என்னவென்று தெரியவில்லை – இப்படிச் சொல்வதால் இதை ரஃபேலுடன் நீங்கள் தொடர்புபடுத்திப் புரிந்து கொண்டால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல. விமான தொழில்நுட்பம் நம்முடையது என அமைச்சர்களே சொன்ன பின், விமானப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் வேறு மாதிரி சிந்திக்க முடியுமா என்ன?
“7000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்தது. விமானத்தின் மூலம் வேறு நாடுங்களுக்கும் கண்டங்களுக்கும் பயணித்துள்ளனர். விமானிகளின் உணவில் எருமைப் பால், பசும்பால், ஆட்டுப்பால் ஆகியன முக்கிய இடம் பிடித்திருந்தது. விமானிகளின் அணிந்த ஜட்டி தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது” – சத்தியமாக இதை நாங்கள் சொல்லவில்லை! இதைச் சொன்னவர் ஆனந்த் போடாஸ் விமானப் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.
படிக்க:
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும் போது இஸ்ரோ இல்லாவிட்டால் நாமும் ஆண்டி இந்தியர்கள் ஆகிவிடுவோமே. எதற்கு வம்பு, இதோ முன்னாள் இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர் பேசியதையும் கேட்டு விடுவோம். “வேதங்களில் உள்ள சில சுலோகங்கள் நிலாவில் தண்ணீர் இருப்பதை குறிப்பிடுகிறது. ஐசக் நியூட்டனுக்கு முன்பே ஆர்யபட்டாவுக்கு புவியீர்ப்பு விசை குறித்து தெரியும்”
இவ்வாறானவர்கள் தலைமையில் இஸ்ரோ சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதார விந்தங்களுக்குக் கீழ் தானே?
“இன்றைக்கு இஸ்ரோ என்ன செய்ததோ அதை அன்றைக்கே பகவான் ஸ்ரீ ராமர் செய்து விட்டார். அவரிடம் எஞ்சினியர்கள் இருந்தனர். அவர் ராம சேது பாலத்தைக் கட்டினார். அதற்கு அனுமான் மட்டுமா… சிறிய அணில் கூட உதவி செய்தது. மலையையே தூக்கி வரும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்துள்ளது” என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.
பகவான் ஸ்ரீராமர் அருள் பெற்ற இஸ்ரோ, விஞ்ஞானத்திற்கான இந்திய ஏஜெண்டு என்றாலும், மேரிமைந்தனின் ஆசிபெற்ற நாசா தானே உலக ஏஜெண்டு? நாசாதானே ஏரியாவில் பெரிய கை? எனவே, எதுவாக இருந்தாலும் அது நாசா உறுதிப்படுத்தியதாக இருந்திடுவது அவசியம்.
“சமஸ்கிருதம் தான் பொருத்தமான மொழி என்று நாசாவே சொல்லி விட்டது. சமஸ்கிருதத்தில் எழுத்துப் பிழை என்கிற பிரச்சினையே கிடையாது (ஏன்னா அதில் எழுத்தே கிடையாது) அது ஒரே போல் தான் ஒலித்தாக வேண்டும். ஏனெனில் அது ஒலி விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது” இந்த தத்துவத்தின் சொந்தக்காரர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்த உலகத்தில் பிச்சைக்காரனாக கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நாசாவாக வாழ்வது அதை விடக் கொடூரமானது. இதோ மற்றொரு அமைச்சர் நாசாவை துணைக்கு அழைக்கிறார் – “நடக்கும் கம்ப்யூட்டர்கள் சாத்தியமாகும் போது அது சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நாசாவே சொல்லி விட்டது” – ரமேஷ் போக்ரியால் (மோடி 2.0 -வில் மனித வளத்துறை அமைச்சர்).
இதற்குப் பின் மேற்படி ஆசாமி (நாசா) உத்திரத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். போகட்டும். நம்ம தல மோடியின் விழுதுகள் கைவைக்காத இடமே இல்லை. விஞ்ஞானத்தோடு கபடி விளையாடியவர்கள் விவசாயத்தை மட்டும் சும்மா விடுவார்களா என்ன?
“யோக விவசாயம் என்பது விதைகளுக்கு நேர்மறை எண்ணத்தை வழங்கும். ராஜயோகத்தின் மூலம் விதைகளுக்கு அன்பு, அமைதி மற்றும் தெய்வீகத் தன்மையை விவசாயிகள் வழங்க வேண்டும்” – ராதா மோகன் சிங் (மத்திய விவசாயத் துறை அமைச்சர்).
தெய்வீகத் தன்மை பெற்ற விதைகள் விளைந்த பின் குறைந்தபட்ச உத்திரவாதத் தொகையாவது கிடைக்குமா என்பது குறித்து அமைச்சர் ஏதும் பேசவில்லை. ஆனால், யோகம் என்று வந்து விட்டால் நம்ம ரூட்டு தலயின் அடிப் பொடிகளை கையில் பிடிக்கவே முடியாது.
படிக்க:
♦ நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !
“யோகாசனத்தால் கான்சர் போன்ற கொடிய வியாதிகள் குணமாகும். இன்னும் ஒரு வருடத்தில் இதற்கான அறிவியல் ஆதாரங்களை அரசு முன்வைக்கும். தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர்கள் கீமோதெரபி செய்து கொள்ள வேண்டியதில்லை” மத்திய அமைச்சர் (ஆயுஷ்) ஸ்ரீபாத நாயக்.
புற்றுநோயை யோகா குணமாக்கா விட்டால்? இருக்கவே இருக்கிறது மாட்டு மூத்திரம். தப்பு… கோமூத்திரம். மாட்டு மூத்திரத்தால் புற்று நோய் குணமாகும் என்று பல அமைச்சர்கள், பல சந்தர்பங்களில், பல விதமாக குறிப்பிட்டுள்ளனர். இதில் வித்தியாசமாக கூவியது யார் என்பதை கண்டு பிடிப்பது சிரமம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அஷ்வினி சௌபே, மாட்டு மூத்திரம் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் தனது அமைச்சகம் ஈடுபடும் என்று கூறியுள்ளார். “மாடு எங்கள் தாய். அதன் சாணியும் மூத்திரமும் அமிர்தம். அது எல்லா நோயையும் குணப்படுத்தும் போது உங்கள் கைபேசியில் இருந்து வரும் ரேடியேஷனில் இருந்தா காப்பாற்றாது?” என சந்தேகப்படும் ஆண்டி இந்தியர்களைப் பார்த்து ஆத்திரப்படுகிறார் சங்கர்லால் (அகில பாரதிய கௌ சேவா)
மாட்டின் மகாத்மியங்கள் கிண்டக் கிண்ட வந்து கொண்டே இருக்கின்றது. மாட்டு மூத்திரத்தில் தங்கம் எடுக்கும் முயற்சியையே செய்திருக்கிறார்கள் (மஞ்சளாக இருப்பதாலோ என்னவோ!). ஆனாலும் சர்வசக்தி வாய்ந்த பரப்பிரம்மா ஸ்ரீலஸ்ரீ மாட்டையும் அதன் சுச்சாவையும் மீறி சிலருக்கு புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நிலைக்குச் செல்வது ஏன் என்றால், “அதெல்லாம் அவர்கள் செய்த பாவங்களின் கர்ம வினை” என்கிறார் அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. மேற்படியாருக்கு எந்த நேரத்தில் குண்டு பார்சல் போய்ச் சேரும் என்பதை பிரக்யாசிங்கே அறிவார்.
அறிவியலை பிடித்து வந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டிய பின் அறிவியல் நிலையங்கள் என்ன செய்வதாம்? அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எய்ம்சைச் சேர்ந்த மருத்துவர் அசோக் குமார் விளக்குகிறார் கேளுங்கள். “மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய மையம் ( Indian Council of Medical Research) மகாமிருத்யஞ்சயா மந்திரம் மூளையில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்த என்ன விதமாக உதவி செய்கிறது என்பதை ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது”
இந்த விசயத்தில் உத்திராகண்ட் மாநில பாஜக அரசு ஒரு படி மேலேயே சென்று விட்டது. “உத்திராகண்ட் அரசு ராமாயனத்தில் ராமன் தன் தம்பி லட்சுமனனை எழுப்ப பயன்படுத்திய சஞ்சீவினி பூதி என்கிற மூலிகையைத் தேடிக் கண்டுபிடிக்க 3.7 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது” என்று அறிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.
இத்தனை செலவு செய்து ராமாயன மூலிகைகளை எல்லாம் தேடிப் பீராய்ந்து மருந்து கண்டுபிடித்த பின் அதையெல்லாம் அம்பானிக்கும் அதானிக்குமா கொடுக்க முடியும்? மக்களுக்குத் தானே? ஆனால் மக்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டால்? “சில அலோபதி மருத்துவர்கள் ஆயூர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுருத்துகின்றனர். இவர்களெல்லாம் தேச விரோதிகள்” என எச்சரிக்கிறார் அதே அமைச்சர் ஸ்ரீபாத நாயக்.
இதற்கு மேல் வரக் கூடிய தத்துவ முத்துகளை செறிக்கும் ஆற்றல் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் விரல்களுக்கே இல்லை. “டார்வினின் பரிணாம தத்துவம் தவறு. ஏனெனில் எங்க ஆயா காலத்துல குரங்கு மனிதக் குழந்தையைப் பெற்றெடுத்ததை யாரும் பார்க்கவில்லை”, “நியூட்டனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மகுப்தா புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்து விட்டார்” (இது ராஜஸ்தான் கல்வித்துறை மந்திரி சொன்னது). “மகாபாரதத்தில் இண்டெர்நெட்” (இது திரிபுரா முதல்வர் பிப்லப்தேவ் சொன்னது) – இப்படி பல ஸ்பெசல் அயிட்டங்கள் உள்ளன.
மன உறுதி கொண்டவர்கள் மேலே வழங்கப்பட்டிருக்கும் டிவிட்டர் இணைப்பைத் திறந்து படித்து உய்யலாம்.
– சாக்கியன்