ஜூன் 23 அன்று வெளியான வாரமலர் இதழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படித்தால் தலை சுற்றுகிறது. முதலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள கட்டுரையைப் படித்துவிடுங்கள்.

இதைப் படித்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது இத்தனை ஆண்டுகளாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலைப் பார்த்துப் பயந்துபோயிருந்த நாசா தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது !

இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்காணித்தபோது பல அறிவியல் அற்புதங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பிறகு, வாழ்க்கையே ஒரு வட்டமாக இருந்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சதுரமாக இருந்ததாம். சமூகத்தில் எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக இப்படிக் கட்டப்பட்டிருக்கிறதாம்.

Fact: உண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செவ்வக வடிவமானது. இரு பக்கங்கள் 254 மீட்டர் நீளத்தையும் மற்ற இரு பக்கங்கள் 237 மீட்டர் அளவையும் கொண்டவை. அதுபோக, எல்லோரும் சமம் என நிரூபிக்க கோவிலை எதற்கு கஷ்டப்பட்டு சதுரமாக கட்டவேண்டும். எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டால் போதாதா?

2. நீள்வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோளால், சதுர வடிவமான மீனாட்சி அம்மன் கோவிலைப் படம் பிடிக்க முடியாது.

Fact: உலகம் முழுவதும் எவ்வளவோ சதுர வடிவ கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் படம் பிடிக்காதா? இந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்க மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் எடுத்த படத்தையும் இங்கே பார்க்கலாம்.

3. 1984-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கல் கெப்ளர் என்ற விஞ்ஞானி சதுரவடிவில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி மீனாட்சி அம்மன் கோவிலை படம் பிடித்தார்.

Fact: மைக்கல் கெப்ளர் என ஜெர்மன் விஞ்ஞானி யாரும் கிடையாது. தவிர, 1984-ல் மைக்கல் கெப்ளர் மட்டுமல்ல, ஜெர்மனியே எந்த செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்பவில்லை.

4. சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

Fact: கோபுரங்களின் மீது கலசங்களும் இடிதாங்கிகளும்தான் இருக்கின்றனவே தவிர, டிரான்ஸ்பான்டர்கள் ஏதும் கிடையாது.

5. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..

Fact: இராடாரை எங்கு பொறுத்தினாலும் வேலை செய்யும். ஆனால், கோவில் கோபுரத்தின் மீது ஒருவரும் பொறுத்த மாட்டார்கள்.

6. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!

Fact: ஆயிரங்கால் மண்டபம் 965 தூண்களைக் கொண்டதல்ல. 985 தூண்களைக் கொண்டது. மீதி 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஸ்வநாதர் சன்னிதி இருக்கிறது. தவிர, 965 ஸ்டான்ட் என விண்வெளியில் ஏதும் கிடையாது.

படிக்க :
♦ கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

7. வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!

Fact: கிணற்றுச் சுரங்கம் எப்போதோ மூடி பூசப்பட்டுவிட்டது. அதிலிருந்து எந்தக் கல்லையும் யாரும் எடுக்க முடியாது.

8. மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!

Fact: இதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் சொல்லியிருப்பார்கள். காரணம், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் ஒரே மாதிரிதான் எரியும். அதனால், வெளிச்சத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தினம், ரம்ஜான் தினத்தன்றுகூட எந்த மாறுதலும் இருக்காது.

9 . சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!

Fact: மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்காதவர்கள்தான் இப்படி எழுத முடியும். உண்மையில் இந்த சன்னிதிகள் வெவ்வேறு வடிவில் அமைந்தவை. விண்வெளி வீரர்கள் இருக்கும் ராக்கெட்டுகள் வட்ட வடிவிலானவை.

10. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.

Fact: நாயன்மார் சிலைகளும் 108 லிங்கங்களும் சுவாமி சன்னதி அம்மன் சன்னதியிலும் பிரகாரங்களிலும் அமைந்திருக்கின்றன. தனியாக சன்னதி கிடையாது.

ஷப்பா…

(அது ஏன் எப்போது பார்த்தாலும் நாசா மட்டுமே நம் கோவில்களைப் பார்த்து வியக்கிறது? இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை? அவற்றுக்கு வியக்கத் தெரியாதா? நாசா விஞ்ஞானிகள் மட்டும் வேலைவெட்டியை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் வியந்துகொண்டேயிருக்கிறார்கள்?)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

***

தமிழ்நாட்டில் பெரும் நிலவுடமையாளர்கள் கடவுளர்கள்தான். அதனாலேயே, நிலச் சீர்திருத்தங்கள் என்பவை மிகச் சிக்கலான ஒரு காரியமாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமாக மட்டும் சுமார் 28 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிலங்கள் மூலம் கடவுள்களும் கோவில்களும் பயனடைவதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.

குறிப்பாக, தமிழகத்தில் பெரும் அளவில் நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் கடவுள் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர். கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தம். ஆனால், 90களில் அந்தக் கோவிலின் வருவாய் வருடத்திற்கு சுமார் ரூ. 34,000. அப்படியானால், இந்த நிலங்களை யார் அனுபவிக்கிறார்கள்,ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை அவரவர் யூகங்களுக்கே விட்டுவிடலாம்.

பேராசிரியர் வி. சிவப்பிரகாசம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வேடு ஒன்று, கோவில்களின் நிலவுடமை குறித்தும், அதனை மீறி தமிழக அரசுகள் எப்படி நிலச் சீர்திருத்தத்தைச் செய்ய முயன்றன என்பது குறித்தும் ஆராய்கிறது. இதில் பல எளிதில் கிடைக்காத புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

புத்தகத்தின் தலைப்பு: Temple Lands and the Agrarian Reforms in Tamilnadu during the Dravidian Rule.
270 பக்கங்கள்.
விலை : ரூ. 280/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…