நமது பாட்டன்கள் தொப்புள் கொடியை தாயத்தாக கட்டியது எதற்கு ? அவர்களுக்கு ஸ்டெம் செல் தெரபி பற்றி அப்போதே தெரிந்து… இது போன்று செய்தார்களா ?

எனது பதில் :

முதலில் அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட நம் முன்னோர்
உழைப்பாளிகளாகவும், ஐந்து புலன்களையும் நுட்பமாக பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்கினார்கள். அது உண்மை.

அவர்களிடம் அறிவியல் இத்தனை முன்னேற்றம் ஏற்படாத காலத்திலும்
அவர்கள் செய்த கட்டடகலை, கோபுரங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன.
ஆகவே அப்போதே இன்ஜினியரிங் துறை ஒரு பெரிய கோவில்/பிரமிடு கட்டுமளவு வளர்ந்திருந்தது என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால் இன்று இஞ்சினியரிங் துறை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அசகாய சூர வளர்ச்சி அடைந்திருப்பதைக் காண முடியும்.

துபாய் புர்ஜ் கலீஃபா போன்ற ஒன்றை நம் முன்னோர்கள் நிச்சயம் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

கடலுக்குள் செல்லும் சாலைகள், வானத்தில் வானூர்தி கொண்டு பறப்பது போன்றவை நம் முன்னோர் காலத்தில் இல்லாதவை.

அதே போன்று தான் மருத்துவத்திலும், சித்தர்கள் எழுதி வைத்துச்சென்ற ஓலைகளை படித்து அவர்கள் வழி வந்தோர் வைத்தியம் பார்த்தனர். அக்கால நோய்களுக்கு தங்களால் இயன்ற சிறப்பான வைத்தியத்தை பார்த்தனர்.

ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட அனைத்திலும் சிறப்பாக நம் முன்னோர் இருந்தனர் என்று கூறுவது ஏற்கலாகாது.

காரணம் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை; மின்சாரம், பெட்ரோல் இன்ஜின், கணிணி, மைக்ரோஸ்கோப், டெலிபோன், ரேடியோ, டிவி, விமானம், ஒளி விளக்கு, செயற்கை கோள் போன்றவை, கண்டுபிடிக்கப்படவில்லை.

இவையனைத்தையும் கொண்டு நாம் அடைந்த இந்த அசுர வளர்ச்சியை நிச்சயம் நம் முன்னோர் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.

சரி தாயத்துக்குள், தொப்புள் கொடிக்கு வருவோம் :

ஸ்டெம் செல்கள் இருப்பதை அறிந்தெல்லாம் அவர்கள் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அப்போது நுண்ணோக்கி கிடையாது. நமது உடல் செல்களினால் தான் ஆனது என்று கூறிய ராபர்ட் ஹூக் கடந்த பதினேழாம் நூற்றாண்டில்தான் பிறந்தார்.

ஸ்டெம் செல் தெரபி தற்போது இருபது ஆண்டுகளாக தான் வளர்ந்து வருகிறது.
பிரபலமாகி வருகிறது.

மேலும் ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட உறைகுளிரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாயத்தில் சாதாரண வெப்பத்தில் வைத்து பின்னாடி ப்ரயோஜனம் இல்லை.

சாதாரண வெப்பத்தில் பால் பாக்கெட்டை கூட வைத்து இரண்டு நாள் பயன்படுத்த முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள்.

என்ன காரணம்?

சாதாரண வெப்ப நிலையில் மிருகத்திடம் இருந்து கிடைக்கும் ஒரு பொருளை கிருமிகள் தாக்கி அழிக்கும். இது இயற்கை.

இறந்த உடலைக்கூட தகனம் செய்ய/ அடக்கம் செய்ய தாமதம் ஆகிறது என்று தெரிந்தால் அது டீகாம்போஸ் ஆகாமல் இருக்கத்தான் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கிறோம். ஃப்ரீசர் பாக்சிஸ் வைக்காமல் விட்டால் கிருமிகள் தாக்கி கெட்ட நாற்றம் வர ஆரம்பிக்கும்.

இதே தான் ஸ்டெம் செல்களுக்கும். அவற்றை ஃப்ரீசிங் செய்து வைத்தால் தான் ப்ரயோஜனம். அதை அந்த குளிரில் பராமரிக்கத்தான் ஃபீஸ் வாங்குகிறார்கள்.

எதையாவது தாயத்தாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று நரி முடி, பித்தளையில் எழுதி போட்டுக்கொள்வது, குழந்தையின் தொப்புள் கொடி என்று போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தாயத்து போட்டதின் முக்கிய நோக்கம் பயத்தை போக்கும் (Placebo) ப்லாசிபோவாக அந்த தாயத்து உதவியது.

படிக்க :
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

Placebo என்றால் என்ன?

ஒரு பாட்டி என்னை அடிக்கடி மூட்டு வலி என்று சந்திக்க வருவார். நான் அவரது வயதை காரணம்காட்டி நேரடியாக வலி நிவாரணி மாத்திரை தராமல் சத்து மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புவேன்.

அந்த பாட்டிக்கு என் மீது உள்ள நம்பிக்கையால், சத்து மாத்திரைக்கே வலி சரியாவதாக கூறுவார். ஆனால் நான் பாட்டிக்கு சத்து மாத்திரை தான் கொடுத்தேன் என்பது அவருக்கு தெரியாது. இது தான் Placebo.

இப்படிதான் பல விசயங்கள் அக்கால placebo க்களாக இருந்தன.

குழந்தைகள் பிறப்பதே பெரிய விசயம்… பிறந்ததில் எத்தனை ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும் ? எத்தனை ஐந்து வயதை தாண்டும் ? எந்த குழந்தையை ப்ளேக்கு வாரிக்கொண்டு போகும்? எந்த குழந்தையை பெரியம்மை வந்து சுருட்டிச்செல்லும் ? எத்தனை குழந்தைகள் பஞ்சத்துக்கு சாகும் என்று தெரியாது.

இதற்கெல்லாம் அக்காலத்தில் மருந்தும் கிடையாது நிவாரணமும் கிடையாது.
அதனால் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வளரும் குழந்தைக்கு ஒரு ப்ளாசிபோவாக இருக்கும் என்று கட்டப்பட்டவையே இந்த வகை தொப்புள் கொடி தாயத்துகள். அவ்வளவே… அதற்கு மீறி முக்கியத்துவம் அதற்கு தேவையில்லை.

நம் முன்னோர் வழக்கப்படி நரபலி கொடுக்கும் பழக்கமும் தான் வழக்கில் இருந்தது. அதற்கும் அறிவியல் காரணம் ஏதும் காண முடியுமா?

அனைத்துமே அக்காலத்தில் அவர்களுக்கு தெரியாதவற்றின்; அறியாதவற்றின் மீது கொண்டிருந்த மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அவ்வளவே.

“முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” கும்பலுக்கு என் கருத்து. நம் முன்னோர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை. அவர்கள் காலத்தில் அவர்கள் தான் மிகச்சிறந்த அறிவாளிகள்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

 1. ஐயா. தற்போது குழந்தை களுக்கும் கூட
  சர்க்கரை வியாதி உள்ளது.
  கணையம் இன்சுலின் சுரக்காததால்
  நாம் நேரடியாக அதற்கான ஊசிமருந்தை
  மட்டும் தருகிறோம்.
  இதற்கு ஸ்டெம் செல் எங்கு கிடைக்கும்.
  எப்படி உபயோகிப்பது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க