பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
பாகம் 3 : மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
பாகம் 4 : மாப்பிளா கிளர்ச்சி : பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன ?
(சலீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கத்தை தொடர்கின்றேன்)
5. கோணோம்பாற சீரங்கந்தோடி அரீப்புரம் பாரக்கல் சக்காரியாவின் பரம்பரை வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜி, அவர் மகன் ஆயாமு, மகள் கடியாமு, மருமகன் நானத் இஞ்ஞாலி ஆகியோர். நோய்வாய்ப்பட்டு இருந்த ஹாஜி, பிரிட்டிஷாரின் கண்ணில் படாத இடத்தில் தன்னை மறைத்து வைக்குமாறு சொன்னார். நோயாளியான அவருக்கு பிரிட்டிஷார் துன்பம் தர மாட்டார்கள் என்றுதான் குடும்பத்தின் பிறர் எண்ணியதாக ஆயாமுவின் பேத்தி பாத்திமா சொல்கின்றார். ஆயாமுவின் மகன் வாப்பு ஹாஜி (அப்போது இவருக்கு வயது 14)யும் நண்பன் நானத் குஞ்ஞாலாவியும் பெண் உடையணிந்து பிற பெண்களோடு கலந்து வைக்கப்பட்டதால் தப்பினர்.
வல்லிக்கடன் குடும்பத்தில் ஒருவர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளார். நான்கு நாட்களாக காயத்துடன் போராடியுள்ளார். பாப்பு ஹாஜி என்னும் சிறுவன், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துள்ளான். ஆனால் அருந்தி ய நீர் முழுமையாக வெளியேறிவிட, கவனிக்க யாருமற்ற நிலையில் நான்காம் நாள் உயிரிழந்தார், அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். காலம் ஓடிவிட்டது, அவரது கல்லறையும் மறந்துவிட்டது.
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
6. கோணோம்பாறவில் சந்தைக்கு பின்புறம் உள்ள அடக்க ஸ்தலத்தில் நரிப்பட்ட கபூர் குடும்பத்தை சேர்ந்த இருவர் அடக்கம் செய்யப்பட்டனர். நரிப்பட்ட கபூர் அகமது, அவர் மகன் போக்கர் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபின் இருவரும் தப்பியோடி காய்ந்த சருகுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர். அகமதுவின் மற்றுமொரு மகன் குஞ்ஞாலாவி பிடிபட்டு அந்தமான் தீவுக்கு கொண்டுக்குச்செல்லப் பட்டார். அகமதுவின் பேரன் அலாவி (மொய்தீன் குட்டியின் மகன்) தன் குடும்பத்துடன் இங்கே வசிக்கின்றார்.
7. மேல்முறி வலியட்டபாடி நம்பன்குண்ணன் முகம்மது அலி வீட்டின் கொல்லையில் அவர் தாத்தாவின் தந்தை அலாவி அடக்கம் செய்யப்பட்டார். மிக வயதான அவரை வேறு யாரும் சுமந்து செல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால், சிறிய ஜன்னல் வழியே வெளியே வந்துள்ளார். பிரிட்டிஷாரின் கையில் பிடிபட்ட பின்னர் தன்னை சுட்டுக்கொல்வது உறுதி என்று தெரிந்த பின் தொழுகை நடத்த ஆயத்தம் ஆனார். தன்னை நீரால் சுத்தப்படுத்திக்கொண்டு மேற்குத்திசை நோக்கி நின்றார் என்று உறவினர் மொய்தீன் (87 வயது) கூறுகின்றார். பிரிட்டிஷாரின் பீரங்கிகள் தாக்கியதில் அங்கே இருந்த தென்னை மரங்கள் மொட்டையாக இருந்தன என்று அவர் சொல்கின்றார். சுட்டுக்கொல்லப்பட்ட அலாவியின் உடலை, பெண்கள்தான் இரவில் குழி தோண்டி அடக்கம் செய்ததாகவும் இரண்டு அடி ஆழம் மட்டுமே அவர்களால் தோண்ட முடிந்தது என்றும் சொல்கின்றார்.
8. கபூர் உஸ்மானின் வீட்டு கொல்லையில் கபூர் குடும்பத்தின் இருவர், கபூர் இத்தீரும்மாவின் தந்தையின் சகோதரர், தாத்தா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டனர். இத்தீரும்மாவுக்கு குழந்தைகள் இல்லை, சமீபத்தில்தான் அவர் காலமானார். இருவரும் முறையே கபூர் உஸ்மானின் தாத்தா ஆன இஸ்மாயில் என்ற இதேலுவின் சகோதரரும் மகனும் ஆவர்.
இத்தேலு பிடிபட்டார், ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறந்தார். அவர்களின் பரம்பரை வீட்டுக்கு பிரிட்டிஷார் தீ வைத்து அழித்தனர். வீட்டின் இடிபாடுகளை இடித்தபோது பிரிட்டிஷாரின் துப்பாக்கி தோட்டாக்கள் சுவரில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்ததாக உஸ்மானின் தந்தை முகம்மது ஹாஜி நினைவுகூர்ந்துள்ளார்.
9. மேல்முறி முட்டிப்பாடி மத்திய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மடாம்பி உபையத்தின் வீட்டின் அருகே நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். மடாம்பி குஞ்ஞாரமு, மடாம்பி மாமுண்ணி, காடேறி மூஸா ஹாஜி, சேர்க்காடன் மொய்தீன் ஆகிய நால்வர். மடாம்பி குடும்பத்தின் பரம்பரை வீட்டின் முற்றத்தில் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வீட்டை செப்பனிட்ட போது சுவர்களில் தோட்டாக்கள் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்கள். மூஸா ஹாஜியின் மகன் ஆன மம்முது ஹாஜிதான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, நிலம் பறிபோகா வண்ணம் அதை தன் தாயார் இயாத்துக்குட்டி ஹஜும்மாவின் பெயரில் ஆலத்தூர்பாடியில் உள்ள மசூதிக்கு வக்பு கொடையாக அளித்துள்ளார். இக்குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் உமர் மேல்முறி இத்தகவலை தருகின்றார்.
பெரும்கொல்லன் சாதியை சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். தட்டாந்தோடி அருகே உள்ள வைஷ்யர்தோடியில் வசித்து வந்தார்கள். இவர்களின் தலைமுறையை சேர்ந்த மூவரை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களின் வீட்டுக்கு தீ வைத்தது. வீட்டின் கிணற்றருகே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கல்லறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று ஆலத்தூர்ப்பாடியை சேர்ந்த பி டி முகம்மது மாஸ்டர் கூறுகின்றார்.
(சலீல் இலக்கில் எழுதிய பதிவின் தமிழாக்கம் கீழே)
பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?
மலபார் கிளர்ச்சியின் தலைவர் அலி முஸ்லியாரின் செல்வாக்கு மேல்முறியிலும் அதிகாரித்தோடியிலும் பலமாக இருந்ததுதான் அப்பகுதிகளை பிரிட்டிஷார் தம் இலக்காக ஆக்கியமைக்கு காரணமாகும். தார் (Dar) எனப்படும் இஸ்லாமியக் கல்வி மையங்களை மேல்முறி பொடியாட் பரம்மலிலும் பின்னர் மேல்முறி ஆலத்தூர்ப்பாடியிலும் முஸ்லியார் நடத்திவந்தார். மூன்று வருடங்கள் இப்பகுதியில் அவர் இருந்தார் என்பதால் இயற்கையாகவே அப்பகுதி மக்களிடம் செல்வாக்கை வளர்த்து இருந்தார். காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தின் கோழிக்கோடு தாலுக்கா தலைவர் பழக்கம்தோடி அபூபக்கர் முஸ்லியார் மலபார் கிளர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அவர் பொடியாட்டின் தாரில் இருந்த அலி முஸ்லியாரின் மாணவர் (A K Kodoor, page 98). மலபார் கிளர்ச்சியின் பல தலைவர்கள் இளவயது அறிவாளிகள், அலி முஸ்லியாரின் மாணவர்கள்.
அலி முஸ்லியார் தவிர மற்றுமொரு குறிப்பிடத்தக்ககிளர்ச்சி த் தலைவர் வரியன்குன்னத் குஞ்ஞாகமது ஹாஜி, இவர் தலைமறைவாக இருந்தபோது மேல்முறிக்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றுள்ளார். தத்தையில் குடும்பத்தின் மாடம்பி முஹம்மது, தன் தந்தை தன்னிடம் கூறியதாக சொல்கின்றார்: குஞ்ஞாகமது ஹாஜி ஒருநாள் இரவில் வந்து அரிசிக்கஞ்சி கேட்டார்,கஞ்சி இல்லாமல் போகவே தேங்காய் சில்லுகளை வைத்துக்கொண்டு பழைய சோறு மட்டுமே உண்டார். (Nisar Kaderi, page 23).
பிரிட்டிஷார் இப்பகுதியை குறிவைத்து தாக்கியமைக்கு பூக்கோட்டூர் போர்க்களம் மற்றொரு காரணம். 1921 ஆகஸ்ட் 21 அன்று நடந்த சண்டையில், மாப்பிளாகள் ஒருபுறமும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப்படையான Leinster ரெஜிமெண்ட், சிறப்பு போலீஸ் படை ஆகியன மறுபுறமும் மோதியதில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாப்பிளாக்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
பூக்கோட்டூர் போர்க்கள வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மலபார் கிளர்ச்சியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்கை வகித்தது. இக்களத்தில் மாப்பிளாக்கள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தார்கள் என்பது உண்மைதான் எனினும் பிரிட்டிஷ் அரசு இக்களத்தை மிகக் கவலையுடன்தான் பார்த்தது. காரணம், வேறொரு ராணுவம் அல்லது அரசின் உதவி ஏதும் இல்லாத நிலையில் மாப்பிளாகளால் இவ்வுலகத்தின் மிக வலிமையான ராணுவத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே.
பூக்கோட்டூர் கும்பல் எனப்பட்ட மாப்பிளா இராணுவ அமைப்பில் இருந்தவர்கள் முற்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுடைய திட்டங்களும் கிளர்ச்சியை ஒருங்கமைத்த விதமும் பூக்கோட்டூர் களத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு மிகப்பெரும் சேதங்களை விளைவித்தது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக இருந்த FB Evans மெட்ராஸ் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Tottenham , page 48. 1921 அக்ட்டோபர் 20- நவம்பர் 10 இடைக்காலத்தில் கொண்டோட்டி, மஞ்சேரி, அரீகோட், மலப்புரம் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுதியாகவே மேல்முறிஅதிகாரித்தோடி படுகொலைகள் இருந்தன, அதன் உடனடி நோக்கம் பூக்கோட்டூர் கும்பலையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் பிடிப்பதுதான். Tottenham, page 40.
அவ்வாறெனில் உண்மையான நோக்கம் என்ன? பூக்கோட்டூர் கும்பலை ஒழித்துக்கட்டவே இந்த படுகொலைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மாப்பிளா மக்களை அச்சுறுத்துவதே இப்படுகொலையின் உண்மையான நோக்கம். கிளர்ச்சியில் தாங்கள் பங்கு பெறாததால் பிரிட்டிஷ் ராணுவம் தங்களுக்கு தீங்கு செய்யாது என்று நம்பியவர்களையும் ராணுவம் தீர்த்துக்கட்டியது. நானத் குருவயில் மொய்து அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவ்வாறு ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு செய்தியை எச்சரிக்கையாக அனுப்பியது பிரிட்டிஷ் ஆதரவாளராக இருங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்.
பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் கூட படுகொலைக்கு ஆளானவர்கள் அப்பாவிகள் என்றுதான் சொல்கின்றன. அன்றைய அரசின் கீழமை செயலாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
“….அக்ட்டோபர் 25 அன்று மேல்முறியில் 246 மாப்பிள்ளாக்களை Dorset படையினர் படுகொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் இப்படுகொலைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கிவிட்டதை பார்க்க முடிந்தது. படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக, மலப்புரத்தின் சுற்று வட்டார அம்சங்களில் (கிராம நிர்வாக அமைப்பு) இருந்து அரசுக்கு வந்த மனுக்களை பார்த்தால், அவை அரசுடன் ஒத்துழைப்பதாக எழுதப்பட்டு இருந்தன“. ஹிட்ச்காக்கின் பதிவு, டார்செட் படையினர் அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து மாப்பிளாகளை பிடித்ததாக சொல்கின்றது. தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு அளிக்கும் எனில் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் ஆயிரம் பேர் சரணடைய ஆயத்தமாக இருப்பதாக மலப்புரம் காஜி மனு எழுதியாக நவம்பர் 2 அன்று Evans மெட்ராஸ் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். Tottenham page 257.
படிக்க :
அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
மவுனத்தின் வரலாறும் வரலாற்றின் மவுனமும்
ஆப்பிரிக்கஅமெரிக்க எழுத்தாளர் Saidiya Hartman தனது முதல் நூலான Scenes of subjection னில் இப்படி குறிப்பிடுகிறார்: ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து கடத்தி செல்லப்பட்ட அடிமைகளின் அவல ஓலத்தை விடவும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி சமாதி ஆன பல்லாயிரம் அடிமைகளின் மவுனம் மிக உரத்தது. இப்போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களின், வரலாற்றின் அடிப்படையில் ஆன ஆவணங்களை விடவும் பதிவு செய்யப்பட வேண்டியவை எவை எனில் பெருங்கடலில் மூழ்கி உயிரை இழந்த பல்லாயிரம் அடிமைகளின் குரல்கள்தான்.
ஹார்ட்மானின் கூற்று சரி எனில், மேல்முறி அதிகாரத்தோடியில் உயிரை இழந்த 200 பேர்களின் வரலாற்றை எதன் ஆதாரத்தின் பேரில் எழுதுவது? 40 பேர்களின் சமாதி ஒன்றைத்தவிர? சான்றுகள் எதையும் விட்டு வைக்காமல் மூழ்கி சமாதி அடைந்தவர்கள் ஒரே ஒரு செய்தியை விட்டு செல்கின்றார்கள்: வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது. மலபார் கிளர்ச்சி என்பது நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம். எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சான்றுகளையும் தாண்டி சான்றுகளும் எச்சங்களும் இன்றி மறைந்து போனவர்களின் வரலாற்றை தோண்டி ஆய்வதன் முக்கியத்துவத்தையே மலபார் கிளர்ச்சியின் இந்த மையமான பகுதி நமக்கு உணர்த்துகின்றது.
(முற்றும்)
மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க