பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
1921 கிளர்ச்சி, திருரங்காடியில்தான் பிறந்தது. ஆகஸ்ட் 1921-ல் மலப்புரம் மாவட்டம் திரூர்தான் கிளர்ச்சியின் கனல் பிரதேசமாக விளங்கியது. பிரிட்டிஷ் மலபாரின் நான்கு தாலுகாக்களில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது – கோழிக்கோடு, எரநாடு, வள்ளுவநாடு, பொன்னாணி; பின்னர் குரும்பரநாடு, வயநாடு தாலுகாக்களிலும் பிறப்பிக்கப்பட்டது. கிளர்ச்சியை வழி நடத்திய அலி முசலியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் இறுதியில் சரணடைந்தார்கள். எனினும் பிரிட்டிஷ் இராணுவம் தன் அடக்குமுறை, கைதுகளை தொடர்ந்து செய்தது.
பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு பிரிவான Dorset Regiment என்னும் படைப்பிரிவு, எரநாடு, வள்ளுவநாடு, மஞ்சேரி ஆகிய தாலுகாக்களில் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக நடத்திய தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1921 அக்டோபர் 25 அன்று, மலப்புரத்தில் மேல்முறி என்ற ஊரில் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதியில் சுமார் 27,000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.
படிக்க :
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
வரலாற்றறிஞர் எம் கங்காதரன், கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த கடைசி ஆறு மாதங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் இரண்டு தரப்பினருமே பெரும் நெருக்கடியில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் 10000 மாப்பிளாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதே அளவு மாப்பிளாக்கள் கைது செய்யப்பட்டு மலபாரில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அந்தமானின் கொடிய தனிமைச் சிறைக்கும் பல நூறு பேர் கடத்தப்பட்டனர்.
கங்காதரனின் கூற்றுப்படி, அன்று அங்கே போலீஸ் படைக்கு தலைமை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு Richard Harvard Hitchcock க்கின் அதீத நடவடிக்கைகள்தான் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஹிட்ச்காக்கின் பதிவுகளே இதற்கு ஆதாரம். மலபாரில் அப்போது கிலாபத் இயக்கம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் கிலாபத் இயக்கம் தீவிரமாக இயங்கியது.
கிலாபத் செயற்பாடுகளை, அவற்றின் செயற்பாட்டு எல்லைகளையும் தாண்டி அதிகமான கற்பனைகளுடன் பார்த்த பிரிட்டிஷ் போலீஸ், எல்லை மீறிய அடக்குமுறைகளில் இறங்கி இயக்கத்தை நசுக்க முனைந்தது. இதனால் கோபமுற்ற மாப்பிளா முஸ்லிம்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கோழிக்கோட்டில் காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். காந்தியும் மவுலானா சவுக்கத் அலியும் கலந்துகொண்ட மாநாடு அது. இக்கூட்டம் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதாக அதீத கற்பனையில் இறங்கியது பிரிட்டிஷ் காலனிய அரசு.
0o0o0
சமீல் இல்லிகல் (Sameel Illikal) கேரள இதழியலாளர். வரலாற்று ஆய்வாளர், திரைப்பட விமர்சகர், திரைப்பட இயக்குநர். மத்யமம் என்ற வார இதழின் துணை ஆசிரியர். மாப்பிளா மக்களின் வரலாறு, பண்பாடு குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்பவர். Graves of 1921 Martyrs என்ற ஆய்வுத்திட்டத்தை செய்து வந்தார். நாடக நடிகர், வில்லடிச்சாம்பாட்டு என்ற கேரள கிராமியக்கலையில் தேர்ந்தவர்.
2018 அக்டோபர் மாத மத்யமம் இதழில் வெளியான கட்டுரை இது. சமீல் மலையாளத்தில் எழுதியதை O Najiya ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Twocircles. Net இணைய இதழில் வெளியிட்டார். இரண்டு பாகங்களாக வெளியான கட்டுரையின் சில பகுதிகளை நான் தமிழில் இங்கு தருகின்றேன்.
இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 19.4.1919 (379 பேர் மரணம்), சவ்ரி சவ்ராவில் 5.2.1922 அன்று , கொதிப்புற்ற விவசாயிகள் 23 போலீசாரை உயிருடன் கொளுத்திய நிகழ்வு ஆகியவை என்றென்றும் பேசப்படுவை.
அரசு பதிவேடுகளின் படி மாப்பிளா கிளர்ச்சி அல்லது மலபார் கிளர்ச்சியில் 2337 பேர் கொல்லப்பட்டார்கள், 1652 பேர் காயமுற்றனர், 45,404 பேர் சிறையில் அடைப்பு. 10,000 பேர் வரை மரணம், 50,000 பேர் சிறையிலடைப்பு, 20,000 பேர் நாடுகடத்தல், 10,000 பேரைக் காணவில்லை – இது பொதுமக்கள் கணக்கு.
மலபார் புரட்சியுடன் ஒப்பிடும்போது பிற நிகழ்ச்சிகள் அவற்றின் பரப்பளவிலும் வீச்சிலும் சிறியவை. மலபார் கிளர்ச்சியை தேசிய வரலாறு புறக்கணிக்கின்றது, மலபார் கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்தவற்றையும் வரலாறு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றது. உதாரணமாக மலப்புரத்தில் மேல்முறி-அதிகாரித்தோடியில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள். மலபாரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கூட்டுப்படுகொலை நிகழ்வுகளில் பூக்கோட்டூர் கலவரத்துக்கு அடுத்ததாக சொல்லப்படுவது மேல்முறி படுகொலைகள்.
கொல்லப்பட்ட 246 பேர்களில் 11 பேர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட இடம், மேல்முறி. படம் : டெக்கான் ஹெரால்ட் 25.10.2018
பூககோட்டூர் படுகொலையில் 350-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1921 அக்டோபர் 29 அன்று, பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் உட்பட அனைவரும் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டார்கள். Dorset Regiment என்னும் பிரிட்டிஷ் துப்பாக்கி படையினர்தான் இப்படுகொலையை நிகழ்த்தினர்.
The Mappila Rebellion 1921, GRF Tottenham, Madras Govt Press, 1922: மலப்புரத்துக்கு வடமேற்கே 4 மைல் தொலைவில் பெரும்கும்பல் கூடியது. டோர்செட் ரெஜிமெண்ட், துப்பாக்கி படை, கவச வாகனங்கள் அக்கும்பலை எதிர்கொண்டன. மேல்முறிக்கு மேற்கே உள்ள காட்டிலும் வீடுகளிலும் இருந்த எதிரிகள் வெளியே வந்து சரணடைய மறுத்ததுடன் நமது படைகளுக்கு எதிராக தொடர்ந்தும் உறுதியுடனும் சண்டையிட்டனர். இறுதியில் 246 கிளர்ச்சியாளர்கள் இறந்தனர் என்று படைப்பிரிவின் தலைமை கமாண்டர் மெட்ராஸ் அரசுக்கு 25.10.1921 அன்று அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்.
ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கோணோம்பாற, அதிகாரிகொடி, மேல்முறி முட்டிப்படி, வலியாட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் டோர்செட் ரெஜிமெண்ட் நடத்திய படுகொலை இது. மலப்புரம் நகரில் இருந்து 3 கிமீ தொலைவில் கோழிக்கோடு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஊர்கள் இவை.
டோர்செட் ரெஜிமெண்ட்டின் இரண்டாவது பட்டாளத்தில் A, D கம்பெனிகள், கோணோம்பாறயை நோக்கி பீரங்கி குண்டுகள் தாங்கிய கவச வாகனங்களில் வந்து சேர்ந்தனர். Lt.Hevic, Lt.Goff ஆகியோர் தலைமையில்தான் 246 மாப்பிளா மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நிகழ்வுக்கு 10 வருடங்கள் பின் பிறந்த நம்பன் குண்ணனின் (மேல்முறி வலியட்டப்படி) வாக்குமூலம் இது: பீரங்கிக்குண்டுகள் பெருத்த சத்தத்துடன் பொழிந்தன. அதன் பின் ராணுவம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. வெளியே வர மறுத்தவர்களை துப்பாக்கியின் கத்தி முனையாலும் பின் கட்டையாலும் குத்தினார்கள், அடித்தார்கள். மஞ்சா, பத்தாயம் போன்ற மரப்பெட்டிகளை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தார்கள்.
குர் ஆன், சபீனாப்பாட்டு (முகமதுநபியை புகழ்ந்து அரபு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்), அரபு மொழிப் பாடல்கள், படைப்பாட்டு (போர்ப் பரணிகள்) போன்றவற்றை முற்றத்தில் குவித்து தீயிட்டனர். ஓலைகள், புற்களால் வேயப்பட்ட வீடுகளுக்கு தீயிட்டனர். அதன் பின் ஆண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர். கட்டுப்பட மறுத்தவர்கள், காப்பாற்ற முனைந்தவர்கள், அவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆயினும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காலையில் தொடங்கிய படுகொலை நண்பகலில் படைத்தளபதி எழுப்பிய நீண்ட விசில் ஒலிக்கும் வரை நீண்டது. அவ்வாறு விசில் ஒலித்தபோது துப்பாக்கியின் முனை சாலத்தில் கல்லடித்தோடி மொய்தீன் குட்டி ஹாஜியை குறிவைத்து இருந்தது. துப்பாக்கியின் விசை இழுபடும் முன் அவர் தப்பித்தார். இந்த நிகழ்வை குறிப்பிட்டவர் P T முகம்மது மாஸ்டர், அப்போது அவர் வயது 4 (Nisar Kaderi – Pookottur Yuddhavum Melmuri Operationum, 1921 Churul Nivaranam – Pookkottur Yudha Smaraka Samithi Souvenir, 2007).
படிக்க :
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
246 பேர் சுடப்பட்டனர், சுமார் நூறு வீடுகளுக்கு தீயிட்டனர். சுடப்பட்ட சிலரோ மிக மோசமான காயம்பட்டு இருந்தனர், உயிர் மட்டுமே இருந்தது. இன்னும் பலரோ கவனிக்க ஆளின்றி நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து செத்து மடிந்தனர். இறந்தவர்கள் எங்கே விழுந்து கிடந்தார்களோ அங்கேயே புதைக்கப்பட்டனர்.
விடுதலைப்போராட்டம் ஆகட்டும், மலபார் கிளர்ச்சி ஆகட்டும், வரலாறுகள் இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசியதில்லை. ஆனால் கல்லறைகள் இருக்கின்றனவே, அவை நடந்த படுகொலைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன – இப்பகுதி மக்களின், பின் வந்த தலைமுறைகளின் நினைவில். வீட்டின் முன்பக்க திடலில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். மலப்புரம் கிலாபத் தலைவர் குஞ்சி தங்கள் (மலப்புரத்தின் வலியங்காடியை சேர்ந்தவர்), கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அருகில் உள்ள ஊர்களில், கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இறந்தவர்களை அடக்கம் செய்தார்கள்.
ஒரே குழியில் பலரையும் அடக்கம் செய்ததும் நடந்தது. ராணுவத்துக்கு பயந்து இரவு நேரங்களில் அடக்கம் செய்தார்கள். ஆண்கள் இல்லாத நிலையில் பெண்களே குழிகள் வெட்டினார்கள். ஒரு புதைகுழி இரண்டு அடி ஆழம் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. 246 பேர் கொல்லப்பட்டதில் ஒன்பது குழிகளில் அடக்கம் செய்யப்பட்ட 40 பேர்களின் விவரங்கள் நம்மிடம் உள்ளன.
(தொடரும்)

மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க