இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 – இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள்.
அத்துப்பாக்கிச் சூட்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒப்புக்கொண்டாலும், விடுதலை இயக்கங்கள் நடத்திய விசாரணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த உண்மை அம்பலமானது. அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.
இந்தப் படுகொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கொடிய முறையில் நசுக்கும் நோக்கில் ஆள்தூக்கி கருப்புச் சட்டமான ரௌலட் சட்டத்தை இயற்றியிருந்தது, ஆங்கிலேய காலனி அரசு.
இக்கருப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரசு கட்சி மார்ச் 30, 1919 அன்று சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இப்போராட்டத்தின் முதல் நாளன்றே டெல்லியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சமயத்தில் பஞ்சாப் மாகாணம் முழுவதுமே போராட்டத்தின் கொதிநிலையில் இருந்தது. அம்மாகாணத்தின் அமிர்தசரஸ் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தைத் தடுக்கும் திட்டத்தோடு, அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வழக்குரைஞர் சைஃபூதின் கிச்லூ, மருத்துவர் சத்பால் ஆகிய இருவரையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கைது செய்து, இரகசிய மறைவிடத்தில் அவர்கள் இருவரையும் சிறை வைத்தது.
படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
♦ தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி
அத்தலைவர்களை விடுதலை செய்யக் கோரி அமிர்தசரஸ் நகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால், பஞ்சாபிகள் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இந்த எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத காலனிய அரசு, பஞ்சாப் மாகாணத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தது.
இந்தப் பின்னணியில்தான், குறிப்பாக கைது செய்யப்பட்ட இரண்டு தலைவர்களையும் விடுதலை செய்யக் கோரி அமிர்தசரஸ் நகரில், ஜாலியன்வாலா பாக் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டம் நடைபெற்ற நாள், பஞ்சாபி மக்களின் முக்கிய பண்டிகையான பைசாகி திருநாளாகும். பைசாகி பண்டிகை, சீக்கியர்கள், இந்துக்கள், முசுலீம்கள் என்ற மத வேறுபாடுகளின்றி, அனைத்து பஞ்சாபி மக்களும் இணைந்து, ஒரே குவளையில் நீர் அருந்தி, ஒரே தட்டில் உணவருந்திக் கொண்டாடும் மதச்சார்பற்ற திருவிழா. அப்பண்டிகை நாளில் நடந்த ஜாலியன்வாலா பாக் பொதுக்கூட்டத்திலும் மதவேறுபாடின்றி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கெடுத்தனர்.
பஞ்சாப் மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேட்கையையும், அப்போராட்டத்தில் மதவேறுபாடுகளைக் கடந்து அம்மக்கள் ஒற்றுமையாகத் திரண்டதையும் சகித்துக்கொள்ள முடியாத ஆங்கிலேய காலனிய அரசு, அவ்விடுதலை வேட்கையை ஒடுக்கி, பஞ்சாப் மக்களிடையே அரசு பயங்கரவாத பீதியைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கிலேயே ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது.
இப்படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் டயர் இந்த நோக்கத்தை வெளிப்படையாகவே இப்படுகொலை குறித்து நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டான்.
ஜெனரல் டயர் 1927 ஆம் ஆண்டு இயற்கையாக இறந்துபோனாலும், இப்படுகொலையின்போது பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயரை உத்தம் சிங் என்ற பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரன், இலண்டன் நகரிலேயே சுட்டுக் கொன்றான். இந்த மகத்தான வரலாற்றுப் பழி தீர்க்கும் செயலைத் தனியொரு ஆளாகச் செய்து முடித்த உத்தம் சிங் கைது செய்யப்பட்டபோது, தனது பெயரை ராம் முகம்மது சிங் ஆசாத் எனக் கூறினான். உத்தம் சிங் என்ற ராம் முகம்மது சிங் ஆசாத் 1940, ஜூன் 12 அன்று தூக்கிலிடப்பட்டான்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டங்கள் எதிலும் கடுகளவுகூட பங்கெடுத்துக் கொள்ளாத, அதேசமயம் அப்போராட்டத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் இந்து மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆங்கிலேய காலனி அரசுக்குச் சேவை செய்துவந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல், அரசு அதிகாரம் கையில் இருக்கும் மமதையில், ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டைத் தனது இந்து தேசியவெறி நோக்கில் கொண்டாட எத்தணிக்கிறது.
வரலாற்றை மறந்துவிட்ட மரக்கட்டைகளா நாம்?
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ரௌலட் சட்டம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊபா சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இந்து மதவெறி பாசிசத் திட்டங்களையும், கார்ப்பரேட் கொள்ளையையும் எதிர்ப்பவர்கள் மீது கைது, சிறை உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஜாலியன்வாலா பாக்-கில் அமைதியாகக் கூடியிருந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றால், மோடி அரசும், அவரது கைக்கூலி தமிழக அரசும் தூத்துக்குடியில் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறை, சித்திரவதைகளை ஏவிவிட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது காலனிய ஆட்சிக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது என்றால், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிசக் கும்பல், தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ள போராடிவரும் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்த ராமர் கோவில், பசுவதை தடை, மாட்டுக் கறி தடை என அடுத்தடுத்து இந்து மதவெறி திட்டங்களைக் கையிலெடுத்து வருகிறது.
அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் விசுவாசத்தைக் காட்டி அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட அரசு சன்மானங்களைப் பெற்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இன்று பல்வேறு ஏகாதிபத்திய முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
படிக்க:
♦ தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்
இந்தியர்களுக்கு ஜனநாயகத்தைக் கற்றுத் தரப் போவதாகக் கூறித் தனது காலனிய ஆட்சி தொடருவதை நியாயப்படுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். வலிமையான அரசு, ஊழலற்ற அரசு எனப் பிரச்சாரம் செய்து தனது பாசிச ஆட்சி தொடருவதை நியாயப்படுத்த முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.
இந்திய விடுதலைப் போராட்டம் முடிந்து போன வரலாறு அல்ல. தனியார்மயம்-தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனிய கொள்ளைக்கு எதிராகவும் பார்ப்பன பாசிசம் மற்றும் அரசு பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து மக்களின் வாழ்வுரிமையையும் அரசியல் மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் காத்துக் கொள்வதற்காகவும் அப்போராட்டத்தை தொடர வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
- குப்பன்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |