ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது பஞ்சாபின் துணை நிலை ஆளுநர் ஆக இருந்த மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்றதன் மூலம் உத்தம்சிங் நீண்ட காலம் காத்திருந்து பழி வாங்கியவர் என்று பரவலாக அனைவராலும் அறியப்பட்டவர் ஆவார்.
ஒரு கொலையை செய்வதற்கு பல ஆண்டுகள் காத்திருந்தார் என்பது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகள் அவரை அறிவதற்கு உள்ளன.
ஒவ்வொரு முறையும் அவரது பிறந்த நாள் மற்றும் இறந்த நாளின் போது அவரை பற்றி பல பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுகின்றன. ஜெனரல் டயரை அவர் சுட்டுக் கொன்றது பற்றிய நடவடிக்கையை ஹீரோத்தனமானதாகக் காட்டி பரவசமாக பதிவு செய்கின்றன. 2017-ம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரையில் டயரை அவனது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்தை, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திய சம்பவத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.
படிக்க :
சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?
ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
பலரும் உத்தம் சிங்கை தனிப்பட்டமுறையில் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பழி வாங்குவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே அவரை பற்றி எழுதுகிறார்கள் .
உத்தம் சிங்கின் வெறுப்பு தனிபட்டதல்ல; ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தின் மீதுதான் என்பதையும் வண்ணமயமான அவரது எண்ணங்களையும் நோக்கங்களையும் லண்டனை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மற்ற இந்திய புரட்சியாளர்களை போலவே உத்தம்சிங் தனது நடவடிக்கைகளால் மக்கள் மனதில் நிறைந்து இருப்பவர். அவரின் முற்போக்கு புரட்சிகர சிந்தனையின் படி சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் இந்துத்துவ சக்திகள் உத்தம் சிங்கை தங்களுடைய முன்னோடியாக சித்தரிக்கின்றனர்.
தற்போது பல்வேறு சமூகங்களின் அடையாளமாக உத்தம்சிங் திகழ்கிறார். அவர் தலித் சமூகத்தின், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மிகச்சிறந்த வெற்றியாளராக சமீபகாலமாக புகழப்படுகிறார். லண்டனில் புலம்பெயர்ந்துள்ள சீக்கியர்களின் பாரம்பரியத்தில் தவிர்க்கமுடியாத அங்கமாக அவர் திகழ்கிறார்.
கெதர் கட்சி மற்றும் லண்டனை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்திய தொழிலாளர் கழகம் ஆகிய இரு அமைப்புகளை வளர்ப்பதிலும் ஈடுபட்டு முன்னணியாக செயல்பட்டவர் ஆவார். அவருடைய நடவடிக்கைகளை வெறும் ஹீரோத்தனமான நடவடிக்கையாக மட்டுமே பார்க்காமல், சித்தாந்த ரீதியாக அரசியல் வாழ்விலிருந்து அவருடைய நடவடிக்கைகளை நாம் காணத் தொடங்குவோம் .
1899-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பஞ்சாபில் சங்ரூரரில் மிகவும் ஏழ்மையான ஒரு தலித் குடும்பத்தில் உத்தம்சிங் பிறந்தார். அவரின் இயற்பெயர் ஷேர் சிங். அவரது தாயாரான ஹன்ரம் கவுர் மிக இளம் வயதிலேயே இறந்ததை அடுத்து தந்தையான தேகல் சிங் அமிர்தசரசுக்கு புலம் பெயர முடிவு செய்கிறார். அவரின் புலம்பெயர்தலுக்கான அடிப்படையான நோக்கமே குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் .
அமிர்தசரஸ் சென்று அடைவதற்கு முன்னரே தேகல்சிங் மரணமடைகிறார். உத்தம் சிங்கும் அவரது சகோதரரும் புட்லிகரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அடுத்த சோகமாக அவரது சகோதரரும் விரைவில் இறந்து போகிறார். இப்படிப்பட்ட தொடர் பேரிழப்புகளுக்கிடையே தனது வாழ்வைத் தொடங்கினார் உத்தம் சிங்.
1940 மார்ச் 13ல், கேஸ்டன் வளாகத்தில் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற பிறகு கைது செய்யப்படுகிறார்.
முதலாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் தொழிலாளியாக (manual laborer) வேலைக்கு செல்கிறார். முதலாம் உலகப் போரின் நிறைவுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தடைகிறார். அதற்குப் பின்னரே அவரின் புரட்சிகர வாழ்வு தொடங்குகிறது.
அவருடைய செயல்பாடுகள் நான்கு கண்டங்களில் 20 நாடுகளில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் பரவியிருக்கின்றன. உடே சிங், ப்ரன்க் பிரெசில் ஆகிய பெயர்களில் செயல்பட்டிருக்கிறார்.
இறுதியாக தமக்கு முகமது சிங் ஆசாத் என்று பெயரிட்டு கொண்டார். மதவாத மற்றும் காலனிய எதிர்ப்பினை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயரை இட்டுக்கொண்டார் .
அவர் புலம்பெயர் தொழிலாளியாக இருந்ததைத் தவிர 1937-ல் வெளியான Elephant என்ற திரைப்படத்திலும் the four feathers என்ற திரைப்படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.
புரட்சிகர வாழ்க்கை தொடங்குகிறது
முதலாம் உலகப்போரில் பணியாற்றிவிட்டு 1919-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய உத்தம்சிங் தன் வாழ்நாள் இறுதி வரை கெதார் கட்சியுடனும் தொழிலாளி வர்க்க அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்தார்.
முதலாம் உலகப் போரில் இராணுவத்தில் இணைந்து வேலை செய்த அனைவருக்கும் நிலமும் பணமுடிப்பும் தருவதாக உறுதி அளித்த அரசு அதை நிறைவேற்றவில்லை .பிரிட்டிஷ் அரசு தனக்கு துரோகம் செய்ததை உணர்ந்திருந்தார் சிங். அவர் இரண்டு ஆண்டுகள் கடுமையாக வேலை செய்த போதும் அவரிடம் வெறும் 200 ரூபாய் மட்டுமே கையில் இருந்தது.
ஏற்கனவே பிரிட்டிஷ் அரசு தனக்கு செய்த துரோகத்தால் மனம் வெதும்பிக் கொண்டிருந்த உத்தம்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு மனம் குமுறினார். இந்த உணர்வே அவரை புரட்சியாளர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அக்காலகட்டத்தில் கெதர் கட்சியினர் புரட்சிகர இலக்கியங்களை பஞ்சாபியில் விநியோகித்து வந்தனர். அந்த இலக்கியங்கள் மூலமாகவே கெதார் கட்சிக்கு அவர் அறிமுகமானார்.
பின்னாளில் புரட்சிகர இலக்கியங்களை பஞ்சாப் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் சைபுதீன்கிட்ச்லே, மாஸ்டர் மோடாசிங் ஆகியோரை உகாண்டாவில் ரயில் இருப்புப் பாதை போடும் பணிக்கு செல்வதற்கு முன்பு சந்திக்கிறார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அனுபவமிக்க கெதார் தோழர்களை சந்தித்ததன் மூலம் மேலும் உறுதி அடைகிறார். 1921-ல் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்து அமிர்தசரசில் ஒரு கடையை நடத்துகிறார். பெயரளவுக்கு அது ஒரு கடையாக இருந்தாலும் பிற்காலத்தில் பஞ்சாபின் புரட்சிகர நடவடிக்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு மையமாக மாறுகிறது. அதே காலகட்டத்தில் பப்பர காளி என்ற போராளி அமைப்போடும் தொடர்பில் இருந்தார்.
அமெரிக்காவில் உத்தம்சிங் வேலை செய்த காலத்தில் தான் இயக்கத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படுகிறது. 1924-ம் ஆண்டு மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார். இறுதியில் சான்ஸ் பிரான்சிஸ்கோவில் வேலை செய்தார். அப்போது அவர் அமெரிக்காவில் செயல்படும் கெதார் கட்சியின் உறுப்பினராக இருந்தார். புரட்சிகர இலக்கியங்களோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கெதார் கட்சிக்கு நபர்களையும் நிதியையும் திரட்டுவதிலும் முன்னணியாக இருந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை காலகட்டத்தின் போது கெதார் கட்சிக்கு நிதி உதவி அளிக்க தொடங்கிய உத்தம் சிங், பின்நாட்களில் அமெரிக்காவின் பல நகரங்களில் கட்சியின் கிளைகளையும் நிதி ஆதாரங்களையும் உருவாக்கினார் என்று நவ்ஜோத் சிங் என்ற ஆய்வாளர் தெரிவிக்கிறார் .
டெட்ராய்ட், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூயார்க் போன்ற நகரங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். கெதார் கட்சியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த போதும் அவர் ஆசாத் கட்சி என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். அது கெதார் கட்சியின் கிளை அமைப்பாகவே செயல்பட்டது .
ஆசாத் கட்சியின் நோக்கங்களாக, இந்திய விடுதலைக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல் மற்றும் இந்தியப் புரட்சிக்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்துதல் ஆகியவையாகும்.
கார்பென்டர் ஆகவும் அமெரிக்க கப்பலில் மாலுமியாகவும் வேலை செய்தபோது ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பயணம் செய்தார். இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஈரான், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கெதார் கட்சிக் கிளைகளை நிறுவினார். 1927-ம் ஆண்டு அவர் இந்தியா திரும்புகையில் உலக அளவில் கெதர் கட்சி புரட்சியாளர்களின் வலைப்பின்னலை ஏற்படுத்தி இருந்த அதேசமயம் கம்யூனிச அகிலத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆயுதங்களுடன் அவர் இந்தியா வந்தடைந்தார். 1927-ம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ம் தேதி ஆயுத சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து இரண்டு ரிவால்வர், ஒரு பிஸ்டல், வெடிமருந்து மற்றும் தடை செய்யப்பட்ட புத்தகங்களான poison of slavery, lives of martyres ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு தண்டனை கிடைத்தது. வழக்கு விசாரணையில் “பிரிட்டிஷாரிடம் இருந்து இந்த நாட்டை போல்ஷ்விக்மயத்தின் மூலமே விடுதலை செய்ய முடியும். அதற்காகவே நான் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தேன்.” என்று தெரிவித்தார் உத்தம் சிங்.
சிறையிலும் சக கைதிகளிடம் தொடர்ந்து புரட்சிகர சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் முன்னிறுத்தி செயல்பட்டதால் பிரிட்டிஷ் அரசு அவருக்கு கசையடிகளை பரிசளித்தது. இவரை கையாள்வதே சிறை நிர்வாகத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையானதால் அடிக்கடி சிறையை மாற்றினர். அப்படி ஒரு சிறை மாற்றத்தின் போதுதான் பகத்சிங்கை அவர் சந்தித்தார்.
ஜேபி சாண்டர்ஸ் கொலை வழக்கு மற்றும் மத்திய சட்டசபையில் குண்டுவீசி வழக்கிற்காக HSRA-ன் பகத்சிங் மற்றும் மற்ற புரட்சியாளர்களும்
மியான்வலி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். பகத்சிங் மற்றும் மற்ற புரட்சியாளர்களுடன் விரைவில் ஐக்கியமானதுடன் பகத்சிங்கின் ஆளுமையில் அதிகம் கவரப்பட்டார். அதனால்தான் பகத்சிங்கை தன்னுடைய குரு மற்றும் நண்பன் என்று அழைத்தார். அதனால் பகத்சிங் போட்டோவை எப்பொழுதும் தனது மணிபர்சில் வைத்திருந்திருக்கிறார்.
“என்னுடைய நண்பனை பிரிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய இறப்பிற்குப் பிறகு அவரை நான் கட்டாயமாக சந்திப்பேன், அவர் எனக்காக காத்திருப்பார். 23-ம் தேதி அவர் தூக்கிலடப்பட்ட அதே தேதியில் என்னை இவர்கள் தூக்கி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று 1940-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியன்று எழுதிய கடிதத்தில் பகத்சிங்கின் தாக்கம் தன்னுள் ஏற்பட்டது குறித்து  மேற்கண்டவாறு எழுதுகிறார், உத்தம்சிங்
HSRA புரட்சியாளர்களின் சிந்தனையைப் பின்பற்றிய அதே சமயம் அவர்களைப் போலவே 44 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் பகத்சிங்கை சந்தித்த பின்னர் நாத்திகத்தை முழுமையாக ஏற்றதுடன் சீக்கியர்களின் நம்பிக்கையான முக்கிய அடையாளமான முடியையும் தாடியையும் அகற்றிருக்கிறார்.
1931 சிறையிலிருந்து விடுதலையான பின்னர் இரு ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு சென்றார். 7 ஆண்டுகள் அவர் அங்கேயே தங்கி இருந்த போதுதான் இத்தாலி, போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார். ஜெர்மனி சென்று அங்கிருந்து சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஜெர்மனி மற்றும் மாஸ்கோ துறைமுகங்களில் வேலை செய்யக்கூடிய முற்போக்காளர்கள் மத்தியில் இந்திய விடுதலைக்கான ஆதரவைப் பெற்றார்.
அவர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமல்ல சிறந்த அமைப்பாளராகவும் சிறந்த அளவில் சித்தாந்த மற்றும் செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபராகவும் இருந்தார்.
கெதார் கட்சியானது 1913-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய வன்முறையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. அதனால் பல முறை இந்தியாவில் ஆயுதம் தாங்கிய எழுச்சியை மேற்கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது.
1917-ம் ஆண்டு சோவியத் புரட்சிக்குப் பிறகு சோசலிசத்தின் பக்கம் அக்கட்சிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால் அதற்கான செயல் திட்டத்தை அடித்தட்டு வர்க்கத்தின் மத்தியில்தான் வேலை செய்ய வேண்டியதையும் உணர்ந்தது. அதற்குப் பிறகு சோசலிச கோட்பாடுகளையும் புரட்சிகர பயிற்சிகளையும் மேற்கொள்வதற்காக பல தோழர்களை சோசலிச ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.
கெதார் கட்சியானது சர்வதேச கம்யூனிசத்தின் மீது ஈர்ப்பை கொண்டிருந்தது. அதனால்தான் உழைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு பலரைச் சோவியத் யூனியனுக்கு அனுப்பியது. உத்தம் சிங் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச கம்யூனிச ஆதரவு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய கொள்கையோ கெதார் கட்சி, கம்யூனிச அகிலம், HSRA ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
அவர் தன் வாழ்நாள் முழுவதும் புரட்சியாளராக மட்டுமல்ல; புலம்பெயர் தொழிலாளியாகவும் வாழ்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ்தான் நான்கு கண்டங்களுக்கு பயணம்செய்து புரட்சிகர வேலையை மேற்கொண்டிருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த உத்தம்சிங் எவ்வித சமூக, குடும்ப, பொருளாதார ஆதரவும் இல்லாதவர். அதனாலேயே அவர் அந்த இல்லத்தில் இருந்து சிறுவயதிலேயே வெளியேறினார்.
படிக்க :
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?
பிரிட்டிஷ் இந்திய இராணுவம், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா என பல இடங்களில் அவர் வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் அவர் ஹட்சன் மோட்டார்ஸ் கேரேஜ், ஹார்பர் போர்ட் பில்டிங் கம்பெனி, ஃபோர்டு அசம்பெளி லைன், டக்லஸ் ஏர்கிராப்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
பல்வேறு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் வேலை செய்த உத்தம்சிங், 1934-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில்தான் லண்டனுக்கு வருகிறார்.
வியாபாரியாக, கார்பன்டரராக, எலக்ட்ரீசியனாக என பல தரப்பு வேலைகளை மேற்கொண்டு செயல்பட்டிருக்கிறார். சூரத் அலியால் லண்டனில் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஒர்க்கர்ஸ் அசோசியேசனில் இணைகிறார். அந்த அமைப்பானது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தொழிற்சங்கத்தின் இணைப்புச் சங்கமாகும்.
IWA ஆனது பிரிட்டனில் உள்ள புலம்பெயர் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய விடுதலைக்கான பரப்புரையை மேற்கொள்வது ஆகியவை நோக்கங்களாகும்.
IWAல் இணைவதற்கு முன்பே உத்தம்சிங் பிரிட்டன் தொழிலாளர் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எலக்ட்ரீசியன் தொழிற்சங்க யூனியனின் பிரதிநிதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளூர் டிரேடு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இருபது ஆண்டுகள், நான்கு கண்டங்களில் பயணம் செய்திருந்தாலும் அவர் ஒருபோதும் நிரந்தரமான வேலையை தேடிக் கொள்ளவில்லை. பலமடங்கு ஆபத்தான புலம்பெயர்ந்த வேலை மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளையே அவர் பெரிதும் விரும்பினார்.
உழைக்கும் வர்க்கத்துக்கான அரசியல் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சர்வதேசம் ஆகியவற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது என்பது, புலம்பெயர் தொழிலாளியாக தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் மூலமாகவும் தான் நடைபெறுகிறது. தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் மூலம் சர்வதேச உழைக்கும் வர்க்க இயக்கமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
நாம் ஏற்கெனவே கூறியது போல உத்தம் சிங், லண்டன் வந்ததன் நோக்கமே ஜாலியன் வாலாபாக் குற்றவாளியை கொல்வதற்காகத்தான் என்ற கூற்றின் மீது நவ்ஜீட் சிங் என்ற ஆய்வாளர் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.
1. ஜெனரல் டயர் மீதான பழிவாங்கும் வெறி மட்டுமே அவருக்கு இருப்பின் ஏன் அவர் லார்டு ஜெட் லேண்ட், லமிங்டன், லூயிஸ்டேன் ஆகியோரை சுட்டுக்கொன்றார் ?
2. காக்ஸ்டன் ஹாலில் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய 1940 மற்றும் 1939 ஆம் ஆண்டு டைரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் லார்டு ஜெட் லேண்ட், லமிங்டன் ஆகியோர் முகவரிகள் இருந்தன, அது ஏன் ?
3. 1933-ம் ஆண்டிலேயே இங்கிலாந்துக்கு வந்த உத்தம்சிங் ஏன் ஓ டயரை கொல்ல அவ்வளவு நீண்ட நாள் காலம் எடுத்துக் கொண்டார் ?
4. 1927-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அப்பொழுது வெடிகுண்டுகள் மற்றும் ரிவால்வர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்போது ஜெனரல் டயரை கொல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாரா?
ஜெனரல் டயரை தவிர அந்த காக்ஸ்டன் ஹாலில் முன்னாள் பெங்கால் கவர்னர், பஞ்சாபின் முன்னாள் துணை நிலை ஆளுநர், மும்பையின் முன்னாள் ஆளுநர் ஆகியோரும் இருந்தனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருந்ததாக அவருடைய வாக்குமூலம் தெரிவிக்கிறது.
படிக்க :
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
மேலும் வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லாமல் இந்த நடவடிக்கையானது, சோசலிசத்தால் ஈர்க்கப்பட்டு காலனித்துவ எதிர்ப்பு என்ற புரட்சிகர அரசியலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்பதையும் அவரது வாக்குமூலம் தெரிவிக்கிறது.
“நாங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். சாம்ராஜ்ஜியத்தின் எந்திரத் துப்பாக்கிகள் எங்களது இந்திய மாணவர்கள் மீது எவ்வித தயக்கமுமின்றி பிரயோகம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலுள்ள என்னுடைய நண்பர்களை காட்டிலும் இங்கிலாந்தில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். நான் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்.” இது உத்தம்சிங் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியாகும்.
உத்தம்சிங், தன்னுடைய நண்பர் பகத்சிங்கை போலவே தன்னுடைய வாதங்களை முன்வைத்து பிறகு புரட்சிக்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி இருக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 30, 1940-ம் ஆண்டு உத்தம்சிங் தூக்கிலிடப்பட்டார்.
பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மோசமான படுகொலைக்கு அவர் பழி வாங்கினார். ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் கலந்த மண்ணை எடுத்து அவர் உறுதி பூண்டதாக பலர் தெரிவிக்கிறார்கள்.
ஒரு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டார் என்று மட்டும் சுருக்காமல் ,
நீண்டகாலமாக புரட்சிகர அரசியல், கெதார்கட்சி சர்வதேச அகிலம் ஆகியவற்றோடு கொண்டிருந்த தொடர்பு, சோசலிசத்தின் மூலமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும் என்ற காலனித்துவ எதிர்ப்புணர்வு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே அவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் காண வேண்டும். அதற்காகவே அவரை நாம் கண்டிப்பாக நினைவு கூர்தல் வேண்டும்.
கட்டுரையாளர்கள் : ப்ரபல் சரண்,  ஹர்ஷ்வர்தன்
தமிழாக்கம் : மருது  , மக்கள் அதிகாரம்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க