பார்ப்பன பாசிச கும்பல் ஒற்றுமையின் சின்னமான
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிப்பதை அனுமதிப்பதா?

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை போராளிகளின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் இல்லாமல் கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இப்படி தியாகிகளின் நினைவிடத்தை ஒழித்துக் கட்ட பாசிச அரசு துணிந்து முயற்சிப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்தப் பாசிசக் கும்பலின் பின்னணியை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இந்த நடவடிக்கையில் ஓர் உள்நோக்கம் உள்ளதைக் காண முடியும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்கியங்கள், இதழ்கள் எங்குமே இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பற்றி ஒரு வரி கூடக் கிடையாது. 1700-களின் இறுதியிலும், 1800களின் துவக்கத்திலும் நடந்த தென்னக தீபகற்ப விடுதலை போராட்டத்திற்குப் பின் 1857-ல் நடந்த நாடு தழுவிய விடுதலைப் போராட்டத்தில் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்று போராடினர். இந்த விடுதலைப் போருக்குப் பின் அப்படி மக்கள் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றுபட்டு நின்று போராடியது ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில்தான்!

1919, ஏப்ரல் 13-ஆம் தேதியன்று ஆள்தூக்கி கருப்புச் சட்டமான ரவுலட் சட்டத்திற்கு எதிராக போராடிய தமது தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் தமது குடும்பத்துடன் கூடினார்கள்! அமைதியான வழியில் கூடிய மக்களின் மீது மிருகத்தனமான ஒரு நரவேட்டை நடத்தப்பட்டு, ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின் காட்டுமிராண்டித்தனமான இந்தப் படுகொலைகளுக்கு எதிராக, அன்றைக்கு உலகமே கடும் கண்டனம் தெரிவித்தது. வேறுவழியின்றி ஆங்கிலேய அரசு, ‘ஹண்டர்’ என்ற ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்தது.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

படுகொலையான மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு ம்மேலே என்றாலும், அரசு இந்த எண்ணிக்கையை ஏற்க மறுத்து, விசாரணை கமிசன் மூலமாக 381 பேர்தான் இறந்தார்கள் என பொய்க்கணக்கு காட்டியது. அதேநேரம் இறந்தவர்கள் பற்றிய முழு விவரங்களையும் இந்த கமிசன் பட்டியலிட்டது. அடையாளம் காணப்பட்டவர்கள் 376 பேர்கள்தான். இந்த 376 பேரில் 220 பேர் இந்துக்கள், 90 பேர் சீக்கியர்கள், 66 பேர் இசுலாமியர்கள். இதுபோதாதா சங்கி கும்பலின் வெறுப்பிற்கு? இந்த பட்டியலில் இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது. இறந்தவர்களில் வணிகர், வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, அரசு ஊழியர், அறிவுத் துறையினர் என பல்வேறு பிரிவினர் இருந்தனர்.

இரும்பு வேலை செய்பவர், துணி துவைப்பவர், நெசவாளர், முடி திருத்துபவர், தினக் கூலிகள், கம்பளம் பின்னுபவர், கொத்தனார், செருப்புத் தைப்பவர், துப்பரவுப் பணியாளர் என எல்லா வர்க்கத்தினரும் உண்டு. பெண்களும் குழந்தைகளும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடக்கம்.

எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் வேறுபாடு பார்க்காமல் இந்த போராட்டத்தில் பங்கேற்றதை கமிசனின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சங்கி கும்பலால் தேசத் துரோகிகள் என தூற்றப்படும் 14 காஷ்மீர் இசுலாமியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வீரமரணம் அடைந்துள்ளனர் என கமிசன் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பன பாசித்திற்கு எதிரானதாக உள்ள சாதி – மதம் கடந்த மக்களின் இந்த ஒற்றுமையை இவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? மென்மையான இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் காங்கிரசும் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை கீழ்வரும் விவரங்கள் அம்பலப்படுத்துகிறது.

இந்த படுகொலையின்போது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு தியாகிகள் பென்சனும், அரசின் சில சலுகைகளும் வேண்டும் என இன்னும் போராடிக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்களின் இந்தக் கோரிக்கையை ‘சுதந்திர’ அரசோ, இன்றைய ஆட்சியாளர்களோ இன்று வரையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. நாட்டின் விடுதலைக்குப் போராடிய குடும்பத்தினரின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை தியாகிகளின் குழு’ என்ற அமைப்பு பிரிட்டன் பிரதமருக்கு, ‘இங்கிலாந்து தங்களின் இழப்பிற்கு நட்டஈடு தர வேண்டும்’ என கடிதம் எழுதியது! என்னவொரு ’சுதந்திரம்’! இந்திய ஆட்சியாளர்களை விட கொலைகாரன் கருணையுள்ளவனாகத் தெரிவதனால்தான் இந்த கோரிக்கை என்றால் இதைவிட கொடூரமும் பேரவலமும் வேறு என்ன இருக்க முடியும்?

இந்தக் கொடூரப் படுகொலைக்கான சூத்திரதாரி அன்றைக்கு பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ’ டயர் என்பவன்தான். இந்த டயரை கொல்லாமல் விடமாட்டேன் என ஒருவர் சபதமெடுத்தார். அவர் உத்தம் சிங் என்ற இளைஞர். ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து அனாதையான இவர் இதற்காக 21 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்தார். ஏனெனில், இந்தக் கொடூரக் கொலைகளைக் கண்ணெதிரே கண்டு கடும் கோபம் கொண்டுதான் சபதமெடுத்தார். தனது சபதம் முடிக்க அவர் பட்ட துயரங்கள் தனிக்கதை.

பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து சென்று, 1940, மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் ஓ’ டயரை சுட்டுக் கொன்றார். அவரைக் கைது செய்து நீதிமன்றம் கொண்டு சென்றபோது, தனது பெயரை முகமது சிங் ஆசாத் என்று கூறினார். இந்து, இசுலாமியர், சீக்கியரின் ஒற்றுமையே பிரிட்டிஷ் அரசைத் தூக்கி எறியும் என்பது அவரது உறுதியான முடிவு.

உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்

மரண தண்டனைக்குப் பின் நீதிமன்றத்தில் அவர் கூறியது: “மரண தண்டனை பற்றி எனக்குக் கவலையில்லை. நாட்டின் விடுதலைக்குப் போராடுகிறேன். மகிழ்ச்சியுடன் சாவை எதிர் கொள்வேன். நான் இறந்தால் ஆயிரமாயிரம் இளைஞர்கள் எனது இடத்தில் நின்று போராடுவார்கள்! ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடித்து நொறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும். ஆங்கிலேய மக்கள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை! இங்கிலாந்து தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. நான் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானவன். பிரிட்டன் ஏகாதிபத்தியம் ஒழிக!”.

உத்தம்சிங்கின் இந்தக் குரல் ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாசனாக வேலைபார்க்கும் மோடி அரசுக்கு அச்சுறுத்தியதாலோ என்னவோ உத்தம் சிங்கின் சிலையையும்  மாற்றியுள்ளது மோடி கும்பல். அவரது கைகளில் துப்பாக்கி ஏந்தியிருப்பது போல இருந்த சிலையை துப்பாக்கியில்லாமல் மாற்றியமைத்திருக்கிறது பாசிச கும்பல்.

குறிப்பாக உத்தம் சிங் வர்க்க அரசியல் பேசும் கெதார் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மோடி அரசு அவரைக் கண்டு அஞ்சுவதற்கு முக்கியக் காரணம்.

படிக்க :

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் இந்த பார்ப்பன பாசிச கும்பலுக்கு ஆத்திரமூட்டுகிறது. அதனால்தான் போலீசை ஏவி விவசாயிகளின் மண்டையைப் பிளக்கிறது. பேச்சு வார்த்தைகளுக்கு வர மறுக்கிறது!

இத்தகைய வரலாற்று நினைவிடங்கள் மற்றும் தியாகிகளை வரலாற்றில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காகவே இத்தகைய மாற்றங்களைச் செய்து வருகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றைத் திரிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதனை நாம் உடனடியாக முறியடித்தாக வேண்டும் !


நாகராசு

1 மறுமொழி

  1. சங்கிகளின் டவுசரை உருவும் வரலாற்று உண்மைகள்.இன்னும் நிறைய தோண்டி காட்சிப்படுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க