சுதந்திரப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்ததையும், வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்ததையும் தாண்டி ஒன்றும் செய்திடாத சங்க பரிவாரக் கும்பலின் கையில் தியாகத்தின் சின்னத்தைக் கொடுத்தால் அதன் கதி என்னவாகும் ? குரங்கு கையில் கிடைத்த பூமாலையின் கதிதான் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தை புணரமைப்பதாகக் கூறி விடுதலைப் போரின் அந்த தியாகச் சின்னத்தை கேளிக்கை மைதானமாக மாற்றியுள்ளது.
ஜாலியன் வாலபாக்கில் நடந்த மூர்க்கத்தனமான படுகொலைகள் தான் நமக்கு பகத்சிங்கைத் தந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான அடையாளமாக அது பராமரிக்கப்பட்டு வந்தது. இத்தகைய நினைவிடங்கள், அந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவில் ஏற்றிக் கொள்ளவும், அங்கு நிகழ்ந்த கொடூரத்தை உணரவும், தியாகிகளை நினைவுகூரவும் தான் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்த வரலாறும் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் அந்த நினைவிடத்தின் தியாக உணர்வை அழித்து அதை கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்தது பற்றிதான் இக்கட்டுரை பேசுகிறது.
அமிர்தசரஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடமானது, இரண்டு ஆண்டுகள் மறுசீரமைப்பு நடந்த பிறகு, நாட்டுப்பற்றைத் தூண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த திட்டம் அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பாக, தியாகிகளின் குடும்பங்களிலிருந்தும் அதிருப்தியை பெற்றிருக்கிறது. தங்கள் முன்னோர்களின் தியாகத்தை, கண்ணைக் கூசச் செய்யும் பகட்டான விளக்குகள் மற்றும் சுவரோவியங்கள் மூலமாக அழிக்கும் முயற்சி இது என்ற குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
படிக்க :
ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
கொடூரமான வன்முறையினால் தங்களது இன்னுயிரை இழந்தவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்திற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த நினைவிடத்தை ஒரு பொழுதுபோக்கு இடம்போல மாற்றிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை மே 1, 1951 அன்று அமைக்கப்பட்டது. 1961, ஏப்ரல் 13-ம் தேதியன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதை தொடங்கி வைத்தார். அப்போதிருந்து, ஜாலியன் வாலாபாக்கில் பல பழுதுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த அரசுகள் சரி செய்து வந்தன. ஆனால், அதன் சாரம் ஒருபோதும் சிதைக்கப்படவில்லை. 2019-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, மத்திய அரசு ரூ.20 கோடி மதிப்பீட்டில் இதை மறுசீரமைப்பு செய்யப்போவதாக அறிவித்தது.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின் அது வைரலாகி, குறிப்பாக அதன் மாற்றப்பட்ட நுழைவு வாயில், வெளியேறும் வழி,  தாமரைகுளம் மற்றும் தியாகிகளின் நினைவாக 28 நிமிட ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி ஆகியவை குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், உள்ளூர்வாசிகள், புலம்பெயர்ந்த பஞ்சாபியர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் என அனைவரும் ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்தை கேளிக்கைக் கூடமாக மாற்றியதன் மீது தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.
தியாகிகளின் நினைவாக அதன் உண்மையான சாராம்சத்திற்கு ஏற்ப ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் மீட்டெடுக்கப்படாத வரை எதிர்காலத்தில் “தேசிய மற்றும் மாநில அளவில்” நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கப்போவதாக தியாகிகளின் சந்ததியினர் அறிவித்துள்ளனர்.
புனரமைப்புத் திட்டத்தில் தியாகிகளின் குடும்பத்தினரை ஈடுபடுத்தாததற்காகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வழங்கும் தாமிரப் பட்டயம், சான்றிதழ்கள் மற்றும் பிற வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை புறக்கணித்ததற்காகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஜாலியன் வாலாபாக் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறக்கட்டளையின் தலைவரும், ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்த லாலா வசூ மாலின் கொள்ளுப் பேரனுமான சுனில் கபூர், மத்திய அரசு இந்த நினைவிடத்தில் செய்துள்ள மாற்றங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக தி வயர் நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ஜாலியன் வாலாபாக் நுழைவாயில் இப்போது ஒரு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கிறது. காடி விளக்குகள் மற்றும் அதன் சூழல் ஒரு வணிக வளாகத்தை (Shopping Mall) உங்களுக்கு நினைவூட்டுகிறது. இப்போது இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாரம்பரியத்தை சித்தரிக்கவில்லை. புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான விழாக்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை நிகழ்வுகளில் தியாகிகளின் குடும்பத்தினரை ஒருபோதும் சேர்க்கவில்லை என்றும், அப்படி சேர்த்திருந்தால் இந்த மாற்றங்களுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்றும் கபூர் கூறினார். புனரமைப்பில் உள்ள மூன்று முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், “ஜாலியன் வாலாபாக் செல்லும் சந்து சுவர்கள் புடைப்புச் சிற்பங்களுடன் முற்றிலும் மாற்றப்பட்டதும், நீண்ட நுழைவாயிலின் திறந்த நிலையிலான மேல்புறம் இரும்பு கிரில்களால் மூடப்பட்டுள்ளதும் விடுதலை வேட்கைக்கான உத்வேக உணர்வூட்டுவதை தடைப்படுத்துகிறது. அது ஜெனரல் டயரின் வீரர்கள் எவ்வாறு மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் என்ற கொடூரத்திற்கான ஒரு சான்றாகும். அந்த உணர்வை இப்போது அழித்துவிட்டனர்.
இரண்டாவதாக, அவர்கள் ‘ஷஹீதி கூ’ (தியாகியின் கிணறு) மூலத்தை சிதைத்து அதை கண்ணாடியால் மூடினர். மூன்றாவதாக தியாகிகளின் புகைப்படங்களையும் அவர்கள் அகற்றிவிட்டனர். இது மிகவும் அவமானகரமானது. விடுதலைக்கான போராட்டங்களில், பஞ்சாபிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. இந்த அரசாங்கம் அந்த வரலாற்றை என்றென்றும் துடைத்தெறிய விரும்புகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தனது முப்பாட்டனார் லாலா வாசூ மால் வீரமரணம் அடைந்தபிறகு, அவர்களின் குடும்பத்தில் எந்த மணமகளும் பாரம்பரிய சிவப்பு வளையல்களை அணிந்ததில்லை, இது பயங்கரவாதத்தை நினைவு கொள்ளும் வகையிலான ஒரு அடையாளம் என்று சுனில் கபூர் குறிப்பிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றிய அப்படுகொலையுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்ததைக் குறிக்கும் குடும்ப வழக்கம் இன்னும் அப்படியே உள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருகே உள்ள கடைக்காரர்கள் குழுவும் கட்டுமான தளம் பொதுமக்களுக்காக மூடப்பட்டதால், அவர்களும் இந்த மாற்றங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறினர். “மாற்றப்பட்ட சந்து கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இது ஒரு ஹோட்டல் நுழைவாயில் அல்லது ஒரு கேளிக்கை பூங்கா போல் தெரிகிறது” என்று ஒரு கடைக்காரர் கூறினார். “ஒரு சோகமான மற்றும் கடந்த காலத்தின் அந்த வரலாற்று உணர்வைக் காண முடியவில்லை. இது பெரும் தவறு” என்றார் மற்றொருவர்.
மத்திய அரசின் ‘முயற்சியை’ பாராட்டும், ஜாலியன் வாலாபாக் ஷாஹீத் பரிவார் சமிதியின் தலைவர் மனிஷ் பெஹல்கூட, “ சந்து மாற்றப்பட்டிருக்கக் கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.
“இந்த நிகழ்ச்சியில் அரசாங்கம் எங்களை கௌரவித்தது, எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், குறுகிய பாதை அதன் அசல் தன்மையை இழந்துவிட்டதாக நான் கூட உணர்கிறேன். முன்னதாக, ஜாலியன் வாலாபாக் ‘நானக் ஷாஹி’ செங்கற்களை (சிறிய, மெல்லிய செங்கற்கள்) கொண்டிருந்தது; ஆனால் அவையும் அகற்றப்பட்டுள்ளன. தியாகியின் கிணறு இன்னும் ஒரே மாதிரியாக உள்ளது; ஆனால் சந்து மாற்றம் பொதுமக்களுக்குப் பிடிக்காத ஒன்று” என்று 75 வயதான அவர் கூறினார்.
மனிஷ் பெஹலின் தாத்தா லாலா ஹரி ராம் பெஹலும் இந்த படுகொலையில் வீரமரணம் அடைந்தார். அப்போதிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது குடும்பம் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட ஜாலியன் வாலாபாக் இப்படி சீரமைக்கப்பட்டதை விமர்சித்து ட்வீட் செய்தார், “சுதந்திரத்திற்காக போராடாதவர்கள், போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆச்சரியம் என்னவென்றால், முற்றிலும் மாறாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் “எனக்கு இது மிகவும் நன்றாக இருக்கிறது”. என்றூ குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, ஆகஸ்ட் 14 அன்று, கேப்டன் அமரீந்தர் சிங்கும் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவுப் பூங்காவை திறந்து வைத்த விழாவில் பங்கேற்றார்.
பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளித்த அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் அஜ்லா, “பா.ஜ.க தலைவர் ஷ்வெயிட் மாலிக் இந்த திட்டத்தின் அறங்காவலராக இருந்தார், மேலும் அவர்தான் மத்திய அரசுடன் தொடர்புகளை பராமரிப்பதுடன், முழு வளர்ச்சியையும் கண்காணித்தார். நாங்கள் ஒருபோதும் அறக்கட்டளையில் பணிகளில் ஈடுபடவில்லை. திறப்பு விழா நாளன்றுதான் நாங்கள் அழைக்கப்பட்டோம். உண்மை என்னவென்றால், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் பாஜக-வுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அதனால்தான் அவர்கள் அதை அழிக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், சீரமைப்பின்போது புனரமைப்புத் தளம் முழுவதும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது என்பதை சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், மாநிலங்களவை எம்.பி-யும் முன்னாள் பா.ஜ.க பஞ்சாப் தலைவருமான ஷ்வெயிட் மாலிக், ஜாலியன் வாலாபாக் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். அவரை தொடர்பு கொள்ள தி வயர் இணையதளம் பலமுறை முயற்சி செய்தபோதிலும் கருத்து தெரிவிக்க அவர் கிடைக்கவில்லை. அவரது அலைபேசி எண் அணைக்கப்பட்டது.
வரலாறு
பக்ரி சம்பல் ஜாட்டா முதல் ஜாலியன் வாலாபாக் வரை என்ற தனது புத்தகத்தில், அதன் ஆசிரியர் டாக்டர் பிரேம் சிங் 1919-ம் ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் பேரரசை உலுக்கிய மக்கள் போராட்டத்தின் அரங்காக பஞ்சாப் மாறியது என்று எழுதினார்.
ரௌலட் மசோதா நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, 1919, மார்ச் 18-ம் தேதியன்று வைஸ்ராய் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது ரௌலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது.
அன்று கவுன்சிலின் மூன்று இந்திய உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். அவர்கள் மதன் மோகன் மாளவியா, மசார்-உல்-ஹக் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் ஆவர்.
அரசாங்கம் “அராஜகவாத மற்றும் புரட்சிகர இயக்கங்களைக்” கையாளுவதற்கு  அதற்கு “அவசரகால அதிகாரங்கள்” வழங்கப்பட வேண்டும் என்று இந்த மசோதா தெளிவாகக் கூறியது.
இந்த மசோதாவின் அதிகாரப்பூர்வ விளக்கம், அரசாங்கக் கொள்கை மீதான விமர்சனத்தின் லேசான வெளிப்பாடு கூட தண்டனைக்குரியதாக ஆக்கப்படலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குமேல் குற்றப் புலனாய்வுத் துறையின் சாதாரண கான்ஸ்டபிள் கூட பொதுமக்களில் யார் ஒருவர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சாட்ட அதிகாரம் இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தை அணுக உரிமை இல்லை. அவரால் ஒரு பிளீடரை நியமிக்க முடியாது. மேல்முறையீடு செய்ய முடியாது. பத்திரிகைகளின் மீதான ஒடுக்குமுறை அவலநிலையும் இதேபோலத்தான் இருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய கடமை போலீசுத்துறைக்கு இல்லை.
படுகொலை
1919 பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய போது, பஞ்சாபில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பு வளர்ந்தது என்று டாக்டர் பிரேம் சிங் குறிப்பிடுகிறார்.
ஜாலியன்வாலா பாக் தியாகிகள் நினைவிடம் அஞ்சலி செலுத்தும் ஜாலியன்வாலா பாக் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள்.
கர்னல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் ஏப்ரல் 13-ம் தேதியன்று காலை ஜலந்தர் கன்டோன்மெண்டில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு இராணுவத்தின் ஒரு படைப்பிரிவுடன் புறப்பட்டார். சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அத்தோடு டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் கூடுவதற்கும் மக்கள் முடிவு செய்திருந்தனர். ரௌலட் மசோதாவுக்கு எதிராகப் போராடியதற்காக இந்த இரு தலைவர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏப்ரல் 13 மாலை வாக்கில், சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பாக் சுவர் வளாகத்தைச் சுற்றி கிடந்தனர். குறுகலான பாதைகளில் தப்பிக்க முயன்றவர்கள்தான் முதலில் சுடப்பட்டனர். அந்த இடத்திலேயே இருந்த கர்னல் டயர், அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்கள் இருந்த இடங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். சுவரில் ஏற முயன்றவர்களும் இதேபோல் சுடப்பட்டனர். பாக் அருகில் உள்ள தெருக்களில் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
படிக்க :
பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
படுகொலைக்குப் பின்னர், டயர் தான் 1,650 சுற்றுகள் சுட்டதாக ஹண்டர் கமிஷனின் முன் ஒப்புக்கொண்டார். கவச வாகனங்ளை பாக் உள்ளே எடுத்துச் செல்ல முடிந்தால், அவற்றை எடுத்துச் சென்று சுடுவதற்கு பயன்படுத்தியிருப்பேன் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். அவரது வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டதால் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். குற்றவாளிகளை தண்டிக்க விரும்புவதாக அவர் ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் அவரது உத்தரவுகளை மீறி அங்கு கூடியிருந்தனர். ஏப்ரல் 14-ம் தேதி, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இறுதி ஊர்வலம் எதுவும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஊர்வலம் நடத்த முடியவில்லை.

இதுதான் ஜாலியன் வாலாபாக்கின் கொடூர வரலாறு. ஆனால் அந்தக் கொடூரத்தின் சாட்சியாக விளங்கிய தளத்தை கேளிக்கை விடுதியைப் போல அலங்கோலப்படுத்தியிருக்கிறது, வெள்ளைக்காரனின் கைக்கூலியாகத் திரிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேர்தல் பிரிவான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.

இதனைக் கண்டித்து பல்வேறு வரலாற்றாசிரியர்களும் அரசியல் தலைவர்களும் தெரிவித்த கண்டன செய்திகள் :

  • ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லால் இந்த மறுசீரமைப்பை “வரலாற்றின் சிதைவு” என்றழைத்தார். “ஜாலியன் வாலாபாக்கிற்கு வருகை தரும் மக்கள் வலி மற்றும் வேதனையுடன் செல்ல வேண்டும். அவர்கள் (ஆட்சியாளர்கள்) இப்போது ஒரு அழகான தோட்டத்துடன், அதை ரசிக்கத்தக்க ஒரு இடமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அது ஒரு அழகான தோட்டமல்ல” என்று லால் மேலும் கூறினார்.
  • கிம் ஏ வாக்னர், லண்டனில் வாழும் வரலாற்றுப் பேராசிரியர்  ‘அமிர்தசரஸ் 1919 – அச்சத்தின் பேரரசு மற்றும் படுகொலையினை செய்வது’ என்ற நூலின் ஆசிரியருமாவார். அவர் புதுப்பித்துள்ளதைப் பார்த்ததும், (படுகொலை) “நிகழ்வின் கடைசி தடயங்கள் திறம்பட அழிக்கப்பட்டுவிட்டன” என்று ட்வீட் செய்தார்.
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் மற்றும் யெச்சூரி, இந்த நடவடிக்கையை “தியாகிகளுக்கு அவமதிப்பு” என்று விமர்சித்தனர்.
  • “இது நினைவுச் சின்னங்களை கார்ப்பரேட் மயமாக்குவது. (நினைவுகளை அழித்தொழிக்கும்) நவீன கட்டிடங்களாக கட்டி முடிப்பார்கள். பாரம்பரிய உணர்வுகளும் மதிப்பும் அழிக்கப்பட்டிருக்கும். தியாகிகளின் காலகட்டத்துடனும் அந்த தியாக உணர்வைப் பெறுவதும் என்பதுடன் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இவற்றைப் பார்த்து கடந்து செல்ல வேண்டும்” என வரலாற்றாய்வாளர் எஸ்.இர்ஃபான் ஹபீப் ட்வீட் செய்துள்ளார்.
வினவு செய்திப் பிரிவு
நாகராசு
செய்தி ஆதாரம் :
The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க