ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பிப்பதாகக் கூறி அதன் தியாகத்தின் அடையாளத்தை கேளிக்கை வடிவமாக மாற்றியமைத்தது ஒன்றிய அரசு. அது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வெளியான பின்னர் தான் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட தியாகி உத்தம்சிங்கின்  சிலையில் துப்பாக்கி வைக்கக் கூடாது என மோடி அரசு வாய்வழி உத்தரவு பிறப்பித்தது அம்பலமாகியிருக்கிறது.
1899-ல் பஞ்சாபில் சங்ரூர் மாவட்டத்தில் சுனாமில் பிறந்தார், உத்தம் சிங். 1919, ஏப்ரல் 13-ம் தேதியன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தபோது 19 வயது சிறுவனாக இருந்தார். படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இடையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இரவைக் கழித்தார். ரத்தம் தோய்ந்த மண்ணை கையிலெடுத்து ஜெனரல் டயரை கொல்ல வேண்டும் என்று சமதம் எடுத்துக் கொண்டார் உத்தம்சிங். 1934-ல் லண்டன் சென்று, ஜெனரல் டயரை கொலை செய்ய அங்கேயே தங்கியிருந்து, 1940-ம் ஆண்டில் ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றார் உத்தம்சிங்.
படிக்க :
ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தில் உத்தம்சிங்கின் சிலை நிறுவப்பட வேண்டும் என்று கம்போஜ் மகா சபை நீண்டகாலமாக கோரிக்கை வைத்து போராடிவந்தது. கடந்த 2018-ம் ஆண்டு, தாமாகவே உத்தம்சிங்கின் சிலையை தயாரித்து நிறுவ முடிவெடுத்தது. இதற்கு அனுமதியளித்த அரசு, உத்தம் சிங்கின் கைகளில் தூப்பாக்கி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றது.
அதனை ஏற்றுக் கொண்டு சிலையில் துப்பாக்கி இன்றி வெறும் மண்ணை அவர் ஏந்தி நிற்பது போன்ற சிலையை மோடி அரசின் நிர்பந்தத்தின் காரணமாக வடிவமைத்து வைத்துள்ளனர் கம்போஜ் மகா சபையினர்.
இதுகுறித்துப் பெரிதும் விவாதிக்கப்படாமல் இருந்தநிலையில், தற்போது ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரமைக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை எழுந்தநிலையில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரைக் கொல்ல சபதமேற்று பல ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக் கொன்றதை நினைவுகூரும் விதமாக உத்தம் சிங் கையில் துப்பாக்கி இருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டு அமிர்தசரஸ் இந்திய எல்லைப் பகுதியில் துப்பாக்கியுடன் நிறுவப்பட்டது. ஆனால், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் நிறுவப்பட்ட சிலையில், அவர் கைகளிலிருந்த துப்பாக்கி நீக்கப்பட்டு களிமண் வைக்கப்பட்டுள்ளது
இந்த சிலையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி, பல்வேறு மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்துள்ளது. மேலும், பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. ஜாலியன் வாலாபாக் தியாகிகளை, தியாகிகள் என்ற வரையறையிலிருந்து நீக்கி, வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
“நுழைவாயிலின் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஒரு திருவிழாவை நினைவூட்டுவது போல் இருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவத்தால் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துவது போல் இருந்த ஜாலியன் வாலாபாக் நினைவிடம், தற்போது அப்படி இல்லை” என்று தேஷ் பகத் யாத்கார் கமிட்டி குற்றம் சாட்டுகிறது.
இதேபோல், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், பிரிட்டிஷ் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைப்பதற்கான 200 பேர் குதித்து இறந்த கிணறு, தற்போது அந்த தியாகிகளை நினைவுப்படுத்து வகையில் இல்லை. அந்த கிணறு கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பகல் நேரத்தில் எதுவும் தெரியாது. மேலும், மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதை சித்தரிக்கும் சுவடுகள் அம்மைதானத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது.
நினைவுச் சின்னத்தின் வரலாற்று தோற்றத்தை சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சிகள் அவ்வப்போது சரிபார்க்கப்பட வேண்டும் என்று கமிட்டி கோருகிறது. “ஆனால், எங்கள் எல்லா முயற்சிகளையும் மீறி, மோடி அரசு ஜாலியன் வாலாபாகை அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றார்போல் சேதப்படுத்தியுள்ளது” என்று தேஷ் பகத் கமிட்டியின் கலாச்சார பிரிவை சார்ந்த அமோலக் சிங் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் குடும்பங்கள் சார்பாக, ஜாலியன் வாலாபாக் சுதந்திர போராளிகள் அறக்கட்டளை தலைவர் சுனில் கபூர், ஜாலியன் வாலாபாக் மறுசீரமைப்பு குறித்து, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் ராகவேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமிர்தரசஸில் உள்ள உத்தம் சிங்-ன் சிலை
அக்கடித்தத்தில், “தியாகிகளின் கிணறு முன்பு இருந்ததைப்போல் மீண்டும் மறுவடிவைப்பு செய்ய வேண்டும். பகத் சிங், உத்தம் சிங் மற்றும் அனைத்து ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் பெயர்களுக்கு முன்பாக “ஷாஹீத் (தியாகி)” என்ற பட்டத்தை மீண்டும் பொறிக்க வேண்டும். அந்த மைதானம், துப்பாக்கிச்சூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுப்படுத்து விதமாக மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண்டும். மேலும், ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் குடும்பங்களை, ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை மற்றும் பிற தொடர்புடைய குழுக்களின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என கோரியுள்ளார்.
“மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட ஜாலியன் வாலாபாக்-ஐ அழகுபடுத்தும் நிகழ்வில், அதன் வரலாற்று பாரம்பரியத்தை குறைத்துவிட்டு நினைவிடத்தை பொழுதுபோக்கு இடமாக மாற்றியுள்ளது” என தேஷ் பகத் யாத்கார் கமிட்டியினர் வருத்தப்பட்டனர்.
இந்திய விடுதலை போராட்டத்தின் ஓர் முக்கியமான சின்னமாக ஜாலியன் வாலாபாக் நினைவிடம் விளங்குகிறது. அதன் உள்ளடக்கத்தை மாற்றியமைப்பதன் மூலமும், தேச விடுதலை போராட்ட தியாகிகளை இழிவுப்படுத்துவதன் மூலமும், விடுதலை உணர்வையும், தியாகளின் இறப்பு மீதான மக்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோபத்தையும் மழுங்கடிக்கப் பார்க்கிறது, பிரிட்டிஷ் அரசின் அடிவருடிகளாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் கும்பல்.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க