பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவில் நடத்திய மிக பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவமான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அதனையொட்டி ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கிய போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை பத்திரிகையாளர் அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம் இந்தப் பதிவு.

♦ ♦ ♦

1919 ஏப்ரல் 13-ம் தேதி, பஞ்சாப்பின் அம்ரித்சர் தங்கக் கோயில் அருகே இருந்த ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை ஜெனரல் ரெக்ஸ் டயர் (General Reginald Rex Dyer) தலைமையிலான பிரிட்டீஷ் மற்றும் ஏகாதிபத்திய படைகள் சுட்டுவீழ்த்தின.

போராட்டத்துக்காக திரண்டிருந்த 400-லிருந்து 600 மக்கள் அந்த இடத்தில் வீழ்ந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பத்து நிமிடங்கள் நீடித்த அந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்து, ஓட முயற்சித்த பலர் சுடப்பட்டனர். உயிர் பிழைக்க பூங்கா சுவர் ஏறியவர்களும் இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அல்லது அம்ரித்சர் படுகொலை குறித்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில், ‘இது ஒரு படுகொலை. ஒரு பயங்கரமான நிகழ்வு’ என கூறினார். “இந்த சம்பவம் பிரிட்டீஷ் பேரரசின் நவீன வரலாற்றில் முன்மாதிரி அல்லாத ஒன்று” எனவும் அவர் பேசினார். பிரிட்டீஷ் வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி டெய்லர் இந்தப் படுகொலை, “பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியர்கள் அந்நியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய தருணம்” என எழுதினார்.

நீண்ட காலம் பிபிசி-யில் பணியாற்றிய பத்திரிகையாளர் அனிதா ஆனந்த், ஜாலியன்வாலாபாக் படுகொலையின் பின்னணியில் உத்தம் சிங் குறித்த மிக சுவாரஸ்யமான கதையைக் கூறியுள்ளார். ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த பஞ்சாபியான உத்தம் சிங், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்களுக்காக அவர்களைக் கொல்லக் காரணமாக இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை பழிவாங்க தன்னுடைய 21 ஆண்டுகாலத்தை செலவழித்து திட்டமிட்டார்.

1940, மார்ச் 13-ம் நாள், லண்டனில் கேக்ஸ்டன் ஹாலில் நடந்த கிழக்கு இந்திய சங்கத்தின் சந்திப்புக்கு வந்திருந்த சர் மைக்கேல் ஓ. டயரை (Michael O’Dwyer) கொன்றார் உத்தம் சிங். ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் கவர்னராக இருந்தவர் டயர். பிரிட்டீஷின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தவரும் இவரே. அதன்பின் ஆதரித்தும் பேசியவர். இந்த சம்பவத்தில் மூன்று பிரிட்டீஷ் அதிகாரிகளும் காயமுற்றனர்.

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“உத்தம் சிங், துப்பாக்கி விசையை அழுத்திய அந்தக் கணம்,அவர் பிரிட்டனின் அதிகம் வெறுக்கப்பட்ட நபராகவும், இந்தியாவின் கதாநாயகனாகவும் சர்வதேச அரசியலில் மதிப்புள்ள ஒரு கதாபாத்திரமாகவும் மாறினார்” என எழுதுகிறார் அனிதா.

அனிதாவின் பார்வையில் உத்தம் சிங், வில்லனும் அல்ல புனிதரும் அல்ல !

Francis P Sempa

பிரிட்டீஷ் ஒடுக்குமுறை இந்திய தேசிய நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு குறித்த பரப்புரைகளாலும் படுகொலை காரணமாகவும் உத்தம் சிங் தீவிரமயப்படுத்தப்பட்டார். முதலில் கம்யூனிஸ்ட் இயக்கமாகவும் பிறகு நாசிக்களாகவும் மாறிய இந்திய தேசிய ராணுவத்தால், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சியை பலவீனப்படுத்த அவர் பயன்படுத்தப்பட்டார்.

இந்த நூலை எழுதிய அனிதா ஆனந்த், இந்தப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புள்ளவர். அந்த சமயத்தில் பதின்பருவத்தில் இருந்த இவருடைய தாத்தா, படுகொலையின்போது அம்ரித்சரில் இருந்தார். பிரிட்டீஷ் படைகள் ஜாலியன்வாலாபாக் வருவதற்கு சற்று முன்பான அவர் அங்கிருந்து வெளியேறினார். தன்னுடைய நண்பரை இந்தத் தாக்குதலில் பலிகொடுத்தார்.

அனிதாவின் கணவர் குடும்பமும் பஞ்சாபிலிருந்து வந்ததுதான். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தம் சிங்குடன் வசித்தவர். அவருடைய பார்வை இந்திய தன்மையுடன் உள்ளது, அது தவறானதல்ல எனினும், அது முழுமையாக இல்லை. பிரிட்டீஷ் பார்வை முழுமையாக இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே உள்ளது.

பேரரசின் அடையாளமாக இருந்த பிரிட்டீஷ் மகுடத்தில் ஒரு ஆபரணமாக இருந்தது இந்தியா. சிறிய அளவிலான பிரிட்டீஷ் இராணுவத்தாலும் அரசியல் உயரடுக்கைச் சேர்ந்தவர்களாலும் துணைகண்டத்தில் இருந்த உள்ளூர் உயரடுக்கைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது அது. பிரிட்டன் தனது பேரரசை தேவைப்படும்போது இரக்கமின்றி ஆட்சி செய்தது, இந்தியாவில் இருந்த பிரிட்டனின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் மீது பிடிப்புடன் இருப்பதை புரிந்து வைத்திருந்தனர்.

கிளர்ச்சியின் முதல் அறிகுறியில் பிரிட்டனின் நடத்தையை அனிதா இப்படிச் சொல்கிறார், “தொடக்கத்திலேயே செயல்படுங்கள், தீர்க்கமாக செயல்படுங்கள், வலிமையைக் காட்டுங்கள் அல்லது ஆபத்து துடைத்தெறியப்பட வேண்டும்”.

1857-ன் இந்திய சிப்பாய் கலகம் இது தொடர்பாக ஒரு பாடத்தை வழங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய்கள் செய்த கலகம், வட இந்தியா முழுவதும் வேகமாக பரவியது.

“கிளர்ச்சியாளர்கள் இப்பகுதி முழுவதும் வெடித்தெழுந்தனர்” என எழுதுகிற அனிதா, “ஒரு சிறுபான்மையினர் பிரிட்டீஷ் பொதுமக்களுக்கு எதிராக சொல்லமுடியாத குற்றங்களை செய்தனர். 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் குழந்தைகள் மற்றும் பெண்களை பிபிகரில் கொன்றனர். இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலரையும் சேர்த்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிப்பாய்களை தூக்கிட்டதன் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கம் தனது பழிவாங்கலைச் செய்தது.

1857 சிப்பாய் கலகம் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை.

பிரிட்டீஷ் அதிகாரிகள் ஏப்ரல் 1919-ம் ஆண்டும் சிப்பாய் கலகம் போன்றதொரு சம்பவம் நடக்கக்கூடாது என்றே கருதினர். தன்னாட்சி அதிகாரத்துக்கான காந்தியின் அகிச்சை இயக்கம், இந்திய புரட்சிகர இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக அவர்கள் கருதினர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின், பஞ்சாபில் கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன், காந்தியையும் மேலும் இரண்டு காலனிய எதிர்ப்பு தலைவர்களையும் பிரிட்டீஷ் போலீசு கைது செய்தது. இந்தக் கைதை கண்டிக்கும் வகையில் ஒரு கும்பல் அம்ரித்சரில் சில ஐரோப்பியர்களை தாக்கியது, இது உள்ளூர் போலீசால் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த கும்பல் ஐவரைக் கொன்று, மூன்று பேரை தெருவில் வைத்து எரித்தது. ஒரு மூத்த மிஷனரி பெண்ணை கடுமையாக தாக்கி, கொன்றது இந்த கும்பல்.

ஏப்ரல் 13-ம் தேதி காலையில் ஜெனரல் டயர், நகரின் பல்வேறு இடங்களில் பொது கூட்டம் நடத்தவோ, கூட்டமாகவோ கூடக்கூடாது என்றும் அப்படி கூடினால் படைகளால் சிதறியடிக்கப்படுவீர்கள் எனவும் பொது அறிவிப்பைச் செய்தார். அவருடைய எச்சரிக்கையை புறம்தள்ளிவிட்டு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான மக்கள் ஆயுதங்களை ஏந்தி, ஜாலியன்வாலாபாக்கில் கூடினர்.

படிக்க:
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

பிரிட்டீசின் பார்வையில், டயரின் நடவடிக்கையால் அந்த நாளில் பெருமளவில் நடக்கவிருந்த சேதம் தடுக்கப்பட்டது, பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது. சில நாட்களில் பிரிட்டீசின் நடவடிக்கை பஞ்சாப் மாகாணத்தில் அமைதியைக் கொண்டுவந்தது. இந்திய கடைக்காரர்களும் வணிகர்கள் தங்களுடைய பொருட்கள் கொள்ளை போகாமல் தடுத்ததற்காக டயரை புகழ்ந்தனர். அருகில் இருந்த தங்கக் கோயிலின் காப்பாளர்கள் டயருக்கு கௌரவ சீக்கியர் பட்டம் அளித்தனர்.

அனிதா மற்றும் சில பிரிட்டீஷ் கண்ணோட்டங்கள் உண்மையை பிரிக்கவில்லை, அது அவர்களுடைய மாறுபட்ட கண்ணோட்டங்களாகும்.

அதன்பின், பிரிட்டீஷ் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையில் ஜெனரல் டயரின் நடவடிக்கை மீது தவறு இருப்பது தெரியவந்தது, அவர் தன்னுடைய பதவியை இழந்தார். இந்தியர்களுக்கு அம்ரித்சரின் கொடுங்கோலன் அவர். பிரித்தானியர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சியை காப்பாற்ற இந்திய மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முயற்சித்த ஒரு பலியாடு. அவர் உடைந்த மனிதராக 1927-ம் ஆண்டு ஜூலை மாதம் இறந்தார்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை சித்தரிக்கும் ஓவியம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய தேசியவாதத்தையும் பிரிட்டீஷ் எதிர்ப்பு மனநிலையையும் வளர்த்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படுகொலைக்கு முந்தைய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய துருப்புகள் முதல் உலகப் போரில் பேரரசுக்கு சேவை செய்திருந்தன என்பது இந்த விசயத்தில் உதவவில்லை. ஆங்கிலேயர்களின் நன்றிக்கடனை காட்டியவிதம்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையா?

பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு இரு முக்கிய வழிகளில் வந்தது: காந்தி மற்றும் அவரை பின்பற்றுகிறவர்கள் அகிம்சை முறையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளே அரசியல் தன்னாட்சி வேண்டும் எனக் கேட்டார்கள். பஞ்சாப்பில் கெதர் கட்சி தலைமையிலான தீவிர புரட்சிகர இயக்கம், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி வன்முறையின் மூலமே துடைத்தெறியப்படவேண்டும் என்றது. உத்தம் சிங் கெதர்களின் மீது ஈர்ப்பு கொண்டார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் போது உத்தம் சிங் அங்கே இருந்ததாக அனிதா எழுதுகிறார். ஆனால், அந்த நாளில் எங்கே இருந்தார் என்கிற உண்மை தெளிவாக இல்லை. உத்தம் சிங்கிற்கு மட்டுமே உண்மை தெரியும். அவர் தன்னுடைய வாழ்நாளில் பல நபர்களிடம் பலவிதமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார். எது உண்மை என கண்டறிவது இயலாததாக உள்ளது.

படுகொலை நிகழ்ந்து இருபது ஆண்டுகளில் உத்தம் சிங், வெவ்வேறு பெயர்களில் ஆப்பிரிக்கா முதல் ஐரோப்பிய கண்டம் வரை அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை “தனது மக்களின் பழிவாங்கும் தேவதையாக” மாறும் முயற்சியில் பயணித்திருக்கிறார்.

இந்திய புரட்சியாளர்கள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தொடர்பு காரணமாக பிரிட்டீஷ் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு பல முறை அவர் உள்ளாகியிருக்கிறார். உத்தம் சிங் குறித்து பிரிட்டீஷ் அதிகாரிகளால் மூடிவைக்கப்பட்டிருந்த ஆவணங்களை தகவல் பெறும் சுதந்திரத்தின் அடிப்படையில் அனிதா பெற்றிருக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருந்த இந்திய கெதர் கட்சியால் உத்தம் சிங் ஆதரிக்கப்பட்டார். அந்தக் கட்சிக்கு விசுவாசமாகவும் அவர் இருந்தார். கெதர் கட்சிக்காரர்கள் அவருக்கு பணத்தையும் போலி அடையாளங்களுக்கான சான்றுகளை அளித்ததோடு, பயணங்களின்போது தங்குவதற்கு நட்பான இடங்களையும் ஏற்பாடு செய்துகொடுத்தனர்.

அம்ரித்சரில் தேசவிரோத பொருட்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் கைதாகி ஐந்து வருடம் சிறை தண்டனை பெற்றார் உத்தம் சிங். அப்போது அவர், 1929-ம் ஆண்டும் டெல்லி சட்டப் பேரவை வளாகத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் போலிசு அதிகாரியைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பகத் சிங்கை சந்தித்தார். உத்தம் சிங், பகத் சிங்கை தன்னுடைய குரு என அழைத்தார். பகத் சிங்கின் முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி கொலைத்திட்டத்துக்கான ஊக்கத்தைப் பெற்றார்.

உத்தம் சிங்கின் காத்திருப்பு, இறுதியாக 1940 மார்ச் 13-ம் தேதி பலன் கொடுத்தது. சர் மைக்கேல் ஓ டயரைக் கொன்ற பிறகு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் என தனது குற்றத்தையும் நோக்கத்தையும் சொன்னார் அவர். இந்த விசாரணை இரண்டு நாள் நீடித்தது. அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மரணதண்டனை பெற்றார். 1940-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் பென்நோன்வில்லா சிறையில் அவர் தூக்கிலடப்பட்டார்.

எந்தவொரு அரசியல் தொடர்போ அல்லது நோக்கமோ இல்லாத ஒரு ‘தனி-ஓநாய் பயங்கரவாதி’ என்று பிரிட்டீஷ் அதிகாரிகள் அவரை உருவகப்படுத்தினர். அங்கே ஒரு போர் நடந்துகொண்டிருந்தது, பேரரசு காப்பாற்றப்பட்டாக வேண்டிய தேவை இருந்தது.

பிரிட்டன் போரில் வென்றது. ஆனால், பேரரசை காப்பாற்ற முடியவில்லை. இந்திய சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது, ஆனால் அமைதியாக அல்ல. அனிதாவின் கூற்றுப்படி, பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற மிக கடுமையான விலையைக் கொடுக்க வேண்டிருந்தது. 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்வுக்கு ஆளானார்கள், 2 மில்லியன் மக்கள் இறந்தார்கள். அனிதா, பிரிட்டீசாரே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டுகிறார்.

படுகொலை நடந்த இடத்தில் உத்தம் சிங்கிற்கு 2017-ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டதாக அனிதா முடிக்கிறார்…

“அது அவரை சித்தரிக்கிறது. கையை நீட்டி, உள்ளங்கையை உயர்த்தி, தரையில் சிந்திய ரத்தத் துளிகளை கையில் ஏந்தி நிற்கிறார். ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட இருபதாண்டுகள் பிடித்ததற்கான ஒரு நினைவூட்டல்.”


கட்டுரையாளர் : Francis P Sempa
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க