சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?
உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.
உத்தம் சிங் இந்திய விடுதலை போராட்டத்தின் பிரிக்க முடியாத ஆனால் வெளி உலகம் பெரிய அளவுக்கு அறியாத ஒரு பெயர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுட்டு பழிதீர்த்தார் உத்தம் சிங்.
தனது நெருங்கிய நண்பரான பகத்சிங்-கின் பல உன்னத குணங்களை உத்தம் சிங் கொண்டிருந்தார். பகத்சிங்கை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர். லண்டன் விசாரணையின் பொழுது உனது உண்மை பெயர் என்ன எனும் கேள்விக்கு உத்தம் சிங் பதில் அளித்தார் “ராம் முகம்மது சிங் ஆசாத்”. ராம் என்பது இந்து மதத்தையும் முகம்மது என்பது இஸ்லாத்தையும் சிங் என்பது சீக்கியத்தையும் ஆசாத் என்பது விடுதலையையும் குறிக்கும். மத ஒற்றுமையில் பகத்சிங்கின் உன்னதமான கோட்பாடை உத்தம் சிங் கொண்டிருந்தார். உத்தம் சிங்-கும் தூக்கில் போடப்பட்டார். மரணத்திலும் பகத்சிங் வழியில் உத்தம் சிங்!
மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின்னரும் ஏன் லண்டன் வந்து ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது “சர்தார் உத்தம் சிங்” எனும் திரைப்படம். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என ஒரு விமர்சகர் கூறினார். அது மிகை அல்ல!
ஆப்கானிஸ்தான் வழியே சோவியத் யூனியனுக்கு!
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு உத்தம் சிங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவரை சந்திக்க வரும் போராளியிடம் பகத்சிங் உருவாக்கிய “இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி” (எச்.எஸ்.ஆர்.ஏ)-யை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என உத்தம் சிங் கூறுகிறார். ஏனெனில் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்த அமைப்பின் பாரம்பரியத்தை உத்தம்தான் முன்னெடுக்க வேண்டும் என பகத்சிங் அவரிடம் கூறியிருந்தார்.
ஆனால், அந்த போராளி கூறுகிறார்: “ஒருவர் கூட மீதம் இல்லை. அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது சிறைகளில் உள்ளனர்; எப்படி எச்.எஸ்.ஆர்.ஏ.-வை உயிர்ப்பிக்க முடியும்? நீ லண்டன் சென்று முயன்று பார்! ஆனால், கப்பலில் செல்ல முடியாது. உனது பெயரை சுங்கத் துறையில் பதிவு செய்துள்ளனர்” என்று கூறி சில லண்டன் முகவரிகளை தருகிறார். அவர் வெளியே செல்லும் பொழுது எச்சரிக்கிறார்:
“ஒரு உளவு அதிகாரி உன் வீட்டை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டுள்ளார்.” அதனால், தனது சீக்கிய மதத்தின் அடையாளங்களை துறந்துவிட்டு மாறுவேடத்தில் உத்தம் சிங் தப்பிக்கிறார். அவரை கைது செய்ய அனைத்து கப்பல் துறைமுகங்களும் உஷார்படுத்தப்படுகின்றன. ஆனால், உத்தம் கப்பலில் செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் சென்று உறைய வைக்கும் கடும் பனியில் பல நாட்கள் நடந்து இமயமலை கடந்து ரஷ்யா செல்கிறார். அப்பொழுது ரஷ்யாவில் சோசலிச ஆட்சி! இந்தியச் சூழல்கள் குறித்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் விவாதிக்கிறார். பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் உதவியுடன் உத்தம் லண்டன் வருகிறார். அங்கு இந்திய விடுதலைக்காக செயல்படும் “இந்திய தொழிலாளர் சங்கம்” ஊழியர்களை சந்திக்கிறார்.
எச்.எஸ்.ஆர்.ஏ.-வை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என உத்தம் வாதிடுகிறார். சூழல் பாதகமாக இருப்பதால் சில நாட்களுக்கு அமைதியாக இருக்குமாறும் ஏதாவது வேலையில் இணையுமாறும் அவர்கள் கூறுகின்றனர். தச்சு வேலை / துணி விற்பனை / விற்பனை பிரதிநிதி என பல வேலைகளை செய்கிறார். அப்பொழுது பிரிட்டன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல போரட்டங்களில் கலந்து கொள்கிறார். எய்லின் பார்மர் எனும் பெண் தோழர் மூலம் ஐரிஷ் விடுதலை போராளிகளை சந்திக்கிறார்.
தமது தேசத்தில் பிரிட்டனின் அதிகாரத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஐரிஷ் விடுதலை போராளிகள். பிரிட்டனில் திரட்டிய நிதி மூலம் ஐரிஷ் போராளிகளிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய உத்தம் முயல்கிறார். அந்த ஆயுதங்களை இந்திய விடுதலை இயக்கத்துக்கு பயன்படுத்துவது என்பது திட்டம். ஆனால், பிரிட்டன் போலீசுத்துறை ஆயுதக் கிடங்கை கைப்பற்றியது மட்டுமல்லாமல், ஐரிஷ் போராளிகளையும் கொன்று விடுகிறது. எனவே, உத்தம் சிங்-கின் திட்டத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. இரண்டாம் உலகப்போர் மூள்கிறது. இந்தச் சூழலில் பிரிட்டனில் உள்ள இந்திய தொழிலாளர் சங்கம் போர் முடியும் வரை வேறு எந்த செயலிலும் இறங்க வேண்டாம் என உத்தமிடம் கூறுகிறது. ஆனால், இந்த மதிப்பீடை உத்தம் ஏற்கவில்லை.
இந்திய உயிர்கள் துச்சமா?
லண்டனில் தங்கியிருக்கும் பொழுது இரவு தூக்கம் வராமல் உத்தம் துன்புறுகிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் நினைவில் உழல்கிறது. எச்.எஸ்.ஆர்.ஏ.-வை உயிர்ப்பிக்க முடியாத சூழலில் ஜாலியன் வாலாபாக் கொலைகாரர்களை பழிவாங்கும் எண்ணம் அவருக்கு வலுக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெனரல் டயர் மற்றும் அதற்கு ஆணையிட்ட மைக்கேல் ஓ டயர் ஆகியோரை தேடுகிறார். ஆனால், ஏற்கெனவே ஜெனரல் டயர் இறந்துவிட்டார். மீதமிருப்பது மைக்கேல் ஓ டயர் மட்டும்தான்! அவரது நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்கிறார்.
ஒரு நாள் அவரது அலுவலகத்துக்கு விற்பனை பிரதிநிதியாக செல்கிறார். ஒரு பேனாவை பரிசாக அளிக்கிறார். நீங்கள் பஞ்சாப் கவர்னராக இருந்த பொழுது உங்கள் கீழே பணியாற்றினேன் என கூறுகிறார். பின்னர் அவர் வீட்டிலேயே உத்தம் சிங் பணியாளராக சேர்கிறார்.
ஒரு நாள் இரவு மைக்கேல் ஓ டயர் மது அருந்தி கொண்டே கேட்கிறார்: “1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நீ எங்கு இருந்தாய்?” “பஞ்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்” “அன்றைக்கு அந்த துப்பாக்கிச் சூடு (ஜாலியன் வாலாபாக்) மிகவும் அவசியமாக இருந்தது. இல்லையெனில் பிரிட்டன் பேரரசுக்கு பெரிய இழப்பு உருவாகியிருக்கும்.” “அன்று ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் ஐயா!” “ஆனால், லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டனர். இன்னொரு 1857 தடுக்கப்பட்டது.” என மைக்கேல் ஓ டயர் நியாயப்படுத்துகிறார். “ஐயா! பெண்களும் குழந்தைகளும் கூட கொல்லப்பட்டனர்.”
“அது தவிர்க்க இயலாதது”. இப்படித்தான் பிரிட்டன் ஆட்சியாளர்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நியாயப்படுத்தினர். கணிசமான பிரிட்டன் மக்களை நம்பவும் வைத்தனர். உத்தம் சிங்-க்கு ரத்தம் கொதிக்கிறது. மைக்கேல் ஓ டயர் மது அருந்திக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்கி விடுகிறார். அருகில் எவரும் இல்லை. உத்தம் சிங் துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கிறார். ஆனால், சுடவில்லை. ஏன்? விசரணையின் பொழுது இந்த கேள்விக்கு பதில் தருகிறார்: “நான் அப்பொழுது சுட்டிருந்தால் அது ஒரு முதலாளிக்கும் அவரது பணியாளுக்கும் இடையே நடந்த சம்பவம் என சுருக்கப்பட்டிருக்கும். அனைத்துப் பணியாளர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகியிருக்கும். நான் அதை விரும்பவில்லை.”
உத்தம் சிங் எவ்வளவு நுணுக்கமாகச் சிந்தித்தார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப எண்ணுகிறார். அதற்காக விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்கிறார். அப்பொழுது அந்த அலுவலர் மேலதிகாரிகளுக்கு தகவல் தர முயற்சிக்க இதனை அறிந்த உத்தம் சிங் வெளியேறி விடுகிறார். சாலையில் நடக்கும் பொழுது தான் அந்த சுவரொட்டி கண்ணில்படுகிறது. காக்ஸ்டன் அரங்கில் இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி குறித்து மைக்கேல் ஓ டயர் பேசுகிறார். அங்கு வேறு பல அதிகாரிகளும் வர உள்ளனர்.
இதுதான் சரியான தருணம் என அந்த நொடியில் உத்தம் சிங் முடிவெடுக்கிறார். ஒரு புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு அரங்கிற்குள் நுழைந்து விடுகிறார். மைக்கேல் ஓ டயர் உரையாற்றிவிட்டு மேடை விட்டு கீழே இறங்குகிறார். நேருக்கு நேராக அவரை இரண்டுமுறை சுடுகிறார். மேலும், இரண்டு முன்னாள் இந்திய கவர்னர்களை சுடுகிறார். தப்பித்து ஓடாமல் அங்கேயே நிற்கிறார். பின்னர் கைது செய்யப்படுவதும் அவரது சகாக்களின் பெயரை கேட்டு போலீசுத்துறை சித்ரவதை செய்வதும் பின்விளைவுகள்.
எவ்வளவு சித்ரவதை செய்தும் ஒரு வார்த்தை அவரிடமிருந்து பெற முடியவில்லை. எனவே, ஸ்வைன் எனும் சிறப்பு விசாரணை அதிகாரியை நியமிக்கின்றனர். அப்பொழுதும் ஒரு வார்த்தை கூட உத்தம் சிங்-ன் வாயிலிருந்து வரவில்லை. ஆனால், அந்த விசாரணையின் பொழுது ஸ்வைனுக்கும் உத்தமுக்கும் சில முக்கிய உரையாடல்கள் நடக்கின்றன.
ஸ்வைன் : “பிரிட்டன் மீது உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?”
உத்தம் : “பிரிட்டன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்தியர்களை விட எனக்கு பிரிட்டன் நண்பர்கள்தான் அதிகம். பிரிட்டன் தொழிலாளர்கள் மீது எனக்கு துளி கூட வெறுப்பு கிடையாது. உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. உங்கள் கடமையை உங்கள் தேசத்தில் நீங்கள் செய்கிறீர்கள். ஆனால், எங்கள் தேசத்தை ஆக்கிரமித்து எங்கள் மக்களை துன்புறுத்துபவர்களை நான் வெறுக்கிறேன்.”
பயங்கரவாதியா? புரட்சியாளரா?
உத்தம் சிங்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஸ்வைன் உத்தம் சிங்-ன் சிறை அறைக்கு வருகிறார். அவர் கையில் உத்தமுக்கு மிகவும் பிடித்த லட்டுக்கள் நிறைந்த பெட்டி.
உத்தம் : “மிஸ்டர் ஸ்வைன்! அனைத்தையும் நான் கூறிவிட்டேன். இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதற்கு இனிப்புகள்?”
ஸ்வைன் : “நீங்கள் அடிப்படையில் கொலைகாரர் இல்லை என்பதை விசாரணை உரையாடல்கள் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனால், ஏன் இந்த கொலை? அதுவும் 21 ஆண்டுகள் கழித்து! என்னதான் நடந்தது ஜாலியன் வாலாபாக்கில்?”
அப்பொழுதுதான் ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள் குறித்து உத்தம் சிங் ஸ்வைனுக்கு விவரிக்கிறார். சுமார் 30 நிமிடம் ஓடும் இந்த காட்சிகள் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடும் அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதையும் 19 வயதே நிரம்பிய உத்தம் சிங்-ன் சிந்தனையில் அது என்ன மாற்றத்தை உருவாக்கியது என்பதையும் இந்த காட்சிகள் விவரிக்கின்றன.
நம்மை 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதிய ஜாலியன் வாலாபாக்கில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன இந்தக் காட்சிகள்! எவரிடம் கோபத்தை அல்லது அழுகையை இந்தக் காட்சிகள் உருவாக்கவில்லையோ அவர்கள் கல்மனம் படைத்தவர்கள் என முடிவு செய்வது தவறாகாது. உங்களது கடைசி விருப்பம் என்ன என ஸ்வைன் கேட்கிறார். நான் ஒரு புரட்சியாளன் என்பதை உலகுக்கு சொல்லுங்கள் என்கிறார் உத்தம் சிங். ஆம்! உத்தம் சிங் பயங்கரவாதி அல்லது கொலைகாரர் அல்ல! அவர் ஒரு புரட்சிவாதி! அவரது சிந்தனைகளை செதுக்கியது கீழ்க்கண்ட அமைப்புகள்:
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்க்க மட்டுமே உத்தம் சிங் செயல்பட்டார் என பெரும்பான்மையான கருத்தாக்கங்கள் முன்வைக்கின்றன. அவர் அடிப்படையில் சமூகப் புரட்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீவிர செயல்பாட்டாளர். ஜாலியன் வாலாபாக் பழிதீர்த்தல் என்பது அதன் ஒரு பகுதிதான்! இதனை இந்த திரைப்படம் பதிவு செய்தாலும் போதுமான அழுத்தம் தர தவறிவிடுகிறது.
எனினும், உத்தம் சிங் குறித்தும் ஜாலியன் வாலாபாக் குறித்தும் இன்றைய தலைமுறையினருக்கு அழுத்தமாக வெளிப்படுத்தி ஹாலிவுட் தரத்துக்கு இணையான திரைப்படத்தை அளித்த இயக்குநர் சுஜித் சர்க்கார் / உத்தம் சிங்-காகவே வாழ்ந்து காட்டிய நாயகன் விக்கி கவுசல் / பகத்சிங்காக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய அமோல் பரஷர் உட்பட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்தத் திரைப்படம் பார்க்கும் பொழுது மாற்றுக் கருத்துகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்க எத்தனிக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அன்றைய பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை உணர்வதற்கு அதிக சிரமம் ஏற்படாது. அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படுவது பயனுள்ளதாக அமையும்.
உத்தம்சிங்கின் வரலாற்றை இந்தப்படம் ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக “ஜாலியன் வாலா பாஹ்” பகுதிகள் மிகவும் உணர்வுரீதியான , தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. உத்தம் சிங் என் மனதில் என்றும் வாழும் ஆதர்ச கதாநாயகன்.
உத்தம்சிங்கின் வரலாற்றை இந்தப்படம் ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக “ஜாலியன் வாலா பாஹ்” பகுதிகள் மிகவும் உணர்வுரீதியான , தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. உத்தம் சிங் என் மனதில் என்றும் வாழும் ஆதர்ச கதாநாயகன்.
ஜெய் பீம் பற்றி ஏன் இன்னும் விமர்சனம் வரவில்லை?