காதலுறவு புரியாதவர்கள் காதலிக்கிறார்கள். குடும்பத்தின் தேவை தெரியாதவர்கள் திருமணம் செய்கிறார்கள். குழந்தை வளர்க்க தெரியாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.’

சில வருடங்களுக்கு முன் நான் சொல்லிக் கொண்டிருந்தவை இவை. மட்டையடி நிராகரிப்பாக முதல் பார்வைக்கு தோன்றினாலும் சிறிதளவேனும் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணையும்; ஒரு பெண் ஒரு ஆணையும் முழுமையாய் அறிதல் என்பதே திருமணத்துக்கு பிறகுதான் நடக்கிறது. உங்களுடன் இருப்பவன் யார் என்பதையே திருமணத்துக்கு பிறகுதான் நீங்கள் ஆராயத் தொடங்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு குடும்பம் என்கிற உற்பத்தி பொருளாதார சட்டகத்துக்குள்வேறு விழுந்து விடுகிறீர்கள். அதுவும் நமக்கு தெரியாது.

படிக்க :
♦ பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்
♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

இருவர் இருக்கும் குடும்பத்தில் இருவரின் குடும்பங்கள் தொக்கி நிற்கும். அக்குடும்பங்களுக்கு இடையே இருக்கும் கலாசார புரிதல் முரண்கள் ஏற்படுத்தும் சிக்கலான மனநிலைகளில் இருந்து உறவுகள் மேலெழும். அவற்றை கையாளவும் தெரியாது. உடனிருப்பவரை பிறாண்டி வைப்பதாகவே பெரும்பாலும் அது முடியும்.

குடும்பம் என்கிற பொருளாதார சட்டகத்தின் தேவைப்படி வருமானம் முக்கியம். வருமானம் நோக்கி ஓடுகையில் வீடு, கார் என தனிச்சொத்துகளையும் உருவாக்க வேண்டும். எல்லாமும் சேர்ந்து மேலதிக வருமானம் என விரட்டும்போது குடும்பத்தின் இருவரும் ‘பந்தய குதிரை’யையும் தாண்டிய வேகத்துடன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி உயிர் போகும் வரை ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஓட்டத்துக்குள் திடுமென காதல் எங்கே போனது என ஒரு சந்தேகம் எழும். காதலே இல்லையெனில் நாம் உண்மையில் காதலிக்கவே இல்லையா அல்லது அடுத்தவருக்கு நம் மீது ஆர்வம் இல்லையா என்கிற குமைச்சல் மனதில் எழும். குடும்பத்துக்கு அடிப்படையாக இருந்த இருவரின் உறவிலேயே தூரம் தோன்றும். இந்த தூரத்தை கடப்பதற்கு என சமூகமும் குடும்பமும் ஒரு யோசனையை ஒவ்வொரு திருமணத்துக்கு பிறகும் நிர்ப்பந்திக்கும்.

குழந்தை !

இந்த அடிப்படையில் இருந்துதான் Sara’s படம் இயங்குகிறது. படத்தின் ஆக்கம், கதாபாத்திர உருவாக்கம், அவற்றில் இருக்கும் சிக்கல்களை குறித்து நான் பேசப் போவதில்லை. படம் வைக்கும் சில முக்கியமான விஷயங்களை மட்டும் வைத்தே பேசப் போகிறேன்.

படத்தில் சில முக்கியமான தருணங்கள் வருகின்றன. வசனங்களும் இருக்கின்றன. ‘எம்.பி.ஏ. படிக்க ட்ரெயினிங்லாம் போனீங்களே… Parenthood பற்றி தெரிஞ்சுக்க எதாவது ட்ரெயினிங் போனீங்களா?’ என ஒரு மருத்துவ ஆலோசகர் கேட்பார். குறிப்பாக ‘விபத்துகள் எப்போதும் நல்ல விளைவுகளை கொடுப்பதில்லை’ என ஒரு வசனம்.

இதையெல்லாம் பார்த்தால் குழந்தைப் பேற்றை எப்படி கொச்சையாக சிறுமைப்படுத்தி பார்க்க முடிகிறது என சினம் வரலாம். ஆனால், சற்று யதார்த்தம் பேசுவோம்.

எனக்கு தெரிந்த பலர், குழந்தை உருவானதை பற்றி அதிகமாக சொன்னவை இவைதான். ‘நாங்க என்ன விரும்புனோமா? அதுவா உருவாயிடுச்சு’. ‘It was an accident’, ‘இப்போதைக்கு குழந்த வேணாம்னுதான் ப்ளான் பண்ணி இருந்தோம்.. ஆனா form ஆயிடுச்சு’

இவர்களில் எவரும் குழந்தை வெறுப்பவர்கள் கிடையாது. ஆனாலும் குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்கோ தள்ளிப் போடுவதற்கோ காரணமாக பொருளாதாரமும் பிற திட்டங்களும் இருந்திருக்கின்றன. ‘நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிற கேள்வி எல்லாம் வேலைக்கான நேர்காணலில் கேட்கப்படும் சூழலில் குழந்தைப் பேறு என்பது எத்தகைய அச்சத்தை உருவாக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு பெண், பத்து மாதங்களுக்கு வேலைக்கு செல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது அப்பெண்ணின் work life-ஐயே கேள்விக்குறியாக்கும் செயல். குழந்தை பிறந்த பிறகு சில வருடங்களேனும் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் அப்பெண்ணின் career graph உடைபடும்.

இவற்றையும் தாண்டி ஒரு கேள்வி. What do we know about parenthood?

நாம் எவரும் வளர்ந்த சூழலில் இன்றைய குழந்தை வளரப் போவதில்லை. அச்சூழலே என்னவென்பது நமக்கு புரிபடாது. அதிகபட்சமாக இந்தியச் சமூகத்தின் parenthood-படி குழந்தை அடிபணிய வேண்டும். எனவே நாம் அடிப்போம், திட்டுவோம் அல்லது கடன் வாங்கி ‘நமக்கு கிடைக்காத வாழ்க்கை’ என பணக்கார வாழ்க்கையை கொடுப்போம்.

தொழில்நுட்பங்களில் முகம் புதைத்து, தனிமையில் வளரும் அந்த குழந்தை என்னவாக போகிறது என்பதை பற்றிய clue அனுதினமும் மாறி வரும் சூழலில் நமக்கு இருக்கவே இருக்காது.

மறுபக்கத்தில் ‘வேலைக்கு சென்றால் நம்மை மதிக்க மாட்டாள்’ என்கிற சிந்தனையுடன் ஒன்றன்பின் ஒன்றாக பெற்றுக் கொடுத்து குழந்தை வளர்ப்பதிலேயே பெண்ணின் வாழ்க்கையை அழிக்கும் திருட்டுத்தனம் நிறைந்த ஆண்களும் பலர் இருக்கின்றனர்.  அப்பெண் தனக்கான இருத்தலை ஆராயாமலே தேங்கி, குறுகிப் போய், முதிர்ந்து பிற்காலத்தில் மகனையும் மகளையும் திருமணம் செய்து கொடுத்தவுடன் குழந்தை பெற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்கும் தாயாக மாறுவாள்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் வீராவேசமாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்ட ஒரு பெண் சொல்கையில், ‘ஜான்.. என் வயசு பொண்ணுகளலாம் பார்க்கும்போது என்னென்னவோ life-ல பண்றாங்களேன்னு பொறாமையா இருக்கு. நான்தான் அவசரப்பட்டுட்டனோன்னு தோணுது. அதுலயும் என் வயசு பிள்ளைகளே வந்து என்னை auntie-ன்ன்னு கூப்பிடும் போதெல்லாம்…’ என சொல்லி கண்ணில் ஜலம் வச்சுண்டார்.

குழந்தைப் பேறு ஆண்களுக்கு சுமை என்றால் பெண்களுக்கு அடிமைத்தனம் மற்றும் சுரண்டல். அதுவும் 2030-ம் ஆண்டிற்குள் உலக வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ்ஸில் நிறுத்த வேண்டும் என சொல்லியும், 1.2 டிகிரி செல்சியஸ்ஸை தற்போதே அடைந்து, 2030க்கும் நான்காண்டுகளுக்கு முன்னமே 1.5 டிகிரி செல்சியஸ்ஸை எட்டவிருக்கிறோம் என்பன போன்ற செய்திகளை கேட்கையில், இறப்பதற்கே ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இருக்க முடியாது.

Sara’s எளிதாக நவதாராளவாத இளைஞர்களை கவரக் கூடிய படம் என்றாலும், முக்கியமான சமூக யதார்த்தங்களை விவாதிப்பதற்கான வெளியையேனும் அது உருவாக்குகிறது.

படிக்க :
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

மாறியிருக்கும் சமூக சூழலுக்கேற்ப குடும்ப முறையை ஜனநாயகப்படுத்தாமல், அரச கட்டமைப்பு குழந்தை வளர்ப்புக்கான பொறுப்பை ஏற்காமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொண்டே இருப்பதும் குழந்தை பெற கட்டாயப்படுத்துவதும் நவதாராளவாத உலகில் பெண்ணை மேலும் மேலும் அடிமைப்படுத்தும். குடும்பங்களை உடைக்கும். தனிப் பெற்றோரையே உருவாக்கும்.

குழந்தை பெறுதல் அவரவரின் விருப்பம். குறிப்பாக பெண்ணின் விருப்பம்.

காதல், குடும்பம், குழந்தை வளர்ப்பு என பெண் இடம்பெறும் எந்த உறவையும் மீளாய்வு செய்யாமல்தான் பெண்ணுக்கான இருப்பை சமூகத்தில் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டிருக்கிறோம்.


ராஜசங்கீதன்
முகநூலில் : Rajasangeethan


disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க