புதிய ஜனநாயகம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல் -20 அன்று வினவு தளத்தில் வெளியிடப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பபட்ட நிலையில், அவை முன்னாள் பொறுப்பாசிரியரால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அக்கட்டுரைகளுல், ஹதராஸ் பாலியல் வன்கொலை, விஜய் சேதுபதியின் குழந்தைக்கு விடுக்கப்பட்ட பாலியல் வன்முறை மிரட்டல் போன்ற விவகாரங்களுக்கான அடிப்படை என்ன என்பதை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்.
0-0-0-0-0
கடந்த மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தன்று இந்தியாவின் 7 பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் வலைத்தளக் கணக்கை ஒப்படைத்த மோடி, அதை நாட்டிலுள்ள பெண்களுக்காகச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். தமிழக அரசும் தன் பங்குக்கு அந்நாளைப் ”பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக”க் கொண்டாடியது. இப்படி அனைத்தும் நல்ல விதமாகச் சென்றுகொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட சமயத்தில்தான் உசிலம்பட்டியில் நடந்திருந்த பெண் சிசுக்கொலைகள் அம்பலமாகி மோடி-எடப்பாடி இணையின் மலிவான விளம்பரங்களைச் சந்திசிரிக்க வைத்தன.
உசிலம்பட்டி என்றாலே 1990-களில் அவ்வட்டாரத்தில் நடந்துவந்த பெண் சிசுக் கொலைகள் நம் நினைவுக்கு வந்துவிட்டுப் போகும். அச்சமயத்தில் அதனைத் தடுப்பதற்குச் சட்டத்தைக் கடுமையாக்கிய தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. அதன் பின் அந்த அவலம் குறையத் தொடங்கி, கடந்த முப்பதாண்டுகளில் கிட்டத்தட்ட இப்பிரச்சினை வழக்கொழிந்து போய்விட்டது எனக் கருதப்பட்ட நிலையில்தான், அப்பகுதியில் அடுத்தடுத்து 3 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 2 அன்று உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள உள்ள செக்காணூரணியில் தமது இரண்டாவது பெண் குழந்தையைப் பிறந்த ஒரு மாதத்திலேயே அக்குழந்தையின் பெற்றோர்கள் வைரமுருகன்-சவுமியா தம்பதியினர் எருக்கம்பால் கொடுத்துக் கொன்று புதைத்துள்ளனர்.
படிக்க :
♦ “ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டியிலும் ஒரு கொலை நடந்திருக்கிறது. அங்கு எருக்கம்பால் கொடுத்துக் கொல்லப்பட்ட பெண் குழந்தை பிறந்து ஆறு நாட்கள்கூட இவ்வுலகில் உயிரோடு இருக்கக் கொடுத்து வைக்கவில்லை.
மூன்றாவதாக, உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளத்தில் மர்மமான முறையில் ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது. அப்பச்சிளம் பெண் குழந்தையின் அகால மரணத்திற்கு மூச்சுத் திணறல் காரணமெனக் கூறப்படுகிறது.
வறுமையின் காரணமாகத்தான் தமது இரண்டாவது பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்துக் கொன்றதாக வைரமுருகன் – சவுமியா தம்பதியினர் வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போதுள்ள மோசமான பொருளாதாரச் சூழலில் அடித்தட்டு மக்கள் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பது மிகச் சிரமமான காரியம்தான் எனினும், இதுவே ஆண் குழந்தை பிறந்திருந்தால் கொன்றிருப்பார்களா?
சவுமியாவின் பெண் குழந்தை மட்டுமல்ல, மற்ற பெண் சிசுக்களும் கொல்லப்பட்டதற்கு வறுமை அடிப்படையான காரணமாக இருந்துவிட முடியாது. வேறென்ன காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தந்தை வழி ஆணாதிக்க சமூகக் கண்ணோட்டம்தான் இதன் ஆணிவேர்.
இந்தக் கண்ணோட்டம் இந்தியாவில் பெண்ணினத்தை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றுவிடுமோ என அஞ்சுமளவிற்கு அபாயகரமாக மாறிவருவதைச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவில் 2007-ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 903 பெண் குழந்தைகள் என்றிருந்த தேசிய ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம் (Sex Ratio at Birth), 2016-ம் ஆண்டு 877 ஆக குறைந்துவிட்டதாக உள்ளூராட்சிப் பதிவு கணக்கெடுப்பு வழியாகத் (Civil Registration Survey) தெரியவந்திருக்கிறது.
இதில் அதிர்ச்சி தரத்தக்க விடயம் என்னவென்றால், முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருக்கிறது என்பதுதான். தமிழகத்தில் 2004-ல் 936 ஆக இருந்த இவ்விகிதம் 2016-ல் 840-ஆக வீழ்ந்திருப்பதாக அக்கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. (ஆங்கில இந்து, 09.03.2020)
இது நம்புவதற்குக் கடினமாகத் தோன்றினாலும், தமிழகத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரம் குறைந்துவருகிறது என்பதே உண்மை. பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டு மைய அரசின் புள்ளிவிவரத் துறை 2019-இல் வெளியிட்டுள்ள ஆவணமொன்றில் தமிழகத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2011-இல் 996 ஆக இருந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே ஆவணத்தில் 0-6 வயதுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 943 எனச் சரிந்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.
பிறந்து ஆறு வயது முடிவதற்குள் 53 பெண் குழந்தைகள் எப்படிக் காணாமல் போக முடியும்? இந்தச் சரிவை இயற்கையானதாக ஏற்றுக்கொள்ள இயலுமா?
* * *
ஒவ்வொரு ஏழு பெண் கருக்களினில் ஒரு பெண் கரு, அது பெண் கரு என்ற காரணத்தாலேயே அழிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிவிப்பதும், பெண் கருக்களைக் கலைப்பதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், பெண் கருக்கள் அழிக்கப்படுவது தடையின்றி நடைபெறுவதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியென்றால், அச்சட்டமும் அச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் பொறுப்பும் கடமையும் கொண்ட மருத்துவத் துறை, போலீசுத் துறை, நீதித் துறை ஆகியவை என்ன செய்கின்றன?
உசிலம்பட்டி சம்பவத்தில் தொடர்புடைய பெற்றோர்களும் உறவினர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனால், பெண் கருவை அழிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? இதற்குத் துணைபோன எத்தனை மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர் முதலாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்?
2016-ம் ஆண்டில் கடலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இயங்கிவந்த 20 ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும், அந்த மையங்களின் உதவியோடு பெண் கருக்களை அழித்த பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டதாகவோ, கைது செய்யப்பட்டதாகவோ எந்தவொரு தகவலும் இல்லை.
பெண் சிசுக்கள் கொல்லப்படுவதில் நுட்பமாகச் செயல்படும் வரக்கத் தன்மையையும் நாம் காண வேண்டியிருக்கிறது. பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப் பாலை ஊற்றிக் கொல்லுபவர்கள் அடித்தட்டு வர்க்கம் என்பதால், சட்டம் பாய்ந்துவிடுகிறது. ஆனால், கருவை அழிக்கும் கனவான்கள் பெரும்பாலும் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கும் மேலுள்ள உயர் வர்க்கம் என்பதால் சட்டம் மௌனித்துவிடுகிறது.
படிக்க :
♦ லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …
பெண்களைப் பாதுகாக்கப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மென்மேலும் கடுமையாக்குவதன் மூலம் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தடுத்துவிடலாம் என்ற கண்ணோட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
இது உண்மையெனில், பெண் கருவும், பெண் சிசுவும் அழிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தடுக்கப்பட்டு, இந்த இருபது ஆண்டுகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். நிர்பயா வழக்கிற்குப் பிறகும் பாலியல் வன்முறை நடப்பது குறைந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையென்ன?
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு விதமான குற்றங்களைக் கணக்கில் கொண்டால், 2016-இல் 3,38,954 வழக்குகள், 2017-இல் 3,59,849 வழக்குகள், 2018-இல் 3,78,277 வழக்குகள் என ஒவ்வொரு ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாக வழக்குகள் பதிவாகியுள்ளன. பதியப்படாமல் மறைக்கப்பட்ட , தட்டிக்கழிக்கப்பட்ட வழக்குகள் எத்தனையோ, யார் அறிவார்? குறிப்பாக, சிறுமியர் மீது நடத்தப்படும் பாலியல்ரீதியான தாக்குதல்கள் இருமடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நிர்பயா வழக்கில், இரவு நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு வெளியே என்ன வேலை? வீட்டுக்குள் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்குமா என ஆணாதிக்கவாதிகள் குதர்க்கமாக வாதிட்டனர். ஆனால், உண்மை நிலைமை என்ன?
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த மார்ச் 20 முதல் 31 வரையிலான 11 நாட்களில் மட்டும் 3.07 இலட்சம் அழைப்புகள் சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார் சைல்டு லைன் இந்தியா துணை இயக்குநர் ஹர்லின் வாலியா. இதில் 30%, அதாவது 92,105 அழைப்புகள் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து பாதுக்காக்கக் கோரி விடுக்கப்பட்டுள்ளன. மேலும், 18 நாட்களுக்குள் 123 குடும்ப வன்முறைப் புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதியப்பட்டுள்ளன.
பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை நிலை. அது மட்டுமின்றி, பெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்களும் குற்றவாளிகளின் வர்க்க நிலைக்குத் தகுந்தவாறுதான் அவர்கள் மீது பாய்கின்றன. நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலேற்றிய சட்டம், ஆசாராம் பாபு போன்ற மேல்மட்டத்துக் குற்றவாளிகளை ஏன் சிறையில் வைத்துப் பாதுகாக்கிறது?
ஹைதராபாத் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட குற்றவாளிகளைப் போலி மோதலில் சுட்டுக் கொன்ற போலீசின் வரம்பற்ற அதிகாரம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது ஏன் பாய மறுக்கிறது? அக்குற்றவாளிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணையில் நிற்கவில்லை. அக்குற்றவாளிகளைத் தப்புவிக்கும்படி மொன்னையாக வழக்குகள் புனையப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, சட்டம் அவர் மீது பாயவில்லை. மாறாக, அவர் தனது அதிகாரத்தையும் சட்டத்தையும் முறைதவறிப் பயன்படுத்தித் தன் மீது குற்றஞ்சுமத்திய பெண்ணையும் அவரது உறவினர்களையும் பழிதீர்த்துக் கொண்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட கவர்னர் தாத்தா பன்வாரிலால் புரோகித், தானே ஒரு விசாரணைக் கமிசன் அமைத்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இப்படிச் சட்டத்தின் பாரபட்சம் குறித்துக் கூறிக்கொண்டே போகலாம்.
சமூகத்தின் மேல்மட்டம், கீழ் மட்டம் என்ற வேறுபாடின்றி, இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பே தந்தை வழி ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் ஊறிப் போயிருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும், ஒதுக்குதலும் அன்றாட நிகழ்வுகளாகி, அதனை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பெண்கள், சிறுமிகள் மீது நடத்திப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கோபங்கொள்ளும் பலரும்கூட, பெண்கள் நுட்பமாக ஒடுக்கப்படுவதை, ஆணுக்குக் கீழானவள்தான் பெண் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
பருவ வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். கும்பல் மட்டும் எதிர்க்கவில்லை. அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும்கூட எதிர்த்துப் பேசினார்கள். பின்னர் அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றமே நிறுத்திவைத்துப் பெண்களுக்கு அநீதி இழைத்தது.
இந்திய இராணுவத்தின் போருக்குச் செல்லாத படைப்பிரிவுகளில் பெண்களை கர்னல் மற்றும் அதற்கும் மேம்பட்ட உயர் பதவிகளில் நிரந்தர அதிகாரிகளாக நியமிப்பதை மைய அரசும், இந்திய இராணுவம் எதிர்த்து நின்ற கேவலத்தைச் சமீபத்தில் நாம் கண்டோம். இத்தகைய தீண்டாமைகள் பெண்ணுடலின் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு இணையானவை.
பெண்களை வீட்டுவேலைகளைச் செய்யும் வேலைக்காரியாக, பிள்ளைபெறும் எந்திரமாகக் கருதும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கக் கண்ணோட்டத்தோடு, பெண்ணை நுகர்வுப் பண்டமாக, போகப்பொருளாகக் கருதும் மறுகாலனியாக்க கலாச்சாரச் சீரழிவும் நம்நாட்டில் வேரூன்றியுள்ளது. இந்த அழுகிப்போன சமூகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை, போராட்டங்களைத் தீவிரமாக நடத்தாமல், சட்டங்களை மட்டுமே நம்பியிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும். இந்தச் சட்டங்கள் பல சமயங்களில் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை என்பதே உண்மை.
மேகலை