லகம் முழுவதும் கோவிட்-19 பொதுமுடக்கம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது. கோவில் -19 பெரும் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் கடந்தும் நம்மை பல்வேறு வகையில் அது துன்புறுத்தி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

உலகம் முழுக்க எல்லா நாடுகளும் இதைப்பற்றி பேசி கொண்டுயிருக்கையில் இந்தியா ஓரு பக்கம் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சுழல் ஆய்வு மேலாண்மை EIA-2020, இரயில்வே தனியார்மயம், பொதுத்துறை தனியார் மயமாக்கம் என நோய் தொற்றை கவனிக்காமல் தனியார் லாப நோக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஊடக சுதந்திரம், முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு, ராமர் கோவில் பூஜை என வேறு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்நேரத்தில் அதிகரித்து வருவதில் நாம் அதுகுறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என பேசுகின்றன. இதைப்பற்றி பிரபல நாளேடுகளான நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற தளங்கள் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்களை துவங்கி நடத்திவருகின்றன.

அதிலும் பொது முடக்கத்தில் பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சுழலை உண்டாக்கியுள்ளது. அலுவலகப்பணி மற்றும் வீட்டுப் பணிகள் என இரண்டும் சேர்ந்து வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களின் குழந்தைகள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க வேண்டிய உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதே போல பொது முடக்க காலத்தில் இனணயத்தில் ஆண்கள் அதிமாக போர்ன் (Porn) வீடியோக்கள் பார்பதும் அதிகரித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சார்ந்த பாலியல் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகிறது என உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பாலியில் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது மேலும் Sex Traffic -ஐ ஊக்கவிக்க வகை செய்கிறது. ஆன்லைன் பாலியில் சீண்டல், குடும்ப வன்முறை என ஒருபக்கம் இப்படி எனில் மறுபக்கம் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பொது முடக்கத்தின் போது சுமார் 5,584 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. ஆனாலும் அதுவும் கூட குறைவே. நமக்கு தெரியாமல் ஆயிரம் ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் 118, ஆந்திராவில் 204, தெலுங்கானாவில் 165 என நாடு முழுக்க பல இடங்களில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டாலும், வட மற்றும் மத்திய இந்தியாவில் இது கணிசமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.

படிக்க:
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

இதைப்போன்றே UNICEF ஆய்வறிக்கையில் 2017-ல் இந்தியாவில் 27% பெண்குழந்தைகள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் அதிலும் குறிப்பாக 7% குழந்தைகளுக்கு 15 வயதிற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது என சொல்கிறது. இந்த கோவிட்-19 பொதுமுடக்கம் மக்களிடம் கணிசமான வேறு சில உந்துதலையும் ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக குறைந்த செலவில் திருமணம், வரதட்சனை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. உலகப் பார்வை என்ற அமைப்பு அதிகரித்து வரும் கொரானவால் “மேலும் 4 மில்லியன் கட்டாய குழந்தை திருமணத்திற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது. காலவரையற்ற பள்ளி மூடல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழ்நிலை என எல்லாம் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

குழந்தை திருமணமும் கிராம-நகர்புற இடைவெளியும்

NFHS-4 வெளியிட்ட குழந்தை திருமணங்கள் குறித்த ஆய்வில் கிராமப்புறத்தில் 14.1 % -மாகவும் இது நகர்புறத்தில் 6.9% இருப்பதாக தெரிவிக்கிறது. இந்த இடைவெளி என்பது சுமார் 9% சதவிதம் கல்வியும், வேலைவாய்ப்பு, பொருளாதாரத்திலும் நகரத்தைவிட கிராமங்களில் பின் தாங்கிய சூழ்நிலையிலே இத்திருமணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது.

பீகாரை சேர்ந்த 37 வயதான மீனா தனது 15 வயது மகளுடன் டில்லியில் புலம் பெயர் தொழிலாளாராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கிராமத்தில் உறவினர்களுடன் படித்து வருகிறான். பெண் குழந்தை என்பதால் தனியாக கிராமத்தில் விடமுடியாத சூழ்நிலையில் தங்களுடன் டில்லிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றும் கூறுகிறார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தனது மகளுக்கு ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு முன் வரதட்சனை பணத்தை கொடுக்க வேண்டும். சமூகத்தில்  பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என கருதுவது திருமண சடங்கை மட்டுமே. இதற்கு காரணமாக பெண்களின் பாதுகாப்பு, வயது கூட இருப்பின் அதிகமான வரதட்சணை, அவளின் ‘கன்னித்தன்மை’ பாதுகாப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில் எங்கு நாம் அவர்களிடம் பெண்ணின் உரிமையை பற்றி பேசுவது!? இங்கு தான் இந்த இடைவெளி ஏழைக்கும் பணக்காரர்களுக்குமானது என்பது புரிகிறது. குறிப்பாக இச்சூழல் புலம்பெயர் தொழிலாளர்களின் மகள்களை கட்டாய திருமணத்திற்கு தள்ளுகிறது. பொதுமுடக்கம் போன்ற பல காரணங்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் கால்களுடன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் என்றால் பருவமழை முன்னே பெய்ததால் அசாம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த சுழ்நிலையில் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு செய்யும் சடங்காக எண்ணி, அதைச் செய்வது மேலும் அதிகரித்து வருகிறது.

படிக்க:
நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

Prohibition of Child Marriage Act 2006, என்ற சட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்கமுடிவதில்லை. மேலும் PCM Act 2006, நிறைவேற்றப்பட்டத்திலிருந்து 2017 வரை இப்படியான திருமணங்களின் மூலம் நடக்கும் உடலுறவு, பாலியல் வன்முறையாக கருதப்படவில்லை. அது திருமணத்தின் ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. பின் 2017-ற்கு பிறகு Independent through vs Union of India வழக்கு பதிவுச் செய்து 15 வயதிலிருந்து 18 வயதாக மாற்றி பிரிவு 375 IPC -இன் கீழ்  குழந்தைகளுக்கு எதிரானது என வரையறுக்கப்பட்டது. மேலும் இக் குழந்தைகளிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்வதும் தவறு எனவும், அவை கற்பழிப்பாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

பாலியல் சுரண்டலுக்காக அதிகரிக்கும் குழந்தை கடத்தல் :

கோவிட்-19 பொது முடக்கத்தில் மற்றொரு பாதிப்பு குழந்தை கடத்தல். இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டில்லியில் 15 வயது சிறுமி காணாமல் போனது குறித்து விசாரித்ததில் 9 குழந்தைகள் ஒரே சமயத்தில் வடக்கு டில்லியில் மீட்கப்பட்டனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 89 சதவீதம் பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளை உழைப்புக்காக கடத்துவது பொதுமுடக்கத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் “மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக” இருக்கும் என்று கூறியுள்ளனர்.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், உழைப்பு நோக்கத்திற்காக, பொதுமுடக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் மனித கடத்தல் அதிகரிப்பதற்கு “மிக அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில், 76% பேர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கடத்தல் ஆகிய நோக்கத்திற்காக மனிதக் கடத்தலை செய்கின்றனர் என்றும். கிராமப்புறங்களில் அதிக கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு முக்கிய தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.

வாழ்வாதாரத்தை இழந்து பசி மற்றும் பட்டினியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், குழந்தை கடத்தல் உட்பட அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். கடத்தலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது தொற்றுநோய்க்குப் பிந்தைய மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்க கடத்தல் நடக்கும் பகுதிகளில் ஒரு பரந்த கட்டாய பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கள் அறிக்கையின் மூலம் நாங்கள் அரசிடம் பரிந்துரைக்கிறோம்,” என்று கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சங்கர் கூறுகிறார்.

தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளை கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை. மன அழுத்தத்திலிருந்து, நிதி உறுதியற்றதன்மை மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் இல்லாமை வரை, வைரஸ் அனைத்து வயதினருக்கும் மற்றும் நாடுகளுக்கும் உள்ள பெண்களுக்கு கடுமையான பாதிப்பை தந்துள்ளது. இந்த அதிகரித்த சுமை பல பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநல பிரச்சினைகளை உருவாக்குக்கிறது. ஏராளமான பெண்கள், சமூக தனிமைப்படுத்தலின் விளைவாக கோபம் மற்றும் அதிக அளவு விரக்தியையும் அனுபவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான தேசிய ஆணையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உதவி எண்களை அறிவித்து இருந்தனர். இருந்தும் இப்படி நாடு முழுக்க குடும்ப வன்முறை, குழந்தை கடத்தல், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அரசு இதை கவனிக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. இதை தொடர்ந்து கேரள அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனர் அனுபாமா குறுச்செய்தி / வாட்ஸ் ஆப் மூலம் மித்ரா 181 சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராட்ஷாவில் பெண்கள் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையெல்லாம் பெண்களை விட ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அனைத்து பெண்களின் கோரிக்கையாக வைக்கின்றேன்.

சிந்துஜா சமூக ஆர்வலர்.

1 மறுமொழி

  1. கலாச்சார சீரழிவின் pornography உச்சமாக உலகளவில் ஒரு பொருளாதாரமாகவே உருவெடுத்துள்ளது என அறிஞர்கள் வரையறுத்து அறிவுருத்தியுள்ள சூழலில், குழந்தைகளும் மனிதர்களும் கடத்தப்படுவது கொத்தடிமை உழைப்பு, பாலியல் , குழந்தை திருமணம் என்பதை விஞ்சிய உறுப்புகள் கொள்ளைகளும் ,மூட மத நரபலி வக்கிரங்களும் இங்கு அரங்கேறி வருகின்றன… ஆதலால் வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வ குழுக்களின் கணிப்புகளை தாண்டி, மக்கள் கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்படவேண்டும், போலிஸ் மீது நம்பிக்கை இழந்துள்ள சூழலில்,பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள (CCTV camera) கண்காணிப்பு கேமராக்களின் பதிவோட்டத்தை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பொது மக்களும் காண்பதற்கான செயலியை அரசை தாமதமின்றி மிக அவசியம் கருதி உடனடியாக அறிமுகம் செய்ய வலியுறுத்தல், அதற்கான வழக்கு தொடுத்து ஆணை பெறுதல் போன்ற கூடுதல் முயற்சி நடவடிக்கைகளும் துரிதமாக துவங்க வேண்டும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க