மூணாறு பெட்டி முடி நிலச்சரிவினால் ஏற்பட்ட மரணங்கள், இயற்கைப் பேரழிவு அல்ல, டாடா நிர்வாகம் மற்றும் கேரள அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, 12.08.2020 அன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களுக்கும் தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
- உயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
- மாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி – என அனைத்துப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
- தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
- தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
- இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.
தொடர்ச்சியாக உடனுக்குடன், உறுதியுடன் போராட்டங்களை முன்னெடுக்கும் நெல்லை, தூத்துக்குடி மக்கள் அதிகாரத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
உங்களது கோரிக்கைகளில் சில விமர்சனங்கள்:
//தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.//
“மக்கள் திரளுடன் இணைய வேண்டுமானால், மக்களின் தேவைகள் விருப்பங்களின்படி செயல்பட வேண்டும். மக்களுக்காக செய்யும் வேலைகள் எல்லாம் அவர்கள் தேவையிலிருந்து தொடங்க வேண்டும், ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கக் கூடாது. பல சந்தர்ப்பங்களில், புற நிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட்டமாற்றம் தேவைப்படுகின்றது. ஆனால் அக நிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமது வேலைகள் மூலம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதைச் செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்திற்கு வரும் வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லாவிட்டால் நாம் மக்கள் திரளிடமிருந்து தனிமை படுத்தப்பட்டு விடுவோம். மக்கள் திரள் பங்குபெற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணர்ந்து, செய்ய விரும்பாவிட்டால், அதுவெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வி அடைந்துவிடும்… இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு: ஒன்று, மக்கள் திரளின் உண்மைபான தேவைகள் அன்றி, அவர்களுக்கு தேவை என்று நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு, மக்கள் திரளின் சுயவிருப்பம், நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதை தயார் செய்வதற்கு பதில் அவர்கள் தமது மனதை தாமே திடப்படுத்த வேண்டும்.” (மாவோ மேற்கோள்கள்.)
“மக்களிடமிருந்து மக்களுக்கு” என்ற கோட்பாட்டில் கடுகளவுக்கு கூட தவறிழைக்கக் கூடாது. ஒருவேளை டாட்டாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உணர்வு மட்டத்திற்கு அப்பகுதி மக்கள் வந்துவிட்டால் தவறில்லை, இல்லை என்றால் இக்கோரிக்கைகளை பரிசீலிணைக்கு உட்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். “மக்களிடமிருந்து மக்களுக்கே” என்பது வெறும் மக்களிடம் மாணவனாகவும், அதே சமயத்தில் ஆசிரியனாகவும் இருப்பதை மட்டும் குறிப்பதல்ல, புறநிலை எந்த வரம்பு நம்மை அனுமதிக்கிறதோ அந்த வரம்பிற்கு உட்பட்டு தான் நமது செயல்பாடு, முழக்கம், கோரிக்கை என அனைத்தும் இருக்க வேண்டும். இல்லையேல் பாரிய தவறிழைத்து மக்களிடமிருந்து தனிமைப் பட்டுவிடும் அபாயம் உள்ளது. மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகள் மற்ற எல்லாவற்றிலும் இதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் போராட்டம் தொடரட்டும், வெல்லட்டும், கூடிய விரைவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுடன்…
நன்றி.