மேற்குவங்கம், இந்தியா : இந்தியாவின் கிழக்குப்புறம் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, இவை பிரிட்டிஷ் ஆட்சிக்காலந்தொட்டே இங்கு இருந்துவருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பகுதி மலைவாழ் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இந்த தோட்டங்கள் ஒரு வாழ்வாதாரமாக இருந்தது. இவை மெதுவாக மூடப்பட ஆரம்பித்தப்பின், அந்த பகுதியைச் சேர்ந்த பெருவாரியான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனது, இது அவர்களை கட்டாய இடப்பெயர்வுக்கு இட்டுச்சென்றது.

தன்னை டீ வித்தவன் என பெருமையாக கூறிக்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, ‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’ என இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தார்.

ஆனால், தொழிலாளர்களின் நிலை மாறவில்லை. பெரும்பாலானோர், குடிபெயர்ந்துவிட்டனர், எஞ்சியிருப்போர், தினக்கூலிகளாகயினர் -இவர்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

படிக்க:
சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?

கடந்த மாதம் (ஆகஸ்டு-2019)  நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால்,  இந்தச் சட்டம் தேயிலைத் தோட்டங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

“தேயிலையின் சந்தை வீதமும் அதை உற்பத்தி செய்வதற்கான மொத்தச் செலவும் கட்டுப்படியாகாமல் பல தோட்டங்கள் மூடப்பட்டது… [அது] தொழிலாளர்கள் சம்பாதிக்க பிற ஆதாரங்களை தேடவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது” என்று நெயில் செத்திரி, என்ற அரசு அலுவலர் தெரிவித்தார்.

ஒரு நாள் வேலைக்குப் பிறகு தேயிலை விவசாயிகள் வீடு திரும்புகின்றனர். சிலர் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பை பெறுகின்றனர் என்றாலும், கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களாக வேலை செய்பவர்களுக்கு இங்கு எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை.

மீனு லோகார், தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் அவரது குடும்பத்தினரால், புது டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.

பல பழங்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் வருமானத்தை நிரப்புவதற்கு, பள்ளியை விட்டுவிட்டு, கிடைத்த வேலைகளை செய்கின்றனர். புகைப்படத்தில் உள்ள குழந்தைகள் சந்தையில் விற்கப்படும் மரக்கட்டைகளை கண்டுபிடிக்க அவர்களின் உயிரை பணயம் வைக்கிறார்கள். நிரம்பப் பாயும் நதி பல உயிர்களை காவு கொண்டுள்ளது.

அகிலா லோகார் : 35 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய பின்னர், நிர்வாகத்தின் தவறான நடத்தை மற்றும் முறைகேடுகள் உட்பட, தானும் அதேபோல் தவறாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இவரது மகன் சாரதா மொஹாலி, 22, இவர், டூர்ஸ் டிவி என்ற ஒரு யூடியூப் சேனல் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்.

ஒரு விவசாயி, வேலை நேரத்தின் இடைவேளையில், நிரம்பி வழியும் நதியைக் கவனிக்கிறார். தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்ட பின்னர் டஜன் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அல்லது பட்டினியால் இறந்துள்ளனர்.

குவாரிகளில் இருந்து கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, டோஅர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஆற்றை கடக்கிறது. கல் உடைப்பது பல விவசாயிகளுக்கு ஒரு மாற்று வருவாய் ஆதாரமாக உள்ளது.

தூரிவில் பீர்பாரா பகுதியில் கல் ஏற்றும் இடத்தில் ஒரு தொழிலாளி. 20 கி. மீ. தொலைவில் உள்ள பூடான் மலைப் பகுதியிலிருந்து கனரக கற்கள் வருகிறது, சிறிய சிறிய துண்டுகளாக இங்கு  உடைக்கப்பட்டு பிறகு ரயில் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

டோஅர்ஸ் பகுதி பீர்பானில் உள்ள கல் உடைக்கும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பிறகு ஒரு சமுதாயமாக குளிக்கும் காட்சி.

கல் உடைக்கும் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் காட்சி.

கற்களை ஏற்றிச்செல்லும் கூட்ஸ் ரயில் ஒரு பாலத்தின் இடையில் நிற்கிறது. இந்த ரயில் கற்களை நாடுமுழுவதும் கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச்செல்லும்.

புஷ்மா டி, தற்போது மூடப்பட்ட பண்டப்பாண்டி தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு சமூகப் பணியாளர், தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டுறவை ஆரம்பித்திருக்கிறார்.

தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டபின், பல இளைஞர்கள் தங்கள் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேலை தேடி பிற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த குழந்தைகளும் தங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தங்கள் சகோதரர்களையும் வீட்டையும் பராமரித்து வருகின்றனர்.

ஒரு பழங்குடி பெண் அரசாங்க சுகாதார நிலையத்தில் மருத்துவம் பெறுகிறார்.  ஊட்டச்சத்து குறைபாடும் தொற்று நோய்களும் இப்பகுதியில் பொதுவாக தென்படுபவை.

வினவு செய்திப் பிரிவு
செய்தி ஆதாரம் : Plight of India’s tea plantation workers
தமிழாக்கம்  :
மூர்த்தி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க