காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி.

காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் வெடிக்கச் செய்து, பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் மீண்டும் பேசுபொருளாக்கிவிட்டார் மோடி. இந்தச் சாதனையில் தனக்கே தெரியாமல், அவர் நேருவை விஞ்சிவிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த சந்திப்பு.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஐ.நா. மன்றத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. ஊரடங்கைத் தளர்த்த வேண்டும், இணையம், தொலைபேசி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், செயல்வீரர்கள், மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வலியுறுத்தியிருப்பதுடன், காஷ்மீர் மக்களுடைய எதிர்காலம் குறித்த எந்தவிதமான முடிவையும் காஷ்மீர் மக்களையும் ஈடுபடுத்தித்தான் எடுக்கவேண்டும்” என்றும் கூறுகிறது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஹை கமிசனர் மிஷல் பேசலட்டின் அறிக்கை.

ஐ.நா. தீர்மானங்களையும் சிம்லா ஒப்பந்தத்தையும் மனித உரிமைகளையும் இந்தியா மதிக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்பது இருதரப்புப் பிரச்சினை அல்ல. மனித உரிமை மீறல் குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்படவேண்டும்” என்று கூறியிருக்கிறது பிரிட்டிஷ் அரசு.

காஷ்மீர் பிரச்சினையை அம்மக்களின் விருப்பத்தின்படி ஐ.நா. மன்றம் தீர்க்கவேண்டும்; அமெரிக்க அரசு அதற்கான நடவடிக்கையைத் துணிவுடன் எடுக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறியிருக்கிறார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறைப் பிரிவும் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன.

காஷ்மீரைப் பேசவிடு” என்ற முழக்கத்தின் கீழ் இந்திய அரசைக்
கண்டித்து பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம்.

காஷ்மீரைப் பேசவிடு” என்ற உலகு தழுவிய பிரச்சார இயக்கத்தை அம்னஸ்டி இன்டர்நேசனல் தொடங்கியிருக்கிறது. இவை மேற்குலகின் எதிர்வினைகள்.

காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலையை அட்டியின்றி ஆதரித்து வந்த ரசியாவின் குரலும் மாறிவிட்டது. இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் சரி, மத்திய ஆசியாவிலுள்ள கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகளிலும் சரி மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிரான பொதுக்கருத்து அரசியல் அரங்கில் வலுப்பெற்றிருக்கிறது.

சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசை மட்டுமின்றி, மோடி அரசுக்குக் காவடி தூக்கும் இந்திய ஊடகங்களையும் காறி உமிழ்ந்திருக்கின்றன.

விரைவிலேயே இயல்பான அரசியல் தகுதிநிலைக்கு காஷ்மீர் திரும்பும் என்று நம்புவதாக” ஆகஸ்டு இறுதியில் கூறிய அமெரிக்க அரசின் அறிக்கை, அரசியல்வாதிகளை உடனே விடுவி, தேர்தலை உடனே நடத்து” என்று செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிப்படையாகவே மோடிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய கண்டனங்களைச் சமாளிக்க நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இருப்பினும், பாகிஸ்தானின் கண்டனமும்,  ஐ.நா.-வில் சீனா கொண்டு வந்த தீர்மானமும் தவிர, மற்ற உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள்
கவுன்சில் ஹை கமிசனர்
மிஷல் பேசலட்.

குறிப்பாக, வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய இசுலாமிய நாடுகளைப் பணத்தால் அடிப்பதன் மூலம் (இந்திய மக்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம்) அவர்களின் வாயைக் கட்டி, இசுலாமிய நாடுகளே இந்தியாவைத்தான் ஆதரிக்கின்றன என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது.

ரிலையன்ஸில் முதலீடு, இந்திய அரசுடன் இணைந்து பெட்ரோகெமிக்கல் ஆலைகள், உள்கட்டுமானத்துறை முதலீடுகள் எனப் பல இலட்சம் கோடி முதலீடு செய்யும் சவுதியும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் தங்களது ஆதாயம் காரணமாக மவுனம் சாதிக்கின்றன. இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனம் முதல் இராக், இரான் வரை அனைவரையும் காட்டிக்கொடுத்த ஷேக்குகள், காஷ்மீருக்கும் அதேவிதமான துரோகத்தைச் செய்கிறார்கள்.

உம்மா என்பதெல்லாம் சும்மா என்றும், சர்வதேச இசுலாமிய சகோதரத்துவம் என்பதெல்லாம் பணக்கார ஷேக்குகளின் வர்க்க நலனைக் காப்பாற்றுவதற்கான தந்திரம் என்றும் பாக். ஊடகங்களே எழுதுகின்றன. இந்த உண்மை முஸ்லீம் மக்கள் மத்தியிலேயே அம்பலமாகியிருப்பது, இத்தீமையில் விளைந்திருக்கும் ஒரு நன்மையாகும்.

♦♦♦

ட்டப்பிரிவு 370- நீக்குவது என்ற தங்களது அடிப்படைக் கொள்கையை நிறைவேற்றிவிட்டதாக மோடி அரசு ஜம்பமாக கூறிக்கொண்டாலும், ஆகஸ்டு 5- தேதியன்று அவசரமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு வேறு பின்புலங்களும் உள்ளன. ஜுலை தேதியன்று பாக். பிரதமர் இம்ரான்கானுடன் ஊடகங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இருநாடுகளுக்குமிடையே பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்குமாறு மோடி தன்னிடம் கோரியதாகவும் அதற்குத் தான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பதாகவும்” கூற, அதை இம்ரான் உடனே வரவேற்றார். மோடி அவ்வாறு கேட்கவில்லை என்று ஈனசுரத்தில் அவசரமாக மறுப்பு வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை.

ஆகஸ்டு 2- தேதி ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், நான் இரண்டு பேரிடமும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன். அவர்கள் உடன்பட்டால், நிச்சயம் நான் தலையிடுவேன்” என்று மீண்டும் அறிவித்தார். இதற்குப் பிறகு ஆகஸ்டு 5- தேதி வருகிறது மோடி அரசின் அறிவிப்பு.

அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள்.

காஷ்மீர் விசயத்தில் டிரம்ப் இந்தளவு அக்கறை செலுத்தக் காரணம் இருக்கிறது. தாலிபானை ஒழிப்பதற்காக 2001- ஆப்கானுக்குப் போன அமெரிக்கா, 2000 சிப்பாய்களைப் பறிகொடுத்திருக்கிறது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டிரம்ப், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக். உதவியை நாடியிருக்கிறார். இதற்கு ஈடாக, இந்தியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானில் தனிநாடு கேட்டுவரும் பலூசிஸ்தான் விடுதலைப் படையைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பிரச்சினையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாக். பேரம் பேசியிருக்கிறது. பலூச் விடுதலைப் படையைச் சர்வதேச பயங்கரவாத இயக்கமென்று அமெரிக்கா ஜூலை மாதமே அறிவித்துவிட்டது. இரண்டாவது கோரிக்கையின் விளைவுதான் டிரம்பின் காஷ்மீர் பஞ்சாயத்து குறித்த பேச்சு.

மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று மோடி இப்படி வீராப்பு பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆகஸ்டு 20 தேதியன்று டிரம்ப் காஷ்மீர் குறித்து அளித்த பேட்டியில், காஷ்மீர் அபாயகரமான நிலையில் உள்ளது, அங்குள்ள முஸ்லீம் மக்கள் ஆட்சியாளர்களை விரும்பவில்லை, அங்கே இந்து, முஸ்லீம் முரண்பாடு உள்ளது” என்றெல்லாம் விவரித்து விட்டு,  தான் தலையிட்டுத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக” மீண்டும் பேசியிருக்கிறார். ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு” என்று கூறுகிறார்கள் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

அதுமட்டுமல்ல, தன்னை பாசிஸ்டு என்று இம்ரான் தாக்குகிறார், பதட்டத்தைக் கூட்டுகிறார் என்று மோடி தன்னிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தார் என்றும், உடனே இம்ரான்கானை அழைத்து தான் பேசியதாகவும் தனது பஞ்சாயத்து குறித்து டிவிட்டரில் எழுதி, மோடியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார் டிரம்ப்.

காஷ்மீர் பிரச்சனையில் டிரம்ப் அவ்வாறு பேசக் காரணம் பாகிஸ்தானின் நிர்ப்பந்தம் மட்டுமல்ல, இரான், வெனிசூலா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்காவின் பால் மோடி அரசு காட்டி வரும் அடிமைத்தனமான அணுகுமுறையும் டிரம்பின் இந்த அணுகுமுறைக்குக் காரணமாக அமைகின்றன.

இரான், வட கொரியா, நிகராகுவா, வெனிசுலா, ஆப்கான் என்று தலையிட்ட எல்லா நாடுகளிலும் தோல்வியைத் தழுவிய டிரம்ப், தனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் போல்டனைப் பதவி நீக்கம் செய்து விட்டு, மீண்டும் வட கொரியாவுடனும் இரானுடனும் சமரசம் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தங்களுடனான பேச்சுவார்த்தை முறிந்து போனது குறித்து அமெரிக்கா வருத்தப்படவேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கும் தாலிபான், தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுதான் வல்லரசு அமெரிக்காவின் தற்போதைய நிலை. அத்தகைய அமெரிக்காவிடம்தான் பல்லிளிக்கிறது மோடி அரசு.

காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தெரிவித்திருக்கும் கண்டனங்கள் சர்வதேச அரசியல் கருத்துருவாக்கத்துக்குப் பயன்படக்கூடுமேயன்றி, அந்த ஏகாதிபத்தியங்கள் காஷ்மீர் மக்களின் உரிமையை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை. இப்பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல், பொருளாதார, இராணுவரீதியாக இந்தியாவின் கையை முறுக்கி அடையக்கூடிய ஆதாயங்களே அவர்களது இலக்காக இருக்கும். அந்த வகையில் காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபிய ஷேக்குகள், அமெரிக்க முதலாளிகள் போன்ற அனைவரின் மவுனத்தை விலைக்கு வாங்குவதற்கு பல்லாயிரம் கோடி டாலர்களை மோடி அரசு அவர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. பார்லே பிஸ்கெட் வாங்க முடியாத இந்தியர்கள்தான் காஷ்மீர் பெருமைக்காக இந்த விலையைக் கொடுக்கவேண்டும்.

மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஏற்கமாட்டோம் என்பது இந்தியாவின் வெற்று வீராப்பு. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தலையிட்டுத்தான் கார்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. … ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டுப் பேசியது முன்னெப்போதும் நடந்திராத வெட்கக்கேடு.

அதுமட்டுமல்ல, மதவாத அரசியலுக்கு ஆட்படாத காஷ்மீர் இளைஞர்களும் அதற்குப் பலியாவதற்கான வாய்ப்பையும், இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் பெருகுவதற்கான வாய்ப்பையும், பாகிஸ்தான் உளவுத்துறை காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டுப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பையும் மோடி அரசின் இந்த நடவடிக்கை தோற்றுவிக்கும்.

ஆப்கானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் தாலிபான், கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான இன்னொரு தோற்றுவாய்.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எப்போதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று ராஜ்நாத் சிங் கூறியதற்குப் பதிலடியாக முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை எங்களுக்கு என்றைக்குமே இருந்ததில்லை” என பாக். இராணுவ ஜெனரல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

தனது தலையாய இலட்சியம் என்று கூறிக்கொள்ளும் ராமன் கோயில் விவகாரத்தை, அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க. பலமுறை பற்ற வைத்திருக்கிறது, ஆறப்போட்டுமிருக்கிறது. அதே போல அபாயகரமான பொருளாதார வீழ்ச்சியையும் பலமுனைத் தோல்வியையும் மறைப்பதற்கு காஷ்மீர் நடவடிக்கையைத் தற்போது மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.

கருப்புப் பண ஒழிப்பு என்று சித்தரிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை எப்படிச் சிறுதொழில், சுய தொழில்களை ஒழித்துக் கட்டியதோ அதே போல, காஷ்மீரின் உரிமை பறிப்பு என்று இந்தியர்கள் கருதிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை, இந்தியர்களின் உரிமை பறிப்பில் வந்து முடியும். தேசவெறி, போர், பயங்கரவாதம் என்ற பேரழிவுப் பாதைக்குள் இந்தியாவை இழுத்துச் செல்லும். தங்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கே இந்தியர்கள் அனைவரும் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தாக வேண்டும்.

– சூரியன்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

 1. இந்த கட்டுரையை நான் படிக்கவில்லை படிக்காமலே நான் இதில் என்ன சொல்லப்பட்டு இருக்கும் என்பதை சொல்ல முடியும்.

  பாக்கிஸ்தான் ஒன்றுமே தெரியாத அப்பாவி தேசம்

  இந்தியா மோடி போன்ற பாசிஸ்ட்கள் மூலம் காஷ்மீரை பிடித்து வைத்து கொண்டு அடாவடி செய்கிறது.

  மோடியின் அமெரிக்கா பயணம் பெரும் தோல்வி

  உண்மையான பாசிஸ்ட் இம்ரான் கான் மற்றும் இந்தியாவில் இருக்கும் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் தான். இம்ரான் கானை பொறுத்தவரையில் பாக்கிஸ்தான் இஸ்லாமிய தேசமாக இருப்பதில் தவறில்லை ஆனால் இந்தியா ஹிந்து தேசமாக மாறுவது தவறு. இதே போன்ற வக்கிர மனம் கொண்ட கொள்கை தான் இந்தியா கம்யூனிஸ்ட்களுக்கும்.

  பாக்கிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்காக காஷ்மீரில் 42000 உயிர்கள் பலியானது பற்றி உங்களுக்கு துளியும் கவலையில்லை. அந்த மக்களை வெளியே விட்டு அவர்களை கல்லெறிய வைத்து அவர்கள் மேலும் பலியாக வேண்டும் அது தான் உங்களை போன்றவர்களின் நோக்கம், அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக தான் இவ்வுளவு அவதூறுகளும் பொய்களையும் உங்களை போன்ற அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

  • என்ன மணி மாமா…

   நீர் என்னைக்குத் தான் கட்டுரைய படிச்சிட்டு கருத்து சொன்னீரு …. கட்டுரைய படிச்சிருந்தா இந்நேரத்துக்கு மாட்டு மூளை மனுச மூளையா பரிணமிச்சிருக்குமே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க