கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 08

முதல் பாகம்

பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது

ந்த முறையில் பொதுவுடைமைவாதச் செல்வாக்கின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட புதிய தலைமையானது, செயலூக்கமுள்ள தொழிலாளர் குழுக்களை ஒன்றுகுவிப்பதன் மூலமாக புதிய சக்தியாக்கிக் கொள்கிறது. சோசலிஸ்ட் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையை உந்தி முன்தள்ளுவதற்கு அல்லது அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கு இந்தச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

நமது கட்சி மிகச் சிறந்த நிறுவனங்களைப் பெற்றும் அதன் கோரிக்கைகளுக்காக மிகப்பெரும் ஆதரவைப் பெற்றும் உள்ள தொழிற்பகுதிகளில், உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்துறை கவுன்சில்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட நிர்பந்தத்தைக் கொடுப்பதன் மூலம் அப்பகுதிகளில் அங்குமிங்குமாக நடைபெறுகின்ற பொருளாதாரப் போராட்டங்களையும் இதுபோலவே பிற குழுக்களின் வளர்ந்துவரும் போராட்ட இயக்கத்தையும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டமாக வெற்றிகரமாக இணைக்க வேண்டும்.

இதன் பின்னர் இந்த இயக்கமானது, குறிப்பிட்ட தொழிற்கிளை நலன்களுக்கு அப்பாற்பட்டு ஆரம்ப நிலை கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து இவற்றை நிறைவேற்றுவதற்கு போராட முன்வர வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள எல்லா நிறுவனங்களின் ஒன்றுபட்ட சக்திகளையும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய இயக்கத்தில் போராட்டத்திற்குத் தயாராக உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரின் தலைவனாக பொதுவுடைமைக் கட்சி தன்னை நிரூபித்துக் கொள்ளும். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை எதிர்க்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவமும் “சோசலிஸ்ட்” கட்சியும் அவற்றின் சொந்த நிறத்தைக் காட்டி அரசியல் ரீதியில் மட்டுமின்றி, நடைமுறை நிறுவன ரீதியிலான கண்ணோட்டத்திலும் தம்மை அம்பலப்படுத்திக் கொள்ளும்.

ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி?

34. புதிய இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்ற கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது மக்கள்திரளினரைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பொதுவுடைமைக் கட்சி முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர்த்து சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுப்பது மிகச் சிறப்பானதாக அமையும். தீர்மானகரமான போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட அவர்களது அதிகாரத்துவத் தலைவர்கள் எத்தணிப்பதையும் மீறி எவ்வாறு வறுமையும் ஒடுக்குமுறையும் அவர்களைத் தமது எஜமானர்களுக்கு எதிராக வேறுவழியின்றிப் போராடும்படி தள்ளி வருகின்றன என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்சியின் பத்திரிகைகள் குறிப்பாக தினசரி ஏடுகள், நாள்தோறும் வலியுறுத்த வேண்டியது என்னவெனில், அப்போதைய நெருக்கடியான நிலையில் பொதுவுடைமையாளர்கள் நிராதரவான தொழிலாளர்களின் எதிர்வரும் மற்றும் நடைமுறைப் போராட்டத்திற்குத் தலைமையேற்கத் தயாராய் இருக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்களின் போரிடும் நிறுவனம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது – என்பதையே. இந்தப் போராட்டங்கள் இன்றி – பழைய நிறுவனங்கள் இப்போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் அவற்றுக்குத் தடையேற்படுத்துவதற்கும் எவ்வளவுதான் முயன்ற போதிலும் – தொழிலாளர்களின் வளர்ந்துவரும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை என்பதை நாம் நாள்தோறும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பொதுவுடைமைவாத பிராக்சன்கள் பொதுவுடைமையாளர்கள் சுயதியாகத்துக்குத் தயாராய் இருப்பதையும் இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதையும் சக தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாயினும், அப்போதைய நிலைமையில் எழுகின்ற எல்லா போராட்டங்களையும், இயக்கங்களையும் ஒன்றுபடுத்துவதும், உறுதிப்படுத்துவதும் பிரதானக் கடமையாகும். போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ள தொழிற்துறை மற்றும் கைவினைத் தொழிலில் உள்ள கருக்குழுக்கள், பிராக்சன்கள் அனைத்தும் தமக்குள் நெருக்கமான இணைப்புகள் வைத்திருப்பது மட்டுமின்றி, வெடித்து எழக்கூடிய எல்லா இயக்கங்களுக்கும் தலைமை அளிக்கவும் வேண்டும். போராட்டத்தை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அதைப் பரவலாக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கரம் கோர்த்து பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்புள்ள ஊழியர்களை உடனுக்குடன் அனுப்பி மாவட்டக் கமிட்டிகளும் மத்தியக் கமிட்டிகளும் இயக்கத்துக்குத் தலைமை அளிக்க வேண்டும்.

அவசியமானால், அரசியல் வழியில் பிரச்சினைக்குப் பொதுத் தீர்வு காணும் கருத்தை வளர்ப்பதற்காக அனைத்து வகைப்பட்ட போராட்டங்களின் பொதுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதும், வலியுறுத்துவதும் ஒவ்வொரு இடத்திலுமுள்ள நிறுவனத்தின் பிரதான கடமையாகும். போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து பொதுத்தன்மை பெறுகையில் போராட்டத் தலைமைகளை ஒரே மாதிரியான அமைப்புகளாக உருவாக்குவது அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவ வேலை நிறுத்தத் தலைவர்கள் தோல்வியுறும் இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்கள் உடனடியாக முன்வந்து நடவடிக்கைக்கான தீர்மானகரமான நிறுவனத்தை – சாதாரண ஆரம்ப நிறுவனத்தை – உத்திரவாதம் செய்ய வேண்டும். பிராக்சன்கள் மற்றும் தொழில் கவுன்சில்களின் கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழில்களின் பொதுக் கூட்டங்களிலும் விடாப்பிடியாக வலியுறுத்துவதன் மூலம், செயல்திறனுள்ள போர்க்குணமிக்க தலைமையின் கீழ் இதனைச் சாதிக்க முடியும்.

இயக்கம் பரவலாகி முதலாளிகளின் நிறுவனங்களின் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத் தலையீட்டால் அரசியல் தன்மையைப் பெறும்போது, தொழிலாளர்கள் கவுன்சில்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பப் பிரச்சாரம் மற்றும் நிறுவன வேலையைத் தொடங்க வேண்டும். அத்தருணத்தில் இவை சாத்தியமாகவும் அவசியமானதாகவும் ஆகலாம்.

இங்குதான் கட்சி உறுப்புகள் அனைத்தும் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தப் போராட்ட ஆயுதங்களை வார்த்தெடுப்பதன் மூலமே தனது சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சாரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கோ அல்லது பழைய சோசலிஸ்ட் கட்சிகளுக்கோ இம்மியளவும் கருணை காட்டக் கூடாது.

35. ஏற்கெனவே பலமாக வளர்ந்துள்ள, குறிப்பாக மக்கள்திரளுடைய பெரிய பொதுவுடைமைக் கட்சிகள் மக்கள்திரள் நடவடிக்கைக்குத் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும். பரந்துபட்ட மக்கள்திரளினருடன் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், பொருளாதார இயக்கங்கள் மற்றும் இதுபோன்ற உள்ளூர் நடவடிக்கைகள் அனைத்தின் அனுபவங்களை எப்போதும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். தலைமை நிர்வாகிகள், பொறுப்புள்ள கட்சி ஊழியர்கள், நம்பிக்கைக்குரிய பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் எல்லா பெரிய இயக்கங்களிலும் பெற்ற அனுபவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். இம்முறையில் வலைப்பின்னல் போன்ற தொடர்பு தொடர்ச்சியாக அதிகரிக்கும், பலப்படும், நம்பிக்கைக்குரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் மேலும் போரிடும் உணர்வுடன் எழுச்சியுறுவர். தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்புளள கட்சி ஊழியர்களுக்கும் பணிமனைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கையான தொடர்புகள் (உறவுகள்) இருப்பதானது காலம் கனிவதற்கு முந்திய மக்கள்திரள் அரசியல் நடவடிக்கை இராது என்பதற்கும் சூழ்நிலைகளுக்கும் கட்சியின் உண்மையான பலத்துக்கும் ஏற்ற நடவடிக்கைகளே இருக்கும் என்பதற்கும் நிச்சயமான உத்திரவாதமாகும்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கட்சி நிறுவனங்களுக்கும் பெரும் மக்கள்திரள் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பாட்டாளி வர்க்கத்தினருக்குமிடையே நெருக்கமான இணைப்புகளைக் கட்டியமைக்காமல் உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு இயக்கத்தை வளர்க்க முடியாது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த சந்தேகத்திற்கிடமற்ற புரட்சிக் கொந்தளிப்பு – தொழிற்சாலைகளைக் கைப்பற்றுவதில் இது தெளிவாக வெளிப்பட்டது – அகாலமாக வீழ்ச்சியுற்றது. இதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகம் – நம்பிக்கை வைக்கத் தகுதி இல்லாத அரசியல் தலைவர்கள் – ஆகியவையாகும். கட்சிக்கும் தொழிலுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அறவே இல்லாதது, அதாவது, கட்சி நலனில் அக்கறையுள்ள அரசியல் அறிவுமிக்க தொழில் நிலையப் பிரதிநிதிகள் இல்லாதது இதற்கு ஓரளவு காரணமாகும். இவ்வாண்டு (1921) ஆங்கிலேய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதே குறைபாடு அளவுக்கு அளவுக்கதிகமாக இருந்ததால் தோல்விக்கு உள்ளாயிற்று.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

1 மறுமொழி

  1. மக்களின் வரிப் பணத்தில் சமூகத்தின் பாதுகாவலை உறுதி செய்ய அரசிடம் ஏற்பாட்டில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப கட்டமைப்புகளை இயங்கும் மக்கள் கண்காணிப்பு கமிட்டிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்… நவீன நெருக்கடி காலத்தின் அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கான அறிவார்ந்த செயல்பாடுகளாக அமைத்து கொள்ள வேண்டும்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க