PP Letter head

பத்திரிகைச் செய்தி

14.08.2020

ன்பார்ந்த மக்களே !

மார்ச் 24-ம் தேதி போடப்பட்ட ஊரடங்கு நூற்றி ஐம்பதாவது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் அதிகம்.

ஊரடங்கு என்றால் எல்லோருக்கும் பொதுவானதுதானே. ஆனால் இந்த ஊரடங்குக்காலத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கார்ப்பரேட் கொள்ளைக்காக காடுகள், மலைகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதே சட்டத் திட்டங்களாகிவிடும்.

இந்த கொரோனா காலத்தில் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயை 2021 -க்குள் தனியார்மயமாக்க வேண்டும் என்கிறார் மோடி. புதியக்கல்விக்கொள்கையின் மூலம் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் கொள்ளை லாபத்துக்காக காவியாக்கப்பட்ட நவீன கொத்தடிமைகளை உருவாக்க 3ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பேரில் நவீன குலக் கல்வித்திட்டம் கொண்டு வரப்படுகின்றது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையோ 49% ஆகிவிட்டது. ஆக, தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்களில் சரிபாதி பேருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாயும் அரிசியும் பருப்பும் கொடுத்தால் மட்டும் ஒரு குடும்பத்தை ஓட்ட முடியுமா என்ன?

படிக்க :
அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அம்பானியோ தன்னுடைய ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி கடனை அடைத்து உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 4-வது இடத்திற்கு சென்றுவிட்டார். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை இறங்கிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோயில் இருந்தும் ஊரடங்கில் இருந்தும் மக்களை மீட்டெடுப்பதற்கான உருப்படியான எந்த வேலைகளையும் செய்யாத அரசு, கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடக்கூடாது என்பதற்காக ஊரடங்கினை அமல்படுத்தி வருகின்றது.

ஊரடங்கு மூலமாக மட்டுமே கொரோனாவை ஒழித்துவிட முடியும் என்பது இயலாத ஒன்று என்கிறது உலக சுகாதார நிறுவனம்.130 கோடி மக்கள் வாழும் நாட்டில் எத்தனை மருத்துவமனைகள், உயிர்காக்கும் கருவிகள் இருக்கின்றன? மருத்துவர்கள் செவிலியர்கள் இருக்கிறார்கள்? தடுப்பூசி கண்டறியப்படாத வரை கொரோனா பரவத்தான் செய்யும். இந்த அரசு எப்போது தடுப்பூசி கண்டு பிடிப்பது? நாம் எப்போது வேலைக்குச் செல்வது? அதுவரைக்கும் பட்டினியால் சாக முடியாது. மக்களுக்கு வேலை கொடுத்து வாழவைக்க துப்பில்லாத அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குத்தான் இந்த ஊரடங்கைப் போட்டிருக்கிறது.

அரசும் ஆளும் வர்க்கமும் தனது கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை கொஞ்சமும் நிறுத்தவில்லை. ஆனால் மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் பேசக்கூடாது என்று ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே வருவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டுமென்றால் பொது சுகாதரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் சாத்தியமே இல்லை.

ஊரடங்கிற்கு முடிவு கட்டு !பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற முழக்கத்தை முன்னெடுப்போம். அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தை நிறைவேற்றி நாட்டையே மீண்டும் அடிமையாக்கும் இந்த அரசுக்கு எதிராக ஒன்றிணைவோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் – தொடர்புக்கு : 99623 66321

2 மறுமொழிகள்

  1. அம்பானியோ தன்னுடைய ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி கடனை அடைத்து ….?

  2. தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறை வேலைகளும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொன்மலை பணிமனை வேலை சமீபத்திய உதாரணம். ஏன் இவ்வாறு செய்யப்படுகிறது. எப்படி எதிர்வினையாற்றுவது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க