கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 06

முதல் பாகம்

5. அரசியல் போராட்டத்திற்கான நிறுவனம்

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது?

31. பொதுவுடைமைக் கட்சியைப் பொருத்தவரை, அதன் கட்சி நிறுவனம் அரசியல் நடவடிக்கையைச் செய்ய இயலாத காலம் என்று எதுவும் இருக்க முடியாது. எந்த ஒரு அரசியல் பொருளாதார நிலைமையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக – இதுபோலவை இந்த நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக – ஸ்தாபனத்தின் போர்த்தந்திரங்களும் செயல்தந்திரங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தபோதிலும் முறைப்படி திட்டமிட்டும் சிறப்புத் தேர்ச்சியுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் மூலம் எழுச்சியூட்டுகின்ற அரசியல் நிலைமைகளையும் அல்லது முழு பொருளாதாரக் கட்டமைவையும் பாதிக்கும் பரந்து விரிந்த வேலை நிறுத்தங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது முடியும். ஒரு குறிப்பிட்ட நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வது என்று கட்சி தீர்மானித்தவுடன் தனது உறுப்பினர்கள் அனைவரின் மற்றும் கட்சி முழுவதன் சக்தியையும் இந்த இயக்கத்தில் ஒன்றுகுவிக்க முனைய வேண்டும்.

மேலும், ஒரு வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியான மேல் நடவடிக்கைகளுக்கும் அரசியல் முக்கியத்துவம் உடைய மையங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் கட்சியானது தனது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வேலைகளின் மூலம் பெற்ற அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்த வேண்டும். கட்சியின் பேச்சாளர்கள் பொதுவுடைமைவாதம் மட்டுமே போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்று கூட்டத்தில் உள்ளவர்கள் ஏற்கும்படி செய்ய தம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். இத்தகைய கூட்டங்களுக்கான முற்று முழுதான தயாரிப்பை விசேடமான குழுக்கள் செய்ய வேண்டும். ஏதோ சில காரணங்களினால் கட்சி தானே இத்தகைய கூட்டங்களை நடத்த முடியாமல் போகுமானால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர்களோ அல்லது போராடும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினரோ ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களில் பொருத்தமான தோழர்கள் உரையாற்ற வேண்டும்.

கூட்டத்தின் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான பகுதியினர் நமது கோரிக்கையை ஏற்கச் செய்யத் தூண்டிவிடுவது சாத்தியப்படும்போது, அவை நன்கு உருவாக்கப்பட்டு மற்றும் தீர விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் முடிவுகளாக நிறைவேற்றப்பட வேண்டும். இவை அதே இடத்திலோ அல்லது வேறு பகுதிகளிலோ அதே பிரச்சினையின் மீது பலமான சிறுபான்மையினரான மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இம்மாதிரியான தீர்மானங்களை நிறைவேற்றச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வழியில் நாம் உழைக்கும் மக்கள்திரளினரை அப்போதைய இயக்கத்தில் உறுதிப்படுத்தவும் நமது தார்மீக செல்வாக்கின் கீழ் கொண்டுவரவும் அவர்கள் நமது தலைமையை அங்கீகரிக்கச் செய்யவும் இயலும்.

இத்தகைய கூட்டங்கள் முடிந்த பின்னர், இவற்றுக்கான நிறுவன தயாரிப்புகளில் ஈடுபட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய கமிட்டிகள் ஒரு மாநாடு நடத்தி, கட்சியின் மேல்மட்டக் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்துக்கான சரியான முடிவுகளை, அனுபவங்கள் அல்லது தவறுகளிலிருந்து பெற்ற முடிவுகளைக் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமைக்கும் ஏற்ப பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அன்றாட கோரிக்கைகள், சுவரொட்டிகள், அச்சிடப்பட்ட பிரசுரங்களில் (பிரகடனங்களில்) வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு அவை தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கொள்கைகள் அந்த நிலைமைக்கு எப்படிப் பொருத்தமானவையாகவும் குறிப்பிட்ட நிலைமைக்குப் பிரயோகிக்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதைத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய சொந்தக் கோரிக்கைகள் வாயிலாக நிரூபிக்க வேண்டும். சுவரொட்டிகளை விநியோகிக்கவும், பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்யவும், ஒட்டுவதற்கான சரியான நேரத்தைத் தீர்மானிக்கவும் விசேடமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தேவை. அச்சிடப்பட்ட பிரகடனங்கள் தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும், வாயிலிலும், தொழிலாளர்கள் கூடப்போகின்ற அரங்குகளிலும், வேலை தேடித்தரும் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையம் போன்று நகரின் முக்கியமான இடங்களிலும் விநியோகிக்கப்பட வேண்டும். இத்தகைய துண்டுப் பிரசுர விநியோகத்தைத் தொடர்ந்து உழைக்கும் மக்கள் திரளினர் அனைவரிடையிலும் சுலபமாக பரவுகின்ற கவனத்தை ஈர்க்கின்ற விவாதங்களும் முழக்கங்களும் தொடர வேண்டும். சாத்தியமானால் அச்சிட்ட விவரமான துண்டுப் பிரசுரங்களை அரங்குகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அல்லது பிற இடங்களில் அதாவது, எங்கு இந்த அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அங்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

படிக்க:
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

எல்லா தொழிற்சங்கங்களிலும் பிரச்சினை முட்டிமோதும் காலத்தில் நடக்கின்ற தொழிற்சாலைக் கூட்டங்களிலும் நாம் செய்கின்ற இணையான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். நமது தோழர்களாலோ அல்லது நம்மை ஆதரிப்பவர்களாலோ ஏற்பாடு செய்யப்படும் இக்கூட்டங்களில் பொருத்தமான நமது பேச்சாளர்களும் ஆற்றல்மிகு வாதிடுவோர்களும் வாய்ப்பைப் பயன்படுத்தி பரந்துபட்ட மக்கள் நமது கருத்தோட்டத்தை ஏற்குமாறு செய்ய வேண்டும். நமது கட்சி செய்திப் பத்திரிகைகள் இத்தகைய விசேடமான இயக்கத்திற்கு அதிகமான பக்கங்களையும் அதேபோல் அதனை சிறந்த முறையில் நியாயப்படுத்துவதற்கான வாதங்களுக்கு முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். செயலூக்கமுள்ள நமது கட்சி நிறுவனங்கள் அப்போதைக்குத் தற்காலிகமாக இத்தகைய இயக்கத்தின் பொது நோக்கத்திற்காக சேவை செய்து இதில் பணியாற்றும் தோழர்கள் குன்றாத ஆற்றலுடன் செயலாற்ற உதவ வேண்டும்.

நிலைமைக்கு ஏற்ப இயங்கும் தலைமையும், தொழிற்சாலை செல்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பும் வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான உத்திரவாதங்கள்

32. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நிலைமைக்கேற்ப இயங்கும் தலைமை மற்றும் சுயதியாகத் தலைமை அவசியம். குறிப்பிட்ட நடவடிக்கையின் நோக்கத்தை நெருக்கமாகக் கவனித்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் அதிகபட்சம் சாத்தியமான விளைவை ஏற்படுத்தி விட்டதா என்று கணிக்கின்ற ஆற்றல் படைத்த தலைமை அல்லது ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தங்கள், ஏன், ஒரு பொது வேலைநிறுத்தம் என்று மக்கள்திரள் நடவடிக்கையின் மூலம் இயக்கத்தை அந்தக் குறிப்பிட்ட நிலைமையில் தீவிரப்படுத்துவது உகந்ததா என்று தீர்மானிக்கின்ற தலைமை அவசியம். யுத்தத்தின் போது நடத்திய சமாதானத்துக்கான ஆர்ப்பாட்டங்கள் நமக்குக் கற்பித்தது போல இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கலைந்த பிறகுகூட ஒரு கட்சி – ஒரு போரிடும் பாட்டாளி வர்க்கக் கட்சி – எவ்வளவுதான் சிறியதாக அல்லது சட்டவிரோதமானதாக இருந்தாலும் எழுப்பியுள்ள பிரச்சினை முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் அளவிலான மக்கள்திரளினருக்குக் கூடுதலான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் இதிலிருந்து கவனத்தைத் திருப்பிடவோ, அல்லது அமைதியாய் இருக்கவோ கூடாது. பெரிய தொழிற்சாலைகளை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டால், தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்துகின்றன. சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட நமது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வாய்வழியான, மற்றும் அச்சிட்ட பிரகடனங்கள் மூலமான பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு குறிப்பிட்ட அளவு சிந்தனை மற்றும் நடவடிக்கைக்கான ஒற்றுமையைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்று இருக்குமானால், நிர்வாகக் கமிட்டியானது தொழிற்சாலையில் உள்ள நம்பிக்கைக்குரிய கட்சி உறுப்பினர்களையும் கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து விவாதித்து திட்டமிட்ட நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நேரம் மற்றும் வேலையை இறுதியாக்கவும், மேலும் முழக்கங்களைத் தீர்மானிக்கவும், ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தும் வாய்ப்புகள், நிறுத்துவதற்கான மற்றும் கலைந்து செல்வதற்கான தருணம் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் வேண்டும். நன்கு அறிவுறுத்தப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் குழு ஆர்ப்பாட்டத்துக்கு முதுகெலும்பாக அமைக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டம் தொழிற்சாலையில் இருந்து தொடங்குவது முதல் கலையும் வரை மக்களிடையில் அவர்கள் கலந்திருக்க வேண்டும். மக்களிடையில் பொறுப்பான கட்சி ஊழியர்கள் திட்டவகைப்பட்ட முறையில் கலந்திருக்க வேண்டும். நிர்வாகிகள் அவர்களுக்குள் உயிரோட்டமான தொடர்புகள் வைத்திருக்கவும், அவ்வப்போது உறுப்பினர்களுக்குத் தேவையான அரசியல் அறிவுறுத்தல்கள் தரவுமான நோக்கத்திற்கு இது வசதிப்படும். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான, நிலைமைக்கேற்ப இயங்கும் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இத்தகைய தலைமையைக் கொண்டிருப்பது பெரிய பெரிய மக்கள்திரள் நடவடிக்கைகளை மிகப்பயனுள்ள முறையில் இடையறாது புதுமைப்படுத்தவும் அடுத்தடுத்து தீவிரப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க