ந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க “ஆத்ம நிர்பார்” (சுயசார்பு) இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதத்தில் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக இராணுவத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் அறிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்த தடையானது 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும், துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 2020-21-ம் நிதியாண்டுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவத் தளவாடங்களின் கொள்முதலுக்காக ரூ.52,000 கோடியையும் ஒதுக்கியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்க்க இறக்குமதியின் அளவைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாகவே ஆத்மநிர்பார் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் சொல்லொன்றாக செயல் வேறாக இருப்பதுதான் மோடி அரசின் தனிச்சிறப்பான இயல்பு. அந்த வகையில், ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் அதை இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்நிய நிறுவனங்களின் மூலதனத்தை பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இந்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25 சதவிகிதமாக குறைத்தது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் அவர்களுக்கான விதிமுறைகளை மேலும் தளர்வு செய்யவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சாதாரண உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் நிலைமையே இப்படி இருக்கையில், ராணுவ தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்ற பிதற்றலை பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையில் உள்நாட்டுத் தயாரிப்பு எந்த அளவு சாத்தியம் என்பதையும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டங்களின் நிலைமையையும் சிறிது பார்த்தாலே இது வெறும் சவடால்தான் என்பது தெரியவரும்.

படிக்க :
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டுப் பங்களிப்பிற்கான இதைப் போன்றதொரு அறிவிப்பை கடந்த 2013 மற்றும் 2018 காலகட்டங்களில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு தொழில்நுட்பக் கண்ணோட்டம் மற்றும் செய்திறன் திட்டம் (TPCR) என்று பெயரிட்டிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும், 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சியிலும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின்படி இராணுவத் தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை சாதிக்க இயலவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு மோடி அரசால் அறிவிக்கப்பட்ட TPCR-2018 திட்டத்தின்படி, சுமார் 221 இராணுவத் தளவாட பாகங்களை “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் 2020-களின் பிற்பகுதிக்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் வெற்றி பெறவில்லை.

எனில் தற்போது 101 இராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் போவதாக மோடி அரசு அறிவித்ததன் பின்னணி என்ன ? இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டது இந்த அறிவிப்பு. இதற்கான பின்னணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு உதாரணங்களை அதற்குப் பார்க்கலாம். ஒன்று உலகமே காறித்துப்பிய ரஃபேல் விமான ஒப்பந்தம், மற்றொன்று சி-295 ரக போக்குவரத்து விமான உற்பத்தி ஒப்பந்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சத்தை பார்ப்போம். ரஃபேல் விமானத் தயாரிப்பு உரிமையையும், அதற்கான தொழில்நுட்பத்தையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்றுதான் காங்கிரஸ் ஆட்சியில் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

ஆனால் ஆதம்நிர்பார் நாயகர் எனப் புகழப்படும் ‘தேசபக்தர்’ மோடி ஆட்சிக்கு வந்ததும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டுமல்லாமல் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வழங்கப்படாது என்ற டஸால்ட் நிபந்தனைக்கு உட்பட்டுதான் இந்த ஒப்பந்தத்தைப் போட்டது மோடி அரசு. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் (HAL) மிகப்பெரிய வருவாய் ஆதாயத்தையும், விமான உற்பத்திக்கான தொழில்நுட்பத்தையும் இழந்தது. இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.

படிக்க :
நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

அதே போல இந்திய இராணுவத்திற்கான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான பணியை எடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவியலாமல் எச்.ஏ.எல் (HAL) நிறுவனம் முடக்கப்பட்டது. சி-295 ரக போக்குவரத்து விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் டாட்டா – ஏர்பஸ் நிறுவனங்களுக்கு இடையே போடப்பட்டது. எச்.ஏ.எல் நிறுவனம் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு தனியார் நிறுவனமான டாட்டாவுக்கு இந்தப் பணியாணை வழங்கப்பட்டிருப்பதுதான், மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலட்சணம்.

தற்போது ‘மேக் இன் இந்தியா’வை சற்றுப் பெயர் மாற்றி ‘ஆத்ம நிர்பார்’ என்று வைத்துள்ளார் மோடி. அவ்வளவுதான் வித்தியாசம். ஆத்மநிர்பார் இந்தியா – அதாவது சுயசார்பு இந்தியா என்றால் உள்நாட்டு முதலாளிகளின் மூலதனத்தில் பிரதானமாக உள்நாட்டின் தேவைக்காகவும், இரண்டாம்பட்சமாக ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்வது என்று பொருள். ஆனால் மோடியின் இலக்கணப்படி, உள்நாட்டு நிறுவனத்தில் அந்நிய நிறுவனங்களின் முதலீடும், பங்கும் இருந்தாலும், இந்தியாவில் பதிவு செய்திருந்தால் அது இந்திய நிறுவனம்தான். அது ஆத்மநிர்பார் தான்.

இந்தியாவில் அந்நிய முதலீடுகளை பொறுத்த வரையில் மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, UAE உள்ளிட்ட நாடுகள் முதன்மையாக உள்ளன. மேலும், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கும் தொலைதொடர்பு மற்றும் மின்னணு சேவைத்துறை சமீபத்தில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கடந்த 2017-19 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மட்டும் சுமார் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அந்நிய முதலீடு குவிந்துள்ளது. உற்பத்தித்துறையில் சுமார் 7,066 மில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத் துறையிலும் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் 2017-18-ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறையில் சுமார் 4,070 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், வணிக சேவைகள், கணிணிச் சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, தொழிலாளர் நலச்சட்ட ஒழிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு நிதிச் சலுகை என அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கும் மோடி அரசு மற்றொரு பக்கம் சுயசார்பு பொருளாதாரம் என்ற பெயரில் பூச்சு பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலமாகவோ, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிருக்கும் மூலதனத்தை இந்த நாட்டிலிருந்து வெளியே அள்ளிச் செல்ல வழிவகுத்துக் கொண்டே ஆத்மநிர்பார் எனக் கூவுவது, வெறும் நாடகம் தானே அன்றி உண்மையான சுயசார்பு குறித்த அக்கறை மோடி அரசிடம் துளியும் கிடையாது. மாறாக பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்கி, சொந்த மக்களையே சுரண்டுவதற்கான திட்டம்தான் இது என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியே 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி குறித்த மோடி அரசின் அறிவிப்பாகும் !


 எல்லாளன்
செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க