கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 07

முதல் பாகம்

ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்கம் போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும்

33. உள்நிறுவன பலமும், சோதிக்கப்பட்ட நிர்வாகிகள் படையும், மக்கள் திரளினரிடையே கணிசமாக எண்ணிக்கையும் உறுதியானவர்களையும் கொண்டுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் விரிவான இயக்கங்களின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களுக்குள்ள செல்வாக்கை முழுமையாக வெற்றி கொள்ளவும், பொதுவுடைமைப் பதாகையின் பின்னே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள்திரளினரை அணிதிரட்டவும் விரிவான இயக்கங்கள் வாயிலக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலைமை தீவிரமாகப் போராடுவதற்கு ஏற்றதா அல்லது அது தற்காலிகமாகத் தேக்கமான காலமா என்பதைப் பொருத்து பல்வேறு வழிகளிலும் இயக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சாதகமான நிலைமையானால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையில் முனைப்புடன் தம்மை நிறுத்திக் கொண்டு அக்கட்சிகள் செயல்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிறுவன முறைகளைத் தெரிந்தெடுப்பதற்கு கட்சியின் கட்டமைப்பு ஒரு தீர்மானகரமான காரணியாகும்.

எடுத்துக் காட்டாக, “பகிரங்கக் கடிதம்” வெளியிடுவது என்ற முறை ஜெர்மனியில் – மற்ற நாடுகளில் சாத்தியப்படாத இம்முறை – சமுதாய ரீதியில் தீர்மானகரமான பாட்டாளி வர்க்கப் பிரிவுகளை வென்றெடுப்பதற்குப் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. யுத்தத்தின் அழிவு அதிகரித்துக் கொண்டும், வர்க்க மோதல்கள் தீவிரமாகிக் கொண்டும் இருந்த தருணத்தில், துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களது முகமூடியைக் கிழிப்பதற்காக ஜெர்மன் பொதுவுடைமைக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் பிற எல்லா மக்கள்திரள் அமைப்புகளை நோக்கி இத்தகு பகிரங்கக் கடிதங்களை வெளியிட்டது. பலமான நிறுவனங்கள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவை பொதுவுடைமைக் கட்சியுடன் ஒத்துழைத்து போராட்டங்களை எடுக்கத் தயாரா என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னிலையில் அவைகளிடமிருந்து கோரும் நோக்கத்திற்காக ஜெர்மன் கட்சி அவ்வாறு செய்தது.

பாட்டாளி வர்க்கம் பராரியாக்கப்படுவதற்கு எதிராகவும் மிகச் சிறு கோரிக்கைகளுக்காகவும், ஏன், துண்டு ரொட்டிக்காகவும் கூட பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து போராட முன்வருமாறு அவைகளை பகிரங்கக் கடிதம் கோரியது.

இது போன்ற இயக்கத்தை பொதுவுடைமைக் கட்சி முன்முயற்சி எடுத்துத் துவக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் பரந்துபட்ட மக்கள்திரளினரிடையே இத்தகைய நடவடிக்கை சென்றடையும் நோக்கத்திற்காக கட்சியானது முழுமையான நிறுவன ரீதியான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் அதிமுக்கிய கோரிக்கைகளின் திரட்சியான உருவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கட்சியால் முன்வைக்கப்படும் கோரிக்கையை கட்சியின் அனைத்து தொழிற்சாலைக் குழுக்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் அடுத்து வருகின்ற தமது தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கக் கூட்டங்களில் அதுபோலவே பொதுக்கூட்டங்களிலும் – இத்தகைய கூட்டங்களுக்கான தயாரிப்புகளை முழுமையாகச் செய்துகொண்டு – விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்களின் உத்வேகத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட பிரகடனங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை எங்கும் விநியோகிக்க வேண்டும். நமது கருக்குழுக்கள் அல்லது தொழிலாளர் குழுக்கள் நமது கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்கச் செய்ய முயற்சிக்கும் இடங்களில் மேலும் சிறப்பாக விநியோகிக்க வேண்டும். இத்தகைய இயக்கம் நடைபெறும்போது இந்த இயக்கத்தின் பிரச்சினைகளைப் பற்றி இடையறாத விளக்கங்களை கட்சிப் பத்திரிகைகள் தர வேண்டும். இடையறாது தினசரி சிறு விளக்கங்கள் அல்லது விளக்கமான கட்டுரைகள் பிரச்சினையின் பல்வேறு படிநிலைகளையும் சாத்தியமான ஒவ்வொரு கருத்தோட்டத்திலிருந்தும் பத்திரிகைகள் அவற்றை விளக்க வேண்டும். இத்தகைய கட்டுரைகளுக்கான விசயதானங்களை கட்சி நிறுவனம் தொடர்ந்து பத்திரிகைக்கு அளிக்கவும் கட்சியின் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு பத்திரிகை ஆசிரியர்கள் தமது முயற்சிகளைக் கைவிட்டுவிடாமல் தமது கவனத்தைச் செலுத்துமாறும் நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களும், நகராட்சி உறுப்பினர்களும் திட்டவகைப்பட்ட முறையில் வேலை செய்ய வேண்டும். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி தீர்மானங்கள், பிரேரணைகள் மூலம் பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களிலும் இயக்கத்தைப் பற்றி விவாதத்துக்குக் கொண்டுவர அவர்கள் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரதிநிதிகள் தம்மைப் போராடும் மக்கள் திரளினரின் முகாமில் அவர்களுக்காக வாதிடுபவர்களாகவும், அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளாகவும், கட்சி ஊழியர்களாகவும் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும்.

நிறுவன ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் அனைத்து சக்திகளின் நடவடிக்கைகளும் வெற்றி பெறுமானால், ஒருசில வாரங்களுக்குள் நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானங்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் அங்கீகரிக்கப்படுமானால், நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக காட்டப்பட்ட மக்கள்திரளினரை உறுதிப்படுத்துவது கட்சியின் மிகப் பாரதூரமான நிறுவன ரீதியிலான கடமையாகும். இந்நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத் தன்மையை இயக்கம் அடையுமானால், நமது செல்வாக்கை அதிகரிப்பது என்பதை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முயற்சிக்க வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இந்த நோக்கத்திற்காக உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களின் செல்வாக்கை முறியடிக்கச் செய்வது அல்லது நமது கட்சியினுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராட நிர்ப்பந்திப்பது என்ற நோக்கத்தை ஈடேற்ற தொழிற்சங்கங்களில் உள்ள நமது குழுக்கள் அவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நேரடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். தொழிற்சாலை கவுன்சில்கள், தொழிற்துறை கமிட்டிகள் அல்லது இதுபோன்ற நிறுவனங்கள் இருக்குமிடங்களில் எல்லாம், நமது குழுக்கள் அந்நிறுவனங்களின் விரிவான கூட்டங்களில் செல்வாக்கு செலுத்தி அதன் வாயிலாக அவற்றைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானிக்கச் செய்ய வேண்டும். பொதுவுடைமைக் கட்சித் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தின் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளுக்காகப் (நலன்களுக்காகப்)  போராடுவதற்கான இயக்கத்தை ஆதரிக்கும்படி எண்ணிறந்த உள்ளூர் நிறுவனங்கள் செய்யப்பட்டுவிட்டால், அவற்றை ஒரு பொது மாநாட்டில் பங்கெடுக்க அழைக்க வேண்டும். இவற்றுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றிய தொழிற்சாலைக் கூட்டங்களின் சிறப்புப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

1 மறுமொழி

  1. மூலதனத்தின் வரலாற்று பொருள்முதல்வாத இயங்கியல் கோட்பாடுகளின் இயக்கவியல் தந்திரவுக்திகளும் மூலவுக்திகளும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க