ஞ்சாப் மாநிலம், பட்டியாலாவிலுள்ள ஃபதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் 55 வயதான ஷிங்காரா சிங், கடந்த ஜூன் மாதம், தனது வசந்தக் கால மக்காச்சோளத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.700 – ரூ.800-க்கு விற்றுள்ளார். இது பருவக்கால பயிருக்கென மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,850) குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட(MSP) குறைவு. ‘குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட குறைந்த விலைக்குதான் தனியார் வர்த்தகர்கள் விளை பொருட்களை வாங்குகிறார்கள்’ என்கிறார் ஷிங்காரா சிங்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல், கோதுமையை குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு மத்திய அரசு வாங்கிவருவது, விவசாயிகளுக்கு ஒரு உறுதியான சந்தை, வருமானத்தை அளிக்கிறது.  ‘வரவிருக்கும் ராபி கால அறுவடைக்கு, தனது கோதுமை பயிருக்கு ஆதாயவிலை கிடைக்குமென’ ஷிங்காரா நம்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எண்ணி கவலையடைகிறார். மத்திய மாநில அரசுகளால் கொள்முதல் செய்யப்படாத இதர பயிர்வகைகளைப் போல நெல்லும் கோதுமையும் அரசாங்கத்தால் இனி கொள்முதல் செய்யப்படாது என்கிறார் ஷிங்காரா.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை சட்டம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்குமென மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாக்களின் விதிகள், ‘விவசாய விளை பொருட்களில் தடையற்ற வர்த்தகத்தை அனுமதிப்பதோடு, விவசாயிகள் தங்களது விருப்பப்படி தனியார் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம்’ என்கிறது.

படிக்க :
♦ கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

‘தனியார் முதலீட்டாளர்களை என்னால் நம்பமுடியாது’:

ஆனால், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை விவசாயிகள் யாரும் நம்பவில்லை. இந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா (நாடு முழுவதும்) விவசாயிகள் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாக்கள் ‘குறைந்தப்பட்ச ஆதார விலை முறையை’ ஒழிப்பதற்கான முதற்படி என்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாங்கள் ஆளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இந்த பயம் ஒரு குறிப்பிட்ட விவசாயப் பிரிவினருக்கு மட்டுமல்ல; சிறு, குறு, விளிம்புநிலை தொடங்கி இதர பெரிய, நடுத்தர விவசாயிகளுக்கும் இந்த பயம் தொற்றியுள்ளது. குறு விவசாயிகளும் (இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்பவர்கள்), சிறு விவசாயிகளும் (ஐந்து ஏக்கர் வரை சாகுபடி செய்பவர்கள்) விவசாயத்திலிருந்து தாங்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படுவோம் என எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னும் சில ஆண்டுகள் விவசாயத்தில் தாக்குப்பிடித்து நிற்கமுடியுமென நினைத்து கொண்டிருக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் பயிரிடும் பெரிய-நடுத்தர விவசாயிகளும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் போட்டிப்போட்டு நிற்பது கடினம்.

ஒரு தனியார் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்த அனுபவத்திலிருந்து ஷிங்காராவுக்கு பயம் திடமாக பற்றிக்கொண்டது. அதிலிருந்து அவர் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம் தனது பயிரை வாங்க முன்வந்ததிலிருந்து பார்லி பயிரை விதைக்கத் தொடங்கியிருக்கிறார் ஷிங்காரா. “அது பீர் தயாரிக்கும் நிறுவனம். அந்நிறுவனத்தில் இருந்து எங்கள் கிராமத்திற்கு வந்து பார்லியை பயிரிட சொன்னார்கள். விளை பொருட்களை குறைந்தப்பட்ச ஆதார விலையைவிட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்வதாகவும் தெரிவித்தனர். ஆரம்பத்தில், இரண்டு மூன்றாண்டுகள், 400 ரூபாய் கொடுத்தனர். ஆனால், பின்னர் விவசாயிகள் பலர் பார்லி பயிர் விதைக்கத் தொடங்கியதும் வரத்து அதிகரித்ததும், அந்த உத்திரவாத விலையில் விளை பொருட்களை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டியது நிறுவனம். பயிரின் தரத்தை காரணம் காட்டி, உற்பத்தியை நிராகரித்தனர் அல்லது குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் 2015க்கு பின் நான் பார்லி பயிரிடுவதையே நிறுத்திவிட்டேன்” என்கிறார் ஷிங்காரா.

15 ஏக்கருக்கு அதிகமான நிலங்களை வைத்திருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி தில்பக் சிங் தன்னை ஏழ்மை நிலைக்கு தள்ளிய இதுபோன்றதொரு கசப்பான அனுபவத்தைப் பகிர்கிறார். “பட்டாணி பதப்படுத்தும் உள்ளூர் நிறுவனம் ஒன்று என்னிடம் பச்சை பட்டாணியை நடவு செய்ய சொன்னது. 2012 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் சார்பாக என்னை அணுகி ஒரு கிலோ பட்டாணிக்கு ரூ.8.5 கொடுப்பதாக கூறினர். இதற்காக சில ஆவணங்களையும் அவர்கள் தயாரித்து கொடுத்தனர். நானும் பயிரிட்டேன். பயிர் தயாரானதும், டிராக்டர் வைத்து 100 மூட்டைகளை (தலா 50 கிலோ பட்டாணி) அந்நிறுவனத்துக்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் எனது பயிரின் தரம் மோசமாக உள்ளதென காரணம் சொல்லி வாங்க மறுத்துவிட்டனர். இவ்விவகாரத்தில் உள்ளூர் விவசாய சங்கத்தின் தலையீட்டுக்கு பிறகுதான் எனது பயிரை அந்நிறுவனம் வாங்கிக் கொண்டது. பின்னர், ஐந்து ஏக்கர் நிலத்தில் விதைத்த பயிரை ஒரு கிலோவுக்கு ரூ.2-ரூ.3க்கென உள்ளூர் மண்டியில் விற்றேன். இதனால் நான் பெரும் நட்டத்தை சந்திக்க நேர்ந்தது” என்று கூறும் அவர், “என்னால் இனியும் அவர்களை (தனியார் நிறுவனம்) நம்ப முடியாது” என்கிறார்.

மாநிலத்தின் இதர பகுதிகளிலும் நிலைமை இதுதான். ருப்நகர் மாவட்டத்தின் டிப்பா டப்ரியன் கிராமத்தைச் சேர்ந்த தர்மப்பால் சிங், 3 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். சில நாட்களுக்கு முன்பு பாலசவுர் மண்டியில் 25 குவிண்டால் மக்காச் சோளத்தை குவிண்டாலுக்கு ரூ.800க்கு விற்றுள்ளார். “குறைந்தப்பட்ச ஆதார விலையென அரசாங்கம் அறிவித்து என்ன பயன்? நான் சொற்ப(அற்ப) விலைக்குதான் என் பயிரை விற்கிறேன். ஒன்று விவசாய விளை பொருட்களை குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்யவேண்டும் அல்லது தனியார் வர்த்தகர்கள் இந்த குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு பயிர் வாங்குவதை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

பொது விநியோக முறையின்கீழ் மக்காச்சோளம் விநியோகிக்கப்படாததால்தான் இந்த பிரச்சினையில் அரசு தலையிடவில்லை என்கிறார் பஞ்சாப் விவசாயத் துறையின் இணை இயக்குநர் குர்விந்தர் சிங்.

65 வயதான சுர்ஜித் சிங், எந்தவொரு அரசாங்க ஒழுங்குமுறையும் இல்லாமல் தனியார் வர்த்தகத்தை அனுமதித்தால் வேளாண் விளைபொருள் விற்பனை கமிட்டியின்கீழ் இயங்கும் மண்டிகள் படிப்படியாக ஒழிந்துவிடும் என அஞ்சுகிறார். “ஆர்தியா (தரகு முகவர்) மூலமாக மண்டிக்குள் வர்த்தகம் செய்யப்படுவதற்கு வரி விதிக்கப்படுகிறது. இதில் கிராம அபிவிருத்தி கட்டணம், சந்தைக் கட்டணம் மற்றும் முகவரின் சேவை கட்டணமும் அடங்கும். ஆனால் இந்த மசோதாக்கள் கொண்டு வந்த பிறகு, ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டிகளுக்கு வெளியே வர்த்தகத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது” என்கிறார் அவர்.

“அதாவது தனியார் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் விவசாயிகளுக்கு அதிக விலையை வழங்கமுடியும். மண்டிகளில் வழங்கப்படும் விலையைவிட சிறந்த விலையை நிறுவனங்கள் வழங்க தொடங்கியவுடன், இயல்பாகவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அவர்களுக்குதான் (தனியார் நிறுவனங்கள்) விற்க முனைவார்கள். மண்டிகளுக்கு வெளியே வர்த்தகம் நடைபெறுவதால், காலப்போக்கில் மண்டிகள் இல்லாதொழிக்கப்படும். தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய மசோதாக்களுக்கு எதிராக நான் நிற்பதால், நான் விளைவித்த பாஸ்மதி அரிசியை மண்டி மூலம் மட்டுமே விற்க முடிவு செய்துள்ளேன். ஆனால் எவ்வளவு காலம் இதை என்னால் செய்யமுடியும்? சிறு, குறு விவசாயிகளைவிட சிறந்த வளங்கள் என்னிடம் இருப்பதால் தனியார் வர்த்தகர்கள் அல்லது நிறுவனங்களுடன் ஓரளவுக்கு என்னால் பேரம் பேசமுடியும் (பட்டியாலாவின் லக்கனி கிராமத்தில் இவருக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது). இருப்பினும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பது, தோல்வியை தழுவும் ஒரு யுத்தமாகவே அமையும்” என்று கூறுகிறார்.

உறுதியான பிணைப்பு :

‘விவசாயிகள் இப்போது எங்கு வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் என அரசாங்கம் கூறுகிறது’, போக்குவரத்து செலவினைக்கூட விவசாயிகள் தாங்கிக்கொள்ள முடியாத போது இது எப்படி சாத்தியமென கேட்கிறார், 47 வயதான குர்முக் சிங்.

குர்முக் ஒரு சிறு விவசாயி. லக்கனி கிராமத்தில் அவருக்கு நான்கு ஏக்கர் நிலமுள்ளது. அவர் தனது வயலில் நெல் விதைத்துள்ளார். தனது விளைபொருட்களை சேமிக்கவோ அல்லது கொண்டு செல்லவோ எந்தவொரு வாய்ப்பும் இல்லாததால், அவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். “பயிரை அறுவடை செய்தவுடன், அதனை நான் உள்ளூர் மண்டியிலேயே விற்றுவிடுவேன். தனியார் வர்த்தகர்களிடமிருந்து எனது விளை பொருளுக்கு அதிக விலை கிடைத்தாலும், எனது உற்பத்தியை தொலைதூர இடத்திற்கு எடுத்து செல்வது எனக்கு எளிதானதல்ல. அந்தளவுக்கு எனக்கு வாய்ப்போ வசதியோ இல்லை. எங்கு வேண்டுமானாலும் விற்றுகொள்ளலாம் என்று ஒரு சுதந்திரத்தை அளிப்பதாக இந்த மசோதா உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எட்டாக் கனியாகவே உள்ளது” என்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “தனியார் வர்த்தகர்களுக்காக எனது தரகு முகவரை விட்டுக்கொடுக்க முடியாது. ஆர்த்தியாவுடனான (தரகு முகவர்) இந்த உறவு தலைமுறையை கடந்தது. எனக்கு தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து பணம் கிடைத்தது. அறுவடை செய்யவேண்டிய பயிருக்கு அவர் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிடுவார். நம்பிக்கையின் அடிப்படையிலான இத்தகைய உறவு என்பது தனியார் வர்த்தகர்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ ஏற்படுவது கடினம்”.

படிக்க :
♦ மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?
♦ கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

பட்டியாலாவின் ரன்பிர்புரா கிராமத்திலுள்ள அவ்தர் சிங் இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். “இந்த பருவ காலத்தில் பயிரிட்ட எனது நெல்லுக்கு முன்பணமாக ஒரு லட்சத்தை எனது தரகு முகவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். எனது ஆர்த்தியா முன்பணத்தை எனக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் நெல் பயிரிட முடியாமல் போயிருக்கும். என்னால் அவருக்கு விற்கப்படும் நெற்பயிரை, குறைந்தப்பட்ச ஆதார விலையில் இந்த அரசு கொள்முதல் செய்யும் என்ற ஒரே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் எனக்கு முன்கூட்டியே பணத்தை வழங்கினார். நெல், கோதுமையை இந்த அரசு குறைந்தப்பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், என்னால் இனி எதையும் பயிரிடமுடியாது. உறுதியான உத்திரவாதம் இல்லாமல் எனக்கு இனி யாரும் முன்பணமோ அல்லது நிதி உதவியோ செய்ய முன்வர மாட்டார்கள்” என்கிறார்.

மேலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைக்கு இணையான தனியார் சந்தை செயல்படத் தொடங்கிய பின் சந்தையில் குறைந்தப்பட்ச ஆதார விலை முறை இருக்காதென அவ்தர் சிங் அஞ்சுகிறார். “குறைந்தப்பட்ச ஆதார விலை முறையை விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையாக மாற்ற மற்றொரு மசோதாவை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்” என்கிறார்.

நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாக்கள் குறித்து விவசாயிகள் மட்டுமல்ல தரகு முகவர்களும் தொழிலாளர்களும் கவலை கொண்டுள்ளனர். “பலதரப்பட்ட பயிர்களுக்கு இந்த அரசாங்கம் குறைந்தப்பட்ச ஆதார விலையை அறிவித்திருந்தாலும், உண்மையில் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே குறைந்தப்பட்ச ஆதார விலை மூலம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். காரணம் என்னவென்றால் இந்த இரண்டு பயிர்களை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இந்த வருடம் கோதுமையை குறைந்தப்பட்ச ஆதரவு விலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,925க்கு அரசாங்கம் கொள்முதல் செய்தது. அரசாங்கம் வாங்கிய பிறகு இங்குள்ள மண்டிகளில் இருந்து கோதுமையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600 முதல் ரூ.1,650 க்கு தனியார் வர்த்தகர்களால் வாங்கப்படுகிறது” என்றவர், “அரசாங்கம் எங்களை சந்தையிலிருந்து அகற்றப்பார்க்கிறது. தொழிலாளர்கள், கடை ஊழியர்கள், சந்தை கூட்டமைப்பின் ஊழியர்களென சங்கிலி தொடராக எத்தனை பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்குகிறது என அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் ஆர்த்தியா கூட்டமைப்பின் தலைவர் முல்க் ராஜ் குப்தா.

1990 முதல் பீகாரில் இருந்து பிழைப்பு தேடி பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருக்கும் பத்ரி மூக்கையா, மண்டிகளில் வேலை குறைக்கப்படும் என்ற செய்தி கேள்விப்பட்டதும் மீளாத்துயரத்துக்கு செல்கிறார். பத்ரியை போல் பீகாரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பிழைப்பைத் தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு வந்துள்ளனர். மண்டிகளில் மூட்டைகளை ஏற்றுவது, இறக்குவது, தானியங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். “ஒட்டுமொத்த விவசாயிகளும் மண்டிகளுக்கு வரவில்லையென்றாலும் அல்லது குறைந்த விவசாயிகளே வருகை தருகிறார்கள் என்றாலும் அங்கு எங்களுக்கு குறைவான வேலைகளே இருக்கும். என்னுடன் இங்கு வேலை செய்யும் குறைந்தது 20 பேரின் குடும்பங்கள் இந்த கூலியை நம்பிதான் இருக்கிறது. நாங்கள் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 400 ரூபாய் வரை சம்பாதிப்போம். இப்போது இதுவும் இல்லையென்றால் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் விரக்தியில்.

கட்டுரையாளர் : விகாஸ் வாசுதேவா
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க