வினவு தளத்தில் வெளியிடுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவால் அனுப்பப்பட்டு வெளியிடப்படாமல் முடக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. காலம் தாழ்ந்து வெளியிடப்பட்டாலும் சமூகப் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மருத்துவர்களின் நிலை பாசிச ஆட்சியில் எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுதுதும்  கட்டுரை  இது !

0 0 0

ரோனா நோய்த் தொற்றிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்ற உலகெங்கும் மருத்துவர்களும், செவிலியர்கள் உள்ளிட்ட துணை மருத்துவப் பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் பலர் இப்போராட்டத்தில் தமது உயிரையும் இழந்து தியாகியாகியிருக்கிறார்கள். அவ்வாறு மனித குலத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்த மருத்துவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சீனாவைச் சேர்ந்த 34 வயதான இளம் மருத்துவர் லீ வென்லியாங்.

மருத்துவர் லீ வென்லியாங்தான் கரோனா நோய்த்தொற்றை முதன்முதலில் இனங்கண்டவர். தனது சக மருத்துவர்களிடம் சார்ஸ் போன்று ஒரு புதிய வகையான நோய்த் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறதென்ற சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டவர்.

சந்தேகங்களும் கேள்விகளும்தான் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையாக இருக்க முடியும். ஆனால், சீன அரசோ, லீ வென்லியாங், தனது சக மருத்துவர்களிடம் பகிர்ந்துகொண்ட இந்த சந்தேகத்தை வதந்தி பரப்புவதாகக் குற்றஞ்சுமத்தியது. வுஹான் மாகாண போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனாலும், கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே புதிய வகை தொற்றுநோயான கோவிட் 19 வுஹான் மாகாணத்தில் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கி, லீ வென்லியாங்கின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.  உண்மையைக் கண்டறிந்த தன்னை சீன அரசு  சிறுமைப்படுத்தியது பற்றியெல்லாம் கவலைகொள்ளாது, கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவந்த லீ வென்லியாங், அந்நோயாலேயே பாதிக்கப்பட்டு இறந்தும் போனார்.

தொழில் அறத்தோடு உண்மையைப் பேசிய அவரது இழப்பு சீன மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான ஆத்திரத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து சீன அரசு தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து, “லீ வென்லியாங்கின் அறிவுரையைக் கேட்டிருந்தால், இந்நோய்த்தொற்றை முன்னரே கண்டறித்து, அது பரவுவதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். பலர் உயிர் இழந்திருக்கமாட்டார்கள். அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு லீ வென்லியாங் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறது.

சீனா நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது. ஆனால், இங்கு, இந்தியாவில் நிலைமை  என்ன?

படிக்க :
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !
♦ கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன ? மருத்துவ நிபுணர்கள் அறிக்கை

தமக்குத் தேவையான முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றைப் போதுமான அளவிற்குக் கொடுங்கள் எனக் கோருவதற்குக்கூட மருத்துவர்களுக்கு உரிமையில்லாத நிலைதான் காணப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுங்கள் என சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவர்கள் கடிதம் எழுதியதற்காக, அம்மருத்துவர்களுள் ஒருவரான சந்திரசேகரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இட மாற்றம் செய்து மருத்துவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது, எடப்பாடி அரசு.

மேலும், கடந்த அக்டோபரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்கும் விதமாக, அவர்களுள் பலரைத் தொலைதூர கிராமங்களுக்குத் தூக்கியடித்துப் பழிவாங்கியது, தமிழக அரசு. கரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் பொருட்டாவது இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்யுமாறு அரசு மருத்துவர்கள் இப்பொழுது  கோரி வருகிறார்கள். அதனைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுக்கிறது, தமிழக அரசு.

மருத்துவர் கஃபீல்கான்

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் கஃபீல்கான், தன்னை மீண்டும் பணியில் சேர்த்து கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரது இக்கோரிக்கையை பிரதமர் மோடியும் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் நிராகரித்துவிட்டனர். அதேபொழுதில் அவரைப் பழிதீர்த்துக் கொள்ளும் வன்மத்தோடு அவர் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகளைப் போட்டுவருகிறது, உ.பி.மாநில அரசு.

தனது உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கரோனா சிகிச்சையில் பங்குகொள்ள விரும்பும் மருத்துவரை உ.பி. இந்துத்துவா அரசு ஏனிப்படி நடத்துகிறது? அப்படியென்ன அவர் குற்றம் இழைத்துவிட்டார்?

கடந்த 2017-ல் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரிலுள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் (BRD Hospital) ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இத்துயர சம்பவத்திற்கு அம்மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு மருத்துவராகப் பணியாற்றிய கஃபீல்கான் உள்ளிட்ட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் காண்ட்ராக்டர் உள்ளிட்ட 9 பேரை பலிகடா ஆக்கியது, உ.பி. மாநில அரசு.

குழந்தைகள் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஹிமன்சு குமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் கமிஷன், கஃபீல்கான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததற்கோ அல்லது ஊழல் செய்ததற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என அரசிடம் அறிக்கை அளித்தது. ஆனால், உ.பி அரசோ தான் எதிர்பார்த்தபடி விசாரணை கமிசனின் அறிக்கை வரவில்லை என்பதற்காக, மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. அதேசமயம் கஃபீல்கானோ தான் செய்யாத குற்றத்திற்காக ஒன்பது மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறை தண்டனை அனுபவித்தார்.

ஏப்ரல் 2019-ல் பிணையில் வெளிவந்த கஃபீல்கான், “குழந்தைகளின் மரணம் ஆக்சிஜன் சிலிண்டர் கொள்முதலில் 10% கமிசனுக்கு ஆசைப்பட்ட மனிதர்களின் பேராசையால் ஏற்பட்டது” என்ற உண்மையைப் பத்திரிக்கைகளின் வாயிலாக அம்பலப்படுத்தினார்.

படிக்க :
♦ ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமான இந்த ஊழலை அம்பலப்படுத்திய கஃபீல்கானை அச்சுறுத்தும் நோக்கில் அவரது தம்பி காஷிஃப் ஜமீல் மீது குண்டர்களை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியது, ஆதித்யநாத் கும்பல். மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.

இதனிடையே, குழந்தைகளின் மரணத்திற்குப் பொறுப்பாக்கி கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கஃபீல்கானை, அவ்வழக்கிலிருந்து குற்றமற்றவராக விடுவித்தது, நீதிமன்றம். சட்டப்படி பார்த்தால், நிரபராதியென விடுவிக்கப்பட்ட கஃபீல்கானை உ.பி. மாநில அரசு மீண்டும் அதே பதவியல் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், உ.பி. மாநில இந்துத்துவா அரசோ, அவரை மீண்டும் பணியில் அமர்த்தாததோடு, அடுத்தடுத்து மூன்று முறை பொய்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரைக் கைது செய்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் பிறகும் பழிவாங்கும் வெறி அடங்காத உ.பி. அரசு, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அலிகார் பல்கலைக்கழகத்தில் கஃபீல்கான் உரையாற்றியதைக் குற்றமாகக் காட்டி, அந்த உரை நிகழ்த்தப்பட்டு 40 நாட்கள் கழிந்த நிலையில், அவர் மீது பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளில் கஃபீல்கானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும், அவரைத் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைக்கத் திட்டமிட்ட உ.பி. இந்துத்துவா அரசு, பிணை வழங்கப்பட்ட மூன்றாவது நாளில் அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சி, நீதிமன்றம் அளித்த பிணையைக் கழிப்பறை காகிதமாக்கியது.

ஒருபுறம் மருத்துவப் பணியாளர்களுக்காகப் பொதுமக்களைக் கைதட்டித் தமது நன்றியறிதலைத் தெரிவிக்கச் சொன்ன இந்துத்துவா கும்பல்தான் இன்னொருபுறத்தில் கஃபீல்கானை இவ்வளவு குரூரமாக வேட்டையாடி வருகிறது. மருத்துவர் கஃபீல்கான் முசுலீம் என்பதால் மட்டுமல்ல, அவர் அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசத் துணிந்தார் என்பதுதான் இதன் பின்னுள்ள காரணம்.

கைதட்டுமாறு சொன்னது இந்துத்துவ பாசிஸ்டுகளின் அரசியல் ஸ்டண்ட்; பழி வாங்குவதுதான் அவர்களது உண்மை முகம்.

உண்மையைத் துணிந்து பேசுவதைக் கண்டுதான் இந்துத்துவ பாசிஸ்டுகள் அச்சங்கொள்கிறார்கள்.

நோய்த் தொற்றுக் காலங்களில் உண்மையைக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் மற்றவர்களைவிட மருத்துவர்களுக்குத்தான் அதிகமுண்டு. அவ்வுண்மையைப் பூசி மெழுகாமல், உரத்துப் பேசுவதன் வழியாகத்தான் நோய்த் தொற்றிலிருந்து மக்களை மட்டுமல்ல, மருத்துவர்கள் தம்மையும் காத்துக்கொள்ள முடியும். ஆளும் இந்துத்துவா கும்பலின் அரசியல் ஸ்டண்டுகளையும் அம்பலப்படுத்த முடியும்.

பூங்குழலி
புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க