ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!

மாநாட்டுத் தீர்மானங்கள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மக்கள் கலை – இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஒருங்கிணைந்து, “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழகம் தழுவிய அரசியல் பிரச்சார இயக்கத்தை நடத்தின.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை – பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர – ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

000

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  1. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசமே, இன்று நம் நாடும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கிற மிகப் பெரிய அபாயம் என்று இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.  தனியார்மயம் – தாரளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப் படுத்திவரும் பா.ஜ.க.வின் மோடி ஆட்சியானது, அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் பனியா, மார்வாரி தரகுப் பெரு முதலாளித்துவக் கும்பல்களுக்கும் சேவை செய்யும் காவி – கார்பரேட் பாசிசமாகும்.
  2. இசுலாமியர், கிறித்தவர் ஆகிய மதச் சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல; தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் – இளைஞர்கள், சிறு வணிகர்கள், அறிவுத்துறையினர், பெண்கள் ஆகிய பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் எதிரிகளாவர் என்று இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது.
  3. ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்தைப் பிடித்தாட்டிய பார்ப்பனிய வர்ணாசிரம – மனுதர்ம – சனாதன – கொடுங்கோன்மையானது, நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல் மூலமாகத் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம், மதம் ஆகியவற்றை ஒழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் ஆகியவற்றை நிலைநாட்டி இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றும் திட்டத்துடன் செயல்படுகிறது. சாதிய – வர்ணாசிரமக் கொடுங்கோன்மையை நவீன முறையில் மீண்டும் நிலைநாட்டுவதே இந்து ராஷ்டிரத்தின் ஒரே நோக்கம் என்பதையும், அதை முறியடிக்க அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதையும் இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது.

000

  1. உள்நாட்டில் பார்ப்பனிய அடக்குமுறைகளை நிரந்தரமாக்கவும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை முடக்கவும் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலானது குறுகிய தேசியவெறி, போர்வெறியைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது. எந்நேரமும் எல்லையில் பதற்றமான நிலைமையைத் தோற்றுவித்து வருகிறது.
  2. உலக மேலாதிக்கக் கழுத்தறுப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் அடியாளாகவும், இந்தியத் துணைக் கண்டத்தின் பிராந்திய வல்லரசாகவும் இந்தியா நீடிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பல் அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே, அகண்ட பாரதக் கனவுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பல் என்பது, இந்திய மக்களுக்கு மட்டுமல்ல; தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிரானது. ஆகையால், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் இந்த கும்பலை முறியடிக்க ஒன்றிணையுமாறு இம்மாநாடு கோருகிறது.

000

  1. பாசிசத்தை அரங்கேற்றுவதில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி “குஜராத் மாடலை” தேசியமயமாக்கியிருக்கிறது. ஆதித்யநாத் கும்பல், “உ.பி. மாடலை” உருவாக்கியுள்ளது. எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து காலூன்றியுள்ளதோ, அங்கெல்லாம் அரசுக் கட்டமைப்பைக் கொண்டு முசுலீம் மக்கள், தலித்துகள் மீது கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கடந்த எட்டாண்டு காலத்தில் சுமார் 10 ஆயிரம் கலவரங்களை சங்கப் பரிவாரக் கும்பல்கள் நடத்தியிருக்கின்றன.
  2. கிராமங்கள் வரை கோயில் விழாக்கள், இந்து மத விழாக்கள், ஊரில் நடக்கும் பொது நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்திலும் பார்ப்பன மதவெறி கும்பல் ஊடுருவியிருப்பதோடு, குத்துவிளக்கு பூசை, நாக பூசை, அட்சய திருதியை, பிரதோஷம், அமாவாசை திதி, ராம பஜனை, ஆஞ்சநேயர் பஜனை, விநாயகர் சதுர்த்தி, சீதா கல்யாணம், ராதா கல்யாணம் — போன்ற பல்வேறு மத மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் இந்தக் காவி கும்பல் ஊடுருவியுள்ளது. பசுப் பாதுகாப்பு படை, கலாச்சார பாதுகாப்பு படை, கோயில் திருவிழா ஏற்பாட்டு கமிட்டிகள் உள்ளிட்டு பல்வேறு வடிவங்களில் மக்களிடம் அக்கும்பல் வேரூன்றியுள்ளது. இப்பாசிச கும்பலைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்துரைத்து, அக்கும்பலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் விரட்டியடிக்கவும் உகந்த போராட்ட வடிவங்களையும் அமைப்பு வடிவங்களையும் மேற்கொள்ள இம்மாநாடு உறுதியேற்கிறது.
  3. கஞ்சா – போதைப் பொருட்கள் விற்பனை மூலம் இளைஞர்களைச் சீரழித்தல், கூலிப் படைகளை உருவாக்குதல், கொடிய கிரிமினல்களை சங்கப் பரிவார அமைப்புகளில் இணைத்துக் கொள்ளுதல், போலி மோதல் கொலைகளைத் திட்டமிட்டு அரங்கேற்றுதல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் மூலம் பொது சிவில் சமூகத்திற்கு எதிரான மக்கள்விரோத அமைப்புகளாக சங்கப் பரிவார கும்பல்கள் வளர்ந்துள்ளன. சமுதாயத்தை அச்சுறுத்தும் இந்தப் பாசிச கிரிமினல் கும்பலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என இந்த மாநாடு அறைகூவுகிறது.
  4. பசுப் பாதுகாப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், பொதுச்சொத்து சேதத் தடுப்புச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், உத்திரப் பிரதேசத்தில் பொது இடங்களில் தொழுகை நடத்தத் தடை, ஹிஜாபுக்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவு – என இசுலாமியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவே ஏவப்பட்டுவரும் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க இம்மாநாடு அறைகூவுகிறது.
  5. குஜராத்தின் பில்கிஸ் பானு வழக்கில் காவி பயங்கரவாதிகளான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள அயோக்கியத்தனத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த அநீதிக்கு எதிராகப் போராடுமாறு உழைக்கும் மக்களை அறைகூவியழைக்கிறது.

000

  1. பேராசிரியர் சாய்பாபா, முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே மற்றும் பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்து சிறையிடப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட், குஜராத் முன்னாள் போலீசு அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோர் மீது பொய்வழக்கு சோடிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
  2. 2018-இலிருந்து 2020 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் “ஊபா” (UAPA) சட்டத்தின் கீழ் 4,960 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 149 பேரின் குற்றம் மட்டுமே நிருபிக்கப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேர், டெல்லி சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், உ.பி.யில் பாசிச முதல்வர் ஆதித்யநாத்தின் காட்டாட்சிக் கொடுமைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், தீவிரவாதி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் இளைஞர்கள் – என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இத்தகைய கொடூரமான ஆள்தூக்கிச் சட்டமான “ஊபா” (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை முற்றாக ரத்து செய்யும் வரை போராடுமாறு இம்மாநாடு அறைகூவியழைக்கிறது.
  3. ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைப்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் கொலை வழக்கைப் பதிவு செய்து சிறையிலடைக்குமாறும், அவர்களின் சொத்துக்களைப் பறித்து, அவர்களது அரசியல் உரிமைகளையும் ரத்து செய்யுமாறும் இம்மாநாடு கோருகிறது. இதைப் போலவே, கள்ளக்குறிச்சி போராட்டத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு இந்த மாநாடு கோருகிறது.

000

  1. பாரதிய ஜனதா கட்சி, 2014-ஆம் ஆண்டில் மோடி-அமித்ஷா கும்பல் தலைமையில் சட்டபூர்வமாக ஆட்சியில் அமர்ந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பன சித்தாந்தத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல் இரகசியமான – சட்டவிரோத வலைப்பின்னலைக் கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் மேலான அரசாங்கமாக, அடியாழத்திலுள்ள அரசாங்கமாக (deep state) அமைந்து தமது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்தி வருகிறது. நிலவுகின்ற முதலாளித்துவ நாடாளுமன்ற சர்வாதிகார ஆட்சி முறையைக் கொண்டே அதன் சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமே, படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக பாசிச நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றது. அரசாங்கத்துக்குள்ளேயே அரசாங்கத்தை நடத்தும் இச்சிறு கும்பலின் ஆட்சியானது – அரசின் தலைமை உறுப்புகள், போலீசு, இராணுவம், உளவுத்துறை, நிர்வாகத் துறை, அதிகார வர்க்கம், சிந்தனைக் குழாம்கள், நீதித்துறை, கல்வித்துறை உள்ளிட்டு அரசுக் கட்டமைப்பின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி வேர்விட்டுவிள்ளது என்றும்; இன்று அரசுக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும், இந்த பேரபாயத்தை முறியடிக்க அணிதிரளுமாறும் இம்மாநாடு அறைகூவுகிறது.
  2. ஆதார் அட்டையை அனைத்து அன்றாடத் தேவைகளுக்கும் அவசியமாக்குவதன் மூலம் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. திருட்டுகளைத் தடுப்பது என்ற பெயரில் கடைகள், ஆலைகள், அலுவலகங்கள், கல்லூரிகள், வீதிகள் – என நாட்டின் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் மூலம் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிரவாத்தத்தைத் தடுப்பது என்ற பெயரில் நாடு முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) விரிவுபடுத்தப்பட்டு, அப்பாவி இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மொத்தத்தில், இந்திய நாடு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் இச்செயலானது அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும் என்று இம்மாநாடு எடுத்துரைக்கிறது.
  3. சங் பரிவாரக் கும்பலானது, அரசின் அனைத்து அங்கங்களையும் தனது அடியாள் படையாக மாற்றுவது மட்டுமின்றி, தலித்துகள், பழங்குடியினரையும் அதில் இணைத்து வருகிறது. இவ்வாறு சிவில் சமூகத்தையே தனது அடியாள் படையாக மாற்றும் பாசிச நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக “அக்னிபாத் திட்டம்” அமைந்துள்ளது.
  4. தனது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றத் தடையாக இருப்பவர்களைப் பல்வேறு வகையில் ஒடுக்கிவரும் பாசிச மோடி அரசு, செய்தி ஊடகங்களைக் குறிவைத்து “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா – 2022” மூலம் சட்டபூர்வமாகவே கருத்துரிமையைப் பறிக்கக் கிளம்பியுள்ளது.
  5. தொழிலாளர் சட்டத் திருத்தம், ஒப்பந்தத் தொழிலாளர் முறையைத் திணிப்பது, தொழிலாளர் உரிமை – தொழிற்சங்க உரிமை பறிப்பு – முதலான தொழிலாளர் விரோத கார்ப்பரேட் திட்டங்களை இப்பாசிசக் கும்பலானது தீவிரமாகத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது; “புதிய போக்குவரத்துச் சட்டத் திருத்தம்” மூலம், ஓட்டுநர் உரிமம் வழங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பணியைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கையளித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, போக்குவரத்து வழித் தடங்களைக்கூட கார்ப்பரேட் நிறுவனங்களிடமே கையளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இப்போது மின்சார சட்டத் திருத்த மசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
  6. தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021, மூலம் நமது நாட்டின் கடற்கரையும் தீவுத் திட்டுகளும் 23 லட்சம் சதுர கி.மீட்டர் கொண்ட கடல் பரப்பும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone – EEZ) என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
  7. காலனிய கால அடக்குமுறைச் சட்டங்களை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கவும், இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தனது காவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறும் கிரிமினல் சட்டத் தொகுப்பை மோடி அரசு மாற்றியமைத்துள்ளது.
  8. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தனது உளவாளிகளை “ஆளுநர்கள்” என்ற போர்வையில் அனுப்பிவைத்து மோடி-அமித்ஷா கும்பல் கட்டுப்படுத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைச் செயல்பட விடாமல் தடுத்து முடக்கும் மைய அரசின் ஏஜெண்டுகளான மாநில ஆளுநர்களின் தலையீட்டை இம்மாநாடு எதிர்க்கிறது.
  9. மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டத் திருத்தங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை ஒரு நகராட்சி அளவிற்கு சுருக்குகிறது. இதன் மூலம் தேசிய இன – மொழி அடிப்படையிலான உரிமைகளையும் வளர்ச்சியையும் தடுத்து இந்திய நாட்டை தேசிய இனங்களின் சிறைக்கூடமாக மாற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியானது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிலுவைகளை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு மற்றும் கல்வியைக் காவிமயமாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடவும், தமிழகம் மட்டுமின்றி, அனைத்து தேசிய இனங்களின் மீதும் திணிக்கப்பட்டுள்ள இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடவும் இம்மாநாடு உறுதியேற்கிறது.
  10. ஜி.எஸ்.டி., தேசிய பணமயமாக்கல் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கைகள், பெட்ரோல்-டீசல் மட்டுமின்றி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் முதலானவற்றை மக்கள் மீது சுமத்தி, கடுமையான வரிச்சுமையையும் அடக்குமுறையையும் மோடி அரசு திணித்து வருவதை இம்மாநாடு கடுமையாக எதிர்க்கிறது.
  11. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பால் வளர்க்கப்பட்ட இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் அரசின் மிகப்பெரிய பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யையும் நூறு சதவிகிதம் தனியார்மயமாக்கி கார்ப்பரேட்டுகளுக்குக் கறி விருந்தாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட இம்மாநாடு சூளுரைக்கிறது.
  12. ஜிண்டால் கனிம வளக் கொள்ளைக்கு ஏற்ப தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எட்டுவழிச் சாலைத் திட்டம், பாலியப்பட்டு சிப்காட் திட்டம், வேதாந்தா மற்றும் ஒன்.என்.ஜி.சி.யின் மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராட இம்மாநாடு உறுதி ஏற்கிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளதையும், அனைத்து அரசுத் துறைகளையும் உள்நாட்டு, பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதை எதிர்த்துப் போராடவும் இம்மாநாடு உறுதி ஏற்கிறது.
  13. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாசிஸ்டுகள் அதிரடியாக ரத்து செய்ததைப் போல் அல்லாமல், நிலவுகின்ற போலி ஜனநாயகத்தையே பாசிசத் தன்மை கொண்டதாக பா.ஜ.க மாற்றிக்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. மோடி அரசை அரசியல் ரீதியில் விமர்சிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு சொற்களை நாடாளுமன்ற விவாதங்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

000

  1. மேற்குறிப்பிட்டவை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசத்தின் சில முக்கியமான நடவடிக்கைகள் மட்டுமே. இதன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விரிவாக மக்களிடம் விளக்கி அவற்றை முறியடிக்க வேண்டும் என்று இந்த மாநாடு அறைகூவுகிறது.
  2. பெரியார், அம்பேத்கர், பூலே, வள்ளலார் மற்றும் பிற சமுதாய சீர்திருத்தவாதிகளால் கட்டிக்காத்து செயல்படுத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை உயர்த்திப் பிடிக்குமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் இம்மாநாடு அறைகூவியழைக்கிறது.
  3. இந்து ராஷ்டிர அடக்குமுறை, மனுவாத பாசிசம், ஒரு கட்சி சர்வாதிகாரம், காவி – கார்ப்பரேட் பாசிசம், இந்துத்துவ எதேச்சதிகாரம் போன்ற பல்வேறு வகையில் இப் பாசிச அடக்குமுறை அடையாளப் படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் சாராம்சம் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசமேயாகும். வழிமுறைகள் வேறுபட்டிருந்தாலும், அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலமே படர்ந்துவரும் பாசிச பேரபாயத்தை முறியடிக்க முடியும்.
  4. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலை தேர்தல் அரசியல் மூலம் மட்டுமே வீழ்த்திவிட முடியாது என்று இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது; மொத்த அரசுக் கட்டமைப்பையும் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிற காவி கும்பலை அனைத்து அரங்குகளிலும் முறியடிக்க வேண்டுமானால், தேர்தல் அரசியலுக்கு வெளியே பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியை உருவாக்குவதே ஒரே வழி என்று இம்மாநாடு அறிவிக்கிறது. காவி -கார்ப்பரேட் பாசிசப் பேரிருளைக் கிழித்தெறிவதற்கான ஒரு மக்கள்திரள் எழுச்சியை நாம் உருவாக்காமல் போனால், காத்திருக்கும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது என்பதையே நிலைமைகள் காட்டுகின்றன. அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என அனைத்து துறைகளையும் இந்து ராஷ்டிரத்திற்கு ஏற்ற வகையில் மறு உருவாக்கம் செய்துவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் முயற்சிகளை தவிடுபொடியாக்க புரட்சிகர -ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டெழுமாறு இம்மாநாடு அழைக்கிறது.
  5. இந்து மதவெறி பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் முதலாளிகளின் பாசிசமும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசம் முன்னேறித் தாக்கிவரும் தற்போதைய சூழலில், அதனை வீழ்த்துவதற்கான நோக்கத்துடன் களப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று இந்த எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும். தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சிறு வணிகர்களுக்கான சங்கங்கள், மாணவர்-இளைஞர் சங்கங்கள் – என உழைக்கும் வர்க்க அமைப்புகள் மற்றும் அனைத்து பாசிச எதிர்ப்புச் சக்திகளும் ஒன்றிணைந்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி உடனடி அவசியம் என்று இம்மாநாடு கருதுகிறது; அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, உழைக்கும் வர்க்கங்களையும், புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குவதன் மூலமே இத்தகையதொரு உண்மையான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்க இயலும் என்றும், அத்தகைய முன்னணியைக் கட்டியமைப்பதற்கான எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கவும் இந்த மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  6. ஒருபுறம் வேலையின்மை, விலையேற்றம், கொத்தடிமைத்தனம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பறித்து கோடிக்கணக்கான மக்களை நிர்கதியில் தள்ளியுள்ளது, பாசிச பா.ஜ.க. கும்பல்; மற்றொருபுறம், சிவில் சமூகத்தையே கிரிமினல் மயமாக்கி, வாழ்வதற்கே அச்சமூட்டும் நிலைமையில் மக்களைத் தள்ளி, தனது பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது. இந்து ராஷ்டிரத்தை முறியடிப்பது என்பது மனித சமூகத்திற்கு ஆற்றும் மகத்தான கடமை என்பதையும், இப்போது இதனை முறியடிக்கத் தவறினால், இனி எப்போதும் மனித சமுதாயம் எழுந்து நிற்க முடியாது என்பதையும் இந்த மாநாடு ஆணித்தரமாக அறைந்து கூறுகின்றது. அந்த மகத்தான கடமைக்கு நமது நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் – இளைஞர்கள், சிறு வணிகர்கள், மீனவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர், மத சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு அறைகூவி அழைக்கிறது.

★★★

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு: 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க