“ஜாலியன் வாலாபாக் அருகில் உள்ள எங்கள் வீட்டில் நான் அமர்ந்து இருந்தேன்.  திடீரென துப்பாக்கிகள் சுடும் சத்தங்கள் கேட்டன. அஞ்சிப் பதறி எழுந்தேன். என் கணவர் அங்கேதான் சென்று இருந்தார். பயம் நெஞ்சைக் கவ்வியது. ஓரிரு மணி நேரத்திற்குப் பின் சில பெண்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றேன். போகும் வழியெங்கும் சாலையில் பலர் இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பலர், உதவி கேட்டு அலறினர். அங்கே ஜாலியன் வாலாபாக்கில் குவியல் குவியலாக பிணங்கள் இருந்தன. ஒரு குவியலின் அருகே என் கணவரின் உடல் கிடைத்தது. நான் இரத்தக் களறியில் பிணங்களுக்கு நடுவே தாண்டிச் செல்ல வேண்டிருந்தது.”

“சற்று நேரத்திற்கு பின் லாலா சுந்தர்தாஸின் பிள்ளைகள் இருவரும் வந்தனர். என் கணவரின் உடலை எடுத்துச் செல்ல ஒரு கட்டில் எடுத்து வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டேன். இரு பையன்களும் போய்விட்டனர். அந்தப் பெண்களையும் அனுப்பிவிட்டேன். அப்போது மாலை எட்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.  ஊரடங்குச் சட்டத்திற்கு அஞ்சி யாரும் வீட்டிற்கு வெளியே தலை காட்டவில்லை.  அங்கேயே நின்று கொண்டு இருந்தேன். எதிர்பார்த்தபடி, காத்திருந்தபடி, அழுதபடி…”

“எட்டரை மணி இருக்கும்.  ஒரு சர்தார்ஜி அங்கு வந்தார்.  இன்னும் சில மனிதர்கள் வந்தனர்.  பிணங்களுக்கு இடையே எதையோ அல்லது யாரையோ தேடினர். என் கணவரின் உடலை ஏதேனும் ஒரு உலர்ந்த இடத்தில் வைக்க உதவுமாறு அந்த சர்தார்ஜியிடம் கேட்டேன். அவர் உடல் கிடந்த இடத்தில் ஒரே இரத்தச் சகதியாக இருந்தது. உடலின் தலைப்பகுதியை சர்தார் தூக்கினார். நான் கால்களை பிடித்து தூக்கினேன். அங்கிருந்த மரக்கட்டைகள் மீது உடலை கிடத்தினோம்.”

“இரவு பத்துமணி. லாலா சுந்தர்தாஸின் மகன்களை காணவில்லை. எழுந்து கட்ரா ஆப்லோவாவின் திசையில் செல்லத் துவங்கினேன். அங்கே டாக்கூர் துவாராவில் உள்ள மாணவர்களிடம் உதவி கேட்க நினைத்தேன். சில அடிகள்தான் சென்று இருப்பேன்.  ஒரு வீட்டின் ஜன்னல் வழியே ” எங்கே போகிறாய்?” என ஒருவர் கேட்டார்.  கணவரின் உடலை அகற்ற உதவி கேட்டுப் போவதைப் பற்றி அவரிடம் கூறினேன். “எட்டு மணிக்கு மேல் யாரும் வரமாட்டார்களே!” என அவர் கூறினார்.  சற்று தூரத்தில் ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்த சில பெரியவர்களிடம் என் நிலைமையை கூறி உதவி கேட்டேன்.  “பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  இங்கே யாருக்கும் குண்டு வாங்கிச் சாக விருப்பம் இல்லை” என்றனர்.”

“திரும்பி வந்து கணவரின் உடலருகே அமர்ந்தேன்.  ஒரு சிறிய மூங்கில் பிளாச்சு கிடைத்தது. அதை வைத்து நாய்களை விரட்டியபடி இரவு முழுவதையும் கழித்தேன்.  அருகில் சிலர் வலி தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தனர்.  ஒரு எருமை மாடும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.  பன்னிரெண்டு வயது பையன் ஒருவன் வேதனையில், “என்னை விட்டு போய்விடாதீர்கள்” என கத்திக் கொண்டு இருந்தான்.  குளிருக்காக என் துப்பட்டாவை எடுத்து அவன் மேல் போர்த்தினேன்.  தண்ணீர் கேட்டான்.  அங்கு ஏது தண்ணீர்?”

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

“இரவு நகர்ந்தது.  ஓலங்கள் தற்போது அவ்வளவாக இல்லை.  மணிக்கொருமுறை பெரிய கடிகாரத்தின் ‘டண், டண்’ ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி இருக்கும்.  குண்டு காயம் பட்ட ஒருவர், பிணங்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டுவிட்ட தனது காலை வெளியே எடுக்க உதவும் படி கேட்டார்.  சூல்தான் கிராமத்தை சேர்ந்தவராம்.  இரத்தம் தோய்ந்த அவரது உடையை பற்றிக் கொண்டு கால்களை மேலே தூக்கிவிட்டேன்.  அதற்குப் பின் காலை ஐந்தரை மணிவரை வேறு யாரும் அங்கே வரவில்லை.

ஆறு மணி சுமாருக்கு லாலா சுந்தர்தாஸும் அவரது பையன்களும் வந்தனர். உடன் எங்கள் தெருவைச் சேர்ந்த சிலர் ஒரு கட்டிலை எடுத்து வந்திருந்தனர். என் கணவரின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தோம். திடலில் இன்னும் பலர் தம் உறவினர்களை தேடிக் கொண்டு உள்ளனர். இரவு முழுவதையும் நான் அங்கே கழித்தேன். என்னுள் எழுந்த உணர்ச்சிகளை விவரிக்க இயலாது. என்னைச் சுற்றிலும் குவியல் குவியலாய் பிணங்கள். அவற்றில் சிலர் அறியாச் சிறுவர்கள். இரவு முழுவதும் அந்த தண்ணியில்லாக் காட்டில் நாய்களின் குரைப்பொலியும், கழுதைகளின் கத்தல்களும், உயிருக்குப் போராடியவர்களின் மரண ஓலங்களும் தவிர வேறு ஏதும் இல்லை. அந்த இரவை எப்படி கழித்தேன் என்பது எனக்குத் தெரியும். கடவுளுக்குத் தெரியும்…”

-ரத்தன் தேவி
(ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தன் கணவரை இழந்தவர்.)

***

ப்படித்தான் அது தொடங்கியது.

லாப வெறி பிடித்த ஏகாதிபத்தியங்கள், உலகை பங்கு போட்டுக் கொள்ள உலக யுத்ததில் ஈடுபட்டன. முதலாம் உலக யுத்தம்.  ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனக்காக யுத்தம் செய்ய தனது காலனி நாடுகளை மேலும் அதிகமாக சூறையாடியது.

இந்திய இளைஞர்கள் இலட்சக்கணக்கானோரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கட்டாயப் படுத்தி இராணுவத்தில் சேர்த்து யுத்தத்திற்கு அனுப்பியது.

தனது யுத்த தேவைகளுக்காக, ‘யுத்த நிதி’ என்ற பெயரில் மாபெரும் வழிப்பறிக் கொள்ளையை நடத்தியது.  யுத்த காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் அள்ளிச்சென்ற பணம் பத்துகோடி பவுன் தொகைக்கும் மேலானது.

விளைந்த தானியங்களை அள்ளிச் சென்றது.  இதனால் கடும் விலைவாசி உயர்வு. மருத்துவ வசதிகள் போதாததால், காலரா, மலேரியா, இன்புளூயன்சா போன்ற நோய்கள் பரவின. யுத்த காலத்தில் மட்டும் கொள்ளை நோய்களால், ஒன்றரை கோடி இந்தியர்கள் மாண்டுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசோ மேலும் மேலும் சுரண்டியது. எதிர்த்தவர்களை சிறப்பு அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றி, கைது செய்து சிறையில் அடைத்தது. மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்.

1917, நவம்பர் 7.  ரஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது.  உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தது.  இந்திய மக்களும் ரஷ்யப் புரட்சியால் உந்தப்பட்டனர். மக்களின் போராட்டங்கள் தீவிரமாகின.

யுத்தகால கருப்புச் சட்டங்கள் மக்கள் மீது பாய்ந்தன. நவம்பர் 11- 1918-ல் உலக யுத்தம் முடிவுற்ற போது, ‘சுயராஜ்ஜியம் கிடைக்கும்’ என்று மக்கள் நம்பினர். ஆனால், மார்ச் 10 – 1919 அன்று, ‘தீவிரவாத நடவடிக்கைகள் சட்டம்’ என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டிஷ் அரசு.  பிரிட்டிஷ் நீதிபதி சர். ஸிட்னி ஆர்தர் டைலர் ரெளலட் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளே அந்தக் கருப்புச் சட்டம்.  தலைவரின் பெயரால் ‘ரெளலட் சட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்ய முடியும், கைது செய்யப்பட்டவர்களை விசாரணையே செய்யாமல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடியும்.

யுத்தகால காலனிய சுரண்டல்களால், கொதித்துப் போய் இருந்த மக்களுக்கு, ‘சுயராச்சியம் கிடைக்கும்’ என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்ததெல்லாம் இந்த அடக்குறை கருப்புச் சட்டம்தான்.

கொதித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  மார்ச் 30 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்த அறைகூவியது காங்கிரசு கட்சி.

அந்நாளில் பஞ்சாப் மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னர் ஆக இருந்தவர், சர்.மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டையர்.  அடக்குமுறைகளுக்கு பெயர் போன, கொடூரமான ஒரு அராஜகப் பேர்வழி அவர்.

மார்ச் 29-1919 அமிர்தசரஸ் நகரின் ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அமிர்தசரஸ் மக்களின் மரியாதைக்குரிய தலைவர்களான வழக்கறிஞர். முனைவர். சைஃபூதீன் கிச்லூ மற்றும் மருத்துவர். சத்யபால் ஆகியோர் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.

அன்று இரவு, மரு. சத்யபால் பொது நிகழ்சிகளில் பேசக்கூடாது என அவருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறது அரசு. மார்ச் 30 -1919. பொது வேலை நிறுத்தம் நாடெங்கிலும் முழு வெற்றி பெறுகிறது.

டில்லியில் அன்று காலை நடந்த போராட்டப் பேரணியை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியது பிரிட்டிஷ் அரசு. 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அன்று மாலையே, துப்பாக்கிச் சூட்டை கண்டித்து டில்லியில் கண்டனக் கூட்டம் திரு.ஸ்ரத்தானந்தா தலைமையில் நடத்தப் பட்டது.  கூட்டம் முடிந்ததும், மக்கள் பேரணியாக சென்றனர். சாந்தினி செளக் பகுதியில் பேரணியை வழிமறித்தது ஏகாதிபத்தியப் படை. மக்கள் கலைய மறுத்து எதிர்த்து நின்றனர். பிரச்சினையை பெரிதாக்க விரும்பாத இராணுவம் திரும்பிச் சென்றது.

ஜாலியன்வாலா பாக் திடலில், வழக்கறிஞர் சைஃபூதின் கிச்லூ தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கிச்லூவுக்கும் வாய்ப்பூட்டு போடுகிறது அரசு.

டில்லி துப்பாக்கிச் சூடு நாடெங்கும் மக்களை கொதித்தெழச் செய்தது.  குறிப்பாக பஞ்சாப் மக்கள் கொதி நிலையின் உச்சத்தில் இருந்தனர்.

மார்ச் 31-1919. டில்லியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஏப்ரல் 2-1919. ஜாலியன்வாலா பாக்கில் காங்கிரசு பேச்சாளர் சத்யதேவ் உரையாற்றுகிறார். அஹிம்சை முறையில் போராட வலியுறுத்துகிறார்.

ஏப்ரல் 5-1919. மறு நாள் ஏப்ரல் 6 அன்று நடக்க இருந்த இரண்டாவது பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் கைக்கூலிகளை ஏவி விடுகிறார் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர். பஞ்சாபில் நுழைய காந்திக்கு தடை விதிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் துணை கண்காணிப்பாளரும், மறுநாள் நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் அடிவருடிகளைத் தூண்டி விடுகிறார்.  நகரம் முழுவதும் ‘மறு நாள் போராட்டம்’ ரத்து செய்யப்பட்டதாக செய்தி பரவுகிறது.  உடனே, இளைஞர்கள் பலர் திரண்டு, வீடு வீடாகச் சென்று ‘மறு நாள் போராட்டம் நடப்பது உறுதி, துரோகிகளின் புரளியை நம்பவேண்டாம்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

படிக்க:
♦ என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !
♦ பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. !

ஏப்ரல் 6 – 1919. பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெறுகிறது.  ஒரு சின்னஞ்சிறிய கடை கூட திறக்கப் படவில்லை.  எங்கும் எந்த ஒரு தொழிலும் நடக்கவில்லை.

மாலையில், ஜாலியன் வாலா பாக்கில் பொதுக் கூட்டம்.  ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளம்.  உரைகள், கவிதைகள் எல்லாம் போக மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

1) ரவுலட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

2) சத்யபால், கிச்லூ மீதான வாய்ப்பூட்டு இரத்து செய்யப் பட வேண்டும்.

3) தொடரும் சத்யாகிரகப் போராட்டங்களுக்காக குழு ஒன்று உருவாக்க வேண்டும்.

கூட்டத் தலைவர், வழக்கறிஞர் பதர்-உல்-இஸ்லாம் அலிகான், அகிம்சையை வலியுறுத்தி பேசுகிறார்.

ஏப்ரல் 7-1919. லாகூர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர், ‘கலகம் விளைவிக்கும்’ தலைவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என அச்சுறுத்துகிறார்.

ஏப்ரல் 8-1919. அமிர்தசரஸ் துணைக் கண்காணிப்பாளர், நிலைமை மோசமடைந்து வருவதாகவும், கூடுதல் படைகளை அமிர்தசரசிற்கு அனுப்பும் படியும் மைக்கேல் ஓ’டையர் -க்கு கடிதம் எழுதுகிறார்.

ஏப்ரல் 9-1919. இராமநவமி திருவிழா. இந்துக்களின் இந்த விழாவில் பல்லாயிரம் இசுலாமிய மக்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழா ஊர்வலத்திலும் அனைத்து மத மக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர். இந்த ஒற்றுமை பற்றிய செய்தி மைக்கேல் ஓ’டையர் -க்கு போகிறது.  ஒற்றுமை அவரை பீதி கொள்ளச் செய்கிறது.

ஏப்ரல் 10-1919. துணைக் கண்காணிப்பாளர் அழைப்பின் பெயரில், அவரைக் காண சத்யபாலும், கிச்லூவும் செல்கின்றனர். மைக்கேல் ஓ’டையரின் ஆணைப்படி அவர்கள் இருவரையும் கைது செய்து தர்மசாலாவில் சிறை வைக்கின்றனர்.

கொதித்துப் போன மக்கள் துணைக் கண்காணிப்பாளர் பங்களாவையும், நீதிமன்றத்தையும் நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.  ஊர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

எல்லா இடங்களிலும் தயாராக இருந்தது வெள்ளை போலீசு.  போலீசு படையும், அவர்களின் குதிரைப் படையும் மக்களின்மீது தாக்குதல் தொடுக்கின்றன.

மக்களின் உணர்வு நிலை மாறிக் கொண்டே இருந்தது.  தம் தலைவர்களை விடுவிக்க முடியாத கோபம் ஒருபுறம்.  போலீசு தாக்குதலில் தம் மண்டைகள் உடைவது மறுபுறம் என கொதித்துப் போய் இருந்தனர்.

அப்பொழுதும், அகிம்சையை பின்பற்றி அமைதியாக அடிபட்ட தம் தோழர்களை அழைத்துக் கொண்டு ஹால்பஜார் நோக்கிச் சென்றனர். அப்பொழுது, நகரெங்கும் சாலைத் தடையரண்களை வெள்ளை அரசு அமைத்து வரும் செய்தி வந்தது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்த்தது போல் ஆனது.

கொதித்துக் கொண்டிருந்த மக்கள் அப்பொழுதும் வன்முறையைத் தவிர்க்க, கேரேஜ் பாலம் என்ற நடை பாலம் நோக்கி பயணப்பட்டனர். இப்பொழுது மக்களின் கைகளில் கம்புகள் இருந்தன. பாலத்தின் ஒருபுறம் அடக்குமுறைக்கு ஆளான மக்கள்.  மறுபுறம் துணைக் கண்காணிப்பாளர் இர்விங்-உடன் ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு.

வழக்கறிஞர்கள் ஸலாரியாவும் மக்புல் மஹ்மூத்தும் இரண்டு தரப்பிலும் இருந்த இறுக்கத்தை தளர்த்தப் படாத பாடு பட்டனர். அவர்களின் முயற்சிகளுக்கு நாட்டுப் பற்றாளர்கள் கட்டுப்பட்டனர்.  ஆனால், ஏகாதிபத்தியப் படைகளின் நோக்கம் வேறு.

மக்கள் கூட்டத்தில் இருந்து கற்களும் கழிகளும் வீசப்பட்டதாகக் கூறி, போலீசு சுட்டுத் தள்ளியது. இருபது நாட்டுப் பற்றாளர்கள் இன்னுயிர் ஈத்தனர்.  பலர் படுகாயம் அடைந்தனர். காயம்பட்டவர்களை மருத்துவ நிலையம் கொண்டு செல்ல முயன்றார் மக்பூல்.

நாட்டுப் பற்றாளர்களுக்கு உதவிகள் ஏதும் செய்யக் கூடாதெனற உத்தரவை முன்னரே போட்டிருந்தார் ஆங்கில அதிகாரி பலோமர். மருத்துவ உதவி கூட ஏதும் நாட்டுப் பற்றாளர்களுக்கு கிடைக்கவில்லை. மக்களின் சினம் எல்லை தாண்டியது.

சிலர் தந்தி நிலையத்தை முற்றுகை இட்டனர். ஆனால், இரயில் நிலையத்தில் இருந்த படைப்பிரிவு தந்தி நிலையம் வந்ததால், தந்தி அதிகாரி உயிர் தப்பினார். அதேநேரம், இரயில் நிலையம் சென்றது வேறு ஒரு மக்கள் குழு. நிலைய சூப்பரிண்டெண்டண்ட் எப்படியோ தப்பி விட்டார்.  ஆனால், ஒரு வெள்ளை கார்ட் பலியானார்.

நேஷனல் வங்கியில் மூன்று பேர் மரணம் தழுவினர்.  வங்கிக் கட்டிடமும், அதன் சேமிப்புக் கிடஙகும் (ஜவுளி ஆடைகள் சேமிப்புக் கிடங்கு) தீக்கிரையாகின. அல்லையன்ஸ் வங்கி மேலாளர் கொல்லப்பட்டார்.  வங்கியின் பணக் காப்பகம் சூறையாடப்பட்டது. சார்ட்டர்ட் வங்கியும் தாக்குதலுக்கு ஆளானது.  ஆனால், உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏதுமில்லை.

ஷேர்வுட் என்ற கன்னியாஸ்திரி, ஒரு குறுகிய தெருவில் தாக்கப்பட்டார்.  அவரை ஒரு குடும்பம் பாதுகாத்து, பின்னர் மருத்துவ நிலையம் சேர்த்தது. அமைதியாக போராடிய மக்கள் மீது, வன்முறை ஏவி, அவர்களை வன்முறையாளர்களாக்கியது அரசு.

வெள்ளையர் வன்முறையில் இருபது நாட்டுப் பற்றாளர்களும், மக்களின் எதிர் வன்முறையில் 4 வெள்ளையரும் பலியாகினர்.

வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறி, மக்கள் மீது அரச வன்முறையை ஏவுவது, ஆண்டாண்டு காலமாக அரசு பயன்படுத்தும் தந்திரம்தான்.  தாமிரபரணி, பரமக்குடி, லால்கர் முதல் தூத்துக்குடி வரை, அரசை பொறுத்தவரை தம் உரிமைக்காக போராடும் மக்கள் தானே வன்முறையாளர்கள்.

ஏப்ரல் 11-1919. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நான்கு பேருக்கு மேல் உடன் செல்லக் கூடாது. ஒரு பிணத்திற்கும், இன்னொரு பிணத்திற்கும் இடையில் 15 நிமிட இடைவெளி வேண்டும். அடக்கங்களை மதியம் இரண்டு மணிக்குள் முடிக்க வேண்டும். இரண்டு மணிக்கு விசில் ஊதப்படும் போது, கூட்டம் கலைந்து விட வேண்டும். மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.

எந்த ஒரு இடத்திலும் நான்கு பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது. மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். இவை துணை கண்காணிப்பாளரின் உத்தரவுகள்.

அன்று மாலை, ஜலந்தர் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் அமிர்தசரசின் பொறுப்பை ஏற்றார்.

ஏப்ரல் 12-1919. நகர் முழுவதும் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. நகரம் விமானங்கள் மூலம் கண்காணிக்கப் பட்டது. மக்களை மிரட்ட ஜெனரல் டயர் தன் படைகளுடன் நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தினார்.  ஓரிடத்தில் மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  ஆனாலும் எதிர்ப்பு என்பது பெரிய அளவில் இல்லை.

அதே நேரம், எந்தத் தொழிலும் நடக்கவில்லை. எந்தக் கடையும் திறக்கவில்லை.  வெற்றி கிட்டும்வரை பொது வேலை நிறுத்தம்தான் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

ஏப்ரல் 13-1919. அன்று பஞ்சாபியரின் புத்தாண்டான பைசாகி திருவிழா.  இந்து, முசுலீம், சீக்கியர் என அனைவரும் ஒரே தட்டில் உண்டு, ஒரே குவளையில் நீர் அருந்தும் திருநாள். பல்லாயிரக்கணக்கில் மக்கள் பொற்கோவிலில் கூடினர்.

இன்றும், ஜெனரல் டயர் மிரட்டல் இராணுவ அணிவகுப்பை நடத்தினார். அணிவகுப்புக்கு பின்னர், ‘நான்கு பேருக்கு மேல் மக்கள் கூட்டம் கூடுவது குற்றம், மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்’ என்று தமுக்கடித்து அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

சற்று நேரத்தில், காலி தகர டப்பாக்களை அடித்தபடி இளைஞர் கூட்டம் வீதிகளில் இறங்கியது. மாலை 4.30 மணிக்கு ஜாலியன்வாலா பாக்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களை அறை கூவினர். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் ஜாலியன்வாலா பாக்கில் கூட்டம் துவங்கியது.

சற்று நேரத்தில் அங்கே டயரும் இராணுவமும் நுழைந்தனர். துப்பாக்கிகள் சீறின. சில ஆயிரம் பேர் செத்துப் போனார்கள். பல ஆயிரம் பேர் படுகாயம் அடந்தனர். தோட்டாக்கள் தீரும் வரை பத்து பதினைந்து நிமிடங்கள் சுட்டுத் தள்ளிவிட்டு, கிளம்பிச் சென்றனர் டயரும் இராணுவத்தினரும்.

*****

இந்த படுகொலையை அஞ்சி, நடுங்கி ஒடுங்கிவிடவில்லை பஞ்சாப் மக்கள். பொது வேலை நிறுத்தம் தொடர்ந்தது. கடையை திறக்க மறுத்த வணிகர்களை அடித்து உதைத்து, வீதிகள் வழியே புழுக்களைப் போல ஊர்ந்து போக வைத்தான் வெள்ளையன்.

தொழில்கள் ஏதும் நடக்கவில்லை. கம்பத்தில் கட்டி சவுக்கால் அடித்தான். பணியவில்லை பஞ்சாப். விலங்குகள் போல இரும்புக் கூண்டுகளில் அடைத்தான். பள்ளி மாணவர்களை பல மைல் தூரம் நடக்க வைத்து, தன் யூனியன்  ஜாக் கொடியை வணங்க வைத்தான்.

குடிநீரையும் மின்சாரத்தையும் நிறுத்தினான். குஜ்ரன்வாலா வயல்களில் உழைத்துக் கொண்டு இருந்த விவசாயிகள் இருபது பேரை காரணம் ஏதும் இன்றி சுட்டுக் கொன்றான். குஜ்ரன்வாலா, காசூர், லாகூரில் விமானங்கள் மூலம் குண்டு வீசி மக்களைக் கொன்றான். பஞ்சாப் பணியவில்லை.

இந்தக் காலகட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிடம் இருந்து பஞ்சாப் துண்டிக்கப் பட்டு இருந்தது. பஞ்சாப் செய்திகள் வெளியே கசிந்த போது, நாடே பதறித் துடித்தது. பஞ்சாப் படுகொலை பற்றி விசாரிக்க குழு அமைத்தது காங்கிரசு கட்சி.

படிக்க:
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

“லெப்.கவர்னர் மைக்கேல் ஓ’டையரும், ஜெனரல் டயரும்தான் குற்றவாளிகள்” என ஆணித்தரமாக கூறியது காங்கிரசு குழு அறிக்கை. ஹாண்டர் பிரபு தலைமையில் குழு அமைத்து விசாரித்தது பிரிட்டிஷ் அரசு.

“ஓ’டையர் குற்றமற்றவர்.  ஆனால், ஜெனரல் டயர் குற்றவாளி” என்றது ஹண்டர் குழு. ஹண்டர் குழு அறிக்கையை ஏற்று, ஜெனரல் டயரை பதவி விலகக் கோரியது பிரிட்டிஷ் மக்களவை (House of Commons). ஆனால், அரசரவையோ (House of Lords) ஜெனரல் டயர் மீது நடவடிக்கை கூடாது என தடை போட்டது. மேலும் அந்த கசாப்புக் கடைக் காரனை, ‘இங்கிலாந்தின் மாவீரன்’ என்றும் கொண்டாடியது.

இதோ, நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்காக 10-04-2019 அன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர்.

உத்தம் சிங்கையும் பகத்சிங்கையும் உருவாக்கியது அன்றைய ஜாலியன் வாலா பாக்  படுகொலை. அதன் நூறாம் ஆண்டு நிறைவில் நாம் பல நூறு பகத் சிங்-களாய் எழுந்து நிற்போம் !


தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க