பகத்சிங்காய் பிறந்திடு – மார்ச் 23, பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுநாள்

பிறந்தால்
உன்னைப் போல
பிறக்க வேண்டும்.
இறந்தாலும்
உன்னைப் போல
இறக்க வேண்டும்.

பிறப்பின் நோக்கமும்
இறப்பின் நோக்கமும்
பிரிக்கவியலாத
மானுடப்
படி மலர்ச்சி நீ!

வாழ்வின் பின்னால்
ஒளிந்துக் கொண்டு
நியாயம் தேடவில்லை.
சாவின் பின்னால்
மறைந்து கொண்டு
அனுதாபம் தேடவில்லை,
அரசியல் தேடினாய்.
மனித இளமையின்
புதிய உணர்ச்சி நீ!

கதரை
கதற விட்டாய்
காவியை
ஆவியாக்கினாய்
வர்க்கத்தை
அரசியலாக்கினாய்.

ஏகாதிபத்தியத்தின்
ஒட்டமைப்பாய்
பல கட்சிகள்
நெளிந்த நேரத்தில்,
இந்த கட்டமைப்பையே
தகர்க்காமல்
விடுதலை சாத்தியமில்லை
என தெளிந்த
வெளிச்சம் நீ!

மலர்ந்து… பறிக்கப்படும்
கொஞ்ச நேரத்தில்
சகலரையும் ஈர்த்த
வாடா மல்லி நீ,
புரட்சியின் விதைகளை
திசையெங்கும் தூவி விட்டு
பொழுதுக்குள் எரிக்கப்பட்ட
பொழுதடங்கா சூரியன் நீ!

விடுதலையின் நிறம்
சிவப்பு என்பதை
வெளிப்படையாகச் சொன்ன
தைரியச்சொல்.. பகத்சிங்.

உழைக்கும் மக்களின்
இதயம் கவர்ந்த
மார்க்சிய இசையின்
இந்திய இன்பம் நீ!

பகத்சிங் என்றால்..
ராஜகுரு, சுகதேவ், இன்னும்
பல புரட்சியாளர்களும் அடக்கம்,
பகத்சிங் என்றால்..
தத்துவம், வீரம், தியாகம்
தளராத செயல்களின் தொடக்கம்.

பகத்சிங் என்றால் புரட்சி
புரட்சி என்றால் பகத்சிங்!
புரட்சி விருப்பமா..
தேர்தலை மற
பகத்சிங்கை நினை!

துரை.சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க