தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

முதலாளித்துவ கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதன்மூலம் ஒருகாலும் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியாது. அதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் ஒரே வழி. அதுவே தோழர் பகத்சிங்கின் வழி!

மார்ச் 23 – தோழர் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்!
தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவார் கும்பல் அதிதீவிர கார்ப்பரேட் சுரண்டலையும், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளையும் அடிப்படையாகக்கொண்ட இந்து ராஷ்டிர பயங்கரவாத அரசைக் கட்டியமைப்பதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் பார்ப்பன இந்துமதவெறியை வெகு தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் தோழர் பகத்சிங்கின் மதம் தொடர்பான கருத்துக்களைப் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.

மதங்களின் சடங்குகள் நம்மைத் தீண்டத்தகுந்தவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிரித்துவிட்டதாக எழுதுகிறார். இந்தக் குறுகிய மற்றும் பிளவுபடுத்தும் மதங்களால் மக்களிடையே உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் உணர்ந்தார். “நம்மைப் பொறுத்தவரைச் சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவு என்று இருக்கக்கூடாது. நமது முழு சுதந்திரம் என்பது சாதி மற்றும் மதத் தடைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்வதைக் குறிக்கிறது” என்றும் கூறுகிறார்.


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


அன்றைய காலகட்டத்தில் மதக்கலவரங்களை தூண்டிய அரசியல் தலைவர்களைக் கண்டிக்கிறார். இந்திய அரசியல் தலைமை முற்றிலும் திவாலாகிவிட்டது என்று உறுதிப்படக் கூறுகிறார்.

“வகுப்பு வன்முறையைத் தூண்டுவதற்கு மற்றொரு கருவி பத்திரிகைகளில் எழுதுபவர்கள். பத்திரிகைத் தொழில் ஒரு காலத்தில் உன்னதமானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அது ஒரு மோசமான குழப்பத்தில் உள்ளது. இந்த மக்கள் சமூகங்களுக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையின் நிலையான உணர்வைத் தூண்டும் தலைப்புகளுடன் மற்றொரு சமூகத்திற்கு எதிராக எழுதுகிறார்கள். இந்தக் கொந்தளிப்பான காலங்களில் தங்கள் மனதிலும் இதயத்திலும் சமநிலையைக் கொண்டிருக்கக் கூடிய சில செய்தியாளர்கள் மட்டுமே இருந்தனர்” என்று எழுதுகிறார் பகத்சிங். இது நிகழ்காலத்திலும் துல்லியமாகப் பொருந்துகிறதல்லவா? அப்படி சமநிலையைப் பேணுகின்ற பத்திரிகையாளர்கள் இன்று பாசிச மோடி கும்பலால் வேட்டையாடப்படுகிறார்கள்.

…சுதந்திரத்தை நம் கண்முன்னே பார்த்த அந்த நாட்கள் எங்கே? சுதந்திரம் என்பது மீண்டும் தொலைதூரக் கனவாகிவிட்ட காலகட்டத்தை பாருங்கள்! இந்தக் கலவரங்கள் அதன் குற்றவாளிகளுக்குக் கொடுத்த மூன்றாவதும் இறுதியானதுமான பலன் இது! ஒத்துழையாமை நாட்களில், அதன் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த அதிகாரத்துவம் இப்போது அதன் வேர்களை ஆழப்படுத்தியுள்ளது. அவை தற்போதைய சூழலில் அசைக்க முடியாததாகிவிட்டன” என்று குறிப்பிடுகிறார்.

மதக் கலவரங்கள் அடிப்படையில், சுரண்டும் வர்க்கத்திற்குத் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தும் கருவியாக இருப்பதை இன்று வெளிப்படையாகக் காண்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் என பாசிச மோடி கும்பலின் சர்வாதிகார அடக்குமுறைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை காண்கிறோம். நூறாண்டுக்கு முன்பு தோழர் பகத்சிங் கூறியது மெய்ப்பிக்கப்படுகிறது.

பகத்சிங் மேலும் “எனவே, வகுப்புவாத கலவரங்களுக்கு ஏதேனும் தீர்வு இருந்தால், அது இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அடையமுடியும்” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை தடுக்க வர்க்க உணர்வுதான் இன்றைய தேவை. ஏழை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் உண்மையான எதிரிகள் முதலாளிகள் என்பதைத் தெளிவாகக் கற்பிக்க வேண்டும். எனவே, நீங்கள் அவர்களின் (வகுப்பு வாதிகள்) தந்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்” என்று மக்களை எச்சரிக்கிறார்.


படிக்க : பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !


“உலகின் ஏழைகள், இனம், நிறம், மதம் அல்லது தேசம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே உரிமைகளைப் பெற்றுள்ளனர். நிறம், மதம், இனம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைத் துடைத்து, ஆட்சி அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துச் செல்ல ஒன்றுபடுவதுதான் உங்கள் நல்வாழ்வுக்கு அடிப்படை. அவ்வாறு முயற்சி செய்வதன்மூலம், நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. ஆனால், ஒரு நாள் உங்கள் தளைகள் உடைந்து உங்களைப் பொருளாதார அவநம்பிக்கையிலிருந்து விடுவிக்கும்” என்று தனது சர்வதேசிய பாட்டாளி வர்க்க உணர்வை வெளிப்படுத்தி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

உழைக்கும் மக்களின் முதன்மை எதிரிகளான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிச கும்பலின் சுரண்டல் மற்றும் மதவெறி சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தோழர் பகத்சிங்கின் வழியில் நாம் இனம், நிறம், மதம் கடந்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவ கும்பல்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பதன்மூலம் ஒருகாலும் பாசிச சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியாது. அதற்கு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் ஒரே வழி. அதுவே தோழர் பகத்சிங்கின் வழி!

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க