பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்

நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் சிம்மசொப்பனமான தோழர் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் இராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுநாள்.

“பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன்… இவை இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா” என்று அறைகூவினார் பகத்சிங். இந்த இலக்கை அடைய வேண்டுமானால், சோசலிசப் புரட்சி ஒன்றே தீர்வு என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்பானது எந்த வகையிலும் உழைக்கும் மக்களுக்கு பயன்படாது, உண்மையில் அது அவர்களுக்கு எதிராகத்தான் செயல்படும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்கு நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார்கள் பகத்சிங்கும் அவரது தோழர் படுகேஷ்வர் தத்தும்.

ஆனால், 79 ஆண்டுக்கால போலி சுதந்திர, நாடாளுமன்ற ஆட்சியின் முடிவில் நாம் காணும் நிலை என்ன? கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களுக்காக அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. எதிர்காலம் குறித்த அச்சத்தில் இந்திய நாட்டின் இளைஞர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் எடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், வேலையின்மை எனும் நாட்டின் அடிப்படையான பிரச்சினை மேலும் மேலும் தீவிரமடைவதை எடுத்துக் காட்டுகின்றன.


படிக்க: பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின்! || மீள்பதிவு


நூற்றுக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகளுக்கு பல லட்சக்கணக்கான பேர் போட்டியிடும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதைத் தீர்க்க வக்கற்ற பாசிச கும்பல் சுயதொழில் தொடங்குங்கள் என்று இளைஞர்களிடம் பசப்பிக் கொண்டிருக்கிறது.

இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சவடால் அடித்த மோடி கும்பல், உண்மையில் வேலையின்மையை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. இறுதியில் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களைப் பார்த்து “பக்கோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று இழிவுபடுத்தினார் பாசிஸ்டு மோடி.

மறுகாலனியாக்கத்தைத் தீவிரமாக அமல்படுத்தி வரும் பாசிச மோடி கும்பலின் தீவிரமான கார்ப்பரேட்மயமாக்கல் நடவடிக்கைகளும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளும் வேலையின்மையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலையின்மைக்கு எதிரான இளைஞர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் சமூகத்தின் கொதிநிலையை உணர்த்துகின்றன.


படிக்க: இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?


கடந்த டிசம்பர் 13, 2023 அன்று, நாடாளுமன்றக் குளிர்காலத் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான்கு இளைஞர்கள் வண்ணப் புகைக் குண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அவர்களை கைது செய்தபோது, நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பிய நான்கு இளைஞர்களில் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண், “என் பெயர் நீலம். இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை. போலீசு லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என்று பாசிஸ்டுகளின் முகத்திரையையும், இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பின் அனைத்து அங்கங்களின் போலித்தனத்தையும், கையாலாகாத்தனத்தையும் கிழித்து அம்பலப்படுத்தி முழக்கமிட்டார்.

ஆனால் இதே நாட்டில்தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து ஆடம்பர வக்கிரத்தோடு நடத்தப்படுகிறது. இதை கேடுகெட்ட ஊடகங்கள் பெருமிதத்தோடு ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இதுதான் இந்திய ’ஜனநாயக’த்தின் யோக்கியதை.

பகத்சிங்கின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! ஆம் தோழர்களே! நீலம் ஆசாத் அவர்களது குரல் சுரண்டலுக்கெதிராக கனன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் குரல்தான்.

நாட்டைப் பீடித்திருக்கும் அபாயமான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலின் அடக்குமுறை, சுரண்டலுக்கெதிராக தோழர் பகத்சிங்கின் புரட்சிப் பாதையில் நாம் அணிதிரள வேண்டும் என்பதைத்தான் பயமறியா அந்த நான்கு இளைஞர்களின் போராட்டமும், வார்த்தைகளும் உணர்த்துகின்றன. கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின், விவசாயிகளின் போராட்டங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க