பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் போர்க்குணம் ததும்பும் அத்தியாயத்தைக் கொண்டது கெதார் இயக்கம். அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய இந்தியர்களால் தொடங்கப்பட்டு, இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் பற்றிப் பரவிய மதச்சார்பற்ற, நாட்டு விடுதலைக்கான இயக்கம்தான் கெதார் இயக்கம். காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து, தமது இன்னுயிரையும் ஈந்த முன்னுதாரணமிக்க தியாகிகளைக் கொண்டதுதான் கெதார் இயக்கம். 1913-இல் தொடங்கப்பட்ட அப்புரட்சிகர இயக்கத்தின் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் நிலவிய பொருளாதார மந்தத்தினால் பாதிப்புக்குள்ளான பஞ்சாபியர்கள், 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சொந்த மண்ணை விட்டு வெளியேறி புதிய வேலை வாப்புகளைத் தேடி, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் ஆயிரக்கணக்கில் குடிபெயரத் தொடங்கினர். இக்குடிபெயர்ந்த இந்தியர்களின் கடின உழைப்பினால் பல்வேறு தொழிற்சாலைகளும், பெரும் விவசாயப் பண்ணைகளும் அந்நாடுகளில் பல்கிப் பெருகிய போதிலும், அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். குடியேறிய இந்தியர்கள் ஐரோப்பிய வெள்ளையர்களுடன் கலந்துவிடாமல் தனிக் காலனிகளில் வைக்கப்பட்டதோடு, அன்றைய குடியேற்ற நாடான கனடாவின் அரசும், கனடாவின் ஒரு பிராந்தியத்தை தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்த அன்றைய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளின் பிரிட்டிஷ் கொலம்பிய அரசும் நிறவெறிக் கொள்கையுடன் இந்தியர்கள் தொடர்ந்து கனடாவில் குடியேறுவதைத் தடுத்தன.
அதே காலகட்டத்தில், காலனியாதிக்கத்தை எதிர்த்துச் செயல்பட்ட ‘குற்ற’த்துக்காக இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட லாலா ஹர்தயாள் என்ற இளம் புரட்சியாளர், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிய வந்தார். அடிமை நாட்டினராக இருப்பதாலேயே இந்தியர்கள் இழிவாக நடத்தப்படுவதையும், தாய் நாட்டை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிப்பதே இதற்குத் தீர்வு என்பதை உணர்த்தியும் அவரும், அப்பல்கலைக் கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டு குடியேறிய இந்தியர்களை அமைப்பாக அணிதிரட்டினர். இதன் தொடர்ச்சியாக லாலா ஹர்தயாள், பாபா சோகன் சிங் பாக்னா, பாய் பிரேமானந்த் ஆகியோரின் தலைமையில் ”பசிபிக் கடலோர இந்தியர் சங்கம்” என்ற அமைப்பு, 1913-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் உருவாகியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்திய நாட்டை விடுதலை செய்ய முடியும் என்று தீர்மானித்த இச்சங்கத்தினர், சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு கட்டிடத்தை வாங்கி, வங்கத்தில் உருவான ஆரம்பகால தலைமறைவு தேசவிடுதலை இயக்கமான ”யுகாந்தர்” என்ற பெயரை அதற்குச் சூட்டி, அதை தலைமையகமாகக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
1913 நவம்பர் முதல் நாளன்று இவ்வமைப்பின் சார்பில், உருது மொழியில் ”கெதார்” (புரட்சி) என்ற வாரப் பத்திரிகையை வெளியிட்டனர். அதிலிருந்து இந்த அமைப்பானது ”கெதார் இயக்கம்”, கெதார் கட்சி” என்றழைக்கப்பட்டது. பின்னர் குர்முகி, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளிலும் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது. ”நாங்கள் சீக்கியர்களோ, இந்துக்களோ, முஸ்லிம்களோ அல்ல; நாட்டின் விடுதலையே எங்கள் மதம்” என்று கெதார் கட்சி அறிவித்தது.
அப்பத்திரிகை ஒருமுறை இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ”தேவை: புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்; ஊதியம்: மரணம்; பரிசு: வீரத்தியாகி என்ற பட்டம்; ஓய்வூதியம்: இந்திய விடுதலை; பணியாற்றுமிடம்: இந்தியா.”
பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோன்மையையும், காலனியாதிக்கத்தை வீழ்த்தி ஒரு மக்கள் குடியரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்திய கெதார் பத்திரிகை, உலகெங்குமுள்ள இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உயர் கல்விக்காக மேலைநாடுகளுக்குச் சென்ற இளைஞர்களிடம் தீயாகப் பரவி அவர்களை உணர்வூட்டி அமைப்பாக்கியது. கெதார் இயக்கம் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் விரிவடைந்த கட்டத்தில் முதல் உலகப்போர் தொடங்கியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளைத் தாக்கி விரட்டியடிக்க இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்த கெதார் கட்சியினர், அதற்கான தயாரிப்புகளில் வேகமாக இறங்கினர்.
கனடாவில் இந்தியர்கள் குடியேறுவதை ஏகாதிபத்தியவாதிகள் தடுப்பதை எதிர்த்தும், குடிபெயரும் மக்களுக்கு சம உரிமை கோரியும் ஹாங்காங்கில் அப்போது வர்த்தகராக இருந்த குருதித் சிங் சர்ஹாலி என்ற நாட்டுப்பற்றாளர், குருநானக்கின் பெயரால் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ”காமகட்ட மாரு” என்ற ஜப்பானியக் கப்பலை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கெதார் இயக்கத்தினர் உள்ளிட்ட இந்தியர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்த முயன்றார். ஹாங்காங்கிலிருந்து 150 பயணிகளுடன் 1914, ஏப்ரல் 4-ஆம் தேதியன்று புறப்பட்ட அந்தக் கப்பல், பின்னர் சீனாவின் ஷாங்கா, ஜப்பானின் யோகோஹமா முதலான துறைமுகங்களிலிருந்து மேலும் பல இந்தியர்கள் சேர மொத்தம் 376 பேருடன் கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை மே 23 அன்று சென்றடைந்தது.
ஆனால், இந்தியர்களை அக்கப்பலிலிருந்து இறங்க விடாமல் கனடா அரசும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளும் தடுத்தனர். இதை எதிர்த்து இரு மாதங்களாக அக்கப்பலிலிருந்தோரும், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்த இந்தியர்களும் சட்டரீதியாகப் போராடிய போதிலும், கனடிய அரசும் பிரிட்டிஷ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை. மீறினால் அக்கப்பல் தாக்கித் தகர்க்கப்படும் என்று எச்சரித்து கட்டாயமாகத் திருப்பியனுப்பப்பட்டது. அக்கப்பலைத் தனது ஆளுகையின் கீழிருந்த ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் நிறுத்தக் கூட பிரிட்டிஷ் அரசு அனுமதிக்காமல் விரட்டியதால், அக்கப்பல் கொல்கத்தாவுக்குத் திரும்பியது. அங்கு பயணிகளைக் கீழிறக்கி கட்டாயமாக பஞ்சாபுக்கு அனுப்ப முயற்சித்ததை எதிர்த்து அவர்கள் போராடியபோது, பிரிட்டிஷ் போலீசார் சுற்றி வளைத்து 177 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 19 பயணிகளைக் கொன்றனர். படுகாயமடைந்த இதர பயணிகள் அனைவரும் கைது செயப்பட்டனர்.
காலனிய அரசின் இக்கொடுஞ்செயல் இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளில் குடியேறிய இந்தியர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் அரசின் நிறவெறி – கொலைவெறிக் கொடூரத்தை எதிர்த்து ”இந்தியாவுக்குச் செல்வோம்; ஆயுதப் போராட்டத்தைத் தொடுப்போம்!” என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்ட கெதார் கட்சியின் தலைவர்கள் அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள இந்திய மக்களை அமைப்பாக்கிப் போராட அறைகூவினர். இந்த அறைகூவலை ஏற்று இந்நாடுகளில் குடியேறியிருந்த இந்தியர்களில் ஏறத்தாழ 6000 பேர் தமது அற்ப உடைமைகளை விற்றுவிட்டு, ஆயுதங்களைக் கொள்முதல் செய்து கொண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தாய்நாட்டுக்குப் புறப்பட்டனர். கெதார் வீரர்களையும் ஆயுதங்களையும் தாங்கி பல நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வந்த கப்பல்கள் இந்தியக் கரையைத் தொட்டதும், அவர்களைக் காலனியாதிக்க அரசு கைது செய்தது. முன்னணிப் போராளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயுள்தண்டனைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான கெதார் வீரர்கள் அந்தமான், மாண்டலே சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
பிரிட்டிஷாரிடம் சிக்காமல் தலைமறைவாகிய இதர கெதார் இயக்கப் போராளிகள் பஞ்சாபில் விவசாயிகளிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு அமைப்பாக்கினர். அன்றைய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த இந்தியர்களை, குறிப்பாக சீக்கியர்களை ஆயுதப் புரட்சியில் இறங்குமாறு அறைகூவி அணிதிரட்டினர். பஞ்சாப் மட்டுமின்றி உ.பி., வங்காளம் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் சிப்பாய்களை இணைத்துக் கொண்டு 1915 பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதமேந்திய திடீர் தாக்குதல் நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால் சில துரோகிகளால் இத்திட்டம் பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு முன்னணித் தலைவர்கள் கைதாகினர். அவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு கர்ட்டார் சிங் சாராபா உள்ளிட்ட 45 தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே பிப்ரவரி மாதத்தில், சிங்கப்பூரில் பிரிட்டிஷாரை எதிர்த்து கலகத்தில் இறங்கிய கெதார் கட்சியினரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த இந்தியர்களும் கைது செயப்பட்டு, அவர்களில் 37 பேர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளிநாடுகளில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படைகளில் இதுபோல கலகத்துக்கு முயற்சிகள் நடந்து தோல்வியுற்றன. 1915-இல் மட்டும் அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கெதார் போராளிகள் கொல்லப்பட்டனர்.
காலனியாதிக்கவாதிகளின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி அழிக்கப்பட்ட போதிலும், கெதார் கட்சி நாட்டு மக்களின் மனங்களில்ஆழமாக ஊன்றிய நாட்டுப்பற்றையும் தியாகத்தையும் போர்க்குணத்தையும் எவராலும் ஒருக்காலும் அழிக்க முடியாது. கெதார் இயக்கத்தின் போர்க்குணமிக்க மரபுகளை உள்வாங்கிக் கொண்டு பகத்சிங்கின் நவ்ஜவான் பாரத் சபாவாகவும், கிர்தி கிசான் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கெதார் கட்சி, நக்சல்பாரிகள் முதலான இயக்கங்களாகவும் அது பின்னாளில் பரிணமித்தது.
ஆட்சியாளர்களான ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் கெதார் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை வெட்கமின்றிக் கொண்டாடுகின்றனர். ஆனால், கெதார் இயக்கம் உருவாக்கி வளர்த்த நாட்டுப்பற்றும், தியாகத்துக்கு அஞ்சாத துணிவும், போர்க்குணமுமிக்க பாரம்பரியமும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகச் சளையாமல் போராடிவரும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கே சோந்தமானது. வீரஞ்செறிந்த கெதார் போராளிகளின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் நெஞ்சிலேந்தி, நாட்டு விடுதலை எனும் அவர்களின் இலட்சியக் கனவை நனவாக்கப் போராடுவோம். ஓங்கட்டும் நாட்டுப்பற்று! வீழட்டும் காலனியாதிக்கம்!
– பாலன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_____________________________________
It is sad these people are not recognised. When I asked my North Indian collegue about VOC,Vanjinathan he had no idea…
Congress with its fake national flag just highlighted and marketed Gandhi,Gandhi..Nehru Nehru
for its own growth
nandri vinavu ….. marakapatha unmai