பதினைந்தாம் ஆண்டில் வினவு: சூறாவளியாய் சுழன்றடிப்போம்! கை கோருங்கள் வாசகர்களே!

வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது. மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

5

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,

வினவு 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் தங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தின் மாபெரும் மந்தம் அமெரிக்காவில் தொடங்கிய போது வினவு வலைப்பூவாகத் தொடங்கப்பட்டது. அது 2008. இன்று, 14 ஆண்டுகளைக் கடந்து 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் அறிந்த அரசியல் முன்னணியாளர்களிடம் வினவு ஒரு அங்கமாகியிருக்கிறது.

2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!

இந்த 13 ஆண்டுகள் தொடர்ச்சியான முன்னேற்றத்தை சந்தித்து வந்த வினவும் தனது 13-வது ஆண்டில் பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. மக்களுக்கு ஏற்பட்டது கோவிட் நெருக்கடி எனில், வினவில் ஏற்பட்டது அரசியல்-அமைப்பு நெருக்கடி. ஆளும் வர்க்கங்களால் உழைக்கும் மக்கள் சந்தித்த நெருக்கடிகளின் ஒரு அங்கமாக, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் வினவு முடங்கியது.

வினவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இணைந்து சதித்தனமாக, வினவிலேயே தமது விலகல் கடிதத்தையும் வெளியிட்டு, தலைமறைவாகினர். அதனைத் தொடர்ந்து வினவின் ஆசிரியர் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக வினவிலேயே அறிவித்தது. இவையெல்லாம், வினவின் வாசகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இத்தனை ஆண்டுகள் முன்னேற்றகரமாக இருந்த வினவு என்ன ஆகும் என்று அஞ்சத் தொடங்கினர்.

புரட்சிகர அரசியலுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக இருந்த வினவு தளத்தில் நடந்த இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் ஒரு மாதம் வினவும் முடக்கப்பட்டதானது, வினவுக்கும் அதன் வாசகர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

வினவு தொடங்கிய காலத்தில், வலைப்பூக்களும், இணைய தளங்கள் மட்டுமே இணைய உலகில் இருந்தன. அதிலும் வினவு அளவிற்கு செல்வாக்குள்ள ஒரு தளம் அன்று இல்லையென்றே சொல்லலாம்.

ஆனால், 2020-ஆம் ஆண்டிலோ நிலைமை முற்றிலும் வேறானது. பல சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தன. தமிழில் அரசியல் இணைய தளங்களும் வந்திருந்தன. இதனால், வினவில் நடக்கும் விவாதங்கள் தொடக்க காலங்களில் இருந்த அளவிற்கு இல்லாமல் போயிருந்தது.

இந்த சூழலில், வினவை முடக்கியதானது, புரட்சிகர அரசியலுக்கும் வினவுக்கும் செய்த துரோகத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

2020-ஆம் ஆண்டில் மீண்டும் வினவு எழுந்து நடக்கத் தொடங்கினாலும் நெருக்கடியில்தான் அதுவும் நடந்தது. அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து வினவுக்கு இருந்த நெருக்கடிகள் 2020 ஆகஸ்டில் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து வினவானது இரண்டாவதாக பிறப்பெடுத்து பயணிக்கத் தொடங்கியது.

இது வினவுக்கு மட்டுமல்ல, புரட்சிகர இதழ்கள் பலவற்றிற்கும் கடந்த காலங்களில் நடந்ததுதான். வினவும் கடந்து வந்துள்ளது!

வாசகர்கள் குறைந்துவிட்டனர், கும்பலாக பல தோழர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிய வினவு அலுவலகம் ஒருசிலருடன் சுருங்கிவிட்டது. இனி, வினவு ஒழிந்துவிடும் என்று எதிரிகளும் துரோகிகளும் நகைத்துக் கொண்டிருந்தனர்.

2021 தொடக்கத்தில் வினவில் சில பதிவுகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பதிவுகளே வெளிவராத நாட்களும் பல. சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போனவற்றில், வினவின் இரண்டு பிறந்த நாள்களும் அடங்கும்.

வினவு முடக்கப்பட்டது – 2020 பிப்ரவரி 25
மீண்டும் வினவு செயல்படத் தொடங்கியது – 2020 மார்ச் 23
இது வினவுக்கு ஒரு லாக்டவுன்

இந்த சமகாலத்தில் மக்களின் நிலைமை என்ன?

வரலாற்றில் முன்னுதாரணமில்லாத வகையில், மக்கள் கோவிட் பெருந்தொற்றால் தவித்துக் கொண்டிருந்தனர். உலகமே ஸ்தம்பித்திருந்தது; அச்சு ஊடகங்களின் காலமும் இத்துடன் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு எல்லா பணிகளும் முடங்கி இருந்தன. தொலைக்காட்சி மற்றும் இணைய உலகம் மட்டும்தான் மக்களுக்கு உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு ஒரே வழியாக இருந்தது.

மக்கள் படும் துன்பங்களையும் அரசின் அலட்சியங்களையும் கோவிட் பெருந்தொற்றின் பின்னே உள்ள அரசியலையும் வீச்சாகப் பேச வேண்டிய தருணத்தில்தான், வினவில் நெருக்கடியும் உருவானது. அந்த நெருக்கடியுடனேயே தன்னால் இயன்ற அளவு இப்பிரச்சினைகளை வெளி உலகிற்குக் கொண்டுவந்தது.

பல முக்கியமான கட்டுரைகள் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றன.

கோவிட் பெருந்தொற்றை ஒட்டி ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி எதிர்ப்பில் திமுகவின் சந்தர்ப்பவாதங்கள், அதன் கார்ப்பரேட் சேவை தொடர்பான கட்டுரைகள், இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், காவி-கார்ப்பர்ரேட் பாசிச அடக்குமுறைகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

***

சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கம், அதன் இறுதிக்கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கைநழுவிக் கொண்டிருக்கும் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு, மூர்க்கமான போர்வெறியுடன் உக்ரைனைத் தூண்டிவிட்டுள்ளது. இதன் மூலம், இரசிய, உக்ரைன் போர் மூண்டு 150-க்கும் மேற்பட்ட நாட்களைக் கடந்துள்ள இன்றைய நிலையில், உலக பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, பாசிஸ்டுகளின் ஆட்சிகள், உலகப் போர் போன்றவை உலக மக்களை வாட்டி வதைக்கின்றன. பல நாடுகள் தொடர்ந்து போர்க் களத்திலும் போராட்டக் களத்திலுமே இருக்கின்றன. ஒரு அலை போல இந்த போராட்டங்கள் உலக நாடுகளைச் சுற்றிவருகிறது.

வினவு உச்சத்தில் இருந்த போது
மாதம் 200 பதிவுகள் வரை வெளிவந்தன.
அதிகபட்சமாக 224 பதிவுகள் வந்துள்ளன.

நமது நாட்டில், காவி-கார்ப்பரேட் பாசிசம் அனைத்து துறைகளிலும் வேகமாக அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்ப்பதில் சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு வருகின்றன. எந்தக் கட்சியும் கார்ப்பரேட் சேவை மட்டும் கைவிடவில்லை. புரட்சிகர ஜனநாயக சக்திகள், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள்தான் பாசிசத்தை நேரடியாக எதிர்கொண்டு வருகின்றனர். பாசிஸ்டுகள் ஒருங்கிணைந்த வகையில் திட்டமிட்டு செயல்படும் இச்சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளில் ஒருங்கிணைப்போ பலவீனமாக உள்ளது.

ஆனால், அண்டை நாடான இலங்கையில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் இந்தியாவிற்கும் பரவிவிடுமோ என்று ஆளும் வர்க்கங்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாசாயிகளின் போராட்டம், அக்னிபாத்திற்கு எதிராக மாணவர்-இளைஞர்கள் போராட்டம், தனியார் கல்வி நிறுவனத்திற்கு எதிரான கள்ளக்குறிச்சிப் போராட்டம் என்று போராட்டங்கள் நாள் தோறும் புதிய உச்சத்தை அடைந்து கொண்டிருக்கின்றன.

பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதால், கடுமையான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி, இந்துராஷ்டிரத்தைப் படைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். ஆனால், உழைக்கும் மக்களோ தங்களால் இயன்ற பல்வேறு வகைகளில் இவற்றை எதிர்க்கொண்டு வருகிறனர்.

அந்த மக்களுடன் வினவும் தொடர்ந்து பயணிக்கும், மக்களுக்கு தோள்கொடுக்கும்!

***

நெருக்கடிகள் பல பாடங்களை விட்டுச் செல்கின்றன. புரட்சிகர ஊக்கமான சக்திகள்தான் அதில் இருந்து கற்றுக்கொள்கின்றன. வினவும் இதற்கு விதிவிலக்கல்ல.

வினவின் எழுத்தாளர்களும் பதிவாளர்களும் அலுவலகத்தில் நிறைந்து இருந்த சுழல் இன்று மாறி உள்ளது. பல கள எழுத்தாளர்கள் வினவுக்கு எழுதத் தொடங்கி உள்ளனர். புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாகி வினவில் பதிவுகளை எழுதி வருகின்றனர். 2021 மார்ச் இறுதியிலிருந்து சொந்தப் பதிவுகளை மட்டுமே கொண்டு வினவு இயங்கி வருகிறது.

வினவின் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த மாற்றமானது வினவை மேலும் விரிவுப்படுத்துவதாகவும், மீண்டும் ஒரு நெருக்கடி வினவுக்கு வந்தாலும் மீளும் வழிவகை கொண்டதாகவும் அமைந்துள்ளது. வினவை மக்களிடமும் புதிய எழுத்தாளர்களிடமும் கொண்டுசென்று சேர்த்துள்ளது.

தோழர் மாவோ சொல்வது போல, தீமை நன்மையாக மாற்றப்பட்டுவிட்டது!

ஜூலை 2021-இல் இருந்து களச் செய்திகள் உழைக்கும் மக்களின் அனுபவங்களை எழுதத் தொடங்கியுள்ளோம். தூய்மைப் பணியாளர் போராட்டங்கள், செவிலியர் போராட்டம், தற்காலிக விரிவுரையாளர் போராட்டம், திம்பம் மலைப்பாதையில் மக்கள் போராட்டம், கோவை மலுமிசைப்பட்டி தலித் மக்கள் போராட்டம், பாலியப்பட்டு மக்கள் போராட்டம், ஆத்தூர் தலித் மக்கள் கோவில் நுழைவைத் தடுப்புக்கு எதிரான போராட்டம்,மேச்சேரி தலித் ஆசிரியர் மீதான அடக்குமுறை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம், ஜி.எஸ்.டி., கல்விக் கொள்ளை போன்றவை தொடர்பான உழைக்கும் மக்களுடன் கருத்துரையாடல்… என பல பதிவுகள், களச்செய்தியாளர்களால் எழுதப்பட்டவையாகும். இதன் மூலமாக, வினவு பல்லாயிரம் புதிய மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தக் கட்டுரைகள் வெறுமனே செய்திகளைச் சொல்வதாக மட்டுமின்றி, உழைக்கும் மக்களின் வலியை நமக்கு கடத்துபவையாகவும் அமைந்திருந்தன என பல வாசகர்கள் தெரிவித்தனர்.

வினவு காத்திரமான பல கட்டுரைகளையும் கொண்டு வருகிறது.

மக்கள் போரட்டம் என்றால் அதற்கு தொடர்ச்சிக் கொடுக்க முயன்று வருகிறோம். கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தின் மீதான அரசின் அடக்குமுறை தொடர்பாக வினவு வெளியிட்ட பதிவுகள் சிறு முயற்சியாகும். இன்னும் இந்த திசையில் வினவு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து கட்டுரைகளைக் கொண்டுவருகிறோம். வீடியோ பதிவுகளை அதிக்கப்படுத்தியுள்ளோம். தோழமை அமைப்புகள் மூலமாக களச்செய்திகளைக் கொண்டுவருகிறோம்.

மேலும், வீடியோ பதிவுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது; கேலிச்சித்திரங்கள், நூல் அறிமுகம், கேள்வி-பதில் உள்ளிட்ட பல வடிவங்களில் பதிவுகளைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

இன்று, இணையதளம் மட்டுமின்றி, வினவின் யூடியுப், முகநூல் பக்கங்கள், டிவிட்டர் பக்கங்கள் என பல லட்சம் பேர் வினவைப் பின் தொடர்கிறார்கள். இது கடந்த நான்காண்டுகளில் பெரிய வளர்ச்சியாகும். மற்ற மாற்று ஊடகங்களுடன் வினவை ஒப்பிடும் போது இது மிகப் பெரும் சரிவாகும். ஆனால், நெருக்கடிகளை கடந்து மீண்டு வந்துள்ள வினவிற்கு இது வெற்றியாகும்.

வாசகர்களின் ஆதரவு தான், இன்றைய சூழலில் முற்போக்கு, புரட்சிகர அரசியலை பரப்பும் ஊடகங்களில் வினவை முன்னிலைக்கு கொண்டுவந்துள்ளது.

வினவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது அனைத்து வாசகர்களும் மாத சந்தா தருவதை நிறுத்திவிட்டனர். வினவு மீண்டும் செயல்பட தொடங்கிய பின்னர், வினவின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டு ஒரு சில வாசகர்கள் மீண்டும் நன்கொடை கொடுக்கத் தொடங்கி இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

வினவு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. உங்களது நிதி ஆதரவை பெரிதும் எதிர்நோக்கியுள்ளது.

மேலும், வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்களும் அவ்வாறு பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும்.

2022-ஆம் ஆண்டில் வினவு பல ஏற்றங்களை சந்திக்கும் என்று நம்புகிறோம். காவி-கார்ப்பரேட் காரிருள் சூழ்ந்துள்ள இன்றைய சூழலில் மக்கள் போராட்டங்களும் வளர்ந்து வருகின்றன. இந்தக் காலத்தில் ஒரு புரட்சிகர பலம் என்ற வகையில் வினவு மேலும் வேகமாக செயல்பட வேண்டி உள்ளது.

போகும் பாதை வெகு தூரம். புரட்சிகர சமூக மாற்றத்தை தவிர, பின்னடைவுகளும் வேற எந்த முன்னேற்றங்களும் நாம் கற்றுக்கொள்ளத்தக்கவையே.

கற்றுக்கொள்வோம், மீண்டெழுவோம்!
சூறாவளியாய் சுழன்றடிப்போம்!
கை, கோருங்கள் வாசகர்களே!

வினவு

 


5 மறுமொழிகள்

 1. வினவுக்கு ஏற்ப்பட்ட ,
  “…நெருக்கடிகள் பல பாடங்களை விட்டுச் செல்கின்றன. புரட்சிகர ஊக்கமான சக்திகள்தான் அதில் இருந்து கற்றுக்கொள்கின்றன. வினவும் இதற்கு விதிவிலக்கல்ல.
  தற்போது,
  “..வினவு அலுவலக எழுத்தாளர்களைவிட, கள மற்றும் வெளி எழுத்தாளர்கள், பதிவர்களையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது.
  “..வினவின் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த மாற்றமானது வினவை மேலும் விரிவுப்படுத்துவதாகவும், மீண்டும் ஒரு நெருக்கடி வினவுக்கு வந்தாலும் மீளும் வழிவகை கொண்டதாகவும் அமைந்துள்ளது. வினவை மக்களிடமும் புதிய எழுத்தாளர்களிடமும் கொண்டுசென்றுசேர்த்துள்ளது.
  ஆக,அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் பங்கேற்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல், இயக்கமாக, அமைப்பு செயல்பாடுகளை அறிவுதளத்திலும் விரிவுப்படுத்தியால் நிகழ்ந்த புரட்சிக்கர மாற்றம் இது.
  வெல்க,புதிய மாற்றங்கள்!!
  15ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் வினவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

 2. தவறியும் சுயவிமர்சனம் இல்லை அணிகளை தவறான தன்னியல்பில் நடத்துவதோடு இல்லாமல் அவர்களை சட்ட சிக்கலில் மாட்டி வைத்து விடும் மோசமான நடவடிக்கையை என்னவென்று சொல்ல?

  • அப்படி என்ன சட்டச் சிக்கலில் தாங்கள் மாட்டிக் கொண்டீர்கள்? யார் உங்களைக் கைவிட்டது?

 3. வினவு தன் பயணத்தை வெற்றிகரமாக 14 ஆண்டுகளை நிறைவடைந்துவிட்டது. 15ஆம் ஆண்டும் அடியெடுத்து வைக்கும் வினவிற்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

 4. வர்க்கப் போராட்டச் சூறாவளியாக மேலும் சுழன்றடிக்கட்டும் வினவு! வாசகனாக எமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க