த்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதி வழியே செல்லும் திம்பம் மலைப்பாதையில், வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போவதைத் தடுப்பதற்காக, 2019-ம் ஆண்டில் அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இரவுநேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தினார். இத்தடைக்கெதிராக மக்களின் தொடர்ச்சியான போரட்டத்தால் அது நீக்கப்பட்டது.
இந்த நிலையில் 2012 முதல் 2021-ம் ஆண்டு வரை, 155 வனவிலங்குகள் மலைப்பாதையில் அடிபட்டு இறந்துள்ளன எனவும், 2019-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் விதித்த போக்குவரத்துத் தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமெனவும் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி 10 முதல் திம்பம் சாலையில் இரவு போக்குவரத்துத் தடையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி கனரக வாகனங்களுக்கு மாலை 6 மணி முதலும், இலகுரக வாகனங்கள் – பயணிகள் வாகனங்களுக்கு இரவு 9 மணி முதலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைப்பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் வீணாகும் அவலமும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அவசரத் தேவைகளுக்கும்கூட வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடையைக் கண்டித்து தாளவாடி விவசாயிகள், வியாபாரிகள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர், வேன் ஓட்டுநர்கள் என பல தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கினர். எனினும் தடையை விலக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
படிக்க :
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
திம்பம் மலைப்பாதையில் வன விலங்குகள் இறந்துள்ளது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரப்பட்டதில், 2012-2021 காலகட்டத்தில், வாகனப் போக்குவரத்தால் 40 வனவிலங்குகள் மட்டுமே இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதிலும் தடை அமல்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே பண்ணாரி சாலையில் 7 விலங்குகள் இறந்துள்ளன. மீதமுள்ள 20 விலங்குகள் பகலிலும், 13 விலங்குகள் இரவிலும் இறந்துள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதன்மூலம், வழக்கு தொடுத்தவர் இந்தக் காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இறந்து போன மயில்கள் உட்பட அனைத்தையும் கணக்கில் சேர்த்து 155 வனவிலங்குகள் இறந்துள்ளன என்ற பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
வாகனப் போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கு நேரும் துன்பத்திற்காக கண்ணீர் விடும் நீதிபதிகள், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளைப் பிளந்து போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டு சாகும் விலங்குகள் குறித்தோ, விபத்துகளில் சாகும் மனிதர்கள் குறித்தோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?
2021-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடந்துள்ள 55,713 சாலை விபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளனர் என அரசே கூறுகிறது. இத்தனை ஆயிரம் பேரின் மீதும் அக்கறையில்லாத நீதிமன்றத்துக்கு, ஆண்டுக்கு இரண்டு விலங்குகள் இறந்து போகின்றன என்றதும் கருணை ஊற்றெடுப்பது ஏன்? இக்கருணைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?
கொட்டமடிக்கும் வனத்துறை அதிகாரிகள்!
சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப் பாதை.
அப்பகுதியில் வாழும் பழங்குடியினர், ஒரு ஆண்டில் ஆறு மாதங்கள் நிலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை விவசாயம் செய்து தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். மீதமுள்ள ஆறு மாதங்கள் காடுகளில் சிறு வன மகசூல் சேகரிப்பான தேன், சீயக்காய், நெல்லிக்காய், சீமார் புல், கடுக்காய் போன்ற 35 வகையான பொருட்களை – ஒருமுறை எடுத்தால் மீண்டும் கிடைப்பவை – எடுப்பதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். பழங்குடி அல்லாதோர் வனத்தில் கால்நடைகளை மேய்த்தும், கூலி வேலைகளை செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது சிறு வன மகசூல் செய்ய பழங்குடியினர் பெரும்பாலும் காடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை; சீமார் புல் மட்டும் எடுத்து வருகின்றனர். அதுவும்கூட வனத்துறை அதிகாரிகளின் ஊழலுக்காக அனுமதிக்கப்படுகிறது என்கின்றனர் பழங்குடி மக்கள். 10 பேர் கொண்ட கிராம வனக்குழு (VFC – Village Forest Council) ஊர் மக்களால் உருவாக்கப்படுகிறது. அக்குழுவிலிருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதே வனப்பகுதிக்கு உட்பட்ட வனகாவலர் செயலாளராக இருப்பார். சிறு வன மகசூல் மூலம் கிடைக்கும் பணம் இவ்விருவரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி சேமித்து வைக்கப்படும்.
தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு கிராம வனக்குழுத் தலைவர் கூறுகையில், “சீமார் புல் அறுக்க கிலோவிற்கு ரூ.25 கூலி. குழுவிற்கும் புலிகள் காப்பகத்திற்கும் தலா ரூ.5 என பிரிக்கப்படும். வி.எஃப்.சி (VFC) மக்கள் கட்டுப்பாட்டில் இல்லை, வனத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கு. குழுவில் சேமித்த பணம் 8 லட்சம் இருக்கு. ஆனால் அதனை எடுத்து எங்க அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யச் சொன்னால்கூட செய்வதில்லை. இந்தப் பணத்திலிருந்து வனக் போலீசுத்துறை அதிகாரி, வேட்டைக் காவல் தடுப்புப் படைக்கு சம்பளம் கொடுக்க எடுக்கிறாங்க. பணத்தைத் திரும்பக் கொடுக்கிறதில்லை. 5 டன் லோடு சீமார் புல் எடுத்திட்டு போய் விற்பனை செய்துவிட்டு வந்தால் இலாபமோ, நட்டமோ ரூ.50,000 வனத்துறையிடம் கொடுத்திடனும்” என்கிறார்.
இதுபோல் 28 கிராம வனக்குழுக்கள் கணக்கிலும், பழங்குடியினர் மக்களின் உழைப்பில் சேமித்த பணம் சுமார் 1 கோடி ரூபாய் இருக்கிறது. அதை வைத்து மின்சார வசதி, வீட்டு வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் வனக் போலீசுத்துறை அதிகாரிகள் பழங்குடி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பழங்குடியினர்மீது பொய் வழக்கு போடுவது, விசாரணை என்று கூட்டிச் சென்று அடித்துத் துன்புறுத்துவது என மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
திம்பம் மலைப்பாதைப் பிரச்சினைக்கு மூலக்காரணமாக இருப்பது 2013-ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். அதன் பின்னர்தான் மலைவாழ் மக்கள் மீதான வனத்துறையின் ஒடுக்குமுறை அதிகரிப்பதும், போக்குவரத்தைத் தடை செய்வதும் நடந்து வருகிறது. மைசூருக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்யும் வகையில், ‘சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் அடாவடி வசூல் மையம் ஒன்றை அமைத்திருக்கிறது வனத்துறை. இதன் விளைவாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கே மலைவாழ் மக்கள் சோதனைச் சாவடியில் ரூ.50 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து கொண்டிருக்கும் இம்மக்கள்மீது இன்னொரு இடியை இறக்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மார்ச் 4 அன்று வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்கத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கெதிராக, புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மசினக்குடி மக்கள் போராட்டத்தை நடத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். “பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பதற்கேற்ப எல்லா முனைகளிலும் தமது வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றனர் தாளவாடி மலைவாழ் மக்கள்.
வன உரிமைச் சட்டம்: கண்ணைக் குத்தும் ‘தங்க’ ஊசி!
துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம பழங்குடி மக்கள்.
மலையையும் காட்டையும் தெய்வமாகக் கருதுகின்ற, சூதுவாது அறியாதவர்கள் என்று பிறரால் சொல்லப்படுகின்ற பழங்குடி – மலைவாழ் மக்கள்மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? எந்த வனத்தை இத்தனை ஆண்டுகள் அவர்கள் பராமரித்தார்களோ, எந்த வனம் அவர்களை வாழ வைத்து வருகின்றதோ, அதை இம்மக்கள் அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டி சிலர் கிளம்பியிருப்பதுதான். வன உரிமைச் சட்டம் – 2006 தங்களைப் பாதுகாக்கும் என இம்மக்கள் கருதியிருக்கையில், அதையே ஆயுதமாகக் கொண்டு அப்பாவிகளை அழித்தொழிக்க எத்தனிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதரவு கும்பல்.
தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் தொடர் போராட்டங்களின் விளைவாக 2006-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்சட்டம் ஒப்பீட்டளவில் உதவும் தன்மையைக் கொண்டிருந்தது. பழங்குடி மக்களின் கிராம சபைகளுக்கு சில அதிகாரங்களையும் கொடுத்தது. விவசாயம் செய்துவரும் பழங்குடிகளுக்கு நில உரிமை, சிறு வன மகசூலை சேகரிக்கவும் விற்கவும் உரிமை, பாரம்பரியமாக பயன்படுத்திய பாதை – நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, ஆடு – மாடு மேய்ச்சலுக்கான உரிமை, காட்டு வளங்களைப் பாதுகாத்தல், மேலாண்மை செய்தல் போன்ற உரிமைகளை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. இவையெல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறையில் எதிர்விளைவுகளே உருவாகியிருக்கின்றன.
இச்சட்டம் பல இடங்களில் அமலுக்கு செல்லவில்லை, அமல்படுத்தப்பட்ட இடங்களில் மக்களின் உரிமையை நிராகரிக்கவே பயன்படுத்தியிருக்கின்றன மாநில அரசுகள். இச்சட்டத்தின் அடிப்படையில் தனிப்பட்ட உரிமைக் கேட்பு மனுக்கள் இலட்சக்கணக்கில்  நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018 நவம்பர் புள்ளி விவரத்தின்படி முதல் மூன்று இடங்களில் சத்தீஸ்கர் (4,55,000), மத்தியப்பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) ஆகியவை உள்ளன.
2005 டிசம்பர் 13-ம் தேதிக்குமுன் பழங்குடியினர் காடுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். பழங்குடி அல்லாதோர் 75 ஆண்டுகள் (மூன்று தலைமுறைகளாக) வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்துக்கொண்டே, அதிகார வர்க்கம் ஏதுமறியாத அப்பாவி பழங்குடிகளை, மலைவாழ் மக்களை அலைக்கழித்து வருகிறது. இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் இந்த அதிகார வர்க்கமே சிற்றரசர்கள், பண்ணையார்கள் போல ஆதிக்கம் செலுத்தி, பழங்குடி மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்களை நெறியற்ற முறையில் நிராகரித்தும், நிராகரிப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டுமென்ற சட்ட விதிகளை மயிரளவுக்கும் மதிக்காமலும் வனத்துறை அதிகாரிகள் கொட்டமடித்து வருகின்றனர். சர்க்கரை என ஏட்டில் எழுதி வைத்துக் கொண்டால் இனிக்காது என்பதற்கு இந்தச் சட்டமே சான்று.
2008-ம் ஆண்டில், வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி மக்களை வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த “வைல்ட் லைஃப் ஃபர்ஸ்ட்” என்ற அமைப்பு, வன உரிமைச் சட்டம் மூலம் நிலப்பட்டாக்கள் கொடுக்கக் கூடாது என வாதிட்டது. இதன்மூலம் பழங்குடிகள் காட்டை அழித்து விடுவார்கள் என்று அயோக்கியத்தனமாக வாதம் புரிந்தது. மேற்சொன்ன நிராகரிப்புகள் அடிப்படையில், பட்டா இல்லாத பழங்குடிகளை காடுகளைவிட்டு விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு எந்த பதிலும் சொல்லாத நிலையில், 2019-ல் பட்டா இல்லாதவர்களை வெளியேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதன் பிறகு பரவலாக எதிர்ப்பு எழுந்த அடிப்படையில் மத்திய அரசு முறையீடு செய்தபின் தற்காலிகமாக தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் நோக்கம் காடு பாதுகாப்பா, கார்ப்பரேட் சேவையா?
“அந்தக் காலத்துல விலங்கு காட்டுலதான இருந்துச்சு, நாங்களும் இங்கதான இருக்கோம்; இப்போ என்ன புதுசா விலங்குகள் மேல அக்கறை வந்துச்சு?” “நாங்களும் விலங்குகளும் அனுசரித்துதான் வாழ்கிறோம், எந்தக் காப்பகமும் தேவையில்ல” “புலிகள் காப்பகம் வந்தபின் வனத்துறை ஒரு செடியைக்கூட நட்டதில்லை” “புலிகள் காப்பகத்துக்கு வெளியில் இருந்து பணம் வந்தாலும் இவங்க ஒன்னும் புலிக்கு உணவு கொடுக்கிறதில்ல” என்கின்றனர் பழங்குடி மக்கள்.
பழங்குடி மக்களால் வனத்துக்கும் வன உயிர்களுக்கும் ஆபத்து எனக் கூக்குரலிடும் அதிகாரிகள், ஆணையங்கள், தன்னார்வக் குழுக்கள் எவரும், அதற்கான ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. இவர்கள் காட்டும் ஆதாரங்கள் எல்லாம் திம்பம் மலைப்பாதை தொடர்பாகக் காட்டப்படுவதைப் போன்ற பொய்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களில் வாழ்ந்து, வனத்தைப் பராமரிப்பதன் மூலமாக தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பழங்குடிகள்மீது பழிபோடுவதன் நோக்கம் என்ன? அவர்களை விரட்ட நினைப்பது ஏன்?
களச்செய்தி சேகரிப்பின்போது, அப்பகுதி நிலைமையை நமக்கு விளக்கிய தாளவாடி பகுதி பழங்குடி மக்கள்.
2001 – 2006 கால கட்டத்தில் மட்டும் சுமார் 5 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதியை அரசு ஆக்கிரமித்து அங்கிருந்த பழங்குடிகளை விரட்டியது. இந்த நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. குறிப்பாக, மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடிகளாக இருக்கும் சத்தீஸ்கரில்தான் 4,55,000 பழங்குடிகளின் நிலப்பட்டா கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். இதே சத்தீஸ்கரில்தான் ஏராளமான வனப்பகுதியை பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு அரசு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, வனத்தின் மீதான அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கோணத்தில் இருந்துதான், அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. 1980-ம் ஆண்டின் வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா ஒன்றை 2019-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு. காடுகளையும் மலைகளையும் தனியார்மயமாக்கவும், மாவட்ட வன அதிகாரிக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் இத்திருத்தம் வழிவகை செய்கிறது. கைது நடவடிக்கைக்கு ஆளாகும் பழங்குடிகள் தங்களை தாங்களே நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்பதோடு, அவர்கள் தடை உத்தரவை மீறினால் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுவதற்கான அதிகாரத்தையும் வனத்துறைக்கு அளிக்கிறது இத்திருத்தம்.
சரணாலயங்களின் நடுவே பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காடுகளை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி வணிக நோக்கத்தில் பயன்படுத்த வழிவகுக்கிறது. மேலும், காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. வன உயிர் பூங்கா, வன உலாக்கள் போன்றவற்றை அனுமதிப்பதன்மூலம் காடுகளை தனியார் நிறுவனங்களின் இலாப வெறிக்கு இரையாக்குகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் தனியார் மிருகக் காட்சிச் சாலை அமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது 160 வன உயிர் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் ஒப்பந்தமிட முடிவு செய்துள்ளது. மேற்சொன்ன இரு தகவல்களும், வனப்பகுதிகள் – வன விலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசின் அதீத அக்கறைக்கும் பழங்குடிகளை விரட்டுவதற்கும் கார்ப்பரேட் நலனே காரணம் என்பதை அம்பலப்படுத்துகின்றன.
படிக்க :
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
இது மட்டுமின்றி, கார்பன் வணிகம் என்ற நோக்கத்தில் தனியார் காடுகளை வளர்ப்பதில் கார்ப்பரேட்டுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வனப் பகுதிகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்து, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் கோடிகளை அள்ளிச்செல்ல அனுமதிப்பதே அரசின் திட்டம். இதற்காக வனப்பகுதிகளில் இருந்து பழங்குடிகளை விரட்டுவதற்கு புலிகள் காப்பகம் போன்ற முகமூடிகள் அரசுக்கு அவசியமாக இருக்கின்றன.
இந்த நோக்கங்களை அடையும் வகையில்தான் திம்பம் மலைப்பாதையில் தற்போது போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையால் வாழ்வாதாரம் இழக்கும் பழங்குடிகளும் விவசாயிகளும் வனத்தையும் காட்டையும் விட்டு தானாக வெளியேறுவார்கள் அல்லது அரசால் வெளியேற்றப்படுவார்கள்.
கார்ப்பரேட்டுகளின் இந்த நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் மலைவாழ் மக்களோடு இணைந்து நிற்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

களச் செய்தியாளர்
புதிய ஜனநாயகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க