மின்சாரமும் இல்லை சாலைகளும் இல்லை : 70 ஆண்டுகளாக வீடற்றவர்களாக வாழும் அசாமிய பழங்குடிகள் !
சுதந்திரமடைந்து 74 ஆண்டுகளை தொடவிருக்கும் நிலையில் கூட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதே நிலையில்தான் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார்கள் அசாமின் மிசிங் பழங்குடிகள்.
அசாமின் திப்ரு-சைகோவா தேசிய பூங்காவிற்குள் உள்ள லைகா மற்றும் தாதியா கிராமங்களில் வசிக்கும் மிசிங் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 12,000 பேர், 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து துரத்தப்பட்டனர். வீடற்றவர்களாக ஆக்கப்பட்ட பின்னர், மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளின்றி இப்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
படிக்க :
♦ சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !
♦ தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
இது அரசாங்க இயந்திரங்களின் செயலற்ற தன்மை, அலட்சியம், அக்கறையின்மை மற்றும் துன்பத்தின் கதை என அவர்கள் தெரிவிக்கின்றனர். லைகா கிராமத்தைச் சேர்ந்த ஆண்யா கசாரி, “எங்கள் குழந்தைகள் பல மைல்களுக்கு மலையேறி, ஒரு நதியைக் கடந்து பள்ளிக்குச் செல்வார்கள். குறைந்தபட்சமாக மருத்துவ வசதியோ குடிநீர் வழங்கலோ கூட இங்கு இல்லை” என்கிறார்.
“நாங்கள் இங்கிருந்து வெளியேற விரும்புகிறோம், விரைவில் போய்விடுவது நல்லது. நாங்கள் இங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். அடுத்த தலைமுறை அதே சோதனையை சந்திக்க நான் விரும்பவில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?”
“ஒரு பூங்காவின் மையப் பகுதியில் மின்சாரம் அல்லது வாகனங்கள் செல்லும் வகையிலான சாலைகளைகளை கூட எங்களால் நினைத்துப் பார்க்க முடியாதது. எங்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லை. உலகின் பிற பகுதிகளிலிருந்து நாங்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறோம். டி.வி. இல்லை, நாங்கள் ஒரு செய்தித்தாளைப் படிப்பதுக் கூட அரிதாகவே இருக்கும்” என்கிறார் தாதியா கிராமத்தைச் சேர்ந்த பிரஞ்சால் கசாரி..
1950-ஆம் ஆண்டில் பெரும் பூகம்பத்திற்குப் பிறகு பிரம்மபுத்ரா நதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதே, அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி சமூகமான மைசிங் மக்களின் ஒரு சிறிய பகுதியினரின் இந்த அவல நிலைக்குக் காரணம். அப்போது அருணாச்சல பிரதேச எல்லையில் முர்கோங்ஸெலெக் (Murkongselek) டவுனில் 75 குடும்பத்தினரை வீடற்றவர்களாக மாற்றியது.
இதேபோல், 1957-ஆம் ஆண்டில் திப்ருகர் மாவட்டத்தில் ரஹ்மரியா வருவாய் வட்டத்தின் ஆக்லாந்து பகுதியில் மொத்தம் 90 குடும்பத்தினர் நதி அரிப்பு காரணமாக வீடற்றவர்களாக மாறியதுடன், அங்கிருந்து வெளியேறி அன்றைய திப்ரு காப்பு வனப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.
ஆறுகள் அருகே வாழ விரும்பும் இந்த இடம்பெயர்ந்த விவசாய மக்கள் பிரம்மபுத்ராவின் தென்கரையை கடந்து வடக்கே லோஹித், திபாங் மற்றும் டிசாங் மற்றும் தெற்கே அனந்தனாலா, டாங்கோரி மற்றும் திப்ரு ஆகிய ஆறு நதிகளால் சூழப்பட்ட இந்த பகுதிக்கு வந்தனர்.
இதனால், வெள்ள அரிப்பு விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை நம்பியிருக்கும் ஒரு விவசாய சமூகத்தை காட்டை நம்பி வாழக் கூடியவர்களாக மாற்றியது.
காலப்போக்கில், 1950-களின் இரண்டு அசல் கிராமங்களான லைகா(Laika) மற்றும் தாதியா இப்போது சுமார் 12,000 மக்களைக் கொண்ட 2,600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் ஆறு குடியிருப்புகளாக மாறிவிட்டன.
இருப்பினும், 1999-ம் ஆண்டில் காடு திப்ரு-சைகோவா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டபோது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மனிதர்கள் வாழ்வது சட்டவிரோதமானது.
அப்போதிருந்து அசாம் கண பரிசத், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற பல கட்சிகள் வடகிழக்கு மாநிலத்தை ஆட்சி செய்துள்ளன. ஆனால், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல், மைசிங் பழங்குடிகளின் மறுவாழ்வுக்கு எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
மழைக்காலங்களில் கிராமங்கள் பல மாதங்களாக நீரில் மூழ்கிவிடும் சூழலில், மக்கள் முற்றிலும் அரசாங்க நிவாரண உதவிகளை நம்பியே வாழ்வதாக தங்களின் அவல நிலையை விவரிக்கிறார் லைகா கிராமத்தைச் சேர்ந்த செவாலி பெகு. “இந்தப் பகுதியில் வெள்ளம் வரும்போது மனிதர்களும் பன்றிகளும் ஒரே தங்குமிடத்தைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்” என்கிறார்.
இயற்கை பேரழிவுகளால் வெளியேற்றப்பட்ட கிராமவாசிகள் பல நேரங்களில் மற்ற இடங்களுக்கு குடியேற முயன்றனர். ஆனால், முறையான புனர்வாழ்வுக்கு அரசாங்க உத்தரவாதங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதற்காக திரும்பிவிட்டதாக லைகா-தாதியா புனர்வாழ்வு கோரிக்கைக் குழுவின்(The Laika-Dodhia Rehabilitation Demand Committee) தலைமை ஒருங்கிணைப்பாளர் மிந்துராஜ் மோராங் கூறுகிறார்.
“ஜூலை 2017 இல் வெள்ளத்தின் உச்ச கட்டத்தில், சுமார் 1,200 பேர் டின்சுகியாவில் உள்ள தரணி காப்புக் காடுகளை அடைந்து ஒரு பள்ளிக்கு அருகில் முகாமிட்டனர். வீடுகளை அமைப்பதற்காக சுமார் 700 பேர் காட்டுக்குள் நுழைந்தனர். ஆனால், எங்களுக்கு புனர்வாழ்வளிக்க பொருத்தமான நிலத்தைக் கண்டுபிடிக்க அப்போதைய வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா ஒப்புக் கொண்டதால் கைவிடப்பட்டது” என்கிறார்.
மற்றுமொரு முறை 2020-ஆம் ஆண்டில் டின்சுகியா மாவட்ட நிர்வாகம் 320 ஹெக்டேர் பரப்பளவில் லாகிபதர் பகுதியில் உள்ள ஒகூரியில் மைசிங் மக்களை குடியேற்றுவதற்காக அடையாளம் கண்டது. ஆனால், பின்னர் அது அனைத்து மோரன் மாணவர் சங்கத்தின் All Moran Students’ Union (AMSU) தலைமையிலான உள்ளூர் மோரன் சமூகத்தினரின் போராட்டத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையில், ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அசாம் கண பரிசத் கட்சியின் எம்.எல்.ஏ பொனகன் பாருவா மே 24 அன்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு கடிதம் எழுதி மக்களின் நிலைமையை எடுத்துரைத்தார். கிராமவாசிகளை இடமாற்றம் செய்ய குறைந்தது நான்கு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை வெற்றிபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் பல மாதங்களாக வெவ்வேறு முகாம்களில் வசித்து வருகின்றன; ஆனால், அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த 70 ஆண்டுகால பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோரினார்.
இந்த ஆண்டு ஜனவரியில், எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சைக்கியா தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், அவர்களின் நில உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதன் மூலம் மாநில அரசாங்கம் “பெரும் அநீதியை” இழைத்துக் கொண்டிருப்பதாக இது குறித்து புகார் அளித்தார்.
கடந்த ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், லக்கிம்பூரில் உள்ள தாதியா கிராம மக்கள் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் உள்ள லைகா கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மறுவாழ்விடங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புனர்வாழ்வு திட்டம் உடனடியாக முதன்மை ஒப்புதலுக்காக ஜனவரி 8-ஆம் தேதி அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை.
சமூக செயல்பாட்டாளர் ஜோதிஷ் பதீர், 1950-ம் ஆண்டிலிருந்து அங்கு வசிக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் 1999-ம் ஆண்டில் தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டது வியப்புக்குரியது என்கிறார்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
பல பத்தாண்டுகளாக எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், கிராமவாசிகள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 21 முதல் தின்சுகியா நகரில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாமிட்டு, சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த ஆட்சி வந்தால், வாழ்க்கையே சுபிட்சமாக மாறிவிடும் என 70 ஆண்டு காலமாக காத்திருக்க வைக்கப்பட்ட மைசிங் பழங்குடி மக்கள் இப்போது போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளால் ஒரு பயனும் இனி இல்லை என்பதை உணர்ந்து களமிறங்கியுள்ள இவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
அனிதா
செய்தி ஆதாரம் : The Wire
கௌஹாத்தியில் பிரம்மபுத்ரா ந்தியும் சாலைகளும் ஏறக்குறைய ஒரே மட்டத்தில்
இருக்கின்றன. பெங்களூர் ஹோசூர் போல ஒரு மேம்பாலம்கட்டக்கூட
ஆட்சியாளர்களுக்குத் தோன்றவில்லை. சென்னை கடற்கரை சாலையைவிட
சில பகுதிகளில் ஊருக்கும் சாலைகளுக்கும் அருகில ஓடுகிறது ஆறு.
உயரம் குறைவான விடுகளில் எளிதாக தண்ணீர் புகும். பல கிராமங்களில் தண்ணீர்
தேக்கம் மிகச் சாதாரணமானது. வீடுகளைச் சுற்றி தகரத் தடுப்புகளை பூமியில் நட்டு
மக்கள் தேங்கும் நீர் வீட்டில் வராமல் தவிர்க்கிறார்கள். அத்தனை நீர்வளம் நிலவளம்
நிறைந்த பகுதியில் மக்கள் ஏன் அத்தனை வறுமையில் வாழ்கிறார்களென்பதிலிருந்தே
ஆட்சியாளர்களின் அலட்சியம் புரியும்.
அரசியல்வாதிகள் பெரிய ஓட்டல்களைக் கட்டிக் கொண்டார்கள். சுதந்திரம் வந்து
இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் எங்கள் மாநிலத்தில் ஒரு பொறியியல் கல்லூரி
கிடையாதென்று வருத்தப்பட்டார் ஒரு கல்லூரி மாணவர்.
வாழ்க்கைத் தரம் குறைவான மாநிலம். சாமான்ய மக்களே அல்ல்லஃ படும்போது
பழங்குடியினர் நிலை கேட்கவா வேண்டும்? ஒரு கோடி ரூபாய் செலவு செய்து எம.எல்.ஏ வாகிறவன் போட்ட பணத்தை எடுப்பானா? மக்கள் தொண்டு செய்வானா?
இது ஜனநாயக நாடு என்பதே மிகப் பெரும் கருத்து மோசடி…..
இப்படி எல்லாம் அவலங்களை வைத்துக் கொண்டு எப்படித் தான் வாய் கிழிய பேச முடிகிறது.?
வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துவிட்டது தானே மோடி அய்யா மாளிகை கட்ட வேண்டும் ? சொகுசு நாடாளுமன்றம் தேவை தானா ?
– மருது பாண்டியன் –
பத்திரிகையாளர்
( உசிலம்பட்டியிலிருந்து }