சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தின் பழங்குடி மக்களை, கடந்த ஜூன் 28 அன்று இரவில் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசு படை நாலாபுறமிருந்தும் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியது. காலில் குண்டடிபட்டு உயிர் பிழைக்கத் தப்பி ஓடியவர்களைக்கூட அங்கே கிடைத்த கோடாரிகளைக் கொண்டு கொத்திக் கொன்றது. இரத்தம் பெருகிக் கிடந்த தெருவைச் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு பிணங்களுக்கு மாவோயிஸ்டுகளைப் போலச் சீருடை மாட்டிவிட்டு, “மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்” எனப் பச்சையாகப் புளுகியது.
உடனே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மோதல் நடவடிக்கை இது” என்று அறிவித்தார். ஆனால், நடந்தது மோதல் அல்ல; படுகொலைதான் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியதும், மத்திய ரிசர்வ் போலீசு படையின் இயக்குநரான ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார், பயங்கரவாதிகளைக் கொல்லும் முன் அவர்கள் யார் என்றெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது. அது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார். பின்னர் செய்தி ஊடகங்களில், பள்ளி செல்லும் சிறுவர்களும் பெண்களும் உள்ளிட்டுக் கொல்லப்பட்டோர் அனைவருமே அப்பாவிப் பழங்குடியினர்” என்ற உண்மை வெளியானதும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் சில அப்பாவிகள் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்காக வருந்துகிறோம்” என்று பசப்பினார்.
சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சிகள் இப்படுகொலை குறித்து நீதிவிசாரணை கோரியதும், “இச்சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள்” எனச் சீறினார் சட்டிஸ்கரின் பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங். ப.சிதம்பரமும், “எந்தவிசாரணையும் தேவையில்லை. கொல்லப்பட்டோரில் இருவர் மாவோயிஸ்ட் தலைவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று சாதித்தார். ஆனால், கொல்லப்பட்ட அந்த இரண்டு ‘தலைவர்களில்’ ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர், இன்னொருவரோ ‘டோலக்’ இசைக்கருவி வாசிக்கும் கலைஞர் என்ற உண்மை அம்பலமாகி ப.சிதம்பரத்தின் முகத்தில் கரிபூசியது. பழங்குடியினரின் வாக்கு வங்கியை மனதில்கொண்டும், இப்படுகொலையைக் கண்டிக்காவிட்டால் மக்களிடம் தனிமைப்பட வேண்டியிருக்கும் என்பதாலும், உண்மை கண்டறியும் குழுவை அமைத்த மாநில காங்கிரசுக் கட்சி, ப.சிதம்பரம் பொறுப்பின்றிப் பேசுவதாகக் கண்டித்தது.
தற்கொலைச் சாவுகளுக்குகூடப் பிரேதப் பரிசோதனை கட்டாயம் என்பது சட்ட நடைமுறை. ஆனால், சர்கேகுடாவில் பச்சைப் படுகொலை நடந்துள்ள போதிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவேயில்லை. பிஜாப்பூர் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, போலீசு நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்பட்டுவிட்டதாக நம்பச் சொல்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் நிருபர் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் போடப்படும் தையல் ஏதும் பிணங்களின் உடலில் காணப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு, போலீசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இப்படி அரசு பயங்கரவாதிகள் உருவாக்கிய கதைகளின் சாயம் வெளுக்கத் தொடங்கியதும், அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட முதல்வர் ராமன்சிங், இச்சம்பவத்தை விசாரிக்கத் துணை வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்தார். கொலைக்கும்பலின் தலைவன் விஜயகுமாரும் தன் பங்குக்கு துறைசார்ந்த உள்விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்காக ‘மிகவும் வருந்துகிறேன்’ என்று ப.சிதம்பரமும் முதலைக் கண்ணீர் வடித்தார்.
படுகொலைகள் நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. ஆனால், உள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையைக்கூட அரசு இன்னமும் வெளியிடவில்லை. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினர் என்பதால் படுகொலையில் ஈடுபட்ட போலீசுப்படை மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கொல்லப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் இவை எதுவும் செய்யப்படவேயில்லை.
சர்கேகுடாவை எட்டிக்கூடப் பார்க்காத தேசிய மனித உரிமை கமிசன், கொலைகார மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் இயக்குநரிடமே அறிக்கையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளது. விஜயகுமாரோ, ரிசர்வ் போலீசு படையில் துறைசார்ந்த உள்விசாரணையைக்கூட நடத்த முன்வராமல் ஓய்வு பெற்றுவிட்டார். மாநில காங்கிரசு அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டால், மாவோயிஸ்டுகளுக்கு எதிராகப் போராடும் படையினரின் ஊக்கத்தை அது குறைத்துவிடும் எனக் கட்சி மேலிடம் கூறியுள்ளதைக் காரணம் காட்டி, அறிக்கையை காங்கிரசு கட்சி முடக்கி வைத்துள்ளது. மாநில அரசு இப்படுகொலையை விசாரிக்க அகர்வால் என்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிசனை நியமித்தது. ஆனால், அந்நீதிபதி தனது பணிகளைத் தொடங்க முறையான அலுவலகம் கூட இல்லாமல் மூன்று மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு, கடந்த அக்டோபரில்தான் அலுவலக அறை ஏற்பாடு செயப்பட்டுள்ளது.
மிகவும் வறிய நிலையில் வாழ்க்கை நடத்தும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் இத்தகைய அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன. எவர் மீதும் பயங்கரவாத, தீவிரவாத முத்திரையைக் குத்திவிட்டால் போதும், அவர்களைச் சித்திரவதை செய்து கொன்றாலும் சட்டவிரோதமானதில்லை எனும் அணுகுமுறையைத்தான் சட்டிஸ்கரில் அரசு பயங்கரவாதிகள் பின்பற்றி வருகின்றனர். இது, மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் நாகரிகத்துக்கும் விடப்பட்டுள்ள சவால் அன்றி, வேறில்லை.
__________________________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________