சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.
சத்தீஸ்கர் மாநில வனத்துறை, அங்குள்ள பர்சா ஈஸ்ட் கென்டே பாசன் (PEKB) நிலக்கரிச் சுரங்கத்தில் இரண்டாம் கட்டச் சுரங்கத்திற்காக மரங்களை வெட்டத் தொடங்கியது. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஹஸ்டியோ அரந்த் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக கிராம மக்கள் மே 30 அன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் போராட்டம் காரணமாக மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது. சுமார் 250 மரங்கள் வெட்டப்பட்டதாக கிராம மக்கள் கூறினாலும், 50-60 மரங்கள் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், சுர்குஜா மாவட்டத்தில் PEKB கட்டம்-II நிலக்கரி சுரங்கத்திற்காக வன நிலத்தை காடு அல்லாத பயன்பாட்டிற்கு மாநில அரசு இறுதி அனுமதி வழங்கியது.
வனத் துறையினர் மே 30 அன்று காலை காட்பர்ரா கிராமத்தை ஒட்டியுள்ள பெண்ட்ராமர் வனப்பகுதியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். அப்போது பல கிராம மக்கள் மரங்களை வெட்ட எதிரிப்பு தெரிவித்து சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். போராட்டம் காரணமாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை தவிர்க்கும் வகையிலும், மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
PEKB சுரங்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுமதி போலியான கிராம சபை ஒப்புதல் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக காட்பர்ரா கிராமங்களின் சர்பஞ்ச் ஜைனந்தன் போர்ட் கூறினார்.
“PEKB நிலை II-க்கான கிராம சபை 2019-ல் நடைபெற்றது. அந்த நேரத்தில் காட்பர்ரா கிராமவாசிகளுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. உண்மையில், அந்த கிராம சபையின் வருகைப் பதிவேட்டில் 2019-ம் ஆண்டுக்கு முன்னர் இறந்த கிராமத்தைச் சேர்ந்த மூவரின் கையொப்பங்கள் உள்ளன. அந்த கிராம சபை முற்றிலும் போலியானது. ஆனால் அதன் அடிப்படையில் சுரங்கத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
“கடந்த ஏப்ரல் மாதம், பர்சா நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக வனத்துறை மரம் வெட்டத் தொடங்கியது, அதுவும் கிராம மக்களால் முறியடிக்கப்பட்டது. பழங்குடியினரின் நலனை மாநில அரசு புறக்கணிக்கிறது” என்று பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடி வரும் சிபிஏ சுக்லா கூறினார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
மே 2022 நிலவரப்படி, ICFRE மற்றும் Wildlife Institute of India (WII) ஆகியவற்றின் இரண்டு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சுரங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை இருவரும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் யானைகள் குறைவாக இருந்தாலும், காடுகளை அழிப்பதன் காரணமாக யானைகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களுக்கு பரவ வழிவகுக்கும், இந்த ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2007-ல் RVUNL-க்கு ஒதுக்கப்பட்ட PEKB பிளாக்கில் 762 ஹெக்டேர் நிலத்தில் முதல் கட்ட சுரங்கம் 2013-ல் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பார்சா தொகுதி 2015-ல் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தால் தங்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் நீண்டகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் இப்பகுதியில் சுரங்கத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். கடந்த அக்டோபர் 2021-ல், “சட்டவிரோதமாக” நிலம் கையகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 350 பேர் ராய்ப்பூருக்கு 300 கி.மீ நீள அணிவகுப்பு நடத்தினர்.
கடந்த மே 24 அன்று, RRVUNL CMD சர்மா, “சத்தீஸ்கரில் இருந்து நிலக்கரியைப் பெறத் தவறினால் ராஜஸ்தான் கடுமையான மின் நெருக்கடியில் மூழ்கும். ஆர்வலர்கள் உள்ளூர் மக்களை “தவறாக வழிநடத்துகிறார்கள்”. சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சத்தீஸ்கரில் 8 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்படும். வேலை வாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் உள்ளூர் மக்கள் பயனடைந்துள்ளனர். சர்குஜாவில் “100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை”விரைவில் கட்டப்படும்” என்று கூறினார்.
இயற்கை வளங்களை அழிக்கத்துடிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை கிராம மக்களது போராட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது. காடுகள், மலைகள், நீர்நிலைகள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக இந்திய அரசினால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு சத்தீஸ்கர் மாநிலம் ஓர் சான்று. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டும் சத்தீஸ்கர் அரசை எதிர்த்து போராடும் கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.