16.03.2022
திருவண்ணாமலை பாலியப்பட்டு உழைக்கும் மக்களின்
சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் !
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின்
மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்கு மறுப்பு !
பத்திரிகைச் செய்தி
நேற்றைய தினம் (15.03.2022) விகடன் மற்றும் தினமலர் தமிழ் இந்து ஆகிய ஊடகங்களில் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்கள் ஏறத்தாழ 100 நாட்களில் நெருங்கும் வகையில் சிப்காட் எதிரான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார்கள். அந்தப் போராட்டத்தில் சி.பி.ஐ-எம் அமைப்பின் பங்களிப்பு இல்லை என்று கூறி இயக்குனர் லெனின் பாரதி, தனக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்ட விருதினை திருப்பிக் கொடுக்க உள்ளதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டம் பற்றி சி.பி.ஐ-எம் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரிடம் ஊடகங்கள் கேட்டதற்கு, அவர் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதால் நாங்கள் ஈடுபடவில்லை. சிப்காட் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத இடத்தில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிப்காட் அமைக்க தமிழக அரசு உறுதியான தகவல் இதுவரை வெளியிடவில்லை என்றும் அதுவரை அழுத்தமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
படிக்க :
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
பாலியப்பட்டில் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை அப்பகுதி மக்களே நடத்தி வருகிறார்கள்.
இப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் மற்றும் வினவு ஆகிய ஊடகங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளன.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடக்கம் முதல் இப்போது வரை துணை நிற்கிறது; எதிர்காலத்திலும் துணைநிற்கும்.
விவசாயம் செழிப்பாக உள்ள ஒரு பகுதியின் மக்கள் எங்களுக்கு சிப்காட் தேவையில்லை என்று கூறினார்கள் என்றால் அதைத்தான் ஒரு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அம்மக்களின் கோரிக்கைக்காகத்தான் எந்த ஒரு ஜனநாயக மற்றும் முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் துணை நிற்க வேண்டும்.
பாலியப்பட்டு சிப்காட் பிரச்சினையை ஒட்டி கேள்விகள் கேட்கப்படும்போது, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கூறிய இரண்டு கருத்துக்களும் மக்களின் கோரிக்கை அல்ல, அவர்களுக்கு எதிரானது ஆகும்.
பாலியப்பட்டில் அரசு சிப்காட்டுக்காக இடத்தை கையகப்படுத்த போகிறோம் என அரசு எதுவும் அறிவிக்கவில்லை என்றால் ஏன் பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள்?
அவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா அல்லது அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் போராடுகிறார்களா என்பதையும் பாலியப்பட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் போலீஸ் எதற்காக குவிக்கப்பட்டிருக்கிறது? வெளியாட்கள் நுழைவதற்கு ஏன் மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது? என்பதையும் சி.பி.ஐ-எம் கட்சிதான் விளக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம். கூட்டணி தர்மத்துக்காக உழைக்கும் மக்களின் வாழ்வை பணயம் வைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை அக்கட்சிதான் விளக்க வேண்டும்.
தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்று போராடும் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் உடன் இருந்து தோள் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க