தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : பாசிசத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது, எச்சரிக்கை !
அ.தி.மு.க - பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா?
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணி பெற்ற வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததைவிட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தி.மு.க ஆதரவு தரப்பினருக்கு வழங்கியுள்ளது. இது தி.மு.க அரசின் ஒன்பது மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பேசி வருகின்றனர். “பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இடமில்லை” என்றும் “அ.தி.மு.க-விற்கு இனி எதிர்காலம் இல்லை” என்றும் சிலர் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும், 138 நகராட்சிகளில் 132 இடங்களையும் 489 பேரூராட்சிகளில் 80 சதவிகித இடங்களையும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க மிக பலவீனமாக இருந்த மேற்கு மண்டலத்தில், தற்போது அபார வெற்றியை சாதித்திருப்பது தி.மு.க.வினரின் அளவிடா மகிழ்ச்சிக்கு சிறப்புக் காரணம்.
தனித்து களம் கண்ட பா.ஜ.க தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்களும் இதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து வருகின்றன. மற்றொரு பக்கம் இதை தி.மு.க ஆதரவாளர்கள், பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் அனைவரும் நக்கலடித்து பேசி வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தவகையில் உழைக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை; தங்கள் கட்சி அதிவிரைவாக வளர்ந்துவருவதாக பாசிச பா.ஜ.க.வினர் கூறிவருவதை நக்கலடித்து கடந்து செல்வதா போன்ற கேள்விகளுக்கு விடைகாண நாமும் இத்தேர்தல் குறித்து பேச வேண்டியிருக்கிறது.
‘தேர்தலும்’ ‘ஜனநாயகமும்’ கொள்ளையர்களுக்காக…
சாலை, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி என மக்கள் தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதையும் தேர்தலைப் புறக்கணிப்பதையும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் நாம் பரவலாக காண முடியும். ஆனால், இந்தமுறை ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர பரவலாக அத்தகைய கோரிக்கையுடன் கூடிய போராட்டங்களை பார்க்க முடியவில்லை.
மேலும், தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புறத்திற்கானவை. இந்த நகரங்களில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு முன்னர்தான் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெரும்பாலானவற்றை இடிக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 25,000 வீடுகள் வரை ஒரே நேரத்தில் இடிக்கப்படுவதாக அறிவித்ததால், அடுத்து நம்முடைய வாழ்க்கை எண்ணாகுமோ என்ற பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். இங்கெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் வாக்களிப்பு நடந்துள்ளது.
தங்கள் விளைநிலத்தை அழித்து நாசகார சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் திருவண்ணாமலை பாலியப்பட்டு கிராம மக்களின் போராட்டம் கண்டுகொள்ள நாதியற்று போனது. கொஞ்சமும் மன உறுத்தலின்றி வாக்களித்துள்ளனர் சுற்றுவட்டார கிராமத்தினர்.
தங்களது வாழ்வாதாரமும் உரிமைகளும் நேரடியாகப் பறிக்கப்படும் நிலையிலும் அதற்கும் இந்த தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; தேர்தல் வந்தால் ஓட்டுப் போட வேண்டும் என்ற சுரணையற்ற மனநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டிகிறார்கள். “தேர்தல் வேறு, ஜனநாயக உரிமைகள் வேறு” என்ற கருத்தாக்கத்தை இத்தனை ஆண்டுகளில் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களிடம் புகுத்தி பழக்கிவிட்டுள்ளது.
பிறகு யாருக்குத்தான் இந்த ‘வேர்மட்ட ஜனநாயகம்’; ஒவ்வொரு கட்சியிலும் வேர்மட்டத்திலுள்ள ‘குட்டி அலிபாபாக்கள்’ கொள்ளையடிப்பதற்கான ‘ஜனநாயக’ ஏற்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல். ஒவ்வொரு வார்டிலும் 10 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை வாரியிறைத்து செலவு செய்ய தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சிகளில் சீட் வழங்கப்பட்டது. இத்தகையவர்களின் மக்கள் சேவை எப்படி இருக்கும்!
இந்த கூத்தெல்லாம் தெரிந்தபோதும்கூட தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு விதித்த செலவு வரம்பு என்ன தெரியுமா? பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.17,000, நகராட்சி வார்டு உறுப்பினர் என்றால் அதிகபட்சமாக ரூ.34,000, மாநகராட்சி பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85,000 வரை செலவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.
உள்ளாட்சியில் சந்தி சிரித்த ‘சமூகநீதி’!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லையென்று கூறி, அதி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலை சந்தித்தது பா.ஜ.க; நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தத்தமது பணபலத்திற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்தின.
கடந்த சட்ட மன்றத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று தி.மு.க அறிவித்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கான பங்கீட்டை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் மல்லுக்கட்டி, அவமானமடைந்தும் சோர்வடைந்தும் போயின தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்.
கும்பகோணம் நகராட்சியில் ஒரே ஒரு வார்டு மட்டுமே சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டிலும் தி.மு.க.வின் வட்டச்செயலாளர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இது பற்றி பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் சி.பி.ஐ கட்சி சார்பில் போட்டியிட்ட பாரதி என்ற வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப்பெற்றார்.
கோவையில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு கூட அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அம்மாவட்டத்தில் எங்கும் திருமாவளவனின் பெயரோ, படமோ தி.மு.க.வினரால் பயன்படுத்தப்படவில்லை. கோவையைப் போலவே பல பகுதிகளிலும் திருமாவளவனின் படம் பயன்படுத்தப்படவில்லை. இது குறித்து வெளிப்படையாக அக்கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டிய சோகமும் நடந்தது.
ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் தி.மு.க.வினர் சுயேச்சையாக நின்றனர். தங்களது கட்சியினருக்கு சீட்டுகள் வழங்கப்படாததால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சில பகுதிகளில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டன.
கூட்டணிக் கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் (ஆங்காங்கு சில வார்டுகள்தான் என்ற போதிலும்) ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர்; ஆளுங்கட்சியான தி.மு.க தங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்காததால் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டணிக் கட்சியினர் என ‘சமூக நீதி’ உள்ளாட்சியில் சந்தி சிரித்துவிட்டது.
இதுபோக ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தங்களுக்கு சீட் வழங்கவில்லை என்று உட்கட்சி பூசல் வேறு. காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கூட்டணி தர்மத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்தார்.
‘கூட்டணி தர்மம்’ குடைசாய்வது பற்றி பொதுவெளியில் நாறுவதைத் தடுப்பதற்காக தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், “கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க.வினர் உடனே மனுக்களை வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 56 பேரைத் தற்காலிக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக அமைந்தது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல். கட்சித் தலைமையால் கூட்டணிக் கட்சியினருக்காக ஒதுக்கப்பட்ட பல பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளை ரவுடித்தனம் செய்து தி.மு.க.வினரே அராஜகமாக கைப்பற்றிக் கொண்டார்கள். மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை கடத்திய சம்பவங்களும் அரங்கேறின.
வி.சி.க.வினருக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க.வினரே கைப்பற்றிக் கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மாவட்டம் அல்லிநகர் நகராட்சித் தலைவர் பதவியையும் கடைசி நேரத்தில் தி.மு.க உள்ளூர் கவுன்சிலரே கைப்பற்றிக் கொள்ள, அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. சி.பி.ஐ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியும் அதேபோல தி.மு.க கவுன்சிலரால் கைப்பற்றப்பட்டது.
சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சி.பி.எம் கட்சி வேட்பாளர் என். சிவராஜ் மீது தாக்குதல் நடத்தி தேர்தல் முடியும் வரை அவரை தனியொரு அறையில் அடைத்துள்ளனர். மேலும், உடன் வந்த கட்சித் தலைவர்களை தாக்கி விரட்டிவிட்டு அதிகாரிகள், போலீசுப் படை உதவியுடன் தலைவர் பதவியை தி.மு.க.வைச் சேர்ந்தவரே கைப்பற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளாளூர், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் சொந்த கட்சியினரே கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், அப்பகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தல் என்பதே ஒரு பிசினஸ் ஆகிவிட்ட பின், உள்ளாட்சி தேர்தல் போன்றவைதான் கீழ்மட்ட கட்சி ‘தலைவர்’களுக்கு முக்கிய பிழைப்பாதாரம். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காமல் ‘காய்ந்து போயிருந்த’ கீழ்மட்ட அணிகள் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறும் செயலை எந்தக் கட்சியால்தான் கட்டுப்படுத்த முடியும்; அதுவும் தனது கட்சி ஆட்சி நடக்கும்போது எளிதாக வென்றுவிட முடியும் எனத் தெரிந்தும் எந்த தொண்டன்தான் வேடிக்கை பார்ப்பான்.
இந்த இலட்சணத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதானது சமூகநீதி சாதனையாக பீற்றிக் கொள்ளப்பட்டது. நடைமுறையில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களின் மனைவி, சகோதரி, மகள் ஆகியோரே. பிரச்சாரத்திலும் பேனரிலும் அத்தலைவர்களின் பெயரோடு இணைத்துதான் வேட்பாளர் பெயரையே பிரச்சாரம் செய்தார்கள். இதெல்லாம் ஊரறிந்த கூத்து!
இது திராவிடக் கொள்கையின் வெற்றியா?
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.க.வின் தலைமைச் செயலாளராகவும் இருந்த கு.க. செல்வம் பா.ஜ.க.விற்குத் தாவி, தற்போது மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதே அக்கட்சியின் ‘கொள்கை’ அரசியலுக்கு சரியான சான்று.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள கப்பியறையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து வேட்பாளரை நியமிக்காமல் பா.ஜ.க.வை போட்டியின்றி வெற்றிபெற வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும், நாம் தமிழர் கட்சி மட்டுமே தனது வேட்பாளரை வாபஸ் பெறவில்லை.
நாகர்கோயில் மாநகராட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலின்போது, பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நான்கு தி.மு.க கவுன்சிலர்களே வாக்களித்த செய்தி (அ.தி.மு.க மற்றும் சுயேட்சைகள் ஆதரவையும் சேர்த்து பா.ஜ.க.விற்கு 20 ஒட்டுகளே இருந்த நிலையில், 24 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார் பா.ஜ.க வேட்பாளர்) வெளியாகி நாறுகிறது. இதுதான் தி.மு.க அணிகளிடம் உள்ள ‘கொள்கைப் பிடிப்பு’.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க – பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு நினைப்பதும், அதன் அடிப்படையில் தி.மு.க.வின் மேற்கு மண்டல வெற்றியைப் பார்ப்பதும் ஆபத்தான புரிதலாகும்.
மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல அல்ல பா.ஜ.க, அது பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் கட்சி. மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல பெயரளவில் கொள்கையையும் வெறும் கவர்ச்சிவாத அரசியலையும் மட்டுமே வைத்து மக்களை ஈர்க்க கூடிய அமைப்பு அல்ல.
பல ஆண்டுகாலம் கோவை பகுதியில் அது உருவாக்கி வைத்த இந்து முனைவாக்க அடித்தளமெல்லாம் தி.மு.க.வின் வெற்றியால் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டதாக கருதுவது அடிப்படையிலேயே பகுத்தறிவற்ற சிந்தனை. அப்படியானால் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை எப்படி பார்ப்பது என்ற கேள்வி எழலாம்.
கே.என். நேரு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் போன்றவற்றைகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணத்தை வாரியிறைத்தும் இதுநாள்வரை தான் மேற்கொண்டுவந்த கவர்ச்சிவாத திட்டங்கள் – விளம்பரங்கள் மூலமும் பெற்ற வெற்றியே தி.மு.க.வின் தேர்தல் வெற்றி.
இதில், செந்தில் பாலாஜியும் தோப்பு வெங்கடாச்சலமும் முன்னாள் அ.தி.மு.க பெருச்சாளிகள் என்பதால், அ.தி.மு.க செல்வாக்காக உள்ள மேற்கு மண்டலத்தில் எப்படி காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
மேலும், எந்த கட்சி ஆளும் கட்சியோ, எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு பார்த்து வாக்களிப்பதுதான் பெரும்பான்மை வாக்காளர்களின் பொதுப்புத்தி. இந்த அம்சமும் சேர்வதால்தான் பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது. கூடுதலாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க.வின் ஊழல்களை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தியதும் அதன் தலைவர்கள் வீட்டில் தொடர்ச்சியாக ரெய்டுகளை நடத்தி பொதுவெளியில் அவர்களை நாறடித்ததும் சேர்ந்து வினையாற்றியிருக்கிறது.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்து நின்றது கணிசமாக வாக்கு வங்கியை பிரித்துள்ளதும் இக்கட்சிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி இருந்தும்கூட கோவை மாவட்டப் பகுதிகளின் பெரும்பான்மை வார்டுகளில் பா.ஜ.க இரண்டாம் இடம், மூன்றாம் இடம் வந்திருக்கிறது. இதிலிருந்துதான் பா.ஜ.க.வின் பலத்தை பரிசீலிக்க வேண்டுமே ஒழிய, வெற்றி பெற்றதை மட்டும் வைத்தல்ல.
சுருக்கமாக, தி.மு.க.வின் வெற்றி கொள்கை ரீதியானது அல்ல. கோவையை பார்த்து பேசுபவர்கள் கன்னியாகுமரியை விட்டுவிடுகிறார்கள். 9 மாத ஆட்சி சாதனை கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏன் ஈர்க்கவில்லை என பரிசீலிப்பதில்லை. மேற்கில் பா.ஜ.க வெற்றி பெறுவது தற்காலிகமாக தள்ளிப் போயிருக்கிறது என இளைப்பாறுதல் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டதாக மகிழ்வது பகுத்தறிவுக்கு முரணானது. நம்மை செயலின்மைக்கு தள்ளும் அபாயமிக்கது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை நக்கலடிப்பதற்கு பின்…
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 308 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் பார்வை என்ன?
பா.ஜ.க.விற்கென்று சுயேட்சை பலமே இல்லை; அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்ததன் மூலமே சட்டமன்றத் தேர்தலில்கூட நான்கு தொகுதிகளை வென்றது என்பதே அவர்களின் மதிப்பீடு. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்தபோது, “நோட்டா பொத்தான் இல்லை என்ற துணிச்சலில் பா.ஜ.க களமிறங்கியுள்ளது” என்று பகடி செய்தார்கள்.
தேர்தல் முடிவு வந்த பிறகு, “தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி” என பேசினார் அண்ணாமலை. அதன் மிகைப்படுத்தலை ஒதுக்கிவிட்டு, பாசிச பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு தமிழகத்திலும்கூட குறிப்பிட்ட பகுதிகளில் அடித்தளம் இருக்கிறது; இது ஒரு அபாயம்; பாசிச எதிர்ப்பாளர்கள் மக்களிடம் தீவிரமாக வேலைசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நாம் பரிசீலிப்பதில்லை. மாறாக, பா.ஜ.க.வின் வெற்றியை பகடிசெய்து ஆறுதலடைந்து கொண்டிருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பா.ஜ.க அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது. சென்னை 134-வது வார்டு பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாம்பலம் தொகுதி. பா.ஜ.க கோவை மாவட்டத்திலேயே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2011 தேர்தலில் பா.ஜ.க தனித்து களம் கண்டபோது 226 வார்டுகள் பெற்றது. தற்போதைய தேர்தலில் 308 வார்டுகள் பெற்றுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டால் பா.ஜ.க வளர்ச்சி சதவிகிதம் 0.63 சதவிகிதம்தான்” – இவையெல்லாம் பா.ஜ.க.வின் வெற்றியெல்லாம் ஒன்றுமேயில்லை அல்லது பெரிதுபடுத்த தேவையில்லை என்பதற்காக சொல்லப்படும் வாதங்கள்.
இதிலிருந்தே நாம் கேள்வியை எழுப்புவோம். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் தானே உள்ளது. இல்லை, அது நீங்கலாகத்தான் பெரியார் மண்ணை கணக்கெடுக்க வேண்டுமா. மேலும் 2011 தேர்தலுடன் ஒப்பிட்டு 0.63 சதவிகிதம்தான் வளர்ச்சி என்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகுதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டு மோடி கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுக்கவும் குறிப்பாக தமிழகத்திலும் பா.ஜ.க எதிர்ப்பு தீவிரமானது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என பல போராட்டங்கள் 2011-க்கு பின்னர் நடைபெற்றவைதான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், 2011 தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றாலேகூட பா.ஜ.க குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ந்து வருகிறது என்றுதான் பரிசீலிக்க முடியும். ஆனால், கூடுதலாக 0.63 சதவிகிதம் வளர்ச்சி வேறு பெற்றிருக்கிறது. “தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” என்று நாம் பெருமை பேசுவது மிகைப்படுத்தல் இல்லை என்றால் இதை எப்படி பரிசீலிப்பது?
ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய நாயகனான இராமனை கொளுத்திய மண்ணில், காந்தியை சுட்டது கோட்சே என்று பேசுவதற்கு போலீசு தடை விதிக்கிறது. ஆனால், “நான் கோட்சேவின் சித்தாந்தப் பேத்தி” என்று பேசிய ஒரு பயங்கரவாதி தேர்தலில் நின்று பிரச்சாரம் செய்ய முடிகிறது. இது உ.பி-ல் நடக்கவில்லை. தமிழகத்தில் நடக்கிறது.
“நோட்டாவுடன் போட்டிபோடும் பா.ஜ.க; ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்று ஒருபுறம் நக்கலடிப்பதும்; இன்னொருபுறம் “ஒரு மாவட்டத்தில் பெற்றதெல்லாம் பெரிய வெற்றியா? 0.63 சதவிகிதமெல்லாம் ஒரு வளர்ச்சியா?” என்று பேசுவதும் ஒருவகை கலாச்சாரம்.
விவகாரத்தை உள்ளபடியே பரிசீலிக்காமல், ஒருவரை/ஒன்றை பகடி செய்வதற்காகவே விசயத்தை தங்களுக்கேற்ப முறுக்கி, தேவைப்படுவதை மட்டும் பொறுக்கி எடுத்து பிரச்சாரம் செய்யும் மீம்ஸ் கலாச்சாரம். மீம்ஸ்-களை பொறுத்தவரை அதில் பரிசீலிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை; நக்கலடிப்பது ஒன்றே நோக்கம். ஆபத்தான பல விசயங்களைகூட வெறும் நகைத்துவிட்டு கடந்துசெல்ல நம்மை பழக்கப்படுத்துவது மீம்ஸ்-களின் எதிர்மறையான அம்சம்.
பா.ஜ.க.வை நக்கலடிக்கும் முற்போக்காளர்களுக்கு இதை ஒத்த சிந்தனைதான் உள்ளதே ஒழிய பரிசீலனை உணர்ச்சி அறவேயில்லை. பாசிஸ்டு கட்சியைப் பற்றிய இத்தகைய சிந்தனை போக்கு பாசிச எதிர்பாளர்களை சிந்தனை அளவிலும் செயல்பாட்டளவிலும் நிராயுதபாணியாக்கி அதன் வளர்ச்சிக்கு வழிகோலக்கூடிய அபாயமிக்கது.
தேர்தலுக்கு அப்பால்…
தி.மு.க.வுடன் ஒப்பிட்டால் பா.ஜ.க பெற்றிருப்பது மிக சொற்ப இடங்கள்தான், இதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்று கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒதுக்கும் சொற்ப இடங்களுக்குள் அடங்காமல் பா.ஜ.க தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது என்பது, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால் அல்ல. இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பரவலாக தனது மதவெறி அரசியலை பிரச்சாரம் செய்வதும், அ.தி.மு.க.வை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய திராணியுள்ள ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே என ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதும்தான் நோக்கம்.
“தி.மு.க. எண்ணற்ற கோயில்களை இடித்துவிட்டது, லாவண்யா விசயத்தில் மதமாற்ற கும்பலுக்கு துணை நிற்கிறது, பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்டு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது, சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிட்டது – எங்கள் கட்சி அலுவலகத்தில் ஆளை வைத்து குண்டு போட்டுவிட்டது” போன்றவைதான் இத்தேர்தலில் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களாக இருந்தன. தி.மு.க-வை இவை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினார்கள் காவிகள்.
இதுபோன்ற உத்திகள்தான், நாளை தி.மு.க.வின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும்போது அக்கட்சிக்கு எதிரான ஒரே மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு பா.ஜ.க.விற்கு முன்தயாரிப்பாக அமையும். பா.ஜ.க.வின் தேர்தல் பங்கேற்பை இந்த கோணத்திலும் அணுக வேண்டும்.
மற்றபடி, ஒரே தேர்தல் பிரச்சாரத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் வேரூன்றுவதற்காக அவர்கள் செய்யும் நீண்ட நெடிய முயற்சியில், இது ஒரு படி அவ்வளவுதான். படிப்படியான முன்னேற்றம் என்பதுதான் அவர்களது இலக்கு. இது புரியாமல் “ஒத்த ஓட்டு பா.ஜ.க” என நாம் கலாய்த்துக் கொண்டிருந்தால் நமக்கு எதார்த்தம் புரியவில்லை என்று பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த தேர்தல் களம் என்பது பாசிஸ்டுகள் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற துணைசெய்வதுதானே தவிர, பாசிச எதிர்பாளர்களுக்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்த முடியாத ஒன்று.
பாசிச எதிர்ப்புக்கான களம் “தேர்தல்களுக்கு அப்பால்” உள்ளது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என மக்கள் போராட்டங்களில் மையம் கொண்டுள்ளது.
பணம்தான் தேர்தலில் வென்றது பெண்களுக்கு .மூக்குத்தி புடவை ஆண்களுக்கு குவாட்டர் பிரியானி ..இவைதான் வெற்றிக்கு ….கொள்கைக்கெல்லாம் கிடையாது..