கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?

அ.தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அவமானச்சின்னம்! பாசிஸ்டுகளான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தன்மானமும் சுயசார்பும் இல்லாத ஒட்டுண்ணித் துதிபாடிகள், பிழைப்புவாதிகள் கூட்டத்தை வைத்தே இக்கட்சியைக் கட்டி வளர்த்தெடுத்து வந்துள்ளனர்.

மிழ் திரைப்பட ரசிகர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மசாலா சப்ஜெக்ட்டை வைத்து பல நாட்களாக மாவரைத்து வருகின்றன, ஊடகங்கள். எந்திரன் திரைப்படத்தில் சிட்டி என்ற ரோபோ கதாப்பாத்திரத்துக்கு திடீரென்று மனித உணர்ச்சிகள் உண்டாவது போல, எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மானமும் ரோஷமும் வந்துவிட்டதாக சித்தரிக்கின்றன, தமிழ் ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் ஓரளவு அரசியல் தெரிந்த பாமரர்கள்கூட இதை நம்புவதற்கு தயாராக இல்லை. நிமிர்ந்த மேனி வளைந்து, குனிந்து, தவழ்ந்து படிப்படியாக இன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலராக ‘முன்னேறியுள்ள’ எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பரிணாம வளர்ச்சியை அறியாதவர்கள் அல்ல, தமிழ்நாட்டின் மக்கள். அப்படியிருக்க திடீரென்று அண்ணாமலையின் பேச்சுக்களை பொறுத்துக் கொள்ள முடியாமல், எடப்பாடிக்கு சுயமரியாதை உணர்ச்சி பொங்கியதாகச் சொன்னால் யாரால்தான் நம்ப முடியும்.

நம்மால் நம்ப முடியவில்லை என்பது மட்டுமல்ல, அடிமைக் கூட்டத்தின் இன்னொரு கோஷ்டியான ஓ.பி.எஸ் தரப்பும் அ.தி.மு.க. இயற்றிய தீர்மானத்தில் சொல்லப்பட்ட காரணங்களை ஏற்க மறுக்கிறது. ஒரு அடிமையின் மன ஓட்டத்தை மற்றொரு அடிமையால்தானே புரிந்துகொள்ள முடியும்.

“அண்ணாவைப் பற்றி பேசியதோ, புரட்சித் தலைவியைப் பற்றி பேசியதோ எடப்பாடிக்கு கவலை இல்லை, 2026-இல் எங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை பேசியதுதான் எடப்பாடிக்கு பிரச்சினை; அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி விமர்சித்து நான்கு நாட்கள் கழித்துப் பிரச்சினையை கிளப்பினார் எடப்பாடி” என்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அது சரி, நான்கு நாட்கள் கழித்துக் கூட ஒ.பி.எஸ். தரப்புக்கு சொரணை வரவில்லையே, ஏன்? என்று நாம் கேட்க முடியாது. ஏனென்றால், “எங்களிடம் நீங்கள் அதையெல்லாம் எதிர்ப்பார்க்காதீர்கள்” என்பதும் சேர்ந்ததுதான், எடப்பாடி பற்றிய பண்ருட்டி ராமச்சந்திரனின் விமர்சனத்தில் பொதிந்திருக்கும் உண்மை.


படிக்க: தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!


ஆனால், அண்ணாமலை கும்பலுக்கும் எடப்பாடி தரப்புக்கும் நடைபெறும் தற்போதைய லாவணி என்பது வழக்கம்போல வரும் வாய்ப் பேச்சு தகராறு அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக வெறும் வாய்மொழியாக அறிவிக்கவில்லை; மாறாக, தலைமை கழகச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஆகியோரைக் கூட்டி நடத்தப்பட்டக் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறது, அ.தி.மு.க.

அ.தி.மு.க.வின் அறிவிப்பு வெளியான பிறகு, அ.தி.மு.க, பா.ஜ.க என இருதரப்பிலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். “நன்றி மீண்டும் வராதீர்கள்” என்ற இணையக் குறிச்சொல் (ஹாஷ்டாக்) வேகமாகப் பரவியது.

ஏறியடித்துப் பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை, அ.தி.மு.க.வின் தீர்மானத்திற்கு பிறகு அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளார். “அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தேசியத் தலைமை அறிவிக்கும்” என அறிவித்துள்ளார் அண்ணாமலை. இதற்கிடையே, அக்டோபர் 3 அன்று தமிழ்நாடு பா.ஜ.க.வின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியிலிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர், “தி.மு.க.வை தோற்கடிப்பதற்காக மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி சேர வேண்டும்”; “பா.ஜ.க.வின் மத்திய தலைமை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று கோருகிறார்கள். புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஜெகன்மூர்த்தி, அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு சூடு சுரணை வந்துவிட்டதோ என்று கருதுவதற்கு நியாமிருப்பது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துகிறது.

இதை எப்படிப் புரிந்துகொள்வது?

எஜமானர் திட்டினாலும், அடித்தாலும், காறி உமிழ்ந்தாலும் வளர்ப்பு நாயானது, தனது எஜமானரையே சுற்றிச்சுற்றி வந்து காலை நக்கும். அதேநேரம் அந்த நாய் ஆசையோடு கடித்துக் கொண்டிருக்கும் எலும்புத் தூண்டை பிடிங்கி எறிய முயன்றாலோ, அதை தனது மற்றொரு வளர்ப்பு நாய்க்கு போட்டாலோ அது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா?. ஆனால், அந்த சீற்றத்தை சுயமரியாதை உணர்ச்சி என்று சொல்லமுடியுமா?

நிச்சயமாக அதை ‘நாயின் சுயமரியாதை உணர்ச்சி’ என்று சொல்ல முடியாது அல்லவா. ஆகவே, இது ஒரு வித்தியாசமான பிரச்சினை.

அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் மோதல் நிலவுவது என்னமோ உண்மைதான். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகுவது என்ற அ.தி.மு.க.வின் அதிரடி அறிவிப்பு, சுயமரியாதைத் தூண்டுதல் அல்ல; எலும்புத் துண்டுக்கான சீற்றம்!

எடப்பாடி பழனிசாமி, ‘ஆளுமை’ ஆன கதை…

அ.தி.மு.க. என்பது ஒரு அடிமைக் கூட்டம். இந்த அடிமைக் கூட்டத்தின் மகாராணியும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ1 குற்றவாளியுமான ‘அம்மா’ ஜெயலலிதா இறந்துபோன பிறகு, எஜமானர் பதவியை கைப்பற்ற முயன்றார், சசிகலா. ஏ2 குற்றவாளியான ‘சின்னம்மா’, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் தனது எஜமானர் பதவியை அவரால் தக்கவைக்க முடியவில்லை. மேலும், கட்சிக்குள் இருந்த கோஷ்டி மோதலையும் அவரால் தீர்க்க முடியவில்லை.

கொள்ளையடித்த சொத்துக்களை பிரித்துக் கொள்வதிலும், கட்சித் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவது என்பதிலும் தீவிரமான நாய்ச்சண்டை தொடர்ந்தது. அடிமைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களிலேயே வலுத்தவர்கள் எஜமானர் பதவிக்காக அடித்துக் கொண்டார்கள். இது கட்சிக்குள் தேவர், கவுண்டர் சாதி மோதலாக வெளிப்பட்டது. கட்சிக்குள் இருந்த தேவர் சாதி கும்பலுக்கு ஓ.பி.எஸ்-ம், கவுண்டர் சாதி கும்பலுக்கு ஈ.பி.எஸ்-ம் தலைமை வகித்தனர்.

இந்த இருதரப்புச் சண்டையில் சிதறிக்கிடந்த அ.தி.மு.க.வை, பா.ஜ.க. தலையிட்டு ஒன்றுசேர்த்து வைத்தது. “அ.தி.மு.க. என்ற நெல்லிக்காய் மூட்டையை கட்டிவைத்ததே பா.ஜ.க.தான்” என்று எச்.ராஜா சொல்வது இதைத்தான். ஆனால், அ.தி.மு.க.வில் வலுவாக இருந்தது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சாதி பிரிவினர்தான். இக்காரணத்தால்தான், எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 66 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அ.தி.மு.க. வெற்றிபெற்ற இந்த 66 தொகுதிகளில், 41 தொகுதிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை. கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 57 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றை அ.தி.மு.க. கைப்பற்றியது.


படிக்க: நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)


எம்.ஜி.ராமச்சந்திரன் இருந்த காலத்திலும், அதன்பிறகு ஜெயலலிதா காலத்திலும் கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துவருகிறது. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும், கட்சிக்குள் வலுவாக இருந்த கொங்கு மண்டலப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்று அதிகாரத்தை இழந்தாலும், உட்கட்சியில் தனது வலிமையை எடுத்துக் காட்டவதற்கும், ஓ.பி.எஸ்.ஐ கழட்டிவிட்டு, தனது தலைமையின் கீழ் கட்சியை ஒருங்கிணைக்கவும் எடப்பாடிக்கு உந்துதல் கொடுத்தது.

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. தலைவர்களும், வட சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமாரும், மதுரையில் ராஜன் செல்லப்பா தலைமையிலான ஒருபிரிவு அ.தி.மு.க.வினரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க, திரைமறைவில் நடைபெற்ற பேரங்கள் ஓய்ந்து, கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒ.பி.எஸ். தூக்கிவீசப்பட்டார்.

இதுதான் எடப்பாடி பழனிசாமி ‘ஆளுமை’ ஆன கதை…

“அ.தி.மு.க. என்றால் கொங்கு மண்டலம்தான்; கொங்கு மண்டலத்தில்தான் அ.தி.மு.க” என்றான பிறகு, இந்த கொங்கு மண்டல ‘தளப்பிரதேச’த்தின் தளபதியாக இருப்பது எடப்பாடிதான்.

கொங்கு மண்டல லாபி: எலும்புத் துண்டுக்காக சீறும் எடப்பாடி!

தென்மாவட்டங்களில் ஒ.பி.எஸ். தலைமையில் இருக்கும் ஒருபிரிவு அ.தி.மு.க.வினரையும் வென்றெடுத்துவிட்டால், ஜெயாவிற்கு பின் அ.தி.மு.க.வை மீண்டும் பழைய வகையில் வலுப்படுத்திவிடலாம். பிறகு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி, தான் வெற்றிபெற்று முதல்வராகிவிடலாம் என்பது எடப்பாடியின் கனவு. அந்த அடிப்படையில்தான் கொள்ளையடித்த பணத்திலிருந்து மாபெரும் பொருட்செலவில் மதுரை மாநாட்டை நடத்திக் காட்டினார் எடப்பாடி.

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டையும் தனது இந்துராஷ்டிரப் படையெடுப்பின் மூலமாக சுற்றிவளைத்திருக்கும் பா.ஜ.க, “மிஷன் சவுத்” என்ற இலக்கின் அடிப்படையில் தென் மாநிலங்களில் தனது கட்சியை வலுப்படுத்துவதற்கு தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் அண்ணாமலையை இறக்கி, அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுத்து படிப்படியாக செல்வாக்கு பெற்ற தலைவராக வளர்க்க முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்ப்பதில் அக்கும்பலின் முதல் இலக்காக இருப்பது, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவதுதான். இந்தியாவிற்கு பசுவளைய மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டிற்கு கொங்கு மண்டலத்தைக் கருதுகிறது பா.ஜ.க. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. செல்வாக்கு பெற்ற பகுதியாக இருக்கும் அம்மண்டலத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டுமானால், அ.தி.மு.க.வை அழிப்பதுதான் பா.ஜ.க.வின் முதல் இலக்கு (Target).

அ.தி.மு.க.வை அழித்து கொங்கு மண்டலத்தை நேரடியாக பா.ஜ.க.வின் கோட்டையாக மாற்றுவதற்கு பா.ஜ.க. இரண்டு வழிமுறைகளை வைத்திருக்கிறது. அதில் முதல் வழிமுறை, டெல்லி தலைமையின் தற்போதைய வழிகாட்டுதல்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்துகொண்டே தொகுதிப் பங்கீட்டில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களைக் கோருவது; அ.தி.மு.க.வின் வாக்குவங்கியையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தேர்தல் வெற்றியை உத்தரவாதப்படுத்துவது; படிப்படியாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் கட்சி அமைப்பை தன்னோடு செரித்துக் கொண்டு அ.தி.மு.க.வை ஒன்றுமில்லாமல் ஆக்குவது – இவைதான் டெல்லி தலைமையின் வழிகாட்டுதல்கள்.

ஆனால், பிற மாநிலங்களில் கையாளும் இந்த வழிமுறை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது; இரு திராவிட கட்சிகளின் மீதும் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, “கழகங்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தனித்து நின்றாலே கட்சியை வளர்க்க முடியும்; கொங்கு மண்டலத்தில் மட்டுமில்லாமல், நீண்டகால நோக்கில் மாநிலம் முழுக்கவும் கட்சியை வளர்க்க இந்த வழிமுறைதான் உதவும் என்பது அண்ணாமலை கும்பலின் கருத்து. இந்த இரண்டாவது வழிமுறை, அண்ணாமலையுடையது.

அ.தி.மு.க. பற்றிய அண்ணாமலையின் விமர்சனங்களை இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஏதோ அண்ணாமலை வாய்த் துடுக்கில் பேசுவதாக கருதிக் கொள்ளக் கூடாது.

000

கடந்த மார்ச் மாதம், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கட்சியை வளர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதற்கு தனித்துப் போட்டியிட வேண்டும். அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் அண்ணாமலை தனது பலத்தை சோதித்துப் பார்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வைத்து தி.மு.க. பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், அ.தி.மு.க. வேட்பாளர்களை விட பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தனர்; தி.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்திருந்தனர்.

அமலாக்கத்துறையை ஏவி செந்தில்பாலாஜியை கைதுசெய்துள்ளதன் மூலம், இப்போது கொங்கு மண்டலத்தில் ஆதிக்கத்துக்கான போட்டியிலிருந்து தி.மு.க.வை நீக்கியுள்ளது, பா.ஜ.க.

கவுண்டர்கள், தேவேந்திர குல வேளாளர்கள், அருந்ததியினர் ஆகிய சாதியினரே கொங்கு மண்டலத்தில் பெருவாரியான மக்களாக இருக்கின்றனர். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை தானே கவுண்டர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்; எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கியதைக் காட்டி அருந்ததியர் மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. வேலைசெய்கிறது; ஆர்.எஸ்.எஸ்-இன் வெளிப்படியான அடியாளாக இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர்களிடையே செல்வாக்கு பெற்றவராக உள்ளார். ஆகவே, இந்த ஏற்பாடு போதும், அ.தி.மு.க. நமக்கு தேவையில்லை என்று கருதுகிறார், அண்ணாமலை.

பா.ஜ.க.வை வளர்ப்பதற்கு அண்ணாமலை முன்வைக்கும் வழி, அ.தி.மு.க.விற்கு மொத்தமாக குழிபறிப்பதாகும். அதிலும் குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இருக்கும் கட்சி அமைப்பையே தனது அரசியல் வாழ்வுக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவுகளுக்கு வேட்டு வைப்பதாகும். ஆகவேதான், அண்ணாமலையை மாற்றவேண்டும் என்று பா.ஜ.க.விடம் காலில் விழுகிறார், எடப்பாடி பழனிசாமி. இந்த பிரச்சினை ஓ.பி.எஸ்.க்கு இல்லை என்பதால், அவர் பா.ஜ.க.விற்கு மிக ‘ஒழுக்கமான அடிமை’யாக இருக்கிறார்.

இப்போதைய சூழலில், “எஜமானருக்கு விசுவாசமாக இருக்கிறேன், ஆனால், என் எலும்புத் துண்டை தட்டிப் பறிக்க வேண்டாம்” என்பதே பா.ஜ.க.விடம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ‘மிகத் தாழ்மை’யான கோரிக்கை.

அ.தி.மு.க.வை அழிக்காமல், பா.ஜ.க.வை தடுக்க முடியாது!

“மோடி அரசுக்கு சேவை செய்வதற்கு பா.ஜ.க. என்ற பெயரும், அண்ணாமலை என்ற தலைவரும் தேவையில்லை, அ.தி.மு.க. என்ற பெயரும் எடப்பாடி பழனிசாமியுமே போதும்” என்று பா.ஜ.க. முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி பேசும் பேரம். ஆனால், இந்த பேரத்திற்கு பா.ஜ.க. ஒருபோதும் மயங்கப் போவதில்லை. அண்ணாமலையின் வழிமுறையை செயல்படுத்திக் கொண்டே, பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு தடைகள் வராமல் பார்த்துக் கொள்வதில்தான், பா.ஜ.க. தலைமையும் கவனம் செலுத்துகிறது.

இதில் அ.தி.மு.க.வை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது பா.ஜ.க. தானே தவிர, அ.தி.மு.க. அல்ல. பா.ஜ.க.வைப் பகைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தனியே கட்சி நடத்த முடியாது. அமலாக்கத்துறையை ஏவிவிட்டால் செந்தில் பாலாஜியைப் போல, அ.தி.மு.க. கூடாரத்தை காலிசெய்வதற்கு பா.ஜ.க.விற்கு கொஞ்ச நாள் போதும். இன்றுவரை கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அரசு திட்டங்களில் ஊழல் செய்த அ.தி.மு.க. அமைச்சர்களை கைதுசெய்து விசாரிக்க முடியாமல் தடுத்து வருவது, ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவிதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதைப் புரிந்துகொள்ளாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ சுயேட்சைத் தன்மை இருப்பதாகக் கருதுவதும், அ.தி.மு.க-பா.ஜ.க. முரண்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுவதும் முட்டாள்தனமானவை. பா.ஜ.க.வை எதிர்ப்பது என்ற போர்வையிலேயே இருந்துகொண்டு, இதுபோன்ற கருத்துகளை வெளிப்படுத்துவது பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் மக்களை படுகுழிக்கு தள்ளிவிடும் மிக அபாயகரமான சந்தர்ப்பவாதமாகும்.

கர்நாடகாவில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தை சில அமைப்புகள் ஆதரித்தன. இன்று அங்கு என்ன நடந்துள்ளது? குமாரசாமி பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்துகொண்டு, காங்கிரஸை ஒழித்துக் கட்டுவதற்கு துணை நிற்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி என்றால், தமிழ்நாட்டில் எடப்பாடி. இன்னும் சொல்லப்போனால், குமாரசாமியை விட பா.ஜ.க.விற்கு மிக விசுவாசமான அடிமை எடப்பாடி பழனிசாமிதான்.

அ.தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அவமானச்சின்னம்! பாசிஸ்டுகளான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தன்மானமும் சுயசார்பும் இல்லாத ஒட்டுண்ணித் துதிபாடிகள், பிழைப்புவாதிகள் கூட்டத்தை வைத்தே இக்கட்சியைக் கட்டி வளர்த்தெடுத்து வந்துள்ளனர். எந்த ஒரு சூழலிலும், இன்னொரு பார்ப்பன பாசிச கும்பல் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இக்கட்சியின் அருகதை.

காஷ்மீர் 370 சிறப்புச் சட்டம் ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என பா.ஜ.க.வின் பல்வேறு காவி-கார்ப்பரேட் பாசிச சட்டங்களை ஆதரித்து தாங்கி நின்றது, அ.தி.மு.க.தான். ஒருவேளை, பா.ஜ.க. புதிதாக ஏதேனும் சதிவேலைகளில் ஈடுபட்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்து நிற்கிறோம் என்ற நாடகத்தை அரங்கேற்றலாம். இதன்மூலம் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ளலாம். சிறுபான்மையினரின் ஓட்டுக்களையும் திரட்ட முயற்சிக்கலாம். ஆனால், அ.தி.மு.க. வெற்றிபெறும் ஒவ்வொரு தொகுதியும் பா.ஜ.க.வின் பினாமி வென்றதாகத்தான் பொருள். அதன் பிரதிநிதித்துவம் பாசிச பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்குதான் பயன்படும்.

எனவே, பா.ஜ.க – அ.தி.மு.க. முரண்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்ற சந்தர்ப்பவாதப் போக்கை நாம் முற்றாக எதிர்க்க வேண்டும். அ.தி.மு.க. என்ற கட்சியையே ஒழித்துக் கட்டுவதுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வேரூன்றாமல் தடுப்பதில் முக்கியமான நடவடிக்கை என்பதை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆழமாக உணர வேண்டும்.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க