25.09.2023

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்!
பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

பத்திரிகை செய்தி

வேண்டாம் பிஜேபி!, ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!, ஆர். எஸ். எஸ் – பா.ஜ.கவை தடை செய்! ஆகிய முழக்கங்கள் தமிழ்நாடு எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கி பலரும் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமே பாஜக – அதிமுக உறவு முறிவு.

பண மதிப்பிழப்பு என்னும் பேரழிவு, மாநில உரிமைகளை நசுக்கும் ஜிஎஸ்டி, நீட், கியூட், புதிய கல்வி கொள்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், குற்றவியல் திருத்தச் சட்டங்கள், அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் நடந்த அதிகார முறைகேடு, மணிப்பூர் கலவரம், சமீபத்தில் தணிக்கை குழு அம்பலப்படுத்திய ஏழரை லட்சம் கோடி ஊழல், அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காக ஒட்டுமொத்த நாட்டையும் இயற்கை வளங்களையும் தாரை வார்த்தது – இப்படி எத்தனையோ பேரழிவுகளை இந்த நாட்டு மக்கள் மீது சுமத்திய மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் கூட்டாளியான அதிமுக, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பது நகைக்கத்தக்கதாகும்.

அண்ணாமலை ஜெயலலிதாவை, அண்ணாவை, எடப்பாடி பழனிச்சாமியை திட்டிவிட்டார் என்ற காரணங்களுக்காக மட்டுமே தற்பொழுது அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது என்றால் கடந்த 9 ஆண்டுகளில் நாட்டையே சீரழித்த மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய போகிறாரா? மணிப்பூரில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசப் போகிறாரா? வருகின்ற தேர்தலில் மோடி – அமித்ஷாவை வீழ்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய போகிறாரா? யாரை பிரதமராக முன் நிறுத்தப் போகிறார்? பாஜகவுடன் தாங்கள் இருந்து செய்த களவாணித்தனங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாவமன்னிப்பு கோரப் போகிறாரா?

எதுவும் நடக்கப் போவதில்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்த கோரிக்கையும் அதிமுகவிடம் இல்லை என்பதில் இருந்து இது மிகப்பெரிய நாடகம் என்பது தெளிவாகத் தெரிகிறது.


படிக்க: தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!


தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களைத் திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக – பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த நாடகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னேயும் நிறைவடைந்து விடலாம் அல்லது தனியாக நின்று குறிப்பிடத் தொகுதிகள் வென்ற பின்னர் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம். இப்படி எதுவும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், தமிழ்நாட்டில் ஜெயலலிதா – எடப்பாடி கும்பல் அடித்த கொள்ளைகள் – கொலைகளில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்?

இந்த நாடகத்தை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஊடகங்களில் திட்டமிட்டு பரபரப்பு செய்தியை உருவாக்குவதன் மூலம் மக்களின் பாசிச மோடி எதிர்ப்பு சிந்தனையை முனை மழுங்கச் செய்வதே ஆர். எஸ் .எஸ் – பா.ஜ.க-வின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும்! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! என உரத்து முழங்குவோம்.

அதிமுக – பாரதிய ஜனதா கட்சி – ஊடகங்கள் சேர்ந்து நடத்தும் இந்த நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321