தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

அரசியல் கட்சிகளை நடத்தும் இந்த சினிமா கழிசடைகளும், சாதிக்கட்சிகளை நடத்தும் சாதிவெறித் தலைவர்களும் தமிழ்நாட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. போன்ற பிழைப்புவாத காரியவாத பொறுக்கித் திண்கிற, ஆளும் வர்க்கத்திற்கு நேரடியாக சேவைசெய்கின்ற கட்சிகளும் தலைவர்களும் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

பிற்போக்குதனம் தாண்டவமாடும் காலங்களில் விடுதலை உணர்வையும் தன்மான உணர்வையும் நாட்டுப்பற்றையும் மழுங்கடிக்கின்ற சக்திகள் வரலாறு நெடுகிலும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் எட்டப்பன், தொண்டைமான், மீர் ஜாபர் போன்ற துரோகிகள் விடுதலைப் போராட்டதைக் காட்டிக் கொடுத்தனர். இன்று, காவி-கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் காலத்தில் இந்த துரோகிகள் பல்வேறு முகங்களாக காட்சியளிக்கின்றனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளை வென்றிட வேண்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க.வைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களின் அடிப்படையில் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது பா.ஜ.க.

ஆனால் ரஃபேல் கைக்கடிகாரம் பில், திருச்சி சூர்யா-டெய்சி ஆபாச பேச்சுக்கள், காயத்ரி ரகுராமை இழிவுப்படுத்திக் கட்சியை விட்டு நீக்கியதால் கட்சியில் குழப்பம் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பா.ஜ.க.வும் அண்ணாமலையும் தமிழ்நாட்டில் எள்ளி நகையாடப்பட்டனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு மேலிடப் பார்வையாளராக அண்ணாமலை சென்ற மாவட்டத்தின் ஒரு பூத்தில் பா.ஜ.க வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பெற்றது அம்பலமாகி நாறிப்போனது. காங்கிரசுக்கு போட்டியாக தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளின் வழியாகவும் அண்ணாமலையின் பாத யாத்திரை செல்லும் என்று கூறப்பட்டாலும், ஒரு நாளைக்கு சில நிமிடங்கள், சாதிக்கட்சிகளை வளைத்துப் போட்டு, சில அல்லக்கைகள், சில ரௌடிகள் என நூறு பேர் கூட இல்லாமல் இந்தப் பாத யாத்திரை கேலிக்கூத்தாக நடந்தேறியது; பத்து நாட்களே நடந்த பாத யாத்திரை பாதியிலேயே நின்றுவிட்டது. டிவிட்டரில் இந்த பாத யாத்திரையை கிண்டலடித்து போடப்பட்ட #ஆழ்ந்த இரங்கல் என்ற ஹேஷ்டாக் வைரலாகியது. அதுமட்டுமின்றி, கோஷ்டி பூசலில் பா.ஜ.க. சந்தி சிரிப்பது மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்து பா.ஜ.க. கூட்டணியும் சந்தி சிரித்து வருகிறது.

இருந்தும், கட்சிக்குள் கோஷ்டி பூசல்களால் ஏற்படும் மோதல்களை, அண்ணாமலையின் சில்லரைகளைக் களையெடுக்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க. கூறுகிறது. அண்ணாமலையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல பொய்களை அவிழ்த்துவிட்டு, அவருக்கு நேர்மையானவர் என்ற ஒளிவட்டம் சூட்டுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது அண்ணாமலையைக் கேள்விக்கேட்டு திணறடிக்கும் செய்தியாளர்கள் அந்த நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அண்ணாமலை பாத யாத்திரை செல்லும் பகுதிகளில் சாதி ரீதியான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. அவரது பாத யாத்திரைக்கு முதன்மையான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து நேரலை செய்கின்றன. பா.ஜ.க. ஐ.டி. துறை மூலமாக அண்ணாமலை புகழ் பாடப்படுகிறது. இவ்வாறு பலவகைகளில் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினைத் தூக்கி நிறுத்துவதற்கும் அமித்ஷா-அண்ணாமலை கும்பல் முயற்சித்து வருகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் அ.தி.மு.க.வின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பொறுக்கி அரசியலின் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் பொருட்டும், எடப்பாடி கும்பல் மதுரையில் மாநாடு நடத்தியது. தமிழ்நாட்டு மக்களைக் கொள்ளையடித்து சேர்த்தப் பணத்திலிருந்து கோடிக்கணக்கில் வாரியிறைத்து, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து ஆட்களைத் திரட்டி நடந்த இந்த மாநாட்டில் டன் கணக்கில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டன. மக்களின் எந்தக் கோரிக்கைகளையும் பற்றி பேசாமல் குடியும் குத்தாட்டமுமாக இந்த மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக தேவர் சாதி ஓட்டுக்களைக் கவர்வதற்காகவும் இந்த மாநாட்டை மதுரையில் நடத்தியது எடப்பாடி கும்பல்.


படிக்க: பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !


அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் உல்லாசமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட அன்புமணி ராமதாஸ் கும்பல் 2021 சட்டமன்றத் தேர்தல் வர இருந்த சூழலில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற பிரச்சினையைக் கிளப்பியது. சட்டமன்றத் தேர்தலில் படுதோல்விக்குப் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதுங்கியிருந்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. போலீசு அனுமதியுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் வன்முறையை அரங்கேற்றியதன் மூலம் மணிப்பூர் பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்புவது மட்டுமின்றி, கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களுக்காக பாடுபடுபவர் போல தன்னை சித்தரித்துக் கொண்டது.

ஜூலை மாத பிற்பகுதியில், மணிப்பூரில் இரண்டு குக்கி இனப் பெண்களை கும்பல் பாலியல் வல்லுறவுசெய்து அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூர வீடியோக் காட்சி வெளியானதை அடுத்து, “மணிப்பூர் கலவரத்தைத் தடுக்க வேண்டும்; மோடி, பைரன்சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும்” என்று நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவான போது, சீமான் இசுலாமியர்களையும் கிருத்தவர்களையும் இழிவுப்படுத்திப் பேசினார். இதன் மூலம், மோடிக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வை திசைத்திருப்பினார். இதைப்போலவே, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி மோடி கும்பலுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, அருந்ததி மக்களை இழிவாகப் பேசி திசைத்திருப்பினார். இப்படி மீண்டும் மீண்டும் சீமான் ஒரு தேர்ந்த சங்கி என்று தன்னை நிரூபித்து வருகிறார்.

இவைமட்டுமின்றி, ஆளுக்கொரு கட்சியை வைத்திருக்கும் சினிமா கழிசடைகளான சரத்குமார், கமலஹாசன், கார்த்திக், சேது.கருணாஸ் போன்ற கும்பல்கள் எல்லாம் அரசியல் கட்சி நடத்துகின்றனர். பா.ஜ.க.வால் ஓரங்கட்டப்பட்ட பிரேமலதா கும்பலோ விஜயகாந்த் படத்தைக் காட்டி கூட்டணிக்கு அலைந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, சினிமா கழிசடை விஜய்-க்கும் பதவி ஆசைப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்னொரு பக்கம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, கொங்குவேளாளர் சாதியைச் சேர்ந்த ஈஸ்வரன், தனியரசு என நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதிக் கட்சி தலைவர்கள் இருக்கின்றனர்.

மேற்படி பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நா.த.க. மட்டுமின்றி அரசியல் கட்சி நடத்தும் சினிமா கழிசடைகள், சாதிக் கட்சிகளை நடத்தும் சாதிவெறியர்கள் என அனைவரும் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் போராடுவதில்லை. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராகவோ விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினைகளுக்காகவோ குரல் கொடுப்பதில்லை. தலித் மக்கள் மீதான சாதிய அடக்குமுறைகளைக் கண்டிப்பதில்லை என்பது மட்டுமல்ல, இவர்கள்தான் இந்த சாதிவெறியர்களைத் தூண்டும் மறைமுக சக்திகளாக இருக்கின்றனர். அதிகபட்சம் தி.மு.க.வைக் குறைக்கூறுவதையும் மக்கள் போராட்டங்களைத் திசைத்திருப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம், எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத் திட்டம் என மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களையும் இவர்கள் ஆதரிக்கின்றனர். இதனால், இவற்றிற்கு எதிரான எந்த மக்கள் போராட்டங்கள் குறித்தும் கண்டு கொள்வதில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் என்னவகையான துன்பங்களை அனுபவதித்தாலும் இந்த கழிசடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை; அவற்றைக் கண்டுகொள்ளப்போவதுமில்லை.


படிக்க: கைப்பிள்ளைகளோடு கம்பு சுழற்றும் கலைஞானி கமல் !


ஒவ்வொரு கும்பலும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கோடிக்கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளன. இவர்களில் பலரும் தரகு முதலாளிகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளாகவும் ரியல் எஸ்டேட் செய்வது, காண்ட்ராக்ட் பிடிப்பது, கமிசன் பார்ப்பது போன்றவற்றை நிரந்தரத் தொழிலாகவும் கொண்டிருக்கின்றனர். சேர்த்த சொத்துக்களைப் பாதுகாத்து வளர்த்துக் கொண்டும், உல்லாசமாக இரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பதுங்கி இருக்கின்றனர்.

ஆனால், தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்துவிட்டால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அறிக்கைவிடுத்துக் கொண்டு, பா.ஜ.க.விற்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்களின் ஓட்டைப் பிரிப்பது அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கேற்பதற்கு அலைவது என்று புறப்பட்டு வந்துவிடுகின்றனர்.

பிழைப்புவாதம், காரியவாதம், குடி, கூத்து, கோஷ்டி சண்டை, சாதி-மதவெறி கலாச்சாரம், பொறுக்கித் திண்ணுதல், மக்களைக் கொள்ளையடித்தல், புகழுக்காகவும் சொத்துக்காகவும் எந்தக் கட்சிக்கும் தாவுதல் என சீரழிந்த இந்த கோஷ்டிகள்தான் தங்களை தி.மு.க.விற்கு மாற்றாகக் காட்டிக்கொள்கின்றன.

காவிக்கு தன்னை மாற்றாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க.வோ கார்ப்பரேட் மயமாக்கத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் பிரச்சினை, நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காததால் மாணவர் ஜெகதீஷ் தற்கொலை, அவரது தந்தை மரணம், தலித் மக்களுக்கு எதிரான சாதி ஆதிக்க வெறியர்களின் தாக்குதல்கள் போன்ற அனைத்திலும் சந்தர்ப்பவாதமான போக்கையே கடைபிடித்து வருகிறது. இதற்கெதிராகக் கூட இந்த எதிர்க்கட்சியினர் எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. அதிகபட்சம் எடப்பாடி, சீமான் போன்ற ஒருசிலர் திடீரென தோன்றி, தி.மு.க.வைக் குற்றஞ்சாட்டி சில அறிக்கைகளை விடுவதுடன் பதுங்கிக் கொள்கின்றனர்.

இன்னொருபுறம், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலோ தமிழ்நாட்டின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி வருகிறது. சாதிச் சண்டைகளை உருவாக்க திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க. கூட்டணியினர் தோல்வி முகத்தில் இருந்தாலும், இந்த சங்கப் பரிவார கும்பல் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உள்ளூர தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்.யின் ஏஜெண்டாகவே செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த எந்தத் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை; தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை கொடுக்க முயற்சிக்கவில்லை; ஜி.எஸ்.டி.யில் தமிழ்நாட்டிற்குரிய எந்த பங்கையும் வழங்கவில்லை. தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான காவி-கார்ப்பரேட் திட்டங்களை மேலும் மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.

எனினும், கமலஹாசன், சீமான் போன்ற சினிமா கழிசடைகளும், சாதிக் கட்சித் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் என்ன செய்வார்கள், எந்தக் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்று ஆவலாக எதிர்ப்பார்ப்பதும், கழிவுகளை வெளியேற்றுவது போல, அவர்கள் விடுக்கும் தேர்தல் அறிக்கைகளை உச்சிமுகர்ந்து எடுத்துவைத்துக் கொண்டு ஊடகங்கள் விவாதிப்பதும், இந்த கும்பல்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதுமான தன்மான உணர்வுமற்ற பெரும் கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதைப் போலவே இன்னொரு பிரிவு தி.மு.க.-காங்கிரசு கூட்டணியை ஆதரித்துக் கொண்டும் தேர்தல் வந்தால் அறிக்கை விட்டுக்கொண்டும் தமது இருப்பைக் காட்டி பங்கு போட்டுக்கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகளை நடத்தும் இந்த சினிமா கழிசடைகளும், சாதிக்கட்சிகளை நடத்தும் சாதிவெறித் தலைவர்களும் தமிழ்நாட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. போன்ற பிழைப்புவாத காரியவாத பொறுக்கித் திண்கிற, ஆளும் வர்க்கத்திற்கு நேரடியாக சேவைசெய்கின்ற கட்சிகளும் தலைவர்களும் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

ஆகையால், பா.ஜ.க.வை அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிப்பது, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார கும்பலையும் தடை செய்வது எந்த அளவிற்கு அவசியமானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பாசிச கும்பலுக்கு ஐந்தாம்படையாகவும் செயல்படுகின்ற இந்த சினிமா கழிசடைகளையும் சாதிக்கட்சி தலைவர்களையும் விரட்டியடிப்பதன் மூலமே, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


தங்கம்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க