Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாமக - வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !

பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !

-

(நீண்ட பதிவு)

நாயக்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90-களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.

எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.

vanniyarsangam

“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள் (அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி), ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள், பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன் வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.

தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

– “சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”
– இந்த ஆண்டு (2013) புதிய ஜனநாயகத்தின் வெளியீடாக வந்த நூலின் முன்னுரை

__________________________________________________-

சாதியக் கூட்டணிக்கு முற்போக்கு சாயம்!

(1991-ம் ஆண்டு மே மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரை)

மிழகத் தேர்தலில் சாதி ரீதியிலான புதிய கூட்டணியாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. பிழைப்புவாதிகளும், போலிப் புரட்சியாளர்களும் அதற்கு முற்போக்கு சாயம் பூசி, கொள்கைப்பூர்வ கூட்டணியாகச் சித்தரிக்கின்றனர்.

சாதி ரீதியான புதிய கூட்டணியாக பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் ‘தோழமை’க் கட்சிகளும் மூன்றாவது அணியாகத் தமிழகத் தேர்தலில் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி (பிரகாஷ் அம்பேத்கர் பிரிவு), நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம், அப்துல் சமதுவின் முஸ்லீம் லீக், பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டி, பண்ருட்டி ராமச்சந்திரன் கோஷ்டி ஆகியன கூட்டுச் சேர்ந்து இப்புதிய அணியை உருவாக்கியுள்ளன. தி.மு.க. – போலிக் கம்யூனிஸ்டுகள், அ.தி.மு.க. – காங்கிரசு கூட்டணிகளுக்கு எதிரான கொள்கைப்பூர்வமான லட்சியக் கூட்டணியாக அவர்கள் தங்களைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஓட்டுக் கட்சிகளிடையே கூட்டணிகள் முறிவதும், புதிய கூட்டணிகள் – பேரங்கள் நடப்பதும், கட்சி மாறுவதும் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் சந்தித்து வரும் கூத்துக்கள் தான். இருப்பினும் வன்னியர் சங்கமாக இருந்து, சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து உருவாகியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 4, 5 ஆண்டுகளில் பிரபலமாகி, கணிசமான அளவுக்கு சாதி மக்களைத் திரட்டி, செல்வாக்கும் பெற்றுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக் கூடிய அளவுக்கு இக்கட்சி பலம் பெற்றுள்ளது.

குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு பெற்று விட்ட இக்கட்சியின் கொள்கை – இலட்சியம் என்ன? கடந்த 40 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்த கட்சிகள் தாழ்த்தப்பட்ட – பிற்பட்ட மக்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டன. இந்தக் கட்சிகள் எல்லாம் பார்ப்பன – பனியா மற்றும் மேல்சாதிக் கட்சிகள். இவர்களின் ஆட்சியில் ஒடுக்கப்படும் மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. “பாட்டாளி மக்கள் கட்சி சமூக உரிமையை நிலைநாட்டும். பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மற்றும் மத – மொழிச் சிறுபான்மையினரை ஐக்கியப்படுத்தி ஆட்சியைப் பிடிப்போம்” என்று பிரகடனப்படுத்தியுள்ளார் அதன் தலைவர் ‘டாக்டர் அய்யா’ ராமதாசு.

முற்போக்கு முலாம்

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

சில மாஜிப் புரட்சியாளர்களும், அவர்களின் போதனை பெற்ற ‘புதிய இடது’ நபர்களும் பாட்டாளி மக்கள் கட்சியினுள் புகுந்து கொண்டு மார்க்சியக் கண்ணோட்டம் தர முயன்றுள்ளனர். அவர்களது முயற்சியினால், மார்க்சிய முலாம் பூசிய பிறகு கொள்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். “இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!”, “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் வர்க்க பாசிசக் கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களையும் சேர்த்துள்ளனர். “காரல் மார்க்சும் – எங்கெல்சும் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கையைப் போல இன்று பா.ம.க.வின் கொள்கை அறிக்கை ஒன்று மட்டுமே மக்கள் முன் உள்ளது” என்று இக்கட்சியின் ஏடான “தினப்புரட்சி” பெருமைப்பட்டுக் கொள்கிறது.

“ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! ஒன்று சேருங்கள்! என்ற முழக்கத்தைத் தலைமையேற்று நடக்கும் டாக்டர் ராமதாஸ், மார்க்ஸ் – அம்பேத்கர் – பெரியார் வழியில் வரும் தலைவர்” என்று முன்னிறுத்துகிறது, பாட்டாளி மக்கள் கட்சி. அதாவது இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த சாதிய அமைப்பு முறைக்கேற்ப, மார்க்சிய – பெரியாரிய – அம்பேத்கரிய கொள்கைகளைக் கொண்ட ஒரே கட்சி என்று தன்னைக் கூறிக் கொள்கிறது.

தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோருவது, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது, தமிழ்வழிக் கல்வி, பூரண மதுவிலக்கு, தமிழகத்தின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடுவது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிலைநாட்டுவது, தாழ்த்தப்பட்ட இனத்தவரை சுழற்சி முறையில் முதல்வராகவும், பிரதமராகவும் நியமிப்பது, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவது, மதச் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பது, சுயநிதிக் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்குவது, தனியார் வட்டித் தொழிலை ஒழிப்பது, கலப்பு மணத்தை ஊக்குவிப்பது என்று முற்போக்குச் சாயத்துடன் அது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட வன்னியர் சங்கம், இப்போது பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறியவுடன் தலித் எழில்மலை என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவரை கட்சியின் பொதுச் செயலாளராகவும், குனங்குடி அனீபா என்ற சிறுபான்மை மதத்தவரை கட்சியின் பொருளாளராகவும் நியமித்துள்ளது. “டாக்டர் அம்பேத்கர் கண்டெடுத்த யானைச் சின்னத்தை தான் பா.ம.க. தனது தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ளது. அம்பேத்கரின் நீல நிறக் கொடிக்குப் பெருமை சேர்ப்பது போல தனது கொடியில் நீல நிறத்தைச் சேர்த்துக் கொண்டுள்ள ஒரே கட்சி தான் பா.ம.க.” என்று தனது சாதியத் தோற்றத்தை மறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக அது தன்னைக் காட்டிக் கொள்கிறது.

கொள்கைப்பூர்வக் கூட்டணியா?

குணங்குடி அனீபா
குணங்குடி அனீபா

“ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! ஒன்று சேருங்கள்!” என்கிற முழக்கம் புதியதல்ல. பா.ம.க.வினரே கூறிக் கொள்வதைப் போல 58 ஆண்டுகளாக உள்ளது தான். உழைப்பாளர் கட்சி, பொதுநலக் கட்சி என்கிற பெயரில் ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலர் ஆகிய வன்னிய சாதித் தலைவர்களும், பிறகு ஆதித்தனாரும் முன்வைத்து செயல்பட்டவை தான். ராமசாமி படையாச்சியும், மாணிக்க வேலரும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜாஜி – காங்கிரசுடன் சேர்ந்து மந்திரி பதவிகளைப் பெற்று, கொள்கையை மூட்டை கட்டி வைத்தனர். ஆதித்தனார் எம்.ஜி.ஆரின் தயவைப் பெற்ற பிறகு அவரது முழக்கமும் முடங்கிப் போனது.

இவ்வளவு ஆண்டு காலம் முடங்கிக் கிடந்த முழக்கம் மீண்டும் இப்போது தூக்கிப் பிடிக்கப்படுகிறது. காரணம், இன்றைய அரசியல் சூழ்நிலைமை தான். ஏற்கெனவே உள்ள ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், லஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, பிழைப்பு வாதிகளாகச் சீரழிந்து, பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன…

இந்நிலையில் நாடு முழுவதும் சாதி, மத, இன, பிராந்திய ரீதியிலான சக்திகள் தலைதூக்கி, குறுகிய வெறியைத் தூண்டிவிட்டு வளருகின்றன. நாடு தழுவிய ரீதியில் அரசியல் சீரழிவும், பின்னடைவும் தீவிரமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சாதி – மதக் கட்சிகளின் திடீர் வளர்ச்சியே தவிர, புரட்சிகரமானதோ, கொள்கை பூர்வமானதோ எதுவும் இல்லை. வடக்கே வி.பி.சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கன்ஷிராமும் செய்வதைத்தான் இங்கே தமிழகத்தில் பா.ம.க.வின் ராமதாசு செய்து கொண்டிருக்கிறார்.

மூன்றாவது அணி உருவானதெப்படி?

பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான இந்த மூன்றாவது அணி உருவானதே சுவாரசியமானது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் குடியரசுக் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், இளைய பெருமாளின் மனித உரிமைக் கட்சி, திருநாவுக்கரசு தலைமையிலான அ.தி.மு.க. கோஷ்டி, பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றைக் கொண்ட மூன்றாவது அணியை அமைக்கப் போவதாக பா.ம.க. கூறி வந்தது. ஆனால் குடியரசுக் கட்சி ஜனதா தளத்துடனும், இளைய பெருமாள் கட்சி காங்கிரசுக் கூட்டணியுடனும், திருநாவுக்கரசு கோஷ்டி தி.மு.க.வுடனும் பேரங்கள் நடத்தி வந்தன. இதிலே குடியரசுக் கட்சி தவிர மற்ற இரு கட்சிகளும் பா.ம.க. கூட்டணியிலிருந்து விலகிய பிறகு மூன்றாவது அணி புஸ்வாணமாகியது. இவ்விரு கட்சிகளைப் பலமாக நம்பி கூட்டணி கட்ட முயற்சித்த பா.ம.க., அது உடைந்து போன எரிச்சலில் கருணாநிதியின் குள்ள நரித்தனம் – சதியால் மூன்றாவது அணி பிளவுபட்டுப் போனதாகச் சாடியது.

பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் நெருங்கிவிட்ட போது, காங்கிரசுக் கூட்டணியில் தமக்கு உரிய பங்கு கிடைக்காத வெறுப்பில் இருந்த அப்துல் சமதுவின் முஸ்லீம் லீக், தா.பாண்டியனின் ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் பா.ம.க. பேரங்கள் நடத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் தா.பாண்டியனின் கட்சி மீண்டும் காங்கிரசுக் கூட்டணியில் ஒட்டிக் கொண்டது. சமதுவின் முஸ்லீம் லீக் மட்டும் பா.ம.க. கூட்டணியில் சேர்ந்தது. உடனே கொள்கைப்பூர்வ மூன்றாவது அணி உருவாகி விட்டதாக பா.ம.க. மீண்டும் அறிவிக்கத் தொடங்கி விட்டது.

ஈழத் துரோக – சாதி, மதவெறி – பிழைப்புவாதக் கூட்டணி

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இதிலே வெட்கக்கேடு என்னவென்றால், தமிழீழத்தை அங்கீகரிக்கச் சொல்லும் பா.ம.க., தனது கூட்டணியில் ஈழத் துரோகி பண்ருட்டி ராமச்சந்திரனை சேர்த்துக் கொண்டிருப்பது தான். எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதே ஈழ விவகாரத்தில் ராஜீவ் கும்பலின் விசுவாச ‘தரகராக’, ஆலோசகராகச் செயல்பட்டவர் தான் இந்த “பண்ருட்டியார்”. ஈழப் போராளிகளை தமிழகத்தில் கைது செய்து, விலங்கிட்டு சிறையில் அடைக்கவும், அவர்களைப் புகைப்படம் எடுத்து டி.ஜி.பி. மோகன்தாஸ் மூலம் சிங்கள இனவெறியர்களுக்குக் காட்டிக் கொடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர் தான் இந்த பண்ருட்டியார். காங்கிரசை எதிர்ப்பதாகக் கூறும் பா.ம.க., இன்றும் கூட காங்கிரசையும், ராஜீவையும் விசுவாசமாக ஆதரிக்கும் பண்ருட்டியாரைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருப்பது அதை விட வெட்கக்கேடு. பா.ம.க. கூட்டணியில் சேர்ந்த பிறகு, அவர் காங்கிரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசியது கிடையாது. இருந்தாலும் அவரையும் வளைத்துப் போட்டு கொள்கை பூர்வக் கூட்டணி கட்டியுள்ளது பா.ம.க. ஏனென்றால் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு வன்னியர்!

இதே போல நேற்று வரை காங்கிரசின் காலை நக்கிக் கொண்டிருந்த அப்துல் சமது இப்போது காங்கிரசை எதிர்க்கிறாரா? பா.ம.க.வின் கொள்கையைத் தான் ஏற்றுக்கொண்டாரா? அல்லது ‘பண்ருட்டியார்’ தனது ஈழத் துரோகத்தை ஒப்புக்கொண்டாரா? இல்லவே இல்லை. வேறு போக்கிடமின்றி இவர்கள் வந்து ஒட்டிக்கொண்டவுடன் கொள்கைப்பூர்வக் கூட்டணி உருவாகி விட்டதென்றால், அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

இக்கூட்டணியில் சேர்ந்துள்ள ஜிகாத் கமிட்டி, அப்பட்டமாக மதவெறியைக் கக்கும் அமைப்பு. அதன் தலைவரான பழனி பாபா முன்பு கருணாநிதியிடமும், பின்னர் எம்.ஜி.ஆரிடமும் கூடிக் குலாவி, அதிகாரத் தரகராக செயல்பட்ட பிழைப்புவாதி. இப்போது அவர் பா.ம.க. கூட்டணியில் சேர்ந்ததும் சிறுபான்மை இன மக்களின் தலைவராகக் கௌரவிக்கப்படுகிறார்.

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்

இதே போல பா.ம. கட்சியில் அங்கம் வகிக்கும் ஜான் பாண்டியன், தாழ்த்தப்பட்ட மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தும் சாதி வெறியர். போடி, மீனாட்சிபுரம் சாதிய கலவரங்களுக்குக் காரணமாக இருந்தவர். இப்போது அவர் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவராகி, சட்டமன்ற வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சி மாறிகளைத் தமது அரசியல் ஆதாயத்துக்காக அரவணைத்துக் கொள்வதென்பது ஓட்டுக் கட்சிகளின் அரசியல் கலாச்சாரம். ‘கொள்கை பூர்வ’ கட்சியான பா.ம.க. இதற்கு விதிவிலக்கு அல்ல. நேற்றுவரை தி.மு.க.விலிருந்த முக்கியப் பிரமுகரான நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தனக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காத ஆத்திரத்தில் பா.ம.க.வில் வந்து சேர்ந்து கொண்டு விழுப்புரத்தில் போட்டியிடுகிறார். பண்ருட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான நந்தகோபால கிருஷ்ணன் கட்சி மாறி வந்ததும் அவரைப் பா.ம.க. அரவணைத்துக் கொண்டது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிவதானமணி நேற்று வரை இளைய பெருமாளின் கட்சியிலிருந்தார். இப்போது அவர் கட்சி மாறியதும் பா.ம.க. வேட்பாளராகி விட்டார். இதே போல வரகூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பெருமாள், ஏற்கெனவே இரு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் காரணமாக, இப்போது அவர் கட்சி மாறி பா.ம.க.வில் சேர்ந்ததும் அதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த லட்சணத்தில் சந்திரசேகர் கட்சியைத் தமது கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்கிறது பா.ம.க. தமக்கும், சந்திரசேகர் கட்சிக்கும் ஏதோ கொள்கைப்பூர்வ வேறுபாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறது.

கொச்சையான வசவு கொள்கையாகுமா?

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தமது கொள்கையை விளக்கிப் பேசுவதை விடுத்து, தனிநபர் விமர்சனம் செய்வதாகவும், கீழ்த்தரமான வசவுகளில் இறங்கி விட்டதாகவும் பா.ம.க. தலைவர் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் பா.ம.க.வின் கொள்கைப்பூர்வ நாளேடான “தினப்புரட்சி” ஜெயலலிதாவை வசந்தசேனை, குச்சுக்காரி, ஐயங்கார் மாமி, பால்கனிப் பாவை, கூத்தாடி மகள் என்று வசைபாடுகிறது. “16 வயதினிலே 17 பிள்ளைகள் பெறும் ரகசியத்தை இளம் பெண்கள் தெரிந்து கொண்டால் நாடு தாங்குமா?” என்று சினிமாப் பாடலை வைத்து ஜெயலலிதாவை ஆபாசமாகச் சாடுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “குறும்பா” என்ற பெயரில் “கோமாளியின் கூத்தியாராய் இருந்தாள்; கொடுப்பவர்கள் எவரெனினும் பறந்தாள்; ஏமாளிகள் அரசியலில் இறக்கி விட எச்சிலை மாமாக்களின் மடியினிலே சிறந்தாள்!” என்று வக்கிரமான வசவுக் கவிதை எழுதி, ஆபாச கேலிச்சித்திரமும் போட்டுள்ளது. இதே போல கருணாநிதியை “தவில் இனத் தலைவர்” என்று கொச்சையாக சாதிவெறியுடன் சாடுகிறது.

பா.ம.க. தலைவர் ராமதாசு கூட அதே பாணியில் தான் எதிர்க்கட்சிகளைச் சாடுகிறார். கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த காசி ஆனந்தன் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை ஆற்றிய ராமதாசு, “… போராட்டங்களைப் புறக்கணித்து விட்டு, போராளிகளை மறந்து விட்டு சீலை இழைகளைச் சீர் பிரித்துக் காட்டுவார்கள்!” என்று தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்களைச் சாடுகிறார். நக்கீரன் வார ஏட்டில் “அக்னி அம்புகள்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வரும் ராமதாசு, 11.5.1991 தேதியிட்ட இதழில் நல்லொழுக்கமில்லாத தலைவர்களைப் பற்றி எழுதிய கட்டுரை முழுக்கவும் இந்துநேசன் பாணியிலானது. புராணங்களில் காணப்படும் ஆபாசங்களைச் சுவையாகப் பேசி நாத்திகப் பிரச்சாரம் செய்யும் தி.க.வினரைப் போலத்தான் ராமதாசும் நல்லொழுக்க உபதேசம் செய்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்

எதிர்க்கட்சியினரை தனிநபர் ரீதியில் ஆபாசமாக வசைபாடும் அதே சமயம், தமது பெயரை அடைமொழிகளுடன் பட்டம் சூட்டிக்கொள்வதென்பது தமிழக ஓட்டுக்கட்சிகளின் மரபாகி விட்டது. கருணாநிதி டாக்டர் கலைஞராகவும், ஜெயலலிதா புரட்சித் தலைவியாகவும், தி.க.வின் வீரமணி தமிழினத் தளபதியாகவும் பட்டம் சூட்டிக் கொண்டதைப் போல ராமதாசும் “டாக்டர் அய்யா’’, “இனமானக் காவலர்” என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். அதை விட காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களுடன் சேர்த்து தனது மூஞ்சியையும் சேர்த்துப் போட்டுக் கொண்டு அம்மாபெரும் தலைவர்களின் வரிசையில் வந்துள்ள தலைவராக கொஞ்சமும் கூச்சமின்றி சுய இன்பம் தேடுகிறார்.

பிற்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் ஒற்றுமைக்கும், உரிமைக்கும் போராடும் தலைவராகக் காட்டிக்கொள்ளும் ராமதாசு, தனது வன்னிய சாதிச் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தான் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது தினப்புரட்சி நாளேட்டில், டாக்டர் அய்யா அவர்களின் ஆசியோடு அவரது தலைமையில் நடைபெறும் வன்னிய சாதித் திருமண விளம்பரங்களும், வன்னியர் சங்கத்தின் வாழ்த்துக்களும் தான் அதிகமாக வருகின்றன. அக்னிக் குண்டம் சின்னம் பொறித்த வன்னியர் சங்கக் கொடிகள், பனியனுடன் அச்சாதி இளைஞர்கள்தான் பா.ம.க. என்ற பெயரில் தேர்தல் வேலை செய்கின்றனர். அக்னி விழா, தீப்பந்த ஊர்வலம், பிரகாஷ் அம்பேத்கருக்கு வரவேற்பு என்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இது வெளிப்படையாகவே நடந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரூர் அருகிலுள்ள நாச்சிக்குளம்பட்டியில் ஒரு பெண் குழந்தைக்கு ராமதாசு சூட்டிய பெயர்: வன்னிய மலர்.

வன்னியர்கள் ஆண்ட பரம்பரை, பல்லவ பரம்பரை என்று தமது சாதியின் பூர்வீகத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார் ராமதாசு. ஒரு புறம் சத்திரிய குல மன்னர் பரம்பரையினர் என்று தமது சாதியைப் பற்றிப் பெருமையாகப் பேசும் அவர், மறுபுறம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள் என்கிறார். இவற்றையெல்லாம் எதிர்த்த பெரியார், அம்பேத்கர் படங்களைப் போட்டுக் கொண்டு, கூச்சமின்றி புரட்சி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளது பா.ம.க.

போதாக்குறைக்கு மார்க்சிய-லெனினியக் கட்சித் திட்டத்திலிருந்து சில அம்சங்களை எடுத்து தனது கொள்கை அறிக்கையிலும் சேர்த்துக் கொண்டுள்ளது. மா-லெ புரட்சியாளர்கள் இப்போது நிலவும் அரசு எந்திரத்தை ஒரு புரட்சியின் மூலம் வீழ்த்தி விட்டு, மக்கள் புரட்சிக் கமிட்டி, மக்கள் நீதிமன்றம் ஆகியவற்றை நிறுவி, மக்கள் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் திட்டத்தை வைத்துள்ளனர். இதையே காப்பியடித்து, ‘இப்போதைய அரசு எந்திரத்தைத் தூக்கியெறியாமலேயே மா-லெ புரட்சியாளர்கள் மற்றும் பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகளில் ஈடுபாடுடையவர்களையும், அனைத்து சமூகப் பிரதிநிதிகளையும் கொண்ட மக்கள் கமிட்டி, மக்கள் நீதிமன்றம் முதலானவற்றை நிறுவி, மக்களுக்குத் தொண்டு செய்வோம்’ என்று பித்தலாட்டம் செய்கிறது பா.ம.க.

பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்

சாதியக் கூட்டணிக்கு புரட்சிச் சாயம்

இப்படி வெளிப்படையாகவே சாதிய – மதவெறி சக்திகளின், பிழைப்புவாதிகளின் கூட்டணியாக இம்மூன்றாவது அணி அம்பலப்பட்டுள்ள போதிலும், புரட்சி பேசும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அதற்கு முற்போக்கு சாயம் பூசி, வெட்கமின்றி நியாயப்படுத்துகிறது. நெடுமாறன் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள மாஜிப் புரட்சியாளர் புலவர் கலியபெருமாள் இக்கூட்டணிக்கு புரட்சி முலாம் பூசி ஆதரிக்கிறார். தனித்தமிழ் இயக்கத் தலைவர் பெருஞ்சித்திரனார் இதனை லட்சியக் கூட்டாகப் புகழ்ந்து பாடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு மூலம் அரசு எந்திரத்தில் பங்கேற்று பிற்பட்ட சாதிகள் சலுகைகளை அனுபவிக்க உருவாக்கப்பட்ட இன்னொரு சாதியக் கூட்டணி தான் இம்மூன்றாவது அணி. எந்த அரசு எந்திரத்தில் இடம் பெற இச்சாதிகள் முயற்சிக்கிறதோ, அதே போலீசும், அதிகார வர்க்கமும் கொண்ட அரசு எந்திரம் தான் அவர்களையும், இதர உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுகிறது. இந்த ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைத் தூக்கியெறியாமல், சட்டமன்ற-நாடாளுமன்ற ஆட்சிகளை மேலிருந்து கைப்பற்றுவதன் மூலம், சாதிய நோய் பீடித்த இச்சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்களை, அதாவது அரசியல்-பொருளாதாரப் புரட்சியை ஒருக்காலும் சாதிக்க முடியாது. மாறாக, “சாதிகளே கூடாது! உழுபவருக்கே நிலம்! உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்துடன் இன்றைய ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைத் தூக்கியெறியும் புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் வழி வகுக்கும்.

(புதிய ஜனநாயகம், 16-31 மே 1991)

_______________________________________

சாதிவெறி ராமதாஸை புரட்சி நாயகனாக மாற்ற முயற்சிக்கும் நிறப்பிரிகை !

 பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவரின் யோக்கியதை என்ன என்பதை இந் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொண்ட வாசகர்கள், நிறப்பிரிகை ஆசிரியர் குழுவினர் ‘டாக்டர் அய்யா’விடம் எடுத்திருக்கும் இந்தப் பேட்டியைப் படித்துப் பாருங்கள். முன்பு விகடனில் கமலஹாசனை பேட்டி எடுக்கும் மதன், “எப்படி இரண்டு கால்களால் நடக்கிறீர்கள்?” என்று விழிகள் விரிய வியப்புடன் கமலைக் கேட்பார். “என்ன செய்வது, கடுமையான பயிற்சிதான்” என்று தன்னடக்கமாக பதில் சொல்வார் கமல். இவர்களோ மதனை விஞ்சி விட்டார்கள்.

பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம்

பொதுவாக பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள், பேட்டி கொடுக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். நிறப்பிரிகை ஆசிரியர் குழுவினர் மரபுகளைக் கவிழ்த்துப் போடும் கலகக்காரர்கள் என்பதால், இந்தப் பேட்டியின் மூலம் தங்கள் டவுசரைத் தாங்களே கழட்டிக் கொள்கிறார்கள்.

அறிமுகத்தைக் கவனியுங்கள். டாக்டரா இருந்து கொண்டு, மருந்து சீட்டில் கூட அவருடைய பெயரை அச்சிடவில்லையாம். அவ்வளவு தன்னடக்கமாம். “பா.ம.க வை வன்னியர் சங்கத்துடன் இணைத்து பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுகிறார்களே, இந்த அபாண்டமான பொய்யை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள் அறிஞர்கள். “இந்தப் பொய்யை முறியடிக்கத்தான் 50 வன்னியர்கள் பணம் போட்டு தினப்புரட்சி நாளேடு ஆரம்பித்திருக்கிறோம்” என்று ‘உண்மை’யைச் சோல்கிறார் அய்யா.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பா.ம.க. மீது நம்பிக்கை இல்லையே என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கவலைப்படுகிறார்கள் அறிஞர்கள். “பாமக அம்பேத்கர் கொள்கையைப் பின்பற்றும் கட்சி” என்று சொல்லி சமாளித்து விடலாம் என்கிறார் அய்யா. “தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையாவது பொதுக்குறியீடாக மாற்றலாமே” என்று மக்களை ஏமாற்றுவதற்கு ஐடியா கொடுக்கிறார்கள் அறிஞர்கள். உடனே ‘நீலக்கலரு ஜிங்குச்சா’ என்கிறார் மருத்துவர்.

“தீண்டாமைக் கொடுமையை எப்படி ஒழிக்கப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். “மற்ற கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர் அணி என்று வைத்துதான் பொறுப்பு தருவார்கள். நாங்கள் செயலர் பொறுப்பையே தந்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர். “தீண்டாமை ஒழிப்புக்கு தனி அணி வைத்து அதற்கு தாழ்த்தப்பட்டவரை தலைவராகப் போடலாமே” என்கிறார் கல்யாணி. “அருமையான கருத்து உடனே நிறைவேற்றுவோம்” என்று கூறி, தான் ஏற்கெனவே சொன்ன பதிலை உடனே ரத்து செய்கிறார் டாக்டர்.

“உட்கட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை” என்று நேரடியாகக் கேட்க நிறப்பிரிகை கலகக்காரர்களுக்கு தைரியம் இல்லை. “உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் ‘நமது’ அமைப்புக்களை ‘நாம்’ சனநாயகப்படுத்த வேண்டும்” என்று ஜாக்கிரதையாக அய்யா தலையில் வெண்ணெய் வைக்கிறார்கள். “தேர்தல் தானே, இன்னும் இரண்டு மாதத்தில் ஜமாய்த்து விடுவோம்” என்கிறார் அய்யா.

வசனத்தை மறந்து விட்ட மேடை நாடக நடிகர்களுக்கு திரை மறைவில் நின்றபடி, அடியெடுத்துக் கொடுப்பவரைப் போல, கேள்விகளையே பதிலுக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறார்கள். பா.ம.க என்ற சாதிய பிழைப்புவாதக் கட்சிக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்து, மக்களை வஞ்சிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்தவர்கள் இந்த அறிஞர்கள்தான் என்பதை இப்பேட்டியைப் படிக்கின்ற எவரும் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் இன்று அய்யாவின் சாதிவெறி எவ்வளவுதான் அம்பலப்பட்டாலும், இந்த அறிஞர்கள் மட்டும் முடிந்தவரைக்கும் அடக்கி வாசிக்கிறார்கள்.

இனி பேட்டியை படியுங்கள்.

பா.ம.க. ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்

(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது)

நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி.
இடம் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனை, திண்டிவனம்.
பங்கேற்பு : நிறப்பிரிகை ஆசிரியர் குழு(அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி)வைத் தவிர தோழர் பா.கல்யாணி.

குறித்த நேரத்திற்கு டாக்டர் ராமதாஸ் காத்திருந்தார். நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிறப்பிரிகை இதழ்களைப் படித்திருந்தது பேச்சில் வெளிப்பட்டது. கத்தர், காகர்லிட்ஸ்கி பேட்டிகளும், சாதி ஒழிப்புக் கட்டுரையும் அவரைக் கவர்ந்திருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகளுக்குரிய குயுக்தி, தந்திரம், சாதுரியம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகப் பதில்கள் வந்தன. இடையில் இரண்டு நோயாளிகள் வந்தனர். பெயரச்சிடப்படாத வெள்ளைத் தாள்களில் மருந்துகள் எழுதினார். ஒரு சிறுவன் மருந்துச் சீட்டைக் கொடுத்து – அம்மாவுக்கு குணமாகவில்லை வேறு மருந்து வேண்டுமென்றான். சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு – ஒரு தடவை மட்டும் சாப்பிட்டிருப்பாங்க, இன்னும் இரண்டு வேளை சாப்பிட்டு விட்டு வரச் சொல் – என்றார். பேட்டி தொடங்கியது.

கேள்வி:
ஓட்டுக் கட்சிகளில் பா.ம.க. மட்டுமே பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாத கட்சி என அறிகிறோம். இன்று தமிழகத்தில் ‘பார்ப்பன மறுமலர்ச்சி’ என்று சொல்லத்தக்க நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில் வேதாகமக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இருபது சத இட ஒதுக்கீட்டிற்காக வன்மையான போராட்டம் நடத்தியது போல இப்போதும் நடத்துகிற திட்டம் ஏதுமுண்டா?

பதில்:
பார்ப்பனர்களை நாங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. வருணாசிரமம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்றைய சாதீய உறவுகளுக்குக் காரணமாக இருப்பதால் தான் இந்த முடிவு.

வேதாகமக் கல்லூரி, கோயில்களுக்கு நிதி திரட்டுவது முதலியன பார்ப்பனியத்தை வளர்க்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள். பாரதீய ஜனதா கட்சியின் புரிதலுடன் ஜெயலலிதா செயல்படுகிறார். சங்கர மடத்தின் அறிவுரைகளும் பின்னணியில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்கள், மக்களைப் பாதிக்கிற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பதை பாரதீய ஜனதா, காங்கிரஸ், பார்ப்பனர்கள் தவிர மற்ற எல்லோருமே எதிர்க்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளுக்குள் நாங்கள் வித்தியாசமான கொள்கையுடையவர்கள். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதன் ஆபத்துக்களை விளக்கி அறிக்கைகள் முதலியவற்றை பா.ம.க. இளைஞர்களுக்கு வினியோகிக்கிறோம். மாவட்ட அளவில் இளைஞர் அணி, மாதர் அணி போன்றவற்றைக் கூட்டி விளக்குகிறோம். ஒட்டுமொத்தமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சார வேலையில் இறங்கியுள்ளோம்.

பஸ் கட்டண உயர்வு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களுக்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள். எதற்கு உடனடி முக்கியத்துவமளிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போராட்டம் ஒரு மாதத்தில் முடிகிற காரியமல்ல. போராட்டம், பின் விளைவுகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். பின்னர் வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்கும்போது பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.

கேள்வி:
தி.மு.க. மேற்கொண்டிருக்கும் ‘திராவிட மறுமலர்ச்சி’ நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் எனப் பேசி லாபமடைந்தவர்கள் ஒரு சில சாதியினர் தான். ஒட்டுமொத்தமான திராவிட சமுதாயமல்ல. பார்ப்பனரல்லாதவர் எனப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார நிலையிலும், சமுதாய நிலையிலும் முன்னேறியிருந்த ஒரு சில சாதியினர் தான் பலன் பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை எதுவாக இருந்தாலும் அவர்கள் தான். எனவே இன்று திராவிட மறுமலர்ச்சி என்று அவர்கள் பேசும்போது ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் இந்த வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

இது பற்றிய வெளிப்படையான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இருந்ததில்லை. பல முறை நான் இதனைப் பகிரங்கமாகப் பேசி இருக்கிறேன். தி.க. மாநாடுகளிலே கூடப் பேசி இருக்கின்றேன். அப்போதெல்லாம் பதில் சோல்லி என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் என்றெல்லாம் கேலி பேசினார்கள். சில வருடங்களுக்கு என்னை அவர்கள் மாநாடுகளுக்கு கூப்பிடாமல் கூட இருந்தார்கள்.

கேள்வி:
இன்றைய தேர்தல் அரசியலில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாடே ஆதரவாக இருந்தது. இன்று ஈழத் தமிழர்களுக்கெதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கெதிராக மக்கள் எழுச்சி ஏற்படாததில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கிறது. பா.ம.க. பற்றி எழுதும்போது கூட ஒவ்வொரு முறையும் “An outfit of Vanniyar Sangam” என்று எழுதத் தயங்குவதில்லை. இவற்றை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டதுண்டா? இதனை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்:
பத்திரிகைகள் பார்ப்பனர்கள் கையிலிருக்கிறது. மேலும் சில பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட – நாடார்களின் கையில் இருந்தாலும் அவையும் வியாபார நோக்கில் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் ஈழ மக்களுக்கெதிராக, புலிகளுக்கெதிராக, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நாங்கள் – பல குறைகள் இருந்தாலும் கடந்த – மூன்றாண்டு காலமாக தினசரி ரூ.2,000/- நஷ்டத்தில் தினப்புரட்சி” நடத்துகிறோம். ஆட்சியாளர்கள்-ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் என யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்கிறோம். இதனால் எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடையாது. ஒரு ஐம்பது வன்னியர்கள் ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் போட்டுத் தொடங்கிய நிறுவனம் இது. இதில் முழுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சமூக மாற்றத்தை உள்ளடக்கும் நோக்கில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு ஜீவிகள், அறிஞர்கள் இதனை ஒரு சாதிப் பத்திரிகையாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் இதனைத் தங்களது பத்திரிகையாக ஆக்கிக் கொள்ளலாம். எந்த விமர்சனமும் செய்யலாம். குறைகளை நீக்க வழி செய்வோம். வியாபார-பார்ப்பனப் பத்திரிகைகளுக்கெதிராக வெகுமக்கள் பத்திரிகையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நோக்கில் வேறு யாரேனும் பத்திரிகை தொடங்கினால் அதையும் வரவேற்கிறோம். தேவையான ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் எதிரியே இந்த பார்ப்பன-வியாபாரப் பத்திரிகைகள்தான். நம் முன்னர் இருக்கும் உடனடிப் பிரச்சினை இதுதான். டி.வி., ரேடியோவும் வெகு மக்களுக்கு எதிரானதுதான் என்றாலும், அரசதிகாரத்தைக் கைப்பற்றாமல் அதை நாம் உடனடியாக மாற்ற முடியாது.

ரவிக்குமார்
ரவிக்குமார்

கேள்வி:
மாற்றுப் பத்திரிகை என்பது ஒரு தீர்வுதான். இந்தச் சூழலிலேயே மக்களுக்கெதிராக அவதூறுகள் பரப்புகிற பத்திரிகைகளில் தலையிடுவதும் ஒரு தீர்வாக அமையலாமே. இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இப்படி நடந்ததே. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டவுடன் நிலைமை சற்று மாற்றமடைந்ததே! அருண்சோரி போன்றோர் நீக்கப்பட்டதற்குக் கூட இது ஒரு காரணமில்லையா?

பதில்:
உண்மைதான். இவ்வாறு அவதூறுகள் பரப்பப்படும்போது டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் முன் உடனடியாகக் கூடிப் போராடலாம். ஓட்டுப் பொறுக்காத கட்சிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் குரல் கொடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு சிறிய அளவிலாவது வன்முறையுடன் கூடிய பாடம் கற்பித்தாலொழிய – பாதிப்புகளை உருவாக்கினாலொழிய இது சரியாகாது. பார்ப்பனர்களே முழுக்க முழுக்கத் தொலைக்காட்சி-ரேடியோவை ஆக்கிரமித்துள்ள நிலை மாறி தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் பெரிய அளவில் பங்குபெறும் போது அங்கும் நிலைமை ஓரளவு சீரடையலாம். “தினமலர்” போன்ற மக்கள் விரோதப் பத்திரிகைகளை வாங்கக் கூடாது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செவதும் பயனளிக்கும்.

கேள்வி:
பொதுவான மக்கள் மத்தியிலும் கூட பா.ம.க. என்பது வன்னியர் கட்சி என்கிற எண்ணமே நிலவுகிறது. புவியியல் ரீதியாகவும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பா.ம.க. இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்கிறீர்கள்? பொதுவான தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக இதனை உருவாக்குவது எப்படி?

பதில்:
இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. சமீபத்திய பஸ் மறியல் போராட்டத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் 400 பேரும், மதுரையில் 1200 பேரும் அடைபட்டிருந்தனர். கோவை, குமரி மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் வளரக் கூடாது என அரசு எந்திரமும், ஊழல் பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை வன்னியர் கட்சி, படையாச்சி கட்சி எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கட்சி வளரக் கூடாது என்கிற கருத்து இந்தச் சக்திகளிடம் உள்ளது. இதை விட நல்ல சிந்தனையுள்ள ஒரு கட்சி இருந்தால் நான் அதில் சேர்ந்து விடத் தயார். தனி நபர் வழிபாடு உருவாகாமல் தடுக்கவும் முயற்சிக்கிறோம்.

போஸ்டரில் என் படம் பெரிதாய்ப் போடுவதைக் குறைக்கச் சொல்கிறோம். தினப்புரட்சியில் என் படம் தலைப்பில் போட வேண்டும் எனச் சொன்ன போது, கடுமையாகப் போராடி அதனை மாற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படம் போட வைத்தோம். தனி நபர் வழிபாட்டைக் குறைக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். சமுதாயம் தெளிவு பெற்றால் இந்நிலைமை மாறும். கட்சி கார்டில் கூட என் படம் இல்லை.

கட்சியின் கொள்கையில் ஓட்டு வாங்குவது கடைசிக் குறிக்கோள் தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே நோக்கம். தேர்தல் சமயத்தில் கூட இதனால்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் விலகி நின்றோம்.

கேள்வி:
“தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம்” என அறிவித்த ஒரே கட்சியாக இருந்த போதிலும் கூட, தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பா.ம.க. மீது ஒரு ஐயம் இருக்கவே செய்கிறது. இதனை எவ்வாறு போக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறீர்கள்?

பொ வேலுச்சாமி
பொ வேலுச்சாமி

பதில்:
முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எங்கள் போஸ்டர் ஒட்டினால் கிழிப்பார்கள். இப்போது நிலைமை மாறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கையிலான கட்சியாக பா.ம.க.வை முன் வைக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் இவர்களுக்குள் மோதல் கூடாது. இம்மக்களுள் அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்கள் போன்றோர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓட்டு வாங்கத்தான் இப்படிச் சோல்கிறோம் என்கிற பயம் தேர்தல் நேரத்தில் இருந்திருக்கலாம். திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமே முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். ஷெட்யூல்டு இன மக்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுய நலமில்லாத அரசியல் ரீதியான தலைவர்கள் யாருமே இல்லை. இப்போதுள்ள தலைவர்களின் பிடியிலிருந்து என்றைக்கு விடுபடுகிறார்களோ சமூக மாற்றமும், அரசியல் மாற்றமும் அப்போதுதான் பிறக்க வழி ஏற்படும். இந்த அரசியல் தலைவர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் வெகு சீக்கிரமே பா.ம.க. அம்மக்களைப் புரிய வைத்து ஒரு பெரிய வலுவான அரசியல் இயக்கமாக ஆக முடியும். விரைவில் பா.ம.க.வை நம்பி ஷெட்யூல்டு இன மக்கள் நிச்சயம் வருவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பா.ம.க. சில திட்டங்களை அறிவித்துள்ளது. பறையடித்தல், பிணம் சுடுதல், செத்த மாடு புதைத்தல் போன்றவற்றை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக்குளம், பொதுக்கிணறு ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், மறைமுகமான தீண்டாமைக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்து செயல்படுத்துகிறோம். பா.ம.க.வால் மட்டுமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். வெகு மக்களாக உள்ள ஷெட்யூல்டு இன, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தச் சமூக மாற்றத்தை விரும்பி ஏற்கும்போது வேறு எந்தச் சக்தியும் குறுக்கே வந்து நிற்க முடியாது.

பா.ம.க. என்றால் வன்னியர் கட்சி எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைப்பது ஒரு புறம். இன்னொரு பக்கம் இந்தப் பிரச்சினை குறித்து சமூகப் பிரக்ஞையுள்ள கம்யூனிஸ்ட், தி.க. கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே வன்னியர்/ஆதி திராவிடர், தெற்கே முக்குலத்தோர்/பள்ளர், கோவையில் கொங்கு வேளாளர்/அருந்ததியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஓட்டுப் பொறுக்காத பொதுவான அமைப்புகள் கருத்தரங்கம், மாநாடு நடத்தினால் அங்கெல்லாம் பா.ம.க. துணை நிற்கும்.

கேள்வி:
இம்முடிவுகளை அணிகள் மத்தியில் கொண்டுபோகும் போது உங்கள் அனுபவம் எப்படி? தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் தீண்டாமைக் கொடுமையே தலையான பிரச்சினை. இதற்கெதிரான போராட்டங்கள் ஏதும் எடுத்துள்ளீர்களா? பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட அணியினர் மத்தியில் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையைத் துடைத்தெறிய என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:
கிராம அளவில் இப்பிரச்சினைகள் பேசப்படும் அளவிற்குப் பதிய வைத்துள்ளோம். கூட்டங்களில் நானே மாடு புதைப்பேன் எனப் பேசியது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பறை அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே தங்களது வருமானம் பாதிக்கப்படுகிறது எனத் தானாகவே முன்வரும்போதுதான் ஏதும் செய முடிவதில்லை. இழிவு என்பதனால் அதைச் செய்யவே வேண்டாம் எனச் சொல்கிறோம். செயல் வடிவத்தில் முழுமையாக வரா விட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். தாழ்த்தப்படவர்களுக்குக் குடியிருப்பு ஊர் நடுவில் கட்ட வேண்டுமென்கிறது எங்கள் தேர்தல் அறிக்கை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தைத் திரித்து எல்லா இடங்களிலும் பேசித் திரிந்தது தி.க., தி.மு.க.வினர்தான். “டாக்டர் பாரு, பறையனையெல்லாம் நடுவில் வைக்க வேண்டுமென்கிறார்” என ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினர் பேசினர். இதன் விளைவாக ஒரு அரை சதவீதம் ஓட்டுக்கள் எங்களுக்குக் குறைந்தது என்றாலும், இது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கட்சிப் பொறுப்புகளில் கூட எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் முன் வருகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். பிற கட்சிகளில் இந்நிலைமை இல்லை. தாழ்த்தப்பட்டவர் அணி எனத் தனியாக வைத்து அதில் பொறுப்புத் தருவார்களே யொழிய பொதுப் பொறுப்புகளைத் தருவதில்லை. எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரே தாழ்த்தப்பட்டவர். செங்கை மாவட்டத்தில் தலைவர், தஞ்சையில் தலைவர், நாகை மாவட்டத்தில் செயலாளர் இவர்களெல்லாம் ஆதி திராவிடர்கள்தான். எங்கள் கட்சியின் மூதறிஞர் அணித் தலைவர் மணியரசு நாராயணசாமி அவர்களும் ஒரு ஆதி திராவிடர்தான்.

கேள்வி:
தீண்டாமைக் கொடுமை என்பது கலாச்சார ரீதியாக வெளிப்படுவது. இதனை எதிர்த்த நடவடிக்கைகள் கலாச்சாரத் தளத்திலும் நடைபெற வேண்டும். அத்தகைய திட்டங்கள் ஏதும் உண்டா? மஞ்சள் துண்டணிவது, அக்னித் திருவிழாக்கள் நடத்துவதென்பதெல்லாம் பா.ம.க.வினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொருளென்ன? தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையும் பொதுக் குறியீடாக மாற்றும் திட்டமுண்டா?

பதில்:
குறிப்பிட்ட வடிவம் ஏதும் கிடைத்தால் செய்வதில் தடையில்லை. கட்சிக் கொடியில் மஞ்சள் சிவப்புடன் நீலமும் இருக்க வேண்டும் என்கிற கருத்து வந்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ‘டீ க்ளாஸ்’ வைக்கும் பழக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டு அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். மீன் சுருட்டியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டீ குடித்து அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தனி டீ கிளாஸ் பழக்கம் எங்காவது இருந்தால் அங்கு நானே வந்து போராடுவேன் எனப் பேசியதைத் தொடர்ந்து பல ஊர்களில் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டது. கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்கும் போது கூட பொதுக்கிணற்றில் நீர் எடுப்பது, கோயில்களில் சம மரியாதை போன்ற செயல் திட்டங்களுடன் இணைந்த கூட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் போறேன்.

பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி (பிரபா கல்விமணி)

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை தமிழக அரசு சரியாகக் கொண்டாடவில்லை. நாங்கள் சிறப்பாகக் கொண்டாடினோம். சுமார் பத்து இடங்களில் அம்பேத்கருக்குச் சிலைகள் திறந்துள்ளோம். இது இளைஞர்கள் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் பதட்டம் குறைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விஷயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களானாலும் இதுவரை செய்யப்பட்டுள்ளவை ரொம்பக் குறைவுதான். இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவும் இருப்பதால் இத்தகைய பிரச்சினைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மக்களைப் பாதிக்கிற இதர பிரச்சினைகளும் வந்து விடுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தரப்பு இயக்கங்கள் எதுவும் இப்படியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்களுக்காக எங்களை அணுகியதில்லை.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
கட்சியில் பல்வேறு வெகுஜன அணிகள் வைத்திருக்கிறீர்கள். தீண்டாமை ஒழிப்பு அணி என்று ஒன்று தனியாக அமைக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் அது இயங்கலாம். தீண்டாமைப் பிரச்சினைகளை மட்டுமே அது கவனத்தில் எடுத்துச் செயல்படலாம்.

பதில்:
ரொம்ப அருமையான கருத்து. இதுவரை யாரும் சொன்னதில்லை. இதை உடனடியாக நிறைவேற்றுவோம். சாதி ஒழிப்புக் கூட்டு விவாதத்தில் உங்கள் வீட்டில் மாட்டுக்கறி விருந்தளித்ததாகப் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நாங்களும் இப்படிச் செய்வோம். நான் கூட கூட்டங்களில் பேசுவதுண்டு – உங்களில் பாதிப் பேர் பன்றிக் கறி சாப்பிடுகிறீர்கள். பன்றியாவது மலம் தின்கிறது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறி சாப்பிடுங்கள் – என்பேன்.

கேள்வி:
அரசில் குறுக்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்வது என்கிற போராட்ட வடிவத்தை எங்கிருந்து முன்மாதிரியாகப் பெற்றீர்கள்?

பதில்:
முன்மாதிரி என்று எதையும் பார்க்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ரொம்பவும் நியாயமான கோரிக்கை என்பதால் மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நாங்கள் பங்கு கோருகிறோம் என்கிற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 சதம் வன்னியர்களுக்கு 20 சதம் எனப் போராடினோம்.

கேள்வி:
ஈழ மக்களுக்கெதிராக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக ஓட்டுக் கட்சிகளில் ஓரளவு குரல் கொடுத்தது பா.ம.க.தான். இன்னும் வன்மையாக நீங்கள் குரல் கொடுத்திருக்க முடியும். அதன் மூலம் திராவிட இயக்கங்களைத் தோலுரித்து ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க முடியும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறோம்.

பதில்:
ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினேன். ஆதரவாக நின்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தபோது அதனையும் கண்டித்தோம். ராமகிருஷ்ணன் முதலியோரை சிறையில் சென்று பார்த்தேன். இதர சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து இதனைச் செய்வோம். இதில் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்சியைத் தடை செய்தாலும் சரி.

கேள்வி:
தாராளவாதம் என்கிற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு இந்தியா அடிமையாகி வருகிறது. இவற்றின் விளைவாக கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் கூட இன்று வணிகமயமாகி வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. பா.ம.க. இவை பற்றி எல்லாம் பேசுவதாகத் தெரியவில்லையே?

பதில்:
மன்மோகன் சிங் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இது குறித்தும் சர்வதேச நிலைமைகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் பேசுகிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

கேள்வி:
மக்களே Local Power, அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது இன்று அண்டை மாநிலங்களிலெல்லாம் நடைமுறையாகி வருகிறது. உங்கள் கருத்தென்ன?

பதில்:
Local Power – ஐ மக்களே கையிலெடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு என்பதே என் தனிப்பட்ட கருத்து. மக்கள் கண்காணிப்பு அணிகளை ஆங்காங்கு உருவாக்கிச் செயல்படுத்துவது அவசியம்.

கேள்வி:
சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் நமது அமைப்புக்களை நாம் சனநாயகப்படுத்த வேண்டும். பா.ம.க.வில் அத்தகைய திட்டம் ஏதும் உண்டா?

பதில்:
இன்னும் இரண்டு மாதங்களில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல்கள் நடத்த இருக்கிறோம். சில மாவட்டங்களில் அமைப்பு கட்ட வேண்டியுள்ளதும், சிவில் தேர்தல்கள் இடையில் அறிவிக்கப்பட்டதும் தான் தாமதத்திற்குக் காரணம்.

கேள்வி:
கல்விப் பிரச்சினைகளில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பா.மக.வின் கல்விக் கொள்கை என்ன?

பதில்:
கல்வியைப் பொறுத்த மட்டில் இதோ இருக்கிறாரே (கல்யாணியைச் சுட்டிக்காட்டி) இவர் சொல்வதுதான். மக்கள் கல்வி இயக்கத்தின் கொள்கையை முழுவதுமாக ஏற்கிறோம். இன்றைய கல்வி முறை கிராமப்புற மக்களைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு மேய்க்கத்தான் பயன்படும். தமிழ்வழிக் கல்வி முதலியவற்றுக்காகப் போராடுவதற்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
புதிய தீவிர வடிவங்கள் தேவை என்பது ஒரு புறம். இப்போது இருக்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இயல்பாயுள்ள போர்க்குணத்தை – Militancyயையும் அல்லவா குறைத்து விடுகின்றன. நிறப்பிரிகை 600 பிரதிகளே அச்சிடப்பட்டாலும் சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடியவர்கள் மத்தியில் செல்லும் ஒரு இதழ். இதன் மூலம் நீங்கள் எதையேனும் சொல்லலாம்.

பதில்:
பா.ம.க. பற்றிய குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். தினப்புரட்சி நமது பத்திரிகை. அதில் எல்லோரும் எழுதலாம். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

(நிறப்பிரிகை, பிப்ரவரி 4, 1992)

* அ.மார்க்சு, ரவிக்குமார், பொ.வேல்சாமி மூவரும் நிறப்பிரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினர்கள். பின்னாளில் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரானார். பா.கல்யாணி, தற்போது பிரபா கல்விமணி என்று அறியப்படுபவர்.
_____________________________________________
athika-arasiyal

“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு, விலை ரூ. 60.00

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

 1. முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
  கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு,
  எல்லீசு சாலை, சென்னை – 2
  தொலைபேசி – 044-2841 2367
 2. புதிய கலாச்சாரம்
  16, முல்லைநகர் வணிக வளாகம்,
  2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
  சென்னை – 600083
  தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 1. அன்ட்ரு முதல் இன்ட்ரு வரை கொல்கை ப்டிபுடன் இருப்பப்து ராமதாச் மட்டுமே.

  • அருமை, நீங்கள் இட்ட மறுமொழிகளில் இதுதான் ரொம்ப சரி! வினவில் இவ்வளவு பெரிய பதிவில் சொல்லியதை ஒரே வரியில் சொல்லிட்டீங்க.

   ஆமாம், அன்று முதல் இன்றுவரை ராமதாஸின் கொள்கை மாறவில்லை சாதிவெறியை தூண்டியோ, சாதியைவைத்தோ எப்படியாவது மக்களை ஏய்த்து முதலமைச்சர் ஆகிடவேண்டும் அதுதான் அவரது கொள்கை.

 2. நீரும்தான் பெரியார்தாசனை கொண்டாடினீர்கள்.. உங்கள் மேடையில் பல வாய்ப்புகள் கொடுத்து உரைவீச்சிற்கு ஏற்பாடு செய்தீர்கள்… அவரு அப்துல்லாவா மாறிட்டாருல்ல… நீங்களும்தான் விழி பிதுங்கி நின்றீர்கள்

  • நீரும்தான் இரண்டு வருடங்களாக வினவு தளத்துக்கு வந்து எதையும் படிக்காம தத்து பித்துன்னு கழிந்து விட்டு போகிறீர்கள். இதனால் ஆர்.சந்திரசேகரன் என்பவரை ஏன் அறிவாளியாக மாற்றவில்லை என்று வினவு பொறுப்பு ஏற்க முடியாதில்லையா அதுதான் பெரியார் தாசனுக்கும், மேலும் பெரியார் தாசனை அம்பலப்படுத்தி வினவில் கட்டுரை வந்தது தெரியுமா உங்களுக்கு?

 3. பழனி பாபா என்ன பிழைப்பு வாதம் செய்தார் என்று சொல்ல முடியுமா? தேர்தலில் நின்றாரா ? அமைச்சர் ஆனாரா? கொள்ளை அடித்தாரா ? சொத்து சேர்த்தாரா?………. இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதுதான் . மாறாக பிறப்பிலேயே பெரிய கோடிஸ்வரனான பழனி பாபா தன சொத்து முழுவதையும் எங்கள் இஸ்லாமிய மக்களின் நான்கு PhD பட்டம் பெற்றும் தன வாழ்நாள் முழுவதையும் எண்களின் இஸ்லாமிய சமுதாயத்துக்காகவே தியாகம் செய்த எங்கள் பாபாவை எந்த முகாந்திரத்தில் பிழைப்பு வாதி என்றீர். அன்றைய சூழ்நிலையில் ராமதாஸ் உண்மையிலேயே ஒரு போராளியாக தான் இருந்தார். ஆனால் காலம் செல்ல செல்ல அவரும் சாதாரண அரசியல்வாதி ஆகிவிட்டார் . அவ்வளவுதான் நீங்கள் அவரை தூற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பழனி பாபாவை பிழைப்புவாதி என்று சொல்வதை ஒருக்காலும் ஏற்க்க முடியாது. உண்மையில் உம கூற்றில் நீர் உண்மையாளராக இருந்தால் ஆதாரம் காட்டு இல்லையென்றால் உடனடியாக மறுப்பு வெளியிடு.

   • ஆமாம் அவர் மத வாதிதான் .ஆனால் மதத்தின் பெயரால் யாரையும் கொல்லவில்லை . மதத்தின் பெயர் கூறி எங்களை கொல்ல ஒரு கூட்டம் வந்த போது அந்த கூட்டத்தை முறியடிக்க முயற்சி செய்தார் . அந்த கூட்டத்தாலே கொலை செய்யவும் பட்டார் . எதிரிகள் சல்லியாக செயல் படும் போது சல்லியாக பேச மட்டுமே செய்தார். அவருடைய தியாகம் ஈடு செய்ய முடியாதது . அவரை போன்ற தியாகியை பார்க்கவும் முடியாது அவர் பேச்சை கேட்ட நீங்கள் அவர் வாழ்க்கை வரலாறையும் கொஞ்சம் தெரிந்து விட்டு பேசினால் நல்லது .

  • நிஃமத்துல்லாஹ் பாய், ராமதாஸ் அன்று முதலே எப்படி ஒரு பிழைப்புவாதியாகவும் வன்னிய சாதி வெறியராகவும் இருந்தார் என்பதைத்தான் கட்டுரை ஆதாரங்களுடன் கூறுகிறது. இவர் அமைத்த மூன்றாவது கூட்டணி என்பது எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதக்கூட்டணி என்று கட்டுரை தெரிவிக்கிறது. இப்படி ஒரு பிழைப்புவாதியுடன் கூட்டணி வைத்த பாபா யோக்கியரா இல்லை பிழைப்புவாதியா? நீங்கள் பாபாவை யோக்கியர் என்று காட்டுவதற்காக ராமதாஸின் அயோக்கியத்தனங்களை மறைத்து ஒரு போராளி என்று திரிக்கிறீர்கள். முதலில் கட்டுரையை படியுங்கள் பாய்!

   • கட்டுரையை முழுதாக படித்து விட்டுதான் பின்னூட்டம் இட்டேன் . நான் அந்த கூட்டணியை கொள்கைக் கூட்டணி என்று சொல்லவில்லை.அந்த தேர்தலில் ஜிஹாத் கமிட்டி போட்டியிடவும் இல்லை. நான் PMK வை ஆதரிக்க வில்லை . என்னுடைய கண்டனங்கள் எல்லாம் பழனி பாபாவை பிழைப்புவாதி என்று சொன்னதற்கு தான் . அவரை பற்றி தங்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்கும். அவர் என்ன பிழைப்பு வாதம் செய்தார் ?. உண்மையில் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்ததில் பாபாவுக்கும் பெரிய பங்குண்டு. , PMK , RSS ஐ எதிர்க்கின்றது என்றே ஒரே காரணத்திற்க்காக தன்னலம் கருதாமல் அவர்களின் வளர்ச்சிக்கு நிறைய உதவி செய்தார். ஆனால் அவரை RSS காரர்கள் கொன்ற ஒரே வருடத்திற்குள் பா . ம . க. மத்தியில் BJP உடன் கூட்டணி வைத்துக் கொண்டது .இது ராமதாஸ் பாபாவிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத கேவலமான துரோகம் . அதை நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் . எனவே நான் ராமதாசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம் . எனது ஆதங்கம் எல்லாம் பழனி பாபாவை பிழைப்புவாதி என்று உங்கள் கட்டுரை குறிப்பிட்டதற்கு தான். எந்த ஒரு பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் இஸ்லாமிய சமூகதிர்க்காக தன உடல் பொருள் ஆவி வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்த ஒரு மாமனிதரை பிழைப்புவாதி என்று கூறினால் உங்களுக்கு பிழைப்புவாதத்தின் அர்த்தம் தெரியவில்லை என்றுதான் பொருள்.இது எங்கள் மனதை கடுமையாக காயப்படுத்துகிறது .எனவே தான் கேட்கிறேன் பாபா பிழைப்புவாதி என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் இல்லையென்றால் மறுப்பு வெளியிடுங்கள் …..

    • பாய், திரும்பவும் பதட்டத்தோடு உண்மையினை பார்க்க மறுக்கிறீர்கள். பாமக எனும் கட்சி அதன் தோற்றத்திலேயே ஆதிக்கசாதி வெறியின் அடிப்படையிலேயே கட்டப்பட்டு அதன் நிழலிலேயே முஸ்லீம் இணக்கம், தலித் இணக்கம், ஈழ நேயம், தமிழின ஆர்வம் என பல்வேறு கொள்கைகள் சைடு பிட்டிங்காக காட்டப்பட்டன. இது அக்மார்க் ஒரிஜினல் ஏமாற்று. அதற்கு பழனி பாபா துணை போயிருக்கிறார்.

     மேலும் கட்டுரையில் வருவது போல, // இக்கூட்டணியில் சேர்ந்துள்ள ஜிகாத் கமிட்டி, அப்பட்டமாக மதவெறியைக் கக்கும் அமைப்பு. அதன் தலைவரான பழனி பாபா முன்பு கருணாநிதியிடமும், பின்னர் எம்.ஜி.ஆரிடமும் கூடிக் குலாவி, அதிகாரத் தரகராக செயல்பட்ட பிழைப்புவாதி. இப்போது அவர் பா.ம.க. கூட்டணியில் சேர்ந்ததும் சிறுபான்மை இன மக்களின் தலைவராகக் கௌரவிக்கப்படுகிறார்.// அவர் கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்களிடம் கூடிக் குலவி அதிகாரத் தரகராக செயல்பட்ட பிழைப்புவாதி. இதை ஒத்துக் கொள்வதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. நிதானமாக யோசித்துப் பாருங்கள்!

     • உண்மையில் நீங்கள் சொல்வது போல் முஸ்லிம் இணக்கம் என்பது ஏமாற்றாக இருந்தால் அதன் மூலம் பாபா ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மையாக இருக்க முடியுமே தவிர அவர் பிழைப்பு வாதி என்பது துளி அளவு கூட ஏற்க்கப்பட முடியாதது. பிழைப்புவாதம் என்றால் ராமதாஸ் போல் மகனுக்காக கொள்கையை விட்டு கொடுத்திருக்க வேண்டும் சொந்த லாபத்திற்காக சமுதாயத்தை அடகு வைத்திருக்க வேண்டும் . இவையெல்லாம் அவர் செய்யவில்லை .ப்ம்க் ர்ச்ச் ஐ எதிர்த்ட்து அதனால் அவர்களுடன் நட்பை இருந்தார். உண்மையில் அவர் எம் ஜி ஆர் முதலில் இருந்தார் ஆனால் அவரது ஹிந்துத்வா கொள்கை காரணமாகவே அவரை விட்டு பிரிந்தார் தமிழ் நாட்டு வரலாற்றில் தலைமை செயலகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட முதல் நபர் அவர்தான் எம் ஜி ஆரால் அவர் உயிருக்கும் குறி .வைக்கப்பட்டது அவர் கருணாநிதி எம் ஜி ஆர் ராமதாஸ் ஆகியோருடன் நட்பு கொண்டதற்கு காரணமே இஸ்லாமிய சமூகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் . அதற்கு எதிராக அந்த கட்சிகள் செயல் பட்ட பொது அவர்களை எதிர்க்கவும் செய்தார். பா ம க மேடையிலே இதை அறிவித்தும் இருக்கிறார்.அவர் பிழைப்பு வாதம் செய்ய வெடிய அவசியம் அவருக்கு கிடையாது. அப்படி செய்திருந்தால் ஏதாவது பதவி கிடைத்திருக்க வேண்டும் குறைந்த பட்சம் தேர்தலிலாவது நின்றுக்க வேண்டும் . பணம் சம்பாதித்து இருக்க வேண்டும் . இதெல்லாம் எதுவுமே செயாமல் தன் சொந்த சொத்து சொத்து முழுவதையும் இஸ்லாமியரகளுக்காகவே செலவு செய்து தன வாழ் நாள் முழுவதும் ஊர் ஊராக அலைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி கடைசியில் ற்ஸ்ஸ் மதவெறியர்களால் கொலை செய்யப்பட ஒரு உத்தமரை பிழைப்பு வாதி என்பது ஏற்க்க முடியாதது. நான் தங்களிடம் கேட்பதெல்லாம் பிளைப்புவதியின் இலக்கணம் மற்றும் அது பாபாவிடம் துளி அளவாவது இருந்ததா ? ஒரு முறை எம் ஜி ஆரை விட்டு பிரிந்தார் பின் கடைசி வரை எதித்தார் . கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த பொது அவரை விட்டு பிரிந்து கடைசி வரை அவரையும் எதிர்த்தார் . அவரை பற்றிய வரலாறு தெரியாமல் அவரை பிழைப்புவாதி என்று எழுதி இருக்கிறீர்கள் .இதை ஒத்து கொள்வதற்கு உங்கள் மனம் மறுக்கிறது அவர் மதவாதிதான் இந்தியா போன்ற ஒரு நாட்டில் காலத்தின் அவசியம் அவர் எமது சமுதாயத்தை பாதுகாக்க மதவெறியராக இருந்தார் ஆனால் ஒரு பொழுதும் பிழைப்பு வாதியாக இருந்ததில்லை அதற்க்கு அவசியமும் இல்லை . அவர் உயிருடன் இருந்த பொது பா ம க பி ஜே பி உடன் கூட்டணி வைத்திருந்தால் அதையும் எதிர்த்துதான் இருப்பார்.

      • நிஹ்மத்துலாஹ்,

       பழனிபாபா பிழைப்புவாதி அல்ல; மதவாதி என்கிறீர்கள். அவரது பிழைப்புவாதத்தை விடவும், நீங்கள் பெருமைபட்டுக் கொள்ளும் மதவாதம் தான் மிகவும் ஆபத்தானது. ஒரு பிழைப்புவாதி அவர் சொந்த முயற்சியிலே அம்பலமாகி போவார்; ஆனால் மதவாதம் கொடிய விஷம் போன்றது. பழனி பாபா இல்லையென்றால் இந்து மக்கள் கட்சி இல்லை. பழனிபாபா போன்ற நபர்களை நீங்கள் ஆதரிக்க ஆதரிக்க, சராசரி இந்துக்களை இந்து மதவெறி நோக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.

       எனவே இஸ்லாம், இசுலாமியர்கள் என்று மத அடிப்படையில் ஒன்றிணைவது கூட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.

       • அவர் வாழ்ந்த, அரசியலில் ஜொலித்த சிறிது காலத்திலே எம்.ஜி.ஆர், கருணாநிதி, ராமதாஸ் என்று மாற்றி, மாற்றி கூட்டு சேர்ந்துள்ளார். அவர் ஒரு வேளை இன்று உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க வை தவிர்த்து அனைத்து கட்சிகளோடும் ஒரு சுற்று கூட்டணி வைத்து முடித்து, சதைகள் தளர்ந்து தொங்கும் தனது இறுதி காலத்தை நிம்மதியாக செலவிட நஜ்மா ஹெப்துல்லா, ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி வழியில் பி.ஜெ.பி யில் கூட இணைந்து பயணித்து கொண்டு இருக்கலாம். இந்து மதவெறி கூட்டம் பாபாவை கொலை செய்ததன் மூலம் அவர் சந்திக்க நேரும் பல்வேறு அரசியல் விபத்துகளிலிருந்து அவரை காப்பாற்றியிருக்கிறதோ என்னவோ? இந்து மதவெறியும் இஸ்லாமிய மதவெறியும் வேறுவேறல்ல; ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணருங்கள் நண்பரே.

        • நீர் வரலாறை நன்றாக படியும் . எம் ஜி ஆர் முதல்வராக இருந்த காலத்தில் தான் அவர் கருணாநிதியோடு இருந்தார் .அப்போது அவர் உயிருக்கும் குறி வைக்கப்பட்டது . கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் அவரையும் எதிர்த்தார் . ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பொது மேடையிலே அவரை “தேவடியா” என்று திட்டி இருக்கிறார் . இப்படி எப்பவுமே ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து அவர்களை கடுமையாக விமர்சனம் செய்பவரை எப்படி பிழைப்புவாதி என்று சொல்ல முடியும். அவரை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் இங்கு நடந்த உரையாடலை மட்டுமே வைத்து கருத்து கூற வேண்டாம் . முதலில் அவரை பற்றி முழுமையாக படித்து விட்டு பின் பதில் கூறவும் . ராமதாஸ் போல் அவர் ஜெயிக்கிற கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை யார் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு சமஉரிமை தருகிறான் என்று கூறினார்களோ அவர்களுடன் தான் கூட்டணி வைத்தார் ஆனால் அவர்கள் அந்த வாக்குறுதிகளை மீறிய போது அவர்களை எதிர்த்தார் அவர் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி . இதில் எங்கு இருந்து பிழைப்பு வாதம் வந்தது

       • அவரை மதவாதியாக மாற்றியது ஹிந்து தீவிரவாதம் தான் . ஆனால் அவர் செய்தது தற்காப்பு தானே ஒழிய வேறில்லை. இதுவரை முஸ்லிம்களால் கலவரம் ஏற்பட்டது என்பதே கிடையாது . அவர் ஹிந்துக்கள் அனைவரையும் எதிரியாக பார்க்கவில்லை ,எவன் முஸ்லிம்களை அளிக்க நினைக்கிறானோ அவர்கலைதான் அவர் எதிரியாக பார்த்தார் . அவரிடம் மதப்பற்று இருந்தது ஆனால் RSS காரன் போல் மதவெறி இல்லை கண்மூடி தனமாக பிற மக்கள் அனைவரும் எதிரிகள் என்று சொல்ல வில்லை .பழனி பாபா என்றுமே ஹிந்துக்களை எதிரி என்று சொல்லவில்லை. ஒரு சராசரி ஹிந்து அவர் பேச்சை கேட்டால் நியாயம் என்று தான் சொல்லுவான் . RSS ஹிந்துத்வா வெறி பிடித்தவன் மட்டுமே அவரை .எதிப்பான் .தன் வாழ்நாள் முழுவதும் தான் ” பிறப்பால் இந்தியன் இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன் மதத்தால் முஸ்லிம் ” என்று ஆயிரம் மேடைகளில் முழங்கி இருக்கிறார். விடுதலை புலிகளுக்கு உதவி இருக்கிறார். ஹிந்துக்கள் கல்லூரி கட்டுவதற்கு தன சொந்த செலவில் நிலம் வாங்கி கொடுத்திருக்கிறார். இத்தனைக்கு மேலும் அவர் ஹிந்துக்களுக்கு எதிரி என்று எப்படி கூற முடியும் மறுபடியும் கூறுகிறேன் அவர் மதவாதிதான் ஆனால் மத வெறியர் அல்ல ……….

  • //அவ்வளவுதான் நீங்கள் அவரை தூற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பழனி பாபாவை பிழைப்புவாதி என்று சொல்வதை ஒருக்காலும் ஏற்க்க முடியாது. உண்மையில் உம கூற்றில் நீர் உண்மையாளராக இருந்தால் ஆதாரம் காட்டு இல்லையென்றால் உடனடியாக மறுப்பு வெளியிடு.//

   vera mathathukkaarana thootrina prechana illa. en mathathukkaarana ethuvum solla koddathu. athuthana un kevalamaana logic!

   • என் மதத்துக்காரனை தூற்றினாலும் கவலை இல்லை. ஆனால் நல்ல மனிதரை தூற்றக் கூடாது . அதே கட்டுரையில் அப்துல் சமது பற்றியும் தூற்றி இருந்தார்கள் அதை நான் எதிர்க்கவில்லையே . இங்கே மதம் பிரச்னை இல்லை. நீங்கள் பாபாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் . அவருடைய பிறப்பு, படிப்பு, குடும்பம், அரசியல், மரணம், பேச்சு இதை எல்லாம் முழுமையாக தெரிந்து கொண்டு பின் அவரை பற்றி பேசுங்கள் .

 4. பின்நவீனத்துவ அறிவாளிகளை வினவு போன்று தீவிரமாக அம்பலப்படுத்த முயன்றது யாரும் கிடையாது. பின்நவீனத்துவத்தை எதிர்த்தால் தம்மை பிற்போக்குவாதிகள் என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் மயங்கியவர்கள் ஏராளம். பின்நவீனத்துவம் என்பது ஒரு வார்த்தை சித்துவிளையாட்டு (verbal gamesmanship ) என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

  அதே நேரம், ராமதாஸ் போன்றோர் சாதிய அரசியலில் வெற்றி பெற அ மா போன்றோர் மட்டுமே காரணம் என்பது பிரச்சினையை எளிமைபடுத்தி புரிந்து கொள்ளும் முயற்சியே. தாராளமாக மதிப்பிட்டாலும், ராமதாஸ் பேட்டி வந்த நிறப்பிரிகைக்கு ஐநூறு வாசகர்கள் மேல் இருந்திருக்க முடியாது. அ மா தன் செல்வாக்கிற்கு வீழ்ந்த ஒரு 100 பேரோடு மட்டுமே உரையாட முடிந்த நபர். பின்னவீனத்துவாதிகளின் பணி என்பது ராமதாஸ், திருமா சிறுத்தை போன்றோரின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு சித்தாந்த நியாயத்தை வழங்கியது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  வட மாவட்டங்களில் கம்யூனிசம் செல்வாகை இழந்து சாதிய இயக்கங்கள் வெற்றி பெற முடிந்ததற்கு இன்னும் ஆழமான சமூக காரணங்கள் இருக்க வேண்டும். புரட்சிக்கு எதிரான வேலைகளை ஆற்றுகிறது என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாம் எதிர்க்கிறோம். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நோக்கம் கேடானது என்பதில் சந்தேகமில்லை. இதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், அந்த சமூகப் பணியின் தேவை மக்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது என்பதாகும்.

  By cycle Thief படத்தில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி வேலை இல்லாதோருக்கு வேலையை பெற்றுக் கொடுக்கும் கடமையை ஆற்றும். எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை எதிர்ப்பதோடு நிற்காமல் நாம் அவர்களை பதிலீடு (replace) செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

 5. பழனி பாபா வின் பல மேடைப்பேச்சுக்கள் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அவர் நிஜமாகவே ஒரு நேர்மையான துணிச்சலான போராளி. இன்று மக்களை உசுப்பும் மேடைபேச்சாளர்கள் அனைவரும் அவரை காப்பி அடித்தே பேசுகிறார்கள் என்பதை அறியமுடியும். பாமக மேடைகளில் பேசியதும் உள்ளன அவற்றை கேட்டால், அவரை பிழைப்புவாதி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது.

  • காலப்பிரன் அவர்கள் கூறும் நேர்மையான துணிச்சலான போராளி பழனி பாபாயை யூட்டியூபில் தேடியபோது கிடைத்தவை
   http://www.youtube.com/watch?v=YEcChG0hSpI.
   http://www.youtube.com/watch?v=j0bR4uIKWdU

   இப்படி பேசும் பழனி பாபாவை எந்த அடிப்படையில் போராளி என்கிறீர்கள்..? ஆதிக்க சாதி, வர்க்க் அரசு என எது குறித்தும் தெரியாமல் கேணத்தனமாக பேசுவதில் என்ன நேர்மை, துணிச்சல் இருக்க முடியும் காலப்பிரன்….?

   • நீர் குறிப்பிட்ட இரண்டு பேச்சிலுமே எதுவுமே தவறாக இல்லை வர்க்க அரசு ஆதிக்க சாதி இது குறித்தெல்லாம் நீர் பழனி பாபாவை விமர்சனம் செய்யும் போது சிரிப்பு தான் வருகிறது முதலில் அவருடைய வாழ்கையை முழுமையாக படித்து விட்டு அவர் பேச்சுகளை எல்லாம் முழுமையாக கேட்டு விட்டு அவரை பற்றி விமர்சனம் செய்யவும் இந்த இந்தியாவிலே எவனுக்குமே இல்லாத அறிவு துணிச்சல் தைரியம் உள்ளவர் . 4 PhD பட்டம் பெற்றவர் பிறந்தது தமிழ் நாட்டில் என்றாலும் சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் மட்டுமே கற்றதால் தமிழ் தெரியாதவர். பின்னர் சொந்த முயற்சியில் அதை முழுமையாக கற்றவர் . இந்திய வரலாற்றிலேயே ஆதிக்க சக்திகளால் 120 இருபது முறை சிறை சென்று வழக்கு போடப்பட்ட ஒரே . மனிதர் ஆனால் ஒரு வழக்கில் கூட அவரை குற்றவாளி என்று நிருபிக்க முடியவில்லை . பல வழக்குகளில் இந்திய மற்றும் மாநில அரசாங்கங்களை தோற்கடித்தவர் உலகின் 100 கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வந்தவர் . பொதுவாழ்வில் 30 ஆண்டுகள் இருந்தும் ஒரு பைசா கூட அதனால் ஆதாயம் பெறாதவர் . உங்கள் கருத்து மிக கண்ணியக் குறைவாக உள்ளது முதலில் ஒரு மனிதரை பற்றி முழுமையாக தெரிந்து விட்டு பின் கருத்து சொல்லவும்

    • //வரியை முஸ்லீம் தான் அதிகமாக கட்டுகிறான், ஆனால் அவன் நிலைமை சாதாரண ஆதி திராவிடன் நிலைமையை விட மோசமாக இருக்கிறது என்கிறார்.//

     ’’இப்படியே இருந்திங்கன நூறு பாட்டாளி மக்கள் கட்சி வந்தாலும் உங்களை திருத்த
     முடியாது… //

     உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிராக இருக்கும் அரசை ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பது போல பிரச்சாரம் செய்து இஸ்லாமியர்களை அணிதிரட்டுவது, இஸ்லாமிய மதம், ஆதிக்க சாதி பாமக போன்றவை குறித்து உயர்வான சித்திரப்பது எல்லாம் எதை காட்டுக்கிறது.

     முழுமையாக தெரிந்து விட்டு பின் கருத்து சொல்லவுமெ என்பது சரிதான்.
     ஆனால் மதம் குறித்தும் இஸ்லாமிய மதவாதம் ஆதிக்க சாதி குறித்து என்ன புரிதலை ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்பதிலிருந்து அவர் அரசியலை நாம் தீர்மானிக்க முடியும் தானே.

     //எவனுக்குமே இல்லாத அறிவு துணிச்சல் தைரியம் உள்ளவர் // இதில் மட்டும் என்ன கண்ணியம் உள்ளது..

     • உழைக்கும் மக்கள் அனைவருக்கும் அவர் பேசியுள்ளார்,போராடியுள்ளார் தஞ்சையில் ஒரு தலித் அதிகாரிக்கு பிரச்னை என்ற போதும் அவர் தான் முன்னின்று போராடினார் . ரெட்டியார் ஆதிக்க சாதி மக்களால் ஆதி திராவிடர்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட போது தன சொந்த செலவில் ஹை கோர்ட்டில் வழக்கு தொடுத்து அவர்களுக்கு கடைசி வரை ஆதரவாக நின்றார் .இதையே ஒரு வன்னியன் செய்திருந்தாலும் அவர் அவர்களையும் எதிர்த்திருப்பார் .ஆனால் அன்றைய காலகட்டத்தில் வன்னியர்கள் அவ்வளவு ஆதிக்க வெறியுடன் நடந்து கொள்ளவில்லை அல்லது உங்கள் கூற்றின் படி அவர்கள் அவ்வாறு நடித்திருக்கலாம். ஆனால் பாபா என்றுமே ஆதிக்க சக்திகளுக்கு துணை நின்றதில்லை அது அவர் வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும் . உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரான அரசாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்பட்டது இன்னும் பட்டுக் கொண்டிருப்பது இஸ்லாமிய சமூகம் தான் . இதை யாரும் மறுக்க முடியாது “அவர் அன்று சொன்னதை இருபது வருடம் கழித்து சச்சார் கமிட்டி அறிக்கை உறுதி படுத்தி இருக்கிறது முஸ்லிம்கள் தலித்களை விட கீழ் நிலையில் தான் உள்ளனர் என்று” .அதனால் அவர்களின் முன்னேற்றத்துக்கு மதரீதியாக உழைத்ததில் தவறொன்றும் இல்லை . . இதை ஒருவர் வெளிப்படுத்தும் பொது அது மற்ற உழைக்கும் மக்களை புறக்கணிக்கிறது என்று கூற முடியாது . பா ம க அன்றைக்கு ஆதிக்க வெறி உள்ளதாக இருந்திந்தால் எப்படி அவ்வளவு தலித் மக்கள் அதில் இணைந்தார்கள் . தலித் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது . இதிலும் கூட பாபாவின் பங்கு அதிகமுண்டு . எனவே பாபா ஆதிக்க சாதிகளை ஆதரித்தார் என்பதோ உழைக்கும் மக்களுக்காக பேசவில்லை என்பதோ உங்களின் அறியாமை தான் . மீண்டும் சொல்கிறேன் அவர் வரலாற்றை முழுமையாக படியுங்கள் அவரது அனைத்து பேச்சுகளையும் முழுமையாக கேளுங்கள் பின்னர் அவர் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் .

 6. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச,இந்திய அரசியல்,பார்ப்பனீயம் ,இடஒதுக்கீடு,ஈழம்,மத-சாதி வெறி அமைப்புக்கள்,ஓட்டுச்சீட்டு கட்சிகள்,திராவிட,தலித் அரசியல், பின்நவீனத்துவம்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பத்திரிக்கை,சினிமா,இலக்கியம் முதல்…………இணையதளம் வரை ………அனைத்துப் பிரச்சனைகளிலும் மிகச்சரியான நிலைப்பாடுகள் எடுத்து, பிரபலமான பிரச்சனைகள் பின்பு ஓடாமல் ,சரியான திசைவழியில் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள், புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் & வினவு பயணிப்பதை இக்கட்டுரை மூலமாக உணர முடியும்.ஆழ்ந்து,நடுநிலையோடு சிந்திக்கிற எவருக்கும் இது புரியும்.அடிக்கடி இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையின் புரிதலுக்கு மிகவும் அவசியமானது.

 7. என்ன வினவு…கீற்று தளத்தில் குணா எழுதிய கட்டுரைக்கு இது பதில் கட்டுரை தொகுப்பா ? அல்லது குணா உங்களிடம் முன்னரே தோழமை கொண்டவரா ?குணாவின் மற்றுமொரு கட்டுரை NGO முகத்திரையை கிழிப்பது போல் உள்ளது…கிட்டதட்ட இரண்டு பேரும் ஒரே விஷயத்தை சரியாக சொல்லி மக்கள் என்ற மாக்களுக்கு, மண்டையில் குட்டி உள்ளீர்கள் ..

  • பாலாஜி, குணா என்பவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. இந்தக்கட்டுரை புதிய ஜனநாயகத்தில் 91-ம் ஆண்டு வந்த போது குணா எங்கிருந்தார், என்ன செய்தார், பாமக குறித்து என்ன பேசினார் என்பதை அவர்தான் சொல்லவேண்டும். இன்று பாமகவை விமரிசிக்கும் குணா அன்று என்ன நிலை எடுத்தார், எந்தக் கட்சியில் இருந்தார், அந்தக் கட்சி என்ன நிலை எடுத்து என்ன செய்தது என்பதை முன்வைத்துவிட்டு மற்றவரை விமர்சிப்பது சரியாக இருக்கும்.

 8. பொதுவாக, கம்யூனிஸ்ட்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடுக்கண் உதவி (succour) போன்றது. இந்த உதவியை பெற்ற மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கை நாட்டங்கள் (aspirations) மேலும் மேலும் அதிகரிக்கிறது. இப்போது முன்பு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த மக்கள் கம்யூனிசத்தோடு இணைந்து பயணிப்பதை தவிர்க்கிறார்கள். (தருமபுரி நாயக்கன் கொட்டாயில் குடிசைகள் கொளுத்தப்படவில்லை; பீரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.)

  மக்களின் வாழ்க்கை நாட்டங்களும், கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளும் வேறுவேறு திசைவழி கொள்ள, நாம் இப்போது அந்த மக்களிடம் நன்றியையும், விசுவாசத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். போலி முற்போக்கு முகம் காட்டும் சாதிய அமைப்புகள் மக்களின் கனவுகளை உடனடியாக நிறைவேற்றும் வார்த்தை ஜாலங்களோடு மக்களை தம்பக்கம் இழுக்கின்றன.

  போதாக்குறைக்கு உலகமயமாக்கல் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் மூலம் ஆசைத்தீயை மக்களிடம் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. புதிய சமூக நிலைமைகளில் உதித்தெழும் மக்களின் வாழ்க்கை நாட்டங்களை கம்யூனிஸ்ட்கள் உணர மறுக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மணிரத்தினம் திரைப்படம் பற்றிய ‘புதிய கலாச்சாரம்’ விமர்சனம் ஒன்றில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கலர் டி.வி வைத்துக் கொள்ள ஆசைபடுவது கேலி செய்யப்பட்டிருக்கும். தோழர் மருதையனின் உரை ஒன்றில், அரை நிக்கர் போடும் நகர இளைஞர்களை கடுமையாக ஏளனம் செய்திருப்பார். (சென்னையில் லுங்கி கட்டுவது மிகவும் கீழ் நிலை மக்களின் ஆடையாக குறுக்கப்பட்டிருக்கிறது). அது போல வழி விட excuse me கேட்பதையும் இன்னோர் உரையில் கேலி செய்திருப்பார்.

  இவையெல்லாம் மத்திய தர வர்க்க ஆசைகள்; போலி வாழ்க்கை முறைகள் என்று நாம் கருதுவதே காரணம். ஒரு கல்லூரி படிக்கும் மாணவனின் தந்தை ஓட்டலிலும், தாய் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள். உரையாடலில் தன்னை நடுத்தர வர்க்கம் என்றே விரும்பி குறிப்பிடுகிறான். மக்கள் தங்களை மதிப்பை தரும் சமூகப் பிரிவோடு அடையாளம் காணவே விரும்புகிறார்கள். ‘தோட்டியின் மகனில்’ தனது மகனை வைத்து அந்த தந்தை கொள்ளும் மனப் பிராயசம் அடித்தட்டு மக்களின் ஆழ்மன ஏக்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. மதிப்புமிக்க வாழ்க்கை ஒன்றிற்காக தமது அடிப்படை உரிமைகளையே மக்கள் காவு கொடுக்க தயாராகிறார்கள்.